கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுக்கா, திம்ஜேப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமம் உள்ளுகுறுக்கை. இப்பகுதியில் ஐபோன் நிறுவனத்துக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் வேலையை மேற்கொள்ளும் டாடா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் (TEPL) ஆலை உள்ளது. இந்த ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் அப்பகுதி விவசாய நிலங்களும், நிலத்தடி நீரும் மோசமாக பாதிப்படைந்தது குறித்து கடந்த 28.05.2026 அன்று, மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தோம்.
ஆங்கில செய்தித்தாளான “தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்” (TNIE) செய்திகளின் அடிப்படையில் இப்பிரச்சினையை உடனடியாக வெகுமக்கள் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் கழகம் சார்பாக அப்பத்திரிகை செய்தியை வெளியிட்டோம்.
அந்த செய்தி, “வினவு” இணையதளத்தில் வெளிவந்தவுடன், அது குறித்த பதிவு நமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை அடைந்தது. நமது பதிவின் மூலம் மக்களிடமும் ஜனநாயக சக்திகளிடமும் ஊடகங்களிடமும் இச்செய்தி சென்றடைந்தது.
அதன் பிறகு பாலிமர் செய்திகள் சார்பில் ஏழு நிமிட அளவில் பிரச்சினையின் பரிமாணத்தை உணர்த்தும் வகையிலான காணொளியை வெளியிட்டனர்.
கழகம் சார்பாக வெளியிடப்பட்ட அப்பத்திரிகை செய்தியை சமூக ஊடகங்கள் வாயிலாகக் கவனித்து, “ராய்ட்டர்ஸ்” (Reuters) சர்வதேச செய்தி நிறுவனம் கழக மாவட்டச் செயலாளருக்கு தொடர்பு கொண்டு, நமது உதவியுடன் நேரடி கள ஆய்வு நடவடிக்கையும் மேற்கொண்டனர். இதனையடுத்து, தற்போது தேசிய அளவில் இப்பிரச்சினை முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
000
விவசாய நிலங்கள் பாதிப்படைந்ததை வெளியில் கொண்டு வந்து விவசாயிகள் தொடர்ச்சியாக நடத்திய போராட்டத்தின் விளைவாக, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வினை மேற்கொண்டது. அந்த ஆய்வில் விவசாய நிலங்களில் தேங்கியுள்ள நீர், கிணற்று நீர், தொழிற்சாலைக்குள் உள்ள மழைநீர் வடிகால் குட்டையில் இருந்த நீர் ஆகியவற்றில் ரசாயனம் கலந்துள்ளது என்பதும், நிலத்தடி நீர் மாசடைந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு ‘அறிவுரைகள்’ வழங்கப்பட்டன. ஆனால், இதனை டாடா நிறுவனம் பொருட்டாக கருதவில்லை. இதன் பிறகு, இரண்டு வாரங்களுக்கு முன்பு, டாடா நிறுவனத்திற்கு ஓசூர் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீசு அனுப்பியது.
அந்த நோட்டீசில் தொழிற்சாலைக்கு வழங்கப்பட்ட ஒப்புதல் ஆணையின் நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளதை தண்டனைக்குரிய குற்றமாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கருதுவதாகவும், ஒப்புதல் நிபந்தனைகளை மீறியதற்காக, டாடா தொழிற்சாலையின் மீது ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது; தொழிற்சாலைக்கான மின்சாரத்தை நிறுத்த ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது; தொழிற்சாலையை மூடுவதற்கான உத்தரவை ஏன் பிறப்பிக்கக் கூடாது எனவும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கேள்வி எழுப்பியது. மேலும், இது குறித்து டாடா நிறுவனம் 15 நாட்களுக்குள் விளக்கம் கொடுக்கும்படியும் கூறியது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிலளிக்காவிட்டாலோ அல்லது குற்றச்சாட்டுகளுக்கு திருப்திகரமான விளக்கம் இல்லையென்றாலோ உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இந்த நடவடிக்கைகள் விவசாயிகளின் தொடர்ச்சியான போராட்டத்தினால் நடந்ததாகும். ஏனெனில், கடந்த டிசம்பர் 23, 2025 அன்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் வழங்கிய அறிவுறுத்தல்களை டாடா நிறுவனம் பொருட்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எந்த நிர்ப்பந்தத்தையும் டாடா நிறுவனத்திற்கு ஏற்படுத்தவில்லை. விவசாயிகளின் போராட்டம் ஏற்படுத்திய நிர்ப்பந்தமே, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இவ்வறிக்கையாகும்.
தற்போதைய நிலைமை
இந்நிலையில் டாடா நிறுவனம் கடந்த மே 16 அன்று, ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், ஆலை வளாகத்திற்குள் இருந்து அண்மையில் சேகரிக்கப்பட்ட நீர் மாதிரிகளை பகுப்பாய்வு செய்ததில் அதில் “எந்தவிதமான மாசுபாடும் இல்லை” என்று உறுதிப்படுத்திய பின்னர், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தனது ஆய்வைக் கைவிட்டுவிட்டதாக டாடா நிறுவனம் அந்த அறிக்கையில் கூறியுள்ளது.
ஆனால், டாடா நிறுவனத்தின் மேற்கண்ட அறிக்கை குறித்து தமிழ்நாடு அரசும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. மேலும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் அழைப்புகளுக்கும், மின்னஞ்சல்களுக்கும் தமிழ்நாடு அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் பதிலளிக்கவில்லை என்று ராய்ட்டர்ஸ் கூறியுள்ளது.
அதேசமயம், டாடா ஆலை அமைந்துள்ள உள்ளுகுறுக்கை கிராமத்தின் அரசு மருத்துவ அதிகாரி அனிஷ் பர்வீன், ஓசூரில் உள்ள அரசினால் நடத்தப்படும் பூச்சிக்கட்டுப்பாடு மற்றும் விலங்குவழி நோய்கள் தொடர்பான நிறுவனத்திற்கு கடந்த மே 27 அன்று ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அக்கடிதத்தில், டாடா ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுகள் கடுமையான துர்நாற்றம் ஏற்படுத்தியதாகவும், தண்ணீரை விலங்குகள் குடிப்பதற்கு தகுதியற்றதாக ஆக்கியதாகவும், சுகாதார ஆய்வில் கண்டறிந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது முக்கியமானது. மேலும், “டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவுநீர், அருகிலுள்ள விவசாய நிலங்களில் தேங்கி, அருகிலுள்ள கிணறுகளில் இருக்கும் சுத்தமான நீரையும் மாசுபடுத்துகிறது” என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
விவசாய நிலங்களில் இருந்து எடுக்கப்பட்ட இரண்டு நீர் மாதிரிகள், பரிசோதனைக்காக மாநில அரசு ஆய்வகத்திற்கு சுகாதார அதிகாரிகளால் அனுப்பி வைக்கப்பட்டது. மே 30 தேதியிட்ட மாவட்ட பொது சுகாதார ஆய்வகத்தின் அறிக்கையின்படி, ஆய்விற்கு எடுக்கப்பட்ட இரண்டு நீர் மாதிரிகளிலும் “ஈ.கோலி பாக்டீரியா” (E.Coli bacteria) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த பாக்டீரியா கழிவுநீரில் காணப்படுவதாகும். மேலும் இது நீரில் மலக்கழிவுகள் கலந்துள்ளதையும் குறிக்கிறது.
மேலும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஏப்ரல் மாதம் ஆலைக்கு அருகிலுள்ள இரண்டு விவசாயக் கிணறுகளில் இருந்து சேகரித்த மாதிரிகளைச் சேகரித்தது. அந்த மாதிரிகளின் அளவுகளின்படி ராய்ட்டர்ஸ் மேற்கொண்ட சுயாதீன ஆய்வின்படி, நீரில் உள்ள கனிமங்கள், உப்புகள், உலோகங்கள் ஆகியவற்றின் அளவான மொத்தக் கரைந்த திடப்பொருளின் (TDS) அளவு, ஒரு லிட்டருக்கு 1,084 மற்றும் 1,286 மில்லிகிராம் என்ற அளவில் இருந்தது. இது, இந்தியத் தர நிர்ணய அமைப்பு குடிநீரில் ஏற்றுக் கொள்ளத்தக்கதாகக் கருதும் ஒரு லிட்டருக்கு 500 மில்லிகிராம் என்ற அளவை விட இரண்டு மடங்குக்கும் அதிகமானதாகும். ”இது மனித நுகர்வுக்கு மட்டுமல்லாமல், மீன்வளம், வனவிலங்குகளுக்கும் கூட ஏற்றதல்ல” என்று ராய்ட்டர்ஸ்-காக ஆய்வு செய்த, “இந்திய லாப நோக்கமற்ற பாணி எர்த் நிறுவனத்தின்” (Indian non-profit Paani Earth Foundation) துணை நிறுவனர் நிதி பாலிவால் கூறியுள்ளார்.
மேலும், ”இந்தத் தண்ணீரில் விதைகளை விதைத்தால், அவை முளைத்து, பின்னர் வாடி இறந்துவிடுகின்றன” என விவசாயிகள் கூறுகின்றனர். தண்ணீர் மாசுபாட்டால் சில பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும், நிலம் வளமற்றதாகிவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர். கிணற்று நீர் கருப்பு நிறத்தில் காணப்படுகிறது. டாடா நிறுவனத்தை ஒட்டியுள்ள ஏக்கர் கணக்கான வயல்களில் பச்சை நிறத்தில் பாசிப்படலத்தோடு நீர் சூழ்ந்துள்ளது.
விவசாயிகள் மேலும் கூறும்போது, “டாடா நிறுவனத்திற்குள் உள்ள கழிவுநீர்க் குளங்களில் தண்ணீர் நிரம்பி, அது விவசாய நிலங்கள் வழியாக உள்ள கால்வாயில் தொடர்ச்சியாக சென்று கொண்டிருக்கிறது. வழக்கமாக மழை பெய்தால் அந்தக் கால்வாயில் இரண்டு நாட்கள் மட்டும் தண்ணீர் ஓடும். தற்போது டாடா ஆலைக்குள் உள்ள குளங்களில் இருந்து திறந்து விடப்படும் நீரால் தொடர்ச்சியாக கால்வாயில் தண்ணீர் செல்கிறது” என்கின்றனர்.
மேலும், இதற்கு முன்பு டாடா நிறுவன பாதுகாவலர்களிடம் துப்பாக்கிகள் இருந்ததில்லை. ஆனால், ஆலைக் கழிவுநீர் விவசாய நிலங்களை பாதிக்கும் பிரச்சினை முன்னுக்கு வந்த பிறகு, தற்போது டாடா ஆலைப் பாதுகாவலர்கள் துப்பாக்கி ஏந்தி நிற்கின்றனர். விவசாயிகளைப் பயமுறுத்த டாடா நிறுவனம் முயற்சிக்கிறது என சந்தேகப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
டாடா ஆலைக் கழிவுகள் குறித்து மாநில சுகாதார அதிகாரிகளின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இரண்டாம் கட்ட பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை என்றும், பொது சுகாதார அதிகாரி ராஜேஷ்குமார் கூறியுள்ளார்.
முதற்கட்ட ஆய்வு முடிவுகளும், சுயாதீன ஆய்வுகளும் டாடா ஆலைக் கழிவுநீர் விவசாயப் பகுதியில் உள்ள நீரை மாசுபடுத்தியதை உறுதி செய்கின்றன. விவசாயிகள் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அரசிடம் தீர்வு கோரி தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில், மொத்த விசாரணையும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் கைவிடப்பட்டதாக டாடா நிறுவனம் கூறியுள்ளதும், அது குறித்து தமிழ்நாடு அரசும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் எந்தப் பதிலும் கூறாமல் இருப்பதும் சந்தேகத்தை வலுக்கச் செய்கின்றன.
தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நீதி கோரி போராடும் விவசாயிகளின் பக்கம்தான் அரசு நிற்க வேண்டும். விவசாயிகள் தரப்பு நியாயத்தை உணர்ந்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும் இது விவசாயிகளின் பிரச்சினை மட்டுமல்ல, அச்சுற்றுவட்டாரப் பகுதியில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களின் சுகாதாரம் தொடர்பான பிரச்சினையுமாகும்.
உழைக்கும் மக்களும், ஜனநாயக சக்திகளும் போராடிக் கொண்டிருக்கும் உள்ளுகுறுக்கை விவசாயிகளுக்கு தொடர்ந்து துணை நிற்போம்!
![]()
பதிவு
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











