பெங்களூருவில் நடைபாதை வியாபாரிகளை அகற்றும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தவும், “நடைபாதை வியாபாரிகள் (வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் நடைபாதை வணிக ஒழுங்குமுறை) சட்டம், 2014”-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தவும் கோரி 500-க்கும் மேற்பட்ட குடிமக்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள், வழக்கறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மாணவர்கள் கர்நாடக அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர் ஆராய்ச்சியாளர்களால் எழுதப்பட்டுள்ள இக்கடிதம், ஜூலை 17, 2026 அன்று முதல்வர் டி.கே.சிவகுமார், அமைச்சர் கிருஷ்ணா பைரே கவுடா மற்றும் “கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின்” (GBA) தலைமை ஆணையர் மகேஷ்வர் ராவ் ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது.
“பாதுகாப்பான நடைபாதைகள்” மற்றும் “நடக்கக்கூடிய நகரங்கள்” (Walkable cities) என்ற பெயரில் கடந்த இரண்டு வாரங்களாக கிரேட்டர் பெங்களூரு ஆணையம் மேற்கொண்டு வரும் அகற்றும் நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான நடைபாதை வியாபாரிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகக் கடிதத்தில் கையெழுத்திட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதேவேளையில், நடைபாதைகளை வாகனங்கள் தொடர்ந்து ஆக்கிரமித்திருக்கும் நிலையில், ஏன் நடைபாதை வியாபாரிகள் மட்டும் குறிவைக்கப்படுகிறார்கள் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
பாதசாரிகளுக்கு உகந்த நகரங்களை உருவாக்கும் முயற்சி, நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது என்று கடிதம் வாதிடுகிறது. 2021-ஆம் ஆண்டு முதல் நடைபாதை வியாபாரிகள் “நுண்ணிய, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்” (MSME) என அங்கீகரிக்கப்பட்டுள்ளதை அது சுட்டிக்காட்டுகிறது. மேலும், “பி.எம்-ஸ்வநிதி” (PM-SVANIDHI) திட்டத்தின் கீழ் சுமார் 80,000 வியாபாரிகள் கடன் பெற்றுள்ளதாகத் தகவல்கள் உள்ள நிலையில், பெங்களூருவில் 27,000 நடைபாதை வியாபாரிகள் மட்டுமே உள்ளதாக அதிகாரிகள் கூறுவதன் முரண்பாட்டைக் கடிதம் கேள்விக்குள்ளாக்குகிறது.
அக்கடிதத்தின்படி, பெங்களூருவில் சுமார் 1.5 லட்சம் நடைபாதை வியாபாரிகள் உள்ளனர்; மலிவு விலையிலான உணவு, உடை மற்றும் பிற அன்றாடத் தேவைகளுக்கு 14 லட்சம் முதல் 20 லட்சம் வரையிலான மக்கள் இவர்களைச் சார்ந்திருப்பதாக ஆய்வுகள் மதிப்பிடுகின்றன. இந்நிலையில், இந்த அகற்ற நடவடிக்கையானது, தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு பெங்களூருவை வாழ்வதற்கு அதிக செலவு பிடிக்கும் இடமாக மாற்றிவிடும் என்றும் அது வாதிடுகிறது.
நடைபாதை வியாபாரிகளை “ஆக்கிரமிப்பாளர்கள்” என்று அழைப்பது ஒரு வன்முறைச் செயல் என்றும் ஆர்வலர்கள் அக்கடிதத்தில் குறிப்பிடுகின்றனர். வியாபாரிகள் என்பவர்கள் தொழிலாளர்கள் மற்றும் உரிமைகளைப் பெற்ற குடிமக்கள் என்றும், அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நடைபாதை வியாபாரிகள் சட்டத்தின் கீழ் அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். தொடர்ந்து நடைபெற்று வரும் வெளியேற்றும் நடவடிக்கை, 2014-ஆம் ஆண்டின் தெருவோர வியாபாரிகள் (வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் தெருவோர வியாபார ஒழுங்குமுறை) சட்டத்தின் பல விதிகளை மீறுவதாக அக்கடிதம் குற்றம் சாட்டுகிறது. ஒரு கணக்கெடுப்பை முடித்து, வியாபாரச் சான்றிதழ்களை வழங்கிய பின்னரே வெளியேற்றங்களை மேற்கொள்ள முடியும் என்றும், நகர வியாபாரக் குழுவின் பரிந்துரையின்றி வியாபாரம் இல்லாத பகுதிகளை அறிவிக்க முடியாது என்றும், 30 நாள் எழுத்துப்பூர்வ அறிவிப்பு இல்லாமல் வியாபாரிகளை வெளியேற்ற முடியாது என்றும், ரசீதுகள் மற்றும் உரிய சட்ட நடைமுறைகள் இல்லாமல் தள்ளுவண்டிகளைப் பறிமுதல் செய்ய முடியாது என்றும் அது குறிப்பிடுகிறது.
மேலும், தெருவோர வியாபாரம், பொது இடங்களில் மக்கள் நடமாட்டத்தை உறுதி செய்வதன் மூலம் பெண்களின் பாதுகாப்பிற்குப் பங்களிக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் அக்கடிதத்தில் வாதிடுகின்றனர். பேருந்து நிறுத்தங்கள் மற்றும் நடைபாதைகளைச் சுற்றி தெருவோர வியாபாரத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நீதிபதி வர்மா குழுவின் பரிந்துரையையும் அவர்கள் மேற்கோள் காட்டுகின்றனர். தெருவோர வியாபாரிகளுக்கும் பாதசாரிகளின் உயிரிழப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் அவர்கள் மறுக்கின்றனர். மாறாக, சாலைப் பாதுகாப்பிற்கு அதிவேக வாகனங்களை ஒழுங்குபடுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.
அனைவரையும் உள்ளடக்கிய நகர்ப்புறத் திட்டமிடலுக்கு அழைப்பு விடுத்துள்ள அக்கடிதம், பெங்களூரு பாதசாரிகளுக்கும் தெருவோர வியாபாரிகளுக்கும் இடையே ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இல்லை என்றும், உண்மையான நடைப்பயணத்திற்கு உகந்த ஒரு நகரம், சிந்தனைமிக்க நகர்ப்புற வடிவமைப்பு மற்றும் பொதுமக்களின் கலந்தாலோசனை மூலம் பாதசாரிகள், வியாபாரிகள், மிதிவண்டி ஓட்டுபவர்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இடமளிக்க வேண்டும் என்றும் கூறுகிறது.
கர்நாடக அரசு தெருவோர வியாபாரிகளை வெளியேற்றுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்; ஏற்கெனவே வெளியேற்றப்பட்டவர்களை அவர்களின் அசல் இடங்களில் மீண்டும் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்; வியாபாரிகள் குறித்து ஒரு விரிவான கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும், நகர வியாபாரக் குழுக்களை அமைக்க வேண்டும்; தெருவோர வியாபாரிகள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும்; தங்களைப் பாதிக்கும் விஷயங்களில் தெருவோர வியாபாரிகளின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.
இக்கடிதத்தை பொது சுகாதாரம் மற்றும் தொழிலாளர் ஆய்வாளர் அனுஷா பி, மாணவி அதிதி, டிசைன் பேக்கு அமைப்பைச் சேர்ந்த டாக்டர் பத்மினி ரே முர்ரே, பெண்கள் உரிமை ஆர்வலர் மது பூஷன், சிவிக் பெங்களூரு அமைப்பைச் சேர்ந்த கத்யாயினி சாமராஜ், ஏ.ஐ.எஸ்.ஏ. அமைப்பைச் சேர்ந்த ஷரண்யா ஈஸ்வர் மற்றும் பொதுக் கொள்கை நிபுணர் ரக்ஷித் ஆகியோர் இக்கடிதத்தை எழுதியுள்ளனர்.
திரைப்படப் படைப்பாளர் கவிதா லங்கேஷ், நடிகர் பிரகாஷ் ராஜ், எழுத்தாளர் டாக்டர் விஜயம்மா, இயற்பியலாளர் பிரஜ்வல் சாஸ்திரி, கட்டிடக் கலைஞர் பிரேம் சந்தாவர்கர், எழுத்தாளர் ரஹம்த் தாரிகெரே, நாடகக் கலைஞர் லக்ஷ்மன் கே.பி., தீண்டத்தகாத நாடோடி சமூகங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த டாக்டர் ஏ.எஸ். பிரபாகர், எழுத்தாளர் ரூபா ஹாசன், ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் அஸ்வினி கே.பி., தொழிற்சங்கங்களின் கூட்டுக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே.வி. பட் மற்றும் மூத்த வழக்கறிஞர் பி.டி. வெங்கடேஷ் ஆகியோர் இக்கடிதத்தை ஆதரித்துள்ளனர்.
இந்தத் திறந்த கடிதத்திற்கு அகில இந்திய மாணவர் சங்கம் (AISA), தேசிய மக்கள் இயக்கங்களின் கூட்டணி (NAPM), ஃபிரைடேஸ் ஃபார் ஃபியூச்சர் கர்நாடகா, பெங்களூரு பஸ் பிரயானிகர வேதிகே மற்றும் ஸ்லம் மஹிளா சங்கடனே உள்ளிட்ட அமைப்புகளும், வழக்கறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், பத்திரிகையாளர்கள், மாணவர்கள் மற்றும் நகர்ப்புற வல்லுநர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநில காங்கிரசு அரசு ‘ஆக்கிரமிப்பு’ அகற்றம் என்ற பெயரில் பெங்களூருவிலிருந்து உழைக்கும் மக்களைத் தொடர்ந்து வெளியேற்றி வருகிறது. அதன் ஓர் அங்கமாகவே தற்போது தெருவோர வியாபாரிகள் மீதான இக்கொடூர தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, பெருநகரங்களிலிருந்து உழைக்கும் மக்களை விரட்டியடிக்க வேண்டுமெனில், அம்மக்களுக்கான மலிவான வாழ்வாதாரக் கட்டமைப்பைத் தகர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் தெருவோர வியாபாரிகள் வெளியேற்றப்படுகின்றனர். இதன் மூலம் கே.எஃப்.சி. (KFC), டோமினோஸ் (Dominos) போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் இச்சந்தையைக் கைப்பற்றிக் கொள்ளும். இது, பூர்வகுடி மக்களாலும் உழைக்கும் மக்களாலும் கட்டியெழுப்பப்பட்ட பெங்களூரு நகரத்தை கார்ப்பரேட்டுகளுக்கும் மேட்டுக்குடிகளுக்கும் தாரைவார்க்கும் சதித்திட்டத்தின் அங்கமாகும்.
மேலும், சாலை விபத்துகளுக்கு முக்கியக் காரணம் முறையான, பாதுகாப்பான சாலை வசதி ஏற்படுத்தப்படாததே ஆகும். ஆனால், தெருவோர கடைகளால்தான் சாலை விபத்துகள் ஏற்படுவதாகப் பொய்யான காரணத்தைக் கூறி மக்களுக்குப் பீதியூட்டி வியாபாரிகளை விரட்டியடிக்கும் அநீதியை காங்கிரசு அரசு செய்து வருகிறது. இவ்வாறு உழைக்கும் மக்களை அச்சுறுத்தல் மிக்கவர்களாகவும் அசுத்தமானவர்களாகவும் சித்தரிப்பதைத் துளியும் சகித்துக்கொள்ள முடியாது. இதற்கெதிராக பெங்களூருவின் உழைக்கும் மக்கள் ஒன்றுதிரண்டு போராடி காங்கிரசு அரசை அடிபணியவைக்க வேண்டும்.
நன்றி: மக்தூப் மீடியா
![]()
மொழிபெயர்ப்பு: சோபியா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











