14.05.2025
கிருஷ்ணகிரி மா விவசாயிகளின் அவலநிலை
பத்திரிகை செய்தி
தமிழகத்தில் மா உற்பத்தியில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. குறிப்பாக, ஊத்தங்கரை, பர்கூர், போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டினம், சூளகிரி, ஓசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட மா ரகங்கள் சுமார் 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. மல்கோவா, அல்போன்ஸா, செந்தூரா, பீத்தர், தோத்தாபுரி ஆகிய ரகங்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் அதிக வரவேற்பு உள்ளது. இவற்றில் தோத்தாபுரி ரகம் 60 சதவீதமும் செந்தூரா மற்றும் நீலம் ரகங்கள் 30 சதவீதமும் அல்போன்சா 5 சதவீதமும் சாகுபடி செய்யப்படுகிறது. பீத்தர், பங்கனப்பள்ளி, காலப்பாடு, மல்கோவா போன்றவை 5 சதவீதமும் விளைவிக்கப்படுகின்றன.
மேலும், ஊறுகாய், மாங்கூழ் போன்ற மதிப்புக் கூட்டுப் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் 2.60 லட்சம் மெட்ரிக் டன் மா சாகுபடியாகும் நிலையில் 1.20 லட்சம் மெட்ரிக் டன் பழங்கள் மாங்கூழ் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மா விவசாயம் மூலம் ஆயிரக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்து வருகிறது. ஆகையால், கிருஷ்ணகிரி மாவட்ட வளர்ச்சியில் மா சாகுபடி முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆனால், ஆண்டுதோறும் பருவநிலை மாற்றங்களாலும் அரசின் அலட்சியத்தினாலும் விவசாயிகள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். நிகழாண்டில் மாமரங்களில் அதிகளவில் பூக்கள் பூத்திருந்த நிலையில், கோடை வெயிலின் தாக்கத்தால் மரங்களில் பூக்கள் கருகியும், காய்கள் பிடிக்காமலும் மகசூல் குறைந்துவிட்டது. இதில் பூச்சிகளின் தாக்குதலும் ஒரு காரணியாகும். ஆதலால் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மா விளைச்சல் குறைந்துள்ளது. இந்நிலையில் மா விவசாயிகளிடம் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து மிகவும் குறைந்த விலைக்கு கேட்கின்றனர். விவசாயிகளுக்கு இது மேலும் இது துயரத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
இயற்கைப் பேரிடர், மருந்துகள் மற்றும் விவசாய உபகரணங்களின் விலையேற்றம், அரசின் தொடர்ச்சியான புறக்கணிப்பு உள்ளிட்ட காரணங்களால் கடந்த பத்தாண்டுகளில் மட்டும் சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுக்கு மா உற்பத்தி குறைந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் விவசாயிகளின் இழப்புகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும், போராடியும் தற்போது வரை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
“இந்நிலை தொடர்ந்தால் மா உற்பத்தியைக் கைவிட்டு மாற்று விவசாயத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்” என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை கார்ப்பரேட் தொழில் வளர்ச்சிக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சிப்காட்கள் அமைப்பதற்காக விவசாய நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன.
அது மட்டுமின்றி, கல்குவாரி, கிரானைட் குவாரிகளுக்காக விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டும், சுற்றுச்சூழல் மாசு படுத்தப்பட்டும் வருகிறது. இவை அனைத்தும் எந்தத் தடையுமின்றி அரசின் துணையோடு இயங்கி வருகின்றன.
விவசாயிகளுக்கு எதிரான அரசின் கார்ப்பரேட் சார்பு கொள்கைகள் தான் விவசாயிகளின் துயரங்களுக்கு அடிப்படையாக உள்ளது.
இன்னொரு பக்கம் விவசாயிகளுக்கு எதிரான மனநிலையில் தான் அரசு இயந்திரம் செயல்படுகிறது.
இத்தகைய போக்குகள்தான் மா விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளின் துயரத்திற்கும் அடிப்படையாக உள்ளது.
எனவே, மா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்க,
- மாம்பழங்களை அரசே நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும்.
- மாங்கூழ் உற்பத்திக்கான தொழிற்சாலைகளை அரசு பரவலாக உருவாக்க வேண்டும்.
- மா விவசாயிகளுக்குத் தேவையான உரம் உள்ளிட்ட இடுபொருட்கள், மருந்துகளுக்கு மானியம் வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
- உள்ளூர் விவசாயிகளிடம் மாம்பழங்கள் வாங்கும் மாங்கூழ் உற்பத்தியாளர்களுக்கு மானியம் வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.
- வறட்சி, மழை உள்ளிட்ட சூழலியல் காரணங்களால் மா விவசாயிகள் பாதிக்கப்படும் போது உடனுக்குடன் அவற்றை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
- விவசாயிகளுக்கு எதிராக வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து செயல்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
ஆகிய உடனடிக் கோரிக்கைகளை முன்வைத்துப் போராட வேண்டியுள்ளது.
இத்தகைய உடனடிக் கோரிக்கைகளுடன், விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்கும் அரசின் சதித்திட்டத்தை எதிர்த்தும் களமிறங்க வேண்டிய அவசியமுள்ளது.
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்,
8754674757.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
DON’T DEPEND ON THE GOVT.
CREATE COOPERATIVE SOCIETIES AND HELP YOURSELF.
BECAUSE YOU ARE THE OWNERS.
DON’T ALLOW GOVTS (POLITICIANS) TO DICTATE AND LOOT YOU.
BE ALERT.
PUT THE BHARAT FIRST.