27.05.2026

தூய்மைப் பணியாளர் மாரியம்மாள் மீதான தாக்குதல்:
காண்ட்ராக்ட்மயத்தை ஒழிக்காமல் தீர்வில்லை

பத்திரிகைச் செய்தி

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் பகுதியில் 11-வது வார்டில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர் மாரியம்மாள் அவர்களை எவ்வித காரணமும் இன்றி அராஜகமான முறையில் ராம்கி நிறுவனம் பணி நீக்கம் செய்தது. இதனைப் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

சென்னை தீவுத்திடலைச் சேர்ந்த மாரியம்மாள் திருவொற்றியூர் பகுதியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வார விடுப்பெடுத்து (week off) பணிக்குத் திரும்பிய அவரிடம் மேற்பார்வையாளர் “உன்னை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் எனக்கு 1000 ரூபாய் தர வேண்டும் இல்லையெனில் உன்னை வேலையிலிருந்து தூக்கி விடுவோம்” என்று இலஞ்சம் கேட்டு மிரட்டி உள்ளனர். விடுமுறை எடுத்ததற்கு எதற்காகப் பணம் தர வேண்டும் என கேட்டதற்கு “தெருவில் குப்ப பொறுக்குற நாயி என்னையா எதிர்த்து பேசுற?” என்று சொல்லி அவரை அடித்து தாக்கியுள்ளனர். மேலும் பகுதி ஆய்வாளர் (unit officer) சின்ன, முத்து, பாண்டி ஆகிய மூவரும் சேர்ந்து மாரியம்மாளை கீழே தள்ளி பேனாவால் முதுகிலும், கழுத்தில் குத்தி மிகக் கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர்.

இதற்கு முன்பாக பல்வேறு முறை மகேஷ் என்ற மேற்பார்வையாளர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டான் எனவும் மாரியம்மாள் கூறுகிறார்.

இதன் தொடர்ச்சியாக தற்போது பொய்க் காரணங்கள் கூறி மிகவும் அராஜகமான முறையில் மாரியம்மாளை பணியிலிருந்து நீக்கி உள்ளனர். இது குறித்த செய்தி வெளியாகி மக்கள், ஜனநாயக சக்திகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் சார்பில் மே 25 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து அவர் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

குறிப்பாக தூய்மைப் பணி தனியார்மயமாக்கப்பட்டதன் பின்னர் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வு என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. நிரந்தரமற்ற, சமூக பாதுகாப்பற்ற பணி, கடுமையான உழைப்பு சுரண்டல், பெண் என்பதால் பாலியல் சீண்டல் என சொல்லொணா கொடுமைக்கு தூய்மைப் பணியாளர்கள் ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.

தூய்மைப் பணியில் ஈடுபட்டுவருபவர்களில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் கிட்டத்தட்ட 95 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள். தூய்மைப் பணியாளர் மாரியம்மாள் அவர்களை வயதில் மூத்தவர் என்று கூட பார்க்காமல் தாக்கியதில் அவர் பெண் என்பதும் அதிலும் அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் முக்கியக் காரணமாகும்.

இத்தகைய அவல நிலையை மாரியம்மாள் அவர்கள் மட்டும் இல்லாமல் தூய்மை பணியைச் செய்துவரும் அனைவரும் எதிர்கொண்டு வருகின்றனர். மேலும் காண்ட்ராக்ட் மயமாக்கப்பட்ட அனைத்து துறை பணியாளர்களின் நிலையும் இதுதான்.

ஆக, தொழிலாளர்களை மிகக் கடுமையான முறையில் சுரண்டும் காண்ட்ராக்ட்மயத்தை – தனியார்மயத்தை ஒழிப்பதே இதற்கான தீர்வாகும். மாணவர்கள், இளைஞர்கள், மக்கள், ஜனநாயக சக்திகள் அனைவரும் இதற்கான போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.

  • தமிழ்நாடு அரசே! உடனடியாக தூய்மைப் பணியாளர் மாரியம்மாள் அவர்களைத் தாக்கிய அனைத்து பிரிவு ஆய்வாளர்களையும் (unit officer) பணி நீக்கம் செய்து, கைது செய்!
  • தூய்மை பணியாளர்களை பணிநிரந்தரம் செய்திடு!
  • தொழிலாளர்களை கொன்றொழிக்கும் காண்ட்ராக்ட்மயத்தை (தனியார்மயத்தை) விட்டுவிட்டு அனைத்து துறையையும் அரசே பொறுப்பெடுத்து நடத்திடு!


இவண்
தோழர் அறிவு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு – புதுவை.
9444836642

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க