திருவள்ளூர் அமோனியா கசிவு: ஒடிசாவிற்கு திருட்டுத்தனமாக அனுப்பப்பட்ட சிறுமியின் உடல்

இப்படுகொலையை மூடிமறைப்பதிலேயே த.வெ.க. அரசு குறியாக உள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த குமானி ஜுவாங்கா என்ற 15 வயது பழங்குடியின சிறுமியின் உடலை அவரது அண்ணனுக்கே தெரியாமல் திருட்டுத்தனமாக ஒடிசாவிற்கு அனுப்பி வைத்திருப்பது இதனை நிரூபிக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேரில் உள்ள “செயின்ட் பீட்டர் & பால் சீ ஃபுட் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்” என்கிற இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த ஜூன் 21 அன்று ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் 18 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்; 80-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கொடிய அமோனியா வாயு ஏற்படுத்தும் நீண்டகால உடல்நல பாதிப்புக் காரணமாக பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

ஆனால் தமிழ்நாடு முதல்வர் விஜய் தற்போதுவரை பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை நேரில் சென்று பார்க்கவில்லை. அரசு போதிய இழப்பீடும் வழங்கவில்லை. மாறாக, இப்படுகொலையை மூடிமறைப்பதிலேயே த.வெ.க. அரசு குறியாக உள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த குமானி ஜுவாங்கா என்ற 15 வயது பழங்குடியின சிறுமியின் உடலை அவரது அண்ணனுக்கே தெரியாமல் திருட்டுத்தனமாக ஒடிசாவிற்கு அனுப்பி வைத்திருப்பது இதனை நிரூபிக்கிறது.

ஒடிசாவில் பழங்குடியின மக்கள் வசிக்கும் கியோன்ஜார் பகுதியைச் சேர்ந்தவர் 15 வயதான குமானி ஜுவாங்கா. குடும்பத்தின் பொருளாதாரத் தேவைக்காக இவர் ஐந்தாம் வகுப்புக்குப் பிறகுப் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டார். மாதம் ரூ.15,000 சம்பளம் கிடைக்கும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதியின் பேரில் ஐந்து மாதங்களுக்கு முன்புதான் கன்னிகைப்பேரில் உள்ள இந்த இறால் பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு வேலைக்கு வந்திருக்கிறார். அக்கிராமத்தில் குமானியையும் பிற இளைஞர்களையும் நிறுவன மேற்பார்வையாளர் ஒருவர் சென்னைக்கு வலுக்கட்டாயமாக அனுப்புவதற்கு வற்புறுத்தினர் என்று குமானியின் அண்ணன் அம்பலப்படுத்தியுள்ளார்.

ஆந்திராவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்யும் வித்யாதர் ஜுவாங்காவும் சிறுமி குமானியும் ஒடிசாவின் மிகப்பெரிய பண்டிகையான ராஜாவிற்கு அக்டோபரில் செல்வதற்குத் திட்டமிட்டிருந்த நிலையில்தான் இக்கொடூரம் அரங்கேறியுள்ளது. “அவள் வீட்டில் மகிழ்ச்சியாக இருந்தாள். இது அவளுடைய முதல் வேலை. அதுவே அவளுடைய கடைசி வேலையாகவும் ஆகிவிட்டது” என்று வித்யாதர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சிறுமியின் உடலை வாங்குவதற்காக இரண்டு நாட்களாக மருத்துவமனைக்கு வெளியே நிவாரண முகாமில் காத்திருந்த வித்யாதருக்கு தெரிவிக்கப்படாமல் விமானத்தின் மூலம் குமானியின் உடல் ஒடிசாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. “ஜூன் 23 அன்று உடலைக் கொண்டு செல்லலாம் என்று என்னிடம் கூறப்பட்டிருந்தது; ஆனால் இப்போது உடல் ஒடிசாவைச் சென்றடைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.” என்று வித்யாதர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, ஜூன் 24 அன்று தமிழ்நாடு போலீசுதுறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஒடிசா அரசுடன் இணைந்து வித்யாதருக்கு இரயில் பயணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், வித்யாதர் எழுப்பும் கேள்வி ஒன்றுதான்: “என் பெற்றோரிடம் நான் என்ன சொல்வேன்?”

இந்த அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தவர்கள் அனைவரும் பிற மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களும் பெண்களுமாவர். அதிலும் 14 பேர் ஒடிசாவை சேர்ந்தவர்கள். அவர்களில் சிறுமி குமானி உட்பட 13 பேர் ஒடிசாவின் பழங்குடியின கிராமமான கியோன்ஜாரை சேர்ந்தவர்கள். இவர்களில் பல சிறுவர்கள், இளைஞர்கள் கட்டாயப்படுத்தப்பட்டும் பொருளாதார சூழல் காரணமாக வேறுவழியின்றியும் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களைக் கேட்க நாதியற்றவர்களாகக் கருதும் த.வெ.க. அரசு, முறையாக விசாரித்து உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக, திருட்டுத்தனமாகச் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து இப்பிரச்சினையை மூடிமறைக்க  முயல்கிறது. த.வெ.க. அரசின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்தும் தொழிலாளர்களுக்கு உரிய நீதி கிடைப்பதற்கும் நாம் குரலெழுப்ப வேண்டும்.


ஆகாஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க