விவசாயம், இயற்கை, வாழ்வாதாரத்தை அழிக்கும் அரசு:
போராடும் தென்காசி மாவட்ட விவசாயிகள்!
தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மதுரை மாவட்டம் திருமங்கலம் முதல் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வரை சுமார் 147 கி.மீ. தூரத்துக்கு “தேசிய நெடுஞ்சாலை 744” (NH 744) எனும் பெயரில் நான்கு வழிச்சாலை அமைக்க 1,863 ஏக்கர் விளைநிலங்களைக் கையகப்படுத்தத் தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், இத்திட்டத்திற்காகத் தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் (NHAI) மாநில அரசும் கையகப்படுத்தத் திட்டமிட்டுள்ள நிலத்தில், ஆண்டுதோறும் சுமார் 20,000 டன் நெல்லையும், 12 முதல் 14 லட்சம் தேங்காய்களையும் விளைவித்து விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர்.
இந்த நான்கு வழிச்சாலைத் திட்டத்திற்காகப் பல்லாயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட உள்ளன. 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட உள்ளன.
மேலும், 1,700 ஏக்கர் அளவிலான முப்போகம் விளையும் விவசாய நிலங்கள், 3 லட்சம் தென்னைகள், 200 திறந்தவெளி கிணறுகள், 500 ஆழ்துளைக் கிணறுகள், 200 வீடுகள் பாதிக்கப்படும். இந்த சாலை தென்காசி மாவட்டத்தில் நுழையும்போது, 7 கண்மாய்கள், நாற்பதுக்கும் மேற்பட்ட நீரோடைகள், ஆயிரக்கணக்கான வாழை, எலுமிச்சை, காட்டு மரங்கள் அழிக்கப்படும் அபாயம் உள்ளது.
இந்த சாலை அமைப்பதற்கு வனத்துறையிடம் அனுமதி பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதைப்போல், நான்கு வழிச்சாலை என்று சொல்லிவிட்டு எட்டு வழிச்சாலைக்கான நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற பல விதிமீறல்களின் ஊடாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்தும், கார்ப்பரேட் முதலாளிகளின் இலாப வெறிக்காக இந்த சாலை போடப்பட உள்ளது.
இந்த நாசகரத் திட்டத்தைத் தடுத்து நிறுத்த ஏற்கெனவே விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இந்த நான்கு வழிச் சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் திட்டம் 24.10.2018-இல் வெளியிடப்பட்டது. 7 ஆண்டுகள் 9 மாதங்கள் ஆகியும் திட்டப் பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இந்நிலையில், நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலம் 5 ஆண்டுகள் பயன்படுத்தப்படாமல் இருந்தால், அதை மீண்டும் அதன் அசல் உரிமையாளரிடமே திருப்பி அளிக்கும் வகையில் “தேசிய நெடுஞ்சாலைச் சட்ட”த்தில் திருத்தம் செய்யப் பரிந்துரைத்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஒன்றிய அரசு அமைச்சரவையின் (Cabinet) ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.
இப்படி அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள புதிய சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், எதிர்காலத்தில் 5 ஆண்டுகள் பயன்படுத்தப்படாத நெடுஞ்சாலை நிலங்கள் விவசாயிகளுக்குத் திரும்பக் கிடைக்கும்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நில எடுப்பு அறிவிப்புகளை இரத்து செய்து 79,000 மரங்களை வெட்டுவதற்காக விடப்பட்ட டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்றும், அந்நிலங்களை தங்களிடமே ஒப்படைக்க வலியுறுத்தியும் “நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்ற அமைப்பு சங்க”த்தை சேர்ந்த விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 7 அன்று மனு அளிக்க வந்தனர்.
மனு அளிக்க வந்த விவசாயிகளை மாவட்ட ஆட்சியர் காத்திருக்க வைத்ததால் விவசாயிகள் சாலையில் திரண்டு போராட்டம் நடத்தினர். விவசாயிகளைக் கிள்ளுக்கீரையாக நினைத்த ஆட்சியருக்குப் பதிலடி கொடுத்தனர்.
பாசிச மோடி அரசின் கீழ் இயங்கும் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் பணியை அ.தி.மு.க. அரசும், அதற்குப் பின் வந்த தி.மு.க. அரசும் செய்தன. தற்போது த.வெ.க. அரசிலும் திட்டம் கைவிடப்படாததால் விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது.
கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்களுக்காக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கக் காத்திருக்கும் பாசிச மோடி அரசை வீழ்த்த உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் விவசாயிகளோடு கரம் கோர்ப்போம். தென்காசி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைக்குத் துணைநிற்போம்.
பதிவு
மக்கள் அதிகாரக் கழகம்,
நெல்லை – தூத்துக்குடி மாவட்டங்கள்.
9385353605
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











