01.08.2026

கிருஷ்ணகிரியில் விதிகளை மீறி இயங்கும் சுங்கச்சாவடியை இழுத்து மூடு!

பத்திரிகைச் செய்தி

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் விதிமுறைகளை மீறி இயங்கும் சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்யக்கோரி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

நகராட்சி எல்லையிலிருந்து 10 கி.மீ. தொலைவிற்குள் சுங்கச்சாவடி அமைக்கப்படக் கூடாது என்பது விதியாகும். ஆனால், கிருஷ்ணகிரி – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் (NH – 44)அமைந்துள்ள இந்தச் சுங்கச்சாவடியானது கிருஷ்ணகிரி நகராட்சிக்கு 800 மீட்டர் தொலைவிலேயே அமைந்துள்ளது.

இதனால், மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்வதற்கு கூட சுங்கச்சாவடியில் பணம் கட்டி செல்ல வேண்டிய அவலநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், இந்தச் சுங்கச்சாவடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதனை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இதற்கெதிரான ஜனநாயக சக்திகளின் தொடர் போராட்டத்தின் விளைவாக, சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்து சின்னார் பகுதியில் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், வரும் டிசம்பர் மாதத்திற்குள் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்தார். ஆனால், சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்படவில்லை.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 2026 முதல் இந்தச் சுங்கச்சாவடியில் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. அதன்படி கார், ஜீப் மற்றும் வேன் போன்ற இலகுரக வாகனங்களுக்கு ஒருமுறை பயணிக்க ரூ.90, இருமுறை பயணிக்க ரூ.135 (FASTag பயனாளர்களுக்கு) எனக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மேலும், தனியார் நிறுவனத்தின் டெண்டர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட போதிலும், சுங்கச்சாவடியின் நிர்வாகம் மற்றும் கட்டணம் வசூலிக்கும் பொறுப்பு முழுமையாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு கட்டண வேட்டை தொடர்கிறது.

விதியை மீறி அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை இயக்குவதும் கட்டணம் வசூலிப்பதும் சட்டவிரோதமாகும். இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஆகவே சட்டவிரோதமான இந்த கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை இழுத்து மூட வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

கிருஷ்ணகிரி மக்கள் கோரிக்கை:

  • கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்யும் வரை (டிசம்பர் 2026 வரை) கிருஷ்ணகிரியைச் சுற்றியுள்ள உள்ளூர் மக்களின் வாகனங்கள் சுங்கக் கட்டணமின்றி அனுமதிக்கப்பட வேண்டும்.
  • சுங்கச்சாவடியில் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடும் வாகனங்களுக்குக் கட்டண விலக்கு அளிக்கப்பட வேண்டும்.
  • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 60 கி.மீ. இடைவெளிக்குள் அமைந்துள்ள சுங்கச்சாவடிகள் குறித்து உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


இவண்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க