லுமும்பாக்கள் வாழ்கிறார்கள்: கால்பந்து மைதானத்தில் ஒலித்த ஏகாதிபத்திய எதிர்ப்பு முழக்கம்

ஏகாதிபத்தியங்களின் கொள்ளைக்காகவும், போட்டாபோட்டிக்காகவும் உலகம் முழுக்க சுரண்டலும், போர்களும், அடக்குமுறைகளும், படுகொலைகளும் பல்வேறு வடிவங்களில் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி மைதானத்தில் தீரத்தோடு தனது ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை வெளிப்படுத்திய காங்கோவின் மைந்தன் மைக்கேல் கூபா மபோலடிங்காவின் உணர்வை நாம் அனைவரும் வரித்துக் கொள்வோம்.

மெரிக்கா மற்றும் மெக்சிகோ நாடுகளில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில்(FIFA World Cup 2026) நடைபெற்ற ஒரு சம்பவம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

காங்கோ ஜனநாயகக் குடியரசைச் சேர்ந்த, லுமும்பா வியா (லுமும்பா வாழ்கிறார்) என்று அழைக்கப்படும் மைக்கேல் கூகா மபோலடிங்கா, கொலம்பியாவுக்கும் காங்கோவுக்கும் இடையிலான போட்டியின்போது, அன்றைய பெல்ஜிய ஏகாதிபத்தியவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட, காங்கோவைச் சார்ந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியும் சுதந்திரப் போராட்ட வீரருமான பாட்ரிஸ் லுமும்பாவைப் போன்ற தோற்றத்தில் நின்று, தனது தலையில் துப்பாக்கி குறி பார்ப்பது போல் விரல்களை மடக்கிக் கொண்டும், வாயைப் பொத்திக் கொண்டும் நின்றார்.

1961 இல் படுகொலை செய்யப்பட்ட லுமும்பாவின் நினைவாக, காங்கோ தலைநகரான கின்ஷாசாவில் உள்ள அவரது சிலையைப் போன்றே அதே உடல் அமைப்பில் மைக்கேல் மைதானத்தில் நின்றார். 2013-ஆம் ஆண்டு முதல் இத்தகைய எதிர்ப்பை மைக்கேல் பதிவு செய்து வருகிறார்.

தற்போது காங்கோவின் கிழக்குப் பகுதியில் நடக்கும் உள்நாட்டு வன்முறைகளை உலகிற்கு உணர்த்தவும் மைக்கேல் தனது எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டார்.

அதன் பிறகு உஸ்பெகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக காங்கோ விளையாடும் போட்டிகள் அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் நடந்தன. ஆனால், அரசியல் ரீதியாக அச்சமடைந்த அமெரிக்க அரசு, மைக்கேலுக்கு விசா வழங்க மறுத்துவிட்டது. அதேசமயம், அவருக்குப் பதிலாக மற்றொரு இளம் ரசிகர் (”லுமும்பா ஜூனியர்”) மைதானத்தில் அதேபோன்று தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்தின் கீழ் ஆப்பிரிக்க நாடுகள் அடிமைப்படுத்தப்பட்டிருந்த சூழலில், குறிப்பாக காங்கோ பெல்ஜியத்தின் ஆதிக்கத்தின் கீழ் (1885 – 1960) இருந்தது. அன்றைய பெல்ஜிய மன்னன் லியோபோல்டின் தனிப்பட்ட சொத்தாகவே காங்கோ மாற்றப்பட்டது. பெல்ஜிய ஏகாதிபத்தியவாதிகளால், காங்கோவின் ரப்பர் தோட்டங்களிலும், கனிம வளக் கொள்ளைக்காக சுரங்கங்களிலும் மக்கள் கொடூரமாக சுரண்டப்பட்டனர். ரப்பர் பெருந்தோட்ட நிறுவனங்களின் லாபவெறிக்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பெல்ஜியத்தின் மக்கள் தொகைக்கு இணையான காங்கோ மக்கள் (அதாவது 1 கோடி பேர்) அக்காலனிய ஆதிக்கக் காலகட்டத்தில் கொல்லப்பட்டனர்.

காங்கோ அனைத்து வளங்களையும் கொண்ட ஒரு நாடாகும். உலகில் உள்ள வெப்ப மற்றும் குளிர் காலநிலைக்கேற்ற, அனைத்து பயிர்களும் வளரக்கூடிய மண்வளத்தைக் கொண்ட நாடாகும். பெட்ரோல், எரிவாயு, செம்பு, தங்கம், கோபால்ட், யுரேனியம் போன்ற கனிம வளங்களும் நிறைந்த நாடு. இத்தனை வளங்களைக் கொண்ட காங்கோ இன்றும் வறுமையான நாடுகளில் ஒன்றாக இருப்பதற்கு முக்கியக் காரணம் காங்கோவின் பொருளாதாரம் ஏகாதிபத்தியங்களின் கொள்ளைக்கேற்ப கட்டியமைக்கப்பட்டுள்ளதாகும்.


படிக்க: ஈரான்: மதக் கொடுங்கோன்மை – ஏகாதிபத்திய முற்றுகைக்கு இடையில் வெடித்தெழும் மக்கள் போராட்டம்!


அன்று, பெல்ஜிய ஏகாதிபத்தியத்துக்கெதிராக, காங்கோவின் சுதந்திரத்திற்காக போராடியவர்தான் பேட்ரிஸ் லுமும்பா ஆவார். காங்கோவில் தேசிய விடுதலை இயக்கம் பாட்ரீஸ் லுமும்பாவின் தலைமையில் தீவிரமாகப் போராடியதன் விளைவாக, 1960 ஜூன் 30 ம் தேதி பெல்ஜியத்திடமிருந்து விடுதலை பெற்றது காங்கோ.

பெல்ஜியத்திடமிருந்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தாலும், இராணுவத்தின் உயர் பொறுப்புகள், உள்ளூர் அளவிலான கருங்காலி ஆயுதக் குழுக்கள் வரை பெல்ஜியம் தனக்கான ஆட்களை பராமரித்து வந்தது. மேலும் கனிம வளங்கள் நிறைந்த கடாங்கா பகுதியை தனிநாடாக பிரித்து பொம்மை ஆட்சியை நிறுவவும் ஏகாதிபத்தியங்கள் முயன்றன.

மொத்த நாடும் அரசியல் அதிகாரத்திற்கு போட்டி போடும் குழுக்களின் நாய்ச் சண்டையில் ஆழ்ந்திருந்த போது, இராணுவத்தில் இருந்த தங்களின் கைக்கூலியான ஜோசப் மோபுடுவைக் கொண்டு, ஒரு திடீர் எதிர்ப்புரட்சியை அரங்கேற்றின மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள். இதன் விளைவாக, பிரதமராகப் பொறுப்பேற்கவிருந்த பாட்ரீஸ் லுமும்பா 1960 செப்டம்பரில் கைது செய்யப்பட்டார். பின்னர், 1961 ஜனவரி 17 அன்று கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

பெயரளவில் மட்டுமே சுதந்திரத்தை காங்கோ அடைந்துள்ளது. உண்மையில், ஏகாதிபத்தியங்களின் போட்டாபோட்டி, கொள்ளைக்காக இன்றுவரை தீராத உள்நாட்டுப் போர்களின் பிடியில் காங்கோ சிக்க வைக்கப்பட்டுள்ளது. மொத்த நாடும் பல்வேறு மத, இனரீதியான ஆயுதக்குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஏகாதிபத்தியங்கள் இத்தகைய ஆயுதக்குழுக்களுக்கு ஆதரவு கொடுப்பதன் மூலம், தங்களின் சுரண்டலைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

காங்கோவில் நடக்கும் வன்முறைகளால், 70 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக வாழ்கின்றனர். 2.3 கோடிக்கும் அதிகமான மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர் உரிமை, பாதுகாப்பான வேலைச் சூழல், வேலை செய்வதற்கான வயது வரம்பு, வேலை உத்திரவாதம், குறைந்தபட்சக் கூலி, மருத்துவ வசதி என எந்த உரிமைகளும் காங்கோவில் கிடையாது. ஜனநாயகம் குறித்து போலியாகப் பீற்றித் திரியும், அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியக் கும்பல்கள், காங்கோ மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. அங்கிருந்து கிடைக்கும் மலிவான விலையிலான கச்சாப் பொருட்களுக்காக நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு திரிகின்றன.

தனது நாட்டின் இத்தகைய துயரமான நிலைமையினையும், அதற்கு அடிப்படைக் காரணமான ஏகாதிபத்தியக் கும்பல் செய்து வரும் குற்றங்களையும் உலக மக்களிடத்தில் அம்பலப்படுத்தும் நோக்கில் இருந்தே மைக்கேல் துணிச்சலாக தனது எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். அவருடைய நாட்டுப்பற்றும், ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வும் போற்றுதலுக்குரியது.

காங்கோ மட்டுமல்ல, ஆப்பிரிக்காவின் பெரும்பாலான நாடுகளின் நிலையும் இதுதான். ஏகாதிபத்தியங்களின் கொள்ளைக்காகவும், போட்டாபோட்டிக்காகவும் உலகம் முழுக்க சுரண்டலும், போர்களும், அடக்குமுறைகளும், படுகொலைகளும் பல்வேறு வடிவங்களில் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி மைதானத்தில் தீரத்தோடு தனது ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை வெளிப்படுத்திய காங்கோவின் மைந்தன் மைக்கேல் கூபா மபோலடிங்காவின் உணர்வை நாம் அனைவரும் வரித்துக் கொள்வோம்.

இன்று, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு நாட்டை அடிமைப்படுத்தும் வகையிலும், தங்களது வரைமுறையற்ற சுரண்டல், கொள்ளைக்காகவும் இந்திய மக்களை பலியிடத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி – அம்பானி, அதானி பாசிசக் கும்பலை வீழ்த்துவதற்கு அணிதிரள்வோம்.

நாமும் லுமும்பாவாக மாறுவோம். ஆம், லுமும்பாக்கள் வாழ்கிறார்கள்.


அய்யனார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க