பழங்குடியின மக்கள் போராளி ஸ்டேன் சுவாமியின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் | தெருமுனைக் கூட்டம்

கூட்டத்தில் உரையாற்றிய தோழர்கள், ஜார்க்கண்ட் பழங்குடி மக்களுக்காகப் போராடிய தோழர் ஸ்டேன் சுவாமியை, பீமா கொரேகான் பொய் வழக்கில் சேர்த்து பாசிச மோடி அரசு சிறையிலேயே அரசப் படுகொலை செய்தக் கொடூரத்தைத் தோலுரித்தனர்.

ழங்குடியின மக்களின் நில உரிமைக்காகவும், கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிராகவும் தன் இறுதி மூச்சு வரை போராடி மறைந்த தோழர் ஸ்டேன் சுவாமியின் 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டியில் மக்கள் அதிகாரக் கழகத்தின் சார்பில் கடந்த ஜூலை 5 அன்று மாலை 5.00 மணிக்குத் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மக்கள் அதிகாரக் கழக வழக்கறிஞர் அணி தோழர் கின்ஷன் தலைமை தாங்கினார். கழக மாவட்டச் செயலாளர் தோழர் தாளமுத்து செல்வா கண்டன உரை ஆற்றினார்.

கூட்டத்தில் உரையாற்றிய தோழர்கள், ஜார்க்கண்ட் பழங்குடி மக்களுக்காகப் போராடிய தோழர் ஸ்டேன் சுவாமியை, பீமா கொரேகான் பொய் வழக்கில் சேர்த்து பாசிச மோடி அரசு சிறையிலேயே அரசப் படுகொலை செய்தக் கொடூரத்தைத் தோலுரித்தனர்.

பழங்குடியின மக்கள் காடுகளையும் மலைகளையும் உயிராக நேசித்துப் பாதுகாத்து வருகின்றனர். ஆனால், இன்று அரசே ‘காடுகளைப் பாதுகாக்கிறோம்’ என்ற போர்வையில், அம்பானி, அதானி, அகர்வால் போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்குக் கனிம வளங்களைச் சுரண்டலுக்காக மலைகளையும் காடுகளையும் தாரைவார்த்துத் தருகிறது.

இங்கு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையைக் காப்பாற்றுவதற்காக மக்களைச் சுட்டுக்கொன்ற அரசு, ஜார்க்கண்டில் அங்குள்ள காடுகளையும் மலைகளையும் பாதுகாக்கப் போராடிய பழங்குடியின மக்களை ஒடுக்கத் துணை ராணுவப் படையை அனுப்பிச் சுட்டுக் கொல்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்த்தால் மக்களை அரசு இப்படித்தான் வேட்டையாடும் என்பதற்கு இந்த இரண்டு துப்பாக்கிச்சூடுகளும் சாட்சியங்கள் ஆகும். இவை வெவ்வேறானவை அல்ல, இரண்டும் ஒரே கார்ப்பரேட் பாசிச முகமே ஆகும் என்று உரையாற்றிய தோழர்கள் உக்கிரமாகச் சாடினர்.

மேலும், மக்களைச் சாதி ரீதியாகப் பிளக்கும் பார்ப்பனியத்தையும், அதற்குத் துணைபோகும் இன்றைய அரசு கட்டமைப்பையும் தோழர்கள் விமர்சித்தனர். பிரிட்டிஷாருக்கு மன்னிப்புக் கடிதம் கொடுத்த சாவர்க்கரையும், காட்டிக்கொடுத்த எட்டப்பன்களையும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் முன்னிறுத்துவவதைக் கண்டித்த உரையாளர்கள், மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார் ஆகிய நம் மண்ணின் மைந்தர்களின் தியாக வரலாறுகளை நெஞ்சில் ஏந்திப் போராடுவோம் என்றனர்.

தொடர்ந்து, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு நம் நாட்டை அடிமையாக்கி நம் கடலோரப் பகுதிகளை அழிக்கத் துடிக்கும் மோடி அரசின் நாசகரத் திட்டங்களை முறியடிக்க வேண்டும் என முழக்கமிட்டனர். தூத்துக்குடி மண்ணில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம், ஜல்லிக்கட்டுப் போராட்டம் மற்றும் தற்போதைய டங்ஸ்டன் எதிர்ப்புப் போராட்டங்களின் வழியில் நின்று, கார்ப்பரேட் ஆதிக்கத்தை முறியடித்து, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை நோக்கி மக்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என இக்கூட்டத்தில் அறைகூவல் விடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் வி.சி.க. ஓட்டப்பிடாரம் தொகுதிச் செயலாளர் தோழர் சார்ல்ஸ், ஏ.ஐ.சி.சி.டி.யூ. தேசிய செயற்குழு உறுப்பினர் தோழர் அம்ஜத், திராவிடர் கழக வழக்கறிஞர் தோழர் திரவியம், சமூக ஆர்வலர் தோழர் லிட்டிராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சமூக ஆர்வலர் தோழர் அசோக், மக்கள் அதிகாரக் கழக மாவட்டப் பொருளாளர் தோழர் சந்துரு ஆகிய தோழர்களும் சிலுவைப்பட்டி சுற்றுவட்டாரப் பொதுமக்களும் இத்தெருமுனைக் கூட்டத்தில் திரளாகக் கலந்துகொண்டனர்.

மக்கள் அதிகாரக் கழகம்,
தூத்துக்குடி மாவட்டம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க