மயிலாடுதுறை: காதலர்கள் இரட்டை ஆணவப் படுகொலை!

ஆணவப் படுகொலை செய்த கொலைக் குற்றவாளிகள் மீது தற்போது வரை போலீசு கொலை வழக்குப் பதிவு செய்யவில்லை. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்திருக்கிறது. எனவே கொலைக் குற்றாளிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

0

யிலாடுதுறை மாவட்டத்தில் சாதி கடந்து காதலித்ததைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆதிக்கச் சாதிவெறியர்களால் காதலர்கள் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகன் பார்த்திபன் (19) கொத்தனாராக வேலை செய்து வந்துள்ளார். இவரும் சாந்தக்குடியைச் சேர்ந்த லட்சுமிகாந்தனின் மகள் பிரியதர்ஷினியும் (17) சில ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர்.

பார்த்திபன் தலித் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் வன்னியர் சாதியைச் சேர்ந்த சிறுமியின் குடும்பத்தினர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். ஜூன் 29-ஆம் தேதி அன்று இரவு சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்கள் பார்த்திபனை சாதி ரீதியாக இழிவாகப் பேசியதுடன் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதனையடுத்து, பார்த்திபன் பொறையார் போலீசு நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது புகார் அளித்துள்ளார்.

பின்னர் பார்த்திபன் மற்றும் அவரது தந்தை இருவரும் வீட்டிற்குச் சென்றுள்ளனர். இரவு தந்தைக்கு போன் செய்த போலீசு, குற்றவாளிகளைக் கைது செய்வதற்குச் சிறுமியின் வீட்டை அடையாளம் காட்டுமாறு அழைத்துள்ளனர். அவர் சென்ற பிறகு சாதிவெறி கும்பல் பார்த்திபனை அழைத்துச் சென்று சிறுமியுடன் சேர்த்து அடித்து படுகொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளது.

இதனை மறைப்பதற்காக தன்னுடைய மகளைக் காணவில்லை என்று சிறுமியின் தந்தை பொறையார் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசு பார்த்திபனின் கைப்பேசி எண்ணைத் தொடர்புகொண்ட போது சாத்தங்குடியில் உள்ள பாம்பாலம்மன் கோவில் அருகே சிக்னல் கிடைத்துள்ளது. சிறுமியின் வீட்டிலிருந்து 209 மீட்டர் தொலைவில் உள்ள அவ்விடத்தில் கீற்றுக் கொட்டகையில் இருவரும் கொலை செய்யப்பட்டு தூக்கில் சடலமாகத் தொங்கவிடப்பட்டுள்ளனர்.

ஆதிக்கச் சாதிவெறிக்கு மகனைப் பறிகொடுத்த தாய் கூறுகையில், உன்னுடைய மகனின் சாவு என்னுடைய கையில்தான் என்று சிறுமியின் தந்தை கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிவித்திருப்பது இது ஆணவப் படுகொலைதான் என்பதை உறுதிப்படுத்துகிறது.

உடற்கூறாய்விற்காக இருவரின் உடலும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சிறுமியின் உடல் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்படாமல் மயிலாடுதுறை மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இது, பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றது.

சிறுமியின் தந்தை லட்சுமிகாந்தன் உறவினர்கள் சூர்யா, மணிமாறன், வசந்தன், விஜயகுமார் ஆகிய ஐந்து பேரையும் பட்டியலின, பழங்குடியின வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளது.

இந்நிலையில், குற்றவாளிகள் மீது ஆணவப் படுகொலை வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தியும் அதுவரை உடலை வாங்கமாட்டோம் என்றும் மயிலாடுதுறை தரங்கபாடி சாலையில் இளைஞரின் பெற்றோர், இடதுசாரி அமைப்புகள், வி.சி.க. உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருவருக்கும் இடையே ஏற்படுகின்ற இயல்பான காதலைச் சகித்துக்கொள்ள முடியாத சாதிவெறியர்கள் தங்களின் சாதிவெறிக்குப் பெற்ற மகளையும் காதலித்த இளைஞனையும் பலிகொடுத்துள்ளனர்.

சாதி கடந்து காதலித்த ஒரே காரணத்திற்காக கவின், அபிசெல்வி, தற்போது பார்த்திபன், பிரியதர்ஷினி வரை சாதிவெறிக்குப் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஆணவப் படுகொலையில் ஈடுபட்ட கொலைக் குற்றவாளிகள் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து சமூகத்தில் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றனர்.

இருவரை ஆணவப் படுகொலை செய்த கொலைக் குற்றவாளிகள் மீது தற்போது வரை போலீசு கொலை வழக்குப் பதிவு செய்யவில்லை. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்திருக்கிறது.

எனவே கொலைக் குற்றாளிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்; சமூகத்தில் சாதிவெறியைத் தூண்டிவிடுகின்ற ஆதிக்க சாதிவெறி சங்கங்கள், ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவாரக் கும்பலைத் தடை செய்ய வேண்டும்; ஆணவப்படுகொலைக்கு எதிராக உடனடியாக சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்; ஆணவப்படுகொலையில் ஈடுபடுவோரின் சொத்துகளைப் பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி களப்போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும்.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க