அரசுக் கட்டமைப்பை இந்துமுனைவாக்கத்திற்கான ஓர் கருவியாக மாற்றும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல்

அசாமில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் என்ற பெயரில் இஸ்லாமியர்களின் வீடுகள் இடிக்கப்பட்டு தற்காலிக தங்குமிட முகாம்களில் அம்மக்களை அடைப்பது, குஜராத், ராஜஸ்தானில் ‘கலவர’ப் பகுதிகள் சட்டம் என ஒவ்வொரு மாநிலத்திலும் பிரத்தியேக பாசிச நடவடிக்கைகள் மூலம் இந்து மக்கள் மத்தியில் இருந்து சிறுபான்மை மக்களைப் பிரித்து தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

வெளிநாட்டு பங்களிப்பு சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டம்.

ந்தியாவில் இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களை இரண்டாம்தரக் குடிமக்களாக்கி இந்துராஷ்டிரத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் செயல்பட்டு வருகிறது. அதற்கேற்ப பல்வேறு பாசிச சட்டத்திட்டங்களையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. சிறுபான்மை மக்களுக்கு எதிராக பொய், வெறுப்பு பிரச்சாரங்கள், கலவர நடவடிக்கைளில் ஈடுபட்டு, பெரும்பான்மை இந்து மக்களை இந்துமுனைவாக்கம் செய்து, அவர்களை தன் அடித்தளமாக திரட்டிக் கொள்கிறது. இதற்காக, அரசுக் கட்டமைப்பை இந்துமுனைவாக்கத்திற்கான ஓர் கருவியாக மாற்றி வருகிறது.

குறிப்பாக, நாடு முழுவதும் தீவிரமடைந்துவரும் மக்கள் போராட்டங்களினால் தோல்வி முகத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல், அத்தோல்வி முகத்திலிருந்து மீள்வதற்காக இந்த இந்துமுனைவாக்க நடவடிக்கைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. அசாம், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அரசுக் கட்டமைப்பின் மூலம் மேற்கொள்ளப்படும் பாசிச நடவடிக்கைகள் சமீப காலங்களில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

மத சுதந்திரத்தைப் பறிக்கும்
மதமாற்றத் தடைச் சட்டம்

மகாராஷ்டிராவில் மார்ச் 16-ஆம் தேதி “மத சுதந்திர மசோதா 2026” (Freedom of Religion Bill), அம்மாநில சட்டமன்றத்தில் பா.ஜ.க. அரசினால் நிறைவேற்றபட்டுள்ளது. மத சுதந்திரத்திற்கான மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், வற்புறுத்தல், மோசடி, ஆசை காட்டுதல், தூண்டுதல், திருமணம் மூலம் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மத மாற்றங்களைத் தடுப்பதற்காகவும் இம்மசோதாவை கொண்டுவந்திருப்பதாக பா.ஜ.க. அரசு கூறுகிறது. ஆனால், இம்மசோதாவில் உள்ள விதிகள் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலின் இந்துமுனைவாக்க நிகழ்ச்சி நிரலுக்கே சாதகமாக உள்ளது.

ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு மாற விரும்பும் எந்தவொரு நபரும், அது குறித்து 60 நாட்களுக்கு முன்னதாகவே சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும். அவ்அதிகாரி முன்மொழியப்பட்ட மதமாற்றத்திற்கு எதிரான ‘ஆட்சேபணை’களைப் பெறும் அறிவிப்பை வெளியிடுவார். மதமாற்றம் செய்துகொள்ளும் நபரின் உறவினர்கள் ஆட்சேபணை தெரிவிக்கலாம். ஆட்சேபணை பெறப்பட்டாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காகவோ அதிகாரி போலீசு மூலம் விசாரணை நடத்தலாம். விசாரணையில் மசோதாவின் விதிகள் மீறப்பட்டிருந்தால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, ரூ.7 இலட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், எந்தவொரு மத நம்பிக்கையையும் ஏற்றுக்கொள்ள, பின்பற்ற, மாற்றிக்கொள்ள அரசியலமைப்பு பிரிவு 25 மக்களுக்கு வழங்கியுள்ள பெயரளவிலான அடிப்படை உரிமையை இம்மசோதா பறிக்கிறது. மக்களின் விருப்பப்பூர்வமான மதமாற்றத்தையும் ‘கட்டாய மதமாற்றம்’, ‘லவ் ஜிகாத்’ என்று குற்றஞ்சாட்டி இஸ்லாமிய, கிறித்தவ அமைப்புகள், தனிநபர்கள் மீது அரச ஒடுக்குமுறை செலுத்தி மக்களை மதரீதியாக துண்டாடுவதற்கு வழியேற்படுத்திக் கொடுக்கிறது. இது, மதமாற்றத்தை முன்வைத்து ”இந்து ஜனஜாக்ருதி சமிதி” போன்ற ஆர்.எஸ்.எஸ். குண்டர்படை அமைப்புகள் மேற்கொள்ளும் இந்துமுனைவாக்க பிரச்சாரங்கள், நடவடிக்கைகளுக்கு சாதகமாக அமைகிறது.

குறிப்பாக, மதமாற்றம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டவரே, தான் எந்தக் குற்ற நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்கப்படாது என்று இம்மசோதாவில் கூறப்பட்டிருக்கிறது. இது, இச்சட்டம் இஸ்லாமிய, கிறித்தவ அமைப்புகள் மீது தாக்குதல் தொடுப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ள ஒரு கொடிய பாசிச சட்டம் என்பதை உறுதிசெய்கிறது. ஏற்கெனவே, இத்தகைய மதமாற்றத் தடைச் சட்டம் அமலில் உள்ள உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப்பிரதேசம் போன்ற பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஏவப்படும் பாசிச ஒடுக்குமுறைகளும் அதற்கு சான்றுகளாக அமைகின்றன.

இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தி ஒடுக்கும்
‘கலவர’ப் பகுதிகள் சட்டம்

மார்ச் 6-ஆம் தேதி, ராஜஸ்தான் சட்டமன்றத்தில் “கலவரப் பகுதிகளில் அசையா சொத்து பரிமாற்றத் தடை மற்றும் குத்தகைதாரர்களை வெளியேற்றுவதலிருந்து பாதுகாப்பதற்கான ராஜஸ்தான் மசோதா, 2026”-ஐ அம்மாநில பா.ஜ.க. அரசு நிறைவேற்றியுள்ளது. இம்மசோதாவானது குஜராத் ‘கலவரப் பகுதிகள் சட்டம், 1991’-ஐ முன்மாதிரியாகக் கொண்டுள்ளது. கலவரங்கள் மற்றும் கும்பல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அசையா சொத்துகளின் பரிமாற்றத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம், ராஜஸ்தானின் மக்கள்தொகை சமநிலையையும் சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது.

ஆனால், மசோதாவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த மக்கள்,  ஒரு குறிப்பிட்ட பகுதியின் சமநிலையைக் குலைக்கும் வகையில் ஒன்று கூடுவதற்கான சாத்தியக்கூறுகளைத் தடுப்பது அதன் முக்கிய நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சமநிலையைக் குலைக்க ஒன்று கூடுகிறார்கள் என்று இஸ்லாமியர்களையே குறிப்பிடுகிறது. அரசுக் கட்டமைப்பும் காவிக் குண்டர்களும் ஒன்றிணைந்துகொண்டு நில ஜிகாத் என்ற பெயரில் இஸ்லாமிய மக்கள் மீது பாசிச தாக்குதலை தொடுத்து இந்துமுனைவாக்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்காகவே இம்மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது உறுதியாகிறது.

அதற்கேற்ப, ஒரு பகுதியில் கலவரங்கள் அல்லது பொது அமைதியின்மை நிலவுகிறது அல்லது ஏற்பட வாய்ப்புள்ளது என்று அரசு கருதினால், எந்தவொரு பகுதியையும் ‘கலவரப் பகுதி’ என அறிவிக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது. அப்பகுதியில் நிலம், வீடுகள் போன்ற அசையா சொத்துகளை விற்பனை செய்வதற்கு மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற வேண்டும். அவர் கட்டாய இடம்பெயர்வு, முறையற்ற குழுமமாதல், மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் ஆய்வு செய்தே ஒப்புதல் அளிப்பார். இச்சட்ட விதிகளை மீறுபவர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் கடுமையான அபராதமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

ஆகவே, இம்மசோதா சட்டமாகும் பட்சத்தில் மக்கள்தொகை அடிப்படையில் பெரும்பான்மையாக இந்து மக்கள் வாழும் பகுதிகள் ‘கலவர’ப் பகுதிகளாக அறிவிக்கப்படும். அப்பகுதிகளுக்குள் இஸ்லாமியர்கள் அசையா சொத்துகள் வாங்குவது தடுத்து நிறுத்தப்படும். இஸ்லாமியர்களின் அசையா சொத்துகள் காவிக் குண்டர்கள் அல்லது இந்து மக்களால் அபகரித்துக் கொள்ளப்படும். அப்பகுதியில் வசித்துவரும் இஸ்லாமியர்கள் அரசு மற்றும் காவிக் குண்டர்களின் அச்சுறுத்தலுக்கு பயந்து இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளுக்கு குடியேற வேண்டிய நிலைமை உருவாகும். மேலும், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளும் ‘கலவர’ப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு இந்து மக்கள் குடியேறுவது தடுக்கப்படும்.

அதாவது, ராஜஸ்தான் மாநிலத்திற்குள் இந்து மற்றும் இஸ்லாமிய மக்கள் ஒற்றுமையுடன் வாழ்வது முற்றிலும் தடுக்கப்படும். அவர்களுக்கிடையேயான சமூகத் தொடர்பு துண்டிக்கப்படும். குஜராத்தில் இந்நிலைமையே உருவாக்கப்பட்டுள்ளது. குஜராத் ‘கலவர’ப் பகுதிகள் சட்டம் இஸ்லாமியர்களை குறிப்பிட்ட பகுதிகளுக்குள் கட்டுப்படுத்தி, அவர்களைத் திட்டமிட்டு ஓரங்கட்டிருப்பதாக ஜனநாயக சக்திகள் தெரிவிக்கின்றனர். நாஜி ஜெர்மனியில் ஹிட்லர் ‘கெட்டோமயமாக்கல்’ (Ghettoization) மூலம் யூதர்களைப் பொதுச் சமூகத்திலிருந்து பிரித்து, குறிப்பிட்ட பகுதிகளில் அடைத்து ஒடுக்கியதைப் போல, இக்கொடிய சட்டத்தின் மூலம் சிறுபான்மையினரைச் சேரிப் பகுதிகளுக்குள் முடக்கி ஒடுக்க முனைகிறது பாசிச கும்பல்.

கிறித்தவ சொத்துகளை அபகரிக்கும்
வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம்

நடப்பு நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரின் இறுதி நாட்களில், ”வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத் திருத்த மசோதா, 2026”-ஐ (Foreign Contribution (Regulation) Bill, 2026) பாசிச மோடி அரசு தாக்கல் செய்தது. இம்மசோதாவானது 2010 ஆம் ஆண்டு வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தின் அடிப்படை தன்மையே மாற்றி, அதனை ஒழுங்குமுறைச் சட்டத்திலிருந்து சொத்துகளை அபகரிப்புச் சட்டமாக மாற்றுகிறது.

குறிப்பாக, வெளிநாட்டு நிதிப் பங்களிப்புடன் இந்தியாவின் ஏழை எளிய மக்களுக்கு கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சேவைகளை வழங்கிவரும் கிறித்தவ மத, கல்வி, தொண்டு அமைப்புகளின் சொத்துகளை அபகரிப்பதையே குறிக்கோளாக இம்மசோதா கொண்டுள்ளது. இஸ்லாமியர்களின் வக்ஃப் சொத்துகளை அபகரிக்க வக்ஃப் சட்டத்தை கொண்டுவந்துள்ளதைப் போன்று, கிறித்தவர்களின் சொத்துகளை அபகரிப்பதற்காக இப்பாசிச மசோதாவை கொண்டுவந்துள்ளது.

இம்மசோதாவில் வெளிநாட்டு நிதி பங்களிப்பு பெறும் ஒரு நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது காலாவதியான பிறகு புதுப்பிக்கப்படாவிட்டாலோ, அந்நிறுவனத்தின் சொத்துகள் (உள்நாட்டு நன்கொடையால் வாங்கப்பட்ட சொத்துகள் உட்பட) ஒன்றிய அரசால் அபகரித்துக் கொள்ளப்படும். சொத்துகளை கட்டுப்படுத்தி நிர்வாகம் செய்வதற்கு ஒரு அதிகாரியை ஒன்றிய அரசு நியமிக்கும். அந்த அதிகாரி சொத்துகளை எந்தவொரு அரசுத் துறைக்கும் மாற்றலாம் அல்லது விற்கலாம். அதன்மூலம் கிடைக்கும் தொகை இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதிக்கு வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விதிகள் மூலம், நிறுவனத்தின் உரிமம் ரத்து, காலாவதி போன்ற நிர்வாகக் காரணங்களுக்காகவே, ஒன்றிய அரசிற்கு அந்நிறுவனத்தின் சொத்துகளை அபகரிப்பதற்கான அதிகாரத்தை இப்பாசிச மசோதா வழங்குகிறது. மேலும், வெளிநாட்டு நிதி பங்களிப்புடன் இயங்கும் எந்தவொரு நிறுவனத்தின் சொத்துகளையும் மோடி அரசு அபகரித்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

தற்போது நடைமுறையிலுள்ள சட்டப்படியே, வெளிநாட்டு நிதிப் பங்களிப்புடன் இயங்கும் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் சமர்ப்பித்த புதுப்பித்தல் விண்ணப்பங்கள், எவ்விதக் காரணமும் கூறாமல் நிராகரிக்கப்பட்டுள்ளன. பல புகழ்பெற்ற நிறுவனங்களின் விண்ணப்பங்கள், ”கள விசாரணையில் நிறுவனத்திற்கு எதிரான பாதகமான தகவல்கள்” தெரியவந்துள்ளன’ என்ற ஒற்றைவரிக் காரணத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதற்கான காரணங்களைக் கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்  கேள்வி எழுப்பப்பட்ட போதிலும், தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் பதில்கள் மறுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறாக, கடந்த 2015-ஆம் ஆண்டிலிருந்து 18,000-க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களின் உரிமங்கள் பாசிச மோடி அரசால் இரத்துச் செய்துள்ளது. இப்புதிய மசோதா சட்டமாக நிறைவேற்றப்படும் பட்சத்தில், அதுபோன்ற அமைப்புகளின் சொத்துகளை மோடி அரசு தன்வசப்படுத்திக் கொள்ளும் அபாயம் உள்ளது.

மேலும், இப்பாசிச மசோதாவும் வெளிநாட்டு நிதி மூலம் இயங்கும் கிறித்தவ நிறுவனங்கள் இந்து மக்களை கட்டாய மதமாற்றம் செய்கின்றன என்று பொய் குற்றஞ்சாட்டி அவற்றின் மீது பாசிச ஒடுக்குமுறைகளை செலுத்துவது; பெரும்பான்மை இந்து மக்களிடம் கிறித்தவ வெறுப்பை விதைத்து இந்துமுனைவாக்கம் செய்வது என்ற நோக்கத்திலிருந்தே மோடி அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது. “தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சில தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்திச் சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகப் புகார்கள் வருவதாகவும், அத்தகைய நிறுவனங்களின் உள்கட்டமைப்பை முடக்கவே இந்த சொத்து கையகப்படுத்தும் முறை அவசியம்” என்று ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜூஜூ பேசியிருப்பது அதனை உறுதி செய்கிறது.

மதம் மாறிய தலித்துகளுக்கு எதிரான
உச்சநீதிமன்றத்தின் கரசேவை

ஆந்திரப்பிரதேசத்தின் பாபட்லா மாவட்டத்தில் சிந்தாடா ஆனந்த் என்ற கிறித்தவ மதபோதகர் பிரார்த்தனைக் கூட்டம் நடத்திக் கொண்டிருந்த போது பலரால் சாதிரீதியான தாக்குதலுக்கும் அவதூறுகளுக்கும் உள்ளாக்கப்படுகிறார். இத்தாக்குதல் தொடர்பான சிந்தாடா ஆனந்த் எதிர் ஆந்திரப் பிரதேச அரசு வழக்கில் கிறித்தவ மதத்திற்கு மாறிய ஒருவர் பட்டியல் சாதி அந்தஸ்தைக் கோர முடியாது என்று ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை கடந்த மார்ச் 24-ஆம் தேதி உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் என்.வி. ஆச்சார்யா ஆகியோர் அடங்கிய அமர்வு, “இந்து, சீக்கியம், பௌத்தம் தவிர வேறு எந்த மதத்தையும் பின்பற்றும் எந்தவொரு நபரும் பட்டியல் சாதியினராகக் கருதப்பட முடியாது”, வேறு எந்த மதத்திற்கும் மாறுவது அத்தகைய தகுதியை “உடனடியாகவும் முழுமையாகவும்” இழக்கச் செய்யும் என்று 1950-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசியலமைப்பு (பட்டியல் சாதியினர்) ஆணையின் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கியுள்ளது.

கிறித்தவமும் இஸ்லாமியமும் இறையியல் ரீதியாகச் சாதியை அங்கீகரிக்கவில்லை என்பதால், அம்மதங்களுக்கு மாறிய தலித்துகள் பட்டியல் சாதியினராகக் கருதப்படுவதில்லை என்று அரசியலமைப்பு ஆணை கூறுகிறது. ஆனால், கிறித்தவ, இஸ்லாமிய மதங்களுக்கு மாறிய விளிம்புநிலை மக்கள் மீது, ஆதிக்கச் சாதி வெறியர்களால் சாதிய ஒடுக்குமுறைகள் தொடர்ந்து தொடுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. மேலும், கிறித்தவ, இஸ்லாமிய மதங்களுக்குள்ளேயும் தனிச் சுடுகாடு, தனித் தேவாலயம், மதம் மாறி வந்தவர்கள் உயர் பொறுப்புகளுக்கு வர முடியாத நிலை போன்ற வடிவங்களில் சாதியப் பாகுபாடுகள் நிலவுகின்றன.

இதன் விளைவாக, கிறித்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு மாறிய தலித் மக்கள் தங்களுக்குப் பட்டியல் சாதிப் பிரிவின் கீழ் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பல பத்தாண்டுகளாகப் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநில அரசுகளும் அம்மக்களுக்குப் பட்டியல் பிரிவின் கீழ் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தங்களது சட்டமன்றங்களில் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கின்றன. ஆனால், இந்தச் சமூக யதார்த்தங்கள் எவற்றையும் உச்சநீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை.

மாறாக, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலின் ”தாய் மதம் திரும்புதல்” (கர் வாப்சி) என்ற பெயரிலான நிகழ்ச்சி நிரலுக்குச் சாதகமாகவே உச்சநீதிமன்றத்தின் இப்போக்கு அமைந்துள்ளது. மதம் மாறிய தலித் மக்களுக்குப் பட்டியலின அந்தஸ்து வழங்கப்பட்டால் மதமாற்றம் தீவிரமடையும்; இந்து மக்களின் இடஒதுக்கீடுகளை அம்மக்கள் பறித்துக் கொள்வார்கள் என்ற வலதுசாரி வெறுப்புப் பிரச்சாரங்களுக்கு வலுசேர்க்கும் வகையிலேயே இத்தீர்ப்பு அமைந்துள்ளது.

மேலும், கிறித்தவ அல்லது இஸ்லாமிய மதத்திற்கு மாறிய தாழ்த்தப்பட்ட மக்கள் மீண்டும் இந்து மதத்திற்குத் திரும்பினால், அவர்களுக்குப் பட்டியலினப் பிரிவின் கீழ் உரிமைகள் வழங்கப்படலாம் என்பதை அங்கீகரிக்கும் வகையில் கடந்த காலங்களில் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், பழங்குடி மற்றும் தலித் மக்களைத் திட்டமிட்டுத் தாய் மதம் என்ற பெயரில் இந்து மதத்திற்குள் சாதிய ஒடுக்குமுறைக்குள் முடக்கும் இந்துத்துவ அரசியலின் கரசேவையின் ஓர் அங்கமாகவே மேற்கூறிய உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் பார்க்க வேண்டியுள்ளது.

000

மேற்கூறிய பாசிச நடவடிக்கைகள் மட்டுமின்றி, சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் என்ற பெயரில் இஸ்லாமிய மக்களின் வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை இடித்து அவர்களை அகதிகளாக்குவது, மாவட்டங்கள் மற்றும் ஊர்களின் பெயர்களைக் காவிமயமாக்குவது, நீதிமன்றங்கள் மூலம் மசூதிகளை கோவில் என்று தீர்ப்பு வழங்கி கலவரங்களை தூண்டுவது;  மத நல்லிணக்கத்தைச் சிதைப்பதற்காக இஸ்லாம் உள்ளிட்ட மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கோவில்களுக்குள் அனுமதி மறுப்பது எனப் பல்வேறு பாசிச நடவடிக்கைகளைத் தான் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அரசுக்கட்டமைப்பின் மூலம் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் செயல்படுத்தி வருகிறது.

அதேசமயம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கட்டமைப்புகள் பலமாக உள்ள மாநிலங்களில் பா.ஜ.க மூர்க்கத்தனமாக இந்துமுனைவாக்கத்தை அரங்கேற்றி வருகிறது. இத்தகைய தொடர் நடவடிக்கைகள் மூலம் சிறுபான்மை மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் பெயரளவில் வழங்கியுள்ள உரிமைகளையும் படிப்படியாகப் பறித்து, அம்மக்களை இரண்டாம்தரக் குடிமக்களாக்கி வருகிறது.

குறிப்பாக, அசாமில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் என்ற பெயரில் இஸ்லாமியர்களின் வீடுகள் இடிக்கப்பட்டு தற்காலிக  தங்குமிட முகாம்களில் அம்மக்களை அடைப்பது, குஜராத், ராஜஸ்தானில் ‘கலவர’ப் பகுதிகள் சட்டம் என ஒவ்வொரு மாநிலத்திலும் பிரத்தியேக பாசிச நடவடிக்கைகள் மூலம் இந்து மக்கள் மத்தியில் இருந்து சிறுபான்மை மக்களைப் பிரித்து தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறது. அரசாலும் காவிக் குண்டர்களாலும் தங்கள் மீது எப்போது வேண்டுமானாலும் பாசிச தாக்குதல்கள் தொடுக்கப்படலாம் என்ற அச்சத்திலேயே வாழும் மிகவும் மோசமான நிலைமையை அம்மக்களிடம் உருவாக்கியிருக்கிறது.

மேலும், இப்பாசிச நடவடிக்கைகள் அனைத்தும் இந்துராஷ்டிரத்திற்கான அடிக்கட்டுமான நடவடிக்கைகளே ஆகும். அரசுக் கட்டமைப்புகளைப் பாசிசமயமாக்குவதற்காக, அதிகாரவர்க்கத்தை ஆர்.எஸ்.எஸ்-மயமாக்குவது, பாசிச சட்டங்கள் மூலம் அரசமைப்பில் நிலவி வந்த பெயரளவிலான ஜனநாயக உரிமைகளையும் பறிப்பது என உள்ளிட்ட ஒட்டுமொத்த நிகழ்ச்சி நிரலின் ஓர் அங்கமாகவே இது நடக்கிறது.


அமீர்

(புதிய ஜனநாயகம் – ஜூன் 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க