ஏ.ஐ. நகரத்திற்காக விரட்டியடிக்கப்படும் கர்நாடக விவசாயிகள்: 500 நாட்களாகத் தொடரும் போராட்டம்

இத்திட்டத்திற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் 500 நாட்களாக அப்பகுதி உழைக்கும் மக்களும் விவசாயிகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், மக்களின் எதிர்ப்பையும் மீறி கர்நாடக மாநில காங்கிரசு அரசு இத்திட்டத்திற்கான இறுதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஏ.ஐ. நகரத்திற்காக விரட்டியடிக்கப்படும் கர்நாடக விவசாயிகள்: 500 நாட்களாகத் தொடரும் போராட்டம்

ர்நாடகாவின் ராமநகரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பிடாடி பகுதியில், “பெருநகர பெங்களூரு ஒருங்கிணைந்த நகரமைப்பு” (Greater Bengaluru Integrated Township – GBIT) திட்டத்திற்காகச் சுமார் 500 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான இறுதி அறிவிப்பை கர்நாடக மாநில காங்கிரசு அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான நகரமைப்பு இப்பகுதியில் அமையவுள்ளது.

கடந்த 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இத்திட்டத்திற்கான ஆரம்பக்கட்ட அறிவிப்பை கர்நாடக அரசு வெளியிட்டிருந்தது. அதன்படி, இந்த செயற்கை நுண்ணறிவு நகரத்திட்டமானது பிடாடி உள்ளிட்டு சுற்றுவட்டார ஒன்பது வருவாய் கிராமங்களிலிருந்து சுமார் 7,500 முதல் 9,000 ஏக்கர் வரையிலான நிலப்பகுதியை உள்ளடக்கியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள இறுதி அறிவிப்பானது இத்திட்டத்திற்கான முதல் கட்டமாகும். இது, ராமநகரம் மற்றும் ஹரோஹள்ளி தாலுக்காக்களில் உள்ள கெம்பையனபாளையா, மண்டலஹள்ளி, வடேரஹள்ளி உள்ளிட்ட கிராமங்களின் 500 ஏக்கர் நிலப்பரப்பைக் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பாகும்.

இத்திட்டத்திற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்து, செயற்கை நுண்ணறிவு சார்ந்த உள்கட்டமைப்பு வேலைகளைத் தொடங்கிய பின்னரே இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுமார் 20,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படவுள்ள இத்திட்டத்தினால், அப்பகுதியில் உள்ள 16,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.

“வேலை, வாழ்க்கை, பொழுதுபோக்கு” என்ற கோட்பாட்டின் அடிப்படையில், தனியார்ப் பள்ளிகள், நவீன மருத்துவமனைகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் என அனைத்துத் தேவைகளையும் ஒரே இடத்தில் நிறைவு செய்யும் நோக்கில் இத்திட்டம் உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேட்டுக்குடி மக்கள், பணக்காரர்களுக்காக அமைக்கப்படும் இந்நகரத்திற்காக விவசாயிகள், உழைக்கும் மக்கள் விரட்டியடிக்கப்பட உள்ளனர். மேலும், ஸ்மார்ட் சிட்டி மற்றும் அதிநவீன நகரமயமாக்கல் என்ற பெயரில் கொண்டு வரப்படும் இத்திட்டம், அங்குள்ள பசுமையான சுற்றுச்சூழலையும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தையும் அழித்துவிடும்.

தங்கள் நிலங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் அப்பகுதி விவசாயிகள், இந்த நகரமயமாக்கலுக்கு எதிராகத் தொடர்ந்து குரலெழுப்பி வருகின்றனர். இது குறித்து ஊடகங்களிடம் பேசிய 104 வயதான சிவம்மா என்ற மூத்த விவசாயி, “அரசால் பணத்தைக் காட்டி விவசாயிகளை விலைக்கு வாங்கிவிட முடியாது. விவசாயிகள் விவசாயம் செய்வதை நிறுத்திவிட்டால், மக்கள் உணவுக்காக என்ன செய்வார்கள்? யாராலும் பணத்தைச் சாப்பிட முடியாது” என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

மற்றுமொரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த லதா என்பவர், “என் கணவருக்கு 52 வயதாகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் அவருக்குக் கிடைக்கக்கூடிய வேலை ஒரு செக்யூரிட்டி வேலைதான். சொந்த நிலத்தில் விவசாயம் செய்த நாங்கள், அதை ஏன் ஏற்க வேண்டும்? கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு அரசு பணம் கொடுக்கலாம், ஆனால் அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு ஒரு விவசாயி என்ன செய்ய முடியும்? புதிய வேலைகளைக் கற்றுக்கொண்டு வேறு இடத்திற்குச் சென்று பிழைப்பதற்கு எங்களுக்கு இப்போது வயதோ இளமையோ இல்லை” என்று வேதனை தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்திற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் 500 நாட்களாக அப்பகுதி உழைக்கும் மக்களும் விவசாயிகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், மக்களின் எதிர்ப்பையும் மீறி கர்நாடக மாநில காங்கிரசு அரசு இத்திட்டத்திற்கான இறுதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பா.ஜ.க-வின் பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டே கார்ப்பரேட் திட்டங்களை அமல்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தைச் சூறையாடி வருகின்றன.

எனினும், இதே கர்நாடகாவில் 13 கிராம நிலங்களைப் பறித்து உயர் தொழில்நுட்ப விண்வெளி பூங்கா அமைப்பதற்கு எதிராக மூன்றரை ஆண்டுகளாகப் போராடிக் கடந்தாண்டில் காங்கிரசு அரசைப் பின்வாங்க வைத்தனர், தேவனஹள்ளி பகுதி மக்கள். ஆகவே, பிடாடி மக்களின் போராட்டமும் அரசைப் பின்வாங்க வைத்து மக்களின் வாழ்வுரிமையையும் நிலைவுரிமையையும் நிலைநாட்டும். களத்தில் இம்மக்களுடன் கைகோர்த்துப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.


அசோக்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க