த.வெ.க. ஆட்சி: தமிழை ஒழிப்பதில் பரிணாம வளர்ச்சி!

தனது அரசின் கொள்கை இரு மொழிக் கொள்கை என்று விஜய் போடும் வேடம் கலைகிறது. பிழைக்க ஒரு கொள்கை, மக்களை அரசியல் ரீதியாக ஏமாற்ற வேறொரு கொள்கை என்று வாழும் விஜய், அதற்கேற்ப தமிழ்நாட்டு மக்களை வழிநடத்திச் செல்லவும் முயல்கிறார்.

“தமிழ்நாட்டில் தவெக ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது?” என்கிற தலைப்பில் மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக வெளியீடு கொண்டு வரப்பட்டு, ஜனநாயக சக்திகள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

இதில் முக்கியமாக மூன்று அம்சங்கள் உள்ளடங்கியுள்ளது. த.வெ.க. ஆட்சியில், தி.மு.க. அழிப்பு என்கிற பெயரில் தமிழ்நாட்டுக்கே உரிய பார்ப்பனிய எதிர்ப்புப் பண்பாட்டை மழுங்கடித்து அதனை அழிப்பது; பார்ப்பனிய பண்பாட்டை ஏற்க வைப்பது; தமிழ்நாட்டின் மொழி உரிமை, இன உரிமைக்கான போராட்டத்தை அழிப்பது (இது திருத்தப்பட்ட மூன்றாவது பதிப்பில் வெளியிடப்பட்டுள்ளது) ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருவதை அடையாளப்படுத்தியுள்ளது.

இதனை உண்மை என நிரூபிக்கும் வகையில் முதல்வர் விஜய்யின் நடவடிக்கைகளே பல்வேறு சான்றுகளைக் தருகின்றன. சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் கூட்டத்தொடரில் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் முதலமைச்சரின் உரையில், விஜய் தன்னை “ஜென்-சி” தலைமுறைக்கான தலைவன் எனக் காட்டிக்கொள்வதற்காக ஆங்கிலக் கலப்போடு பேசினார். எண்களைக் கூட ஆங்கிலத்தில்தான் கூறினார். இப்படித்தான் ஜென்-சி தலைமுறையினர் பேசுவார்கள் என்று வலிந்து ஒரு கருத்தை திணிக்க முயற்சித்தார்.

இதேபோல் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் நடைபெற்ற விழிப்புணர்வு “மாரத்தான்” போட்டியில் கலந்துகொண்ட விஜய், ஆங்கிலம் கலந்து எழுதி ஆங்கிலக் கலப்போடு எழுதுவதுதான் ஜென்-சி தலைமுறைக்கான எழுத்துநடை என்கிற கருத்தை பதியவைக்க முயற்சித்தார்.

ஆனால், உண்மை வேறாக இருக்கிறது. இணையத்தை அதிகமாகப் பயன்படுத்தும் இளந்தலைமுறையினர் இணைய வழியின் மூலம் தமிழ்ச் சொற்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இணையத்தின் மூலம் தமிழ் மொழியை அடுத்தத் தளத்திற்கு எடுத்துச் செல்வதிலும் இளந்தலைமுறையினர் முக்கியமான பங்காற்றுகிறார்கள். அதேபோல் முற்போக்கு சக்திகள் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தித் தங்கள் கருத்துகளைக் கலை, இலக்கியம், அரசியல் தளத்தில் அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு சென்று கொண்டிருக்கின்றனர்.

தமிழ்நாடு என்று சொல்வதை விட “தமிழகம்” என்று அழைப்பதே மிகவும் பொருத்தமானது என்று தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் ஆர்.என்.ரவி பாசிச திமிருடன் கூறிய போது, இது “தமிழ்நாடு” என்று பாசிச எதிர்ப்பு உணர்வுடன் திருப்பி அடித்தது தமிழ்நாடு‌. திருவள்ளுவருக்குக் காவிச் சாயம் பூசுவதை எதிர்த்து முன்னின்றது. திருக்குறள், திருமூலர் உள்ளிட்டு சங்க இலக்கியங்களில் இருந்து தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அறநெறிகளை, மொழி வளத்தை எடுத்துக்கொண்டு தமிழறிஞர்கள் மட்டுமல்ல, இன்றைய இளந்தலைமுறையினரும் அடுத்தக் கட்டத்திற்கு நகர்கின்றனர்.

ஆனால், தனது நடை, உடை, எழுத்து, பேச்சு ஆகியவற்றில் ஆங்கிலக் கலப்பை சேர்ப்பதன் மூலம் தமிழ்நாட்டு இளந்தலைமுறையினரை உதிரி வர்க்கப் பண்பாடு உடையவர்கள் போல் சித்தரிக்க முயல்கிறார் விஜய்.

மறுபுறம், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக ஆட்சியைப் பிடித்த தி.மு.க., வளர்ச்சி, நவீனம் என்ற பெயர்களில் தமிழ்மொழியை இரண்டாம் இடத்திற்குத் தள்ளியது. உதட்டளவில் தமிழை உயர்த்திப் பிடிக்கும் தி.மு.க., இன்று த.வெ.க. ஆட்சியில் நடக்கும் குதிரை பேரத்தை “குதிரை பர்சேஸ்” என உரைத்து “நானும் யூத்-தான்” என்று வரிசையில் இடம் பிடிக்க முயல்கிறது.

இவற்றை, “வார்த்தையில் என்ன இருக்கிறது?” என எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. அதன் நோக்கம் பெரிது. விஜய் தனது கட்சிக்கு “தமிழக” வெற்றிக் கழகம் எனப் பெயர் சூட்டியிருப்பது, “பாசிசமாவது பாயாசமாவது” எனப் பேசி பாசிசம் என்பதன் அர்த்தத்தை நீர்த்துப் போகச் செய்ய முயற்சிப்பது ஆகியவை, சொற்களின் வழியாக பா.ஜ.க. எதிர்ப்பை தமிழ்நாட்டிலிருந்து தணித்துவிட எத்தனிப்பதாகும்.


படிக்க: தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? நெருக்கடியான சூழலில் ஒரு வழிகாட்டி!


உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்குவதில் தடையாக இருப்பது; தமிழரின் பண்பாட்டை வெளிக்கொண்டு வரும் கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகளை மூடி மறைப்பது; தமிழுக்கு நிதி ஒதுக்காமல் சமஸ்கிருதத்தைத் தூக்கிப் பிடிப்பது; மும்மொழி என்கிற பெயரில் இந்தியை திணிப்பது எனத் தமிழ் மொழியை ஒழித்து இந்தி-சமஸ்கிருதத்தைத் திணிப்பதில் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் தனக்கேயுரிய பாசிச போக்குடன் நடந்து வருகிறது.

இவை, “ஒரே நாடு ஒரே மொழி” எனும் இந்துராஷ்டிர திட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பாசிச நடவடிக்கைகளை மொழி, நிலம், பண்பாடு, மாநில உரிமை ஆகிய உணர்வுடன் தமிழ்நாட்டு மக்கள் எதிர்த்து வருகின்றனர். இந்த எதிர்ப்புணர்வை காயடிப்பதும், அதன் வழியாகப் பார்ப்பனிய மேலாதிக்க, பாசிச அடிமை சிந்தனைகளை ஏற்றுக்கொள்வதை நோக்கி தமிழ்நாட்டை இட்டுச் செல்வதும்தான் விஜய் முன்னெடுக்கும் அரசியல்.

அதைப்போல், விஜய் டெல்லி சென்று வந்த பின் ஆன்லைன் மற்றும் தற்போதைய விதிமுறைகளின்படி 1,000 சி.பி.எஸ்.இ. (CBSE) பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே “விஜய் வித்யாஸ்ரம்” என்ற பள்ளிக்கான இடத்தைத் தனது சொந்தப் பெயரில் வாங்கி, அதனை 2017-ஆம் ஆண்டிலிருந்து 35 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் அறக்கட்டளைக்கு விஜய் வழங்கியுள்ளார். சென்னை ஓ.எம்.ஆர். சாலை பகுதியில் இயங்கிவரும் இப்பள்ளியில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கற்பிக்கப்படுவதுடன், மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படுகிறது.

இதன் மூலம் தனது அரசின் கொள்கை இரு மொழிக் கொள்கை என்று விஜய் போடும் வேடம் கலைகிறது. பிழைக்க ஒரு கொள்கை, மக்களை அரசியல் ரீதியாக ஏமாற்ற வேறொரு கொள்கை என்று வாழும் விஜய், அதற்கேற்ப தமிழ்நாட்டு மக்களை வழிநடத்திச் செல்லவும் முயல்கிறார்.

ஒரு மொழியை அழிக்கும் போது, அம்மொழி பேசும் மக்களின் பண்பாடு அழிக்கப்படுகிறது. ஒரே நாடு, ஒரே மொழி என்பது பா.ஜ.க-வின் பாசிச நடவடிக்கையின் ஓர் அம்சமாகும். அந்தவகையில் தமிழ் மொழி மீதான விஜய் மற்றும் த.வெ.க. அரசின் தாக்குதல்கள் அனைத்தும், தமிழ் மொழியையும் தமிழ் பண்பாட்டையும் அழித்து, பார்ப்பனிய, பாசிச சித்தாந்தத்தை ஏற்க வைத்து பாசிச பா.ஜ.க-விற்குப் பாதையமைத்துக் கொடுக்கும் நடவடிக்கைகளே ஆகும்.


இரஞ்சித்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க