கிருஷ்ணகிரி: நெடுஞ்சாலை விரிவாக்கத்தால் விரட்டியடிக்கப்படும் பழங்குடி மக்கள்

தேசிய நெடுஞ்சாலை 7 (NH-7) விரிவாக்கப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஆகையால், அங்கு வசித்து வரும் பழங்குடியின மக்களை பிப்ரவரி 25 ஆம் தேதிக்குள் காலிசெய்யுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் நாகமங்கலம் ஊராட்சியில் உள்ள சந்தைமேடு கிராமத்தில் 42 பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இதில் 22 குடும்பங்களுக்கு இருபது வருடத்திற்கு முன்பு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 குடும்பங்களுக்கு பட்டா கிடையாது. பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா கேட்டு பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். ஆனால், எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இம்மக்கள் இரண்டு சென்ட் நிலத்தில் மூன்று குடும்பங்கள் வசிக்கும் நிலைமையுள்ளது. ஆடு, மாடு நிலைமையை விட அம்மக்களின் வாழ்நிலை மோசமாகவுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை 7 (NH-7) விரிவாக்கப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. (”NH-7” தற்போது “NH-44” என்று அழைக்கப்படுகிறது). ஆகையால், அங்கு வசித்து வரும் பழங்குடியின மக்களை பிப்ரவரி 25 ஆம் தேதிக்குள் காலிசெய்யுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. பட்டா உள்ள 22 குடும்பங்களுக்கு மட்டும் மாற்று இடத்தில் இரண்டரை சென்ட் நிலம் அரசு வழங்கியுள்ளது. ஆனால், அதிலும் வீடு கட்டி தரவில்லை. அரசிடம் கேட்டதற்கு அதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என அலட்சியமாகப் பதில் சொல்லியதாக மக்கள் தெரிவித்தனர்.

மேலும், 22 பட்டாவுள்ள மக்களுக்கு அரசு கொடுத்த நிலத்தை அப்பகுதியில் உள்ள தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துப் பயன்படுத்தி வருகிறார். அவர் பழங்குடி மக்களுக்கு அந்நிலத்தைக் கொடுக்க தயாராக இல்லை; அச்சுறுத்தலும் கொடுக்கின்றர். அரசிடம் கூறியபோது, பட்டா வழங்கியதுடன் அரசின் அனைத்து கடமைகளும் முடிந்துவிட்டது என்பது தான் பதில். மக்கள் எக்கேடு கெட்டாலும் அரசிற்குக் கவலையில்லை. பட்டா இருப்பவர்களுக்கே இதுதான் கதியென்றால், பட்டா இல்லாதவர்களை அரசு கணக்கில் கூட எடுத்துக் கொள்வதில்லை என்பதுதான் எதார்த்தமாகும்.

வீடு இல்லாத வெறும் நிலத்தைக் கொடுத்துவிட்டு பிப்ரவரி 25 ஆம் தேதிக்குள் அம்மக்களை காலிசெய்ய சொல்வது மக்களை பிடரியில் பிடித்து தெருவிற்குத் தள்ளுவது தான். அவர்கள் மழையில் நனைந்தாலும்; குளிரில் வாடினாலும்; வெயிலில் காய்ந்தாலும் அரசிற்கு எந்த பொறுப்பும் கிடையாது. இருப்பினும், பட்டா உள்ள 22 குடும்பங்களுக்கும் பட்டா வழங்கப்படாத 20 குடும்பங்களுக்கும் நாகைதுணையில் உள்ள அரசு நிலத்தில் வீடு கட்டி தரச் சொல்லி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் மனு அளித்துள்ளனர். 2.5 சென்ட் நிலத்தை 3 சென்ட்டாக வழங்கக் கோரிக்கை வைத்துள்ளனர்.

இம்மக்கள் பிளாஸ்டிக் குப்பைகளை எடுத்து வாழும் நிலையில் தான் உள்ளனர். படிப்பறிவோ விழிப்புணர்வோ இல்லாத மக்கள் இவர்கள். மனு கொடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தால் அவர்கள் அன்று பட்டினியில் தான் உறங்க வேண்டும். ”இம்மக்களால் நமக்கென்ன லாபம்” என்பது தான் அரசின் அணுகுமுறையாகும். ஆனால், விளிம்புநிலையில் உள்ள இம்மக்களோ வாடிய முகத்துடன் அவர்களுக்கு தெரிந்தவகையில் தொடர்ந்து மனு கொடுத்து வருகின்றனர்.

அவர்களுக்குத் துணைபுரிய யாரும் இல்லை. ஆதலால் தான் அரசு இவ்வளவு அலட்சியமாக அணுகுகிறது. கார்ப்பரேட் விரும்பினால் எந்த நிலமாக இருந்தாலும் பட்டா போடுவதற்கு உற்ற துணையாக இருக்கும் இதே அரசு தான் எளிய மக்களுக்கு அந்நியமாக உள்ளது.

உழைக்கும் மக்களுக்கு போராட்டம் ஒன்றே தீர்வாகும். தங்களது உரிமைகளை மீட்க மக்கள் அமைப்பாகத் திரண்டு போராட வேண்டியுள்ளது. நமது கரங்களை அம்மக்களுக்குத் துணையாக நீட்டுவோம்!


வினவு களச்செய்தியாளர்,
கிருஷ்ணகிரி.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க