05.06.2026

கிருஷ்ணகிரி: குழந்தைத் திருமணத்தால் பறிபோன சிறுமியின் உயிர்!

பத்திரிகைச் செய்தி

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி பகுதியில் வசித்து வந்த 15 வயதான பழங்குடியினச் சிறுமி, பிரசவத்திற்குப் பிறகு ஏற்பட்ட கடுமையான உடல்நலச் சிக்கல்களால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கர்ப்பிணிப் பெண்ணை சுகாதாரத்துறை அதிகாரிகள் முறையாகக் கண்டறிந்து கண்காணிக்கத் தவறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கெலமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பெட்டமுகிலாளம் ஊராட்சியைச் சேர்ந்த சிறுமி, ஏழாம் வகுப்புக்குப் பிறகு பள்ளிப் படிப்பை நிறுத்தியதாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 22 வயது இளைஞருடன் திருமணம் செய்து வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் இருவரும் தளி பகுதிக்கு வேலைக்காக இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

33 வார கர்ப்பிணியாக இருந்த சிறுமி கடந்த வாரம் ஒரு இரங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் மற்றும் உடல் வீக்கம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக உனிசெட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், பின்னர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

அங்கு சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் 1.5 கிலோ எடையுள்ள பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இருப்பினும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததால் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அச்சிறுமி ஹெல்ப் சின்ட்ரோமால் (HELLP Syndrome, Hemolysis, Elevated liver enzymes and low pallet count) பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

சிறுமியின் குழந்தைப்பேறு தொடர்பான தகவலை தளி அல்லது கெலமங்கலம் சுகாதாரப் பதிவேட்டில் பதிவு செய்யவில்லை எனவும், ஒரு ஆண்டுக்கும் மேலாக அந்தப் பகுதியில் வசித்து வந்த கர்ப்பிணிப் பெண்ணை சுகாதாரத்துறை கண்டறியத் தவறியுள்ளது எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தற்போது சிறுமியின் தாய் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசு நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, சிறுமியின் கணவர் மீது போக்சோ (POCSO) சட்டம் மற்றும் குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை மக்கள் அதிகாரக் கழகம் கண்டிக்கிறது.

ஏனென்றால், பழங்குடி மக்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகளில் அரசு நிர்வாகம் தனது கையாலாகாத்தனத்தை மறைப்பதற்குத்தான் இந்த கைது நடவடிக்கையாகும்.

வெறும் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் குழந்தைத் திருமணம் தொடர்பான பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர முடியாது என்பதே உண்மை.

இந்த விவகாரம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, அஞ்செட்டி, கெலமங்கலம் போன்ற பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் அரசு எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் செய்து தருவதில்லை. குறிப்பாக, இப்பகுதிகளில் அரசு மருத்துவமனைகளும் ஆரம்ப சுகாதார நிலையங்களும் ஊழியர்கள் பற்றாக்குறையால் முறையாகச் செயல்படாமல் முடங்கிக் கிடக்கின்றன. தற்போதுள்ள குறைந்தபட்ச ஊழியர்களும் அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்ய முடியாத எதார்த்தமும் நிலவுகின்றன. உடனடியாக மாவட்ட நிர்வாகம் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.

பழங்குடியின மக்களிடம் உள்ள விழிப்புணர்வில்லாத நிலை காரணமாக, பள்ளிக் கல்வியை நிறுத்தி விட்டு குழந்தைத் திருமணம் செய்து வைக்கின்றனர். அண்மையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருவது பற்றியும், குழந்தைத் திருமணங்களைத் தடுக்க, விரைவான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் எமது கட்சி சார்பாக பத்திரிக்கை செய்தியை வெளியிட்டிருந்தோம்.

வறுமை ஒழிப்பு, பெண் கல்வி, பிற்போக்கு பார்ப்பனிய ஆணாதிக்க கருத்துகளுக்கு எதிரான விழிப்புணர்வு உள்ளிட்ட அம்சங்களில் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமே குழந்தைத் திருமணங்களைத் தடுக்க முடியும். ஆனால் அரசின் நடவடிக்கைகள் இப்பிரச்சினைக்கு முழுமையாகத் தீர்வு காணும் வகையில் இல்லை என்பதையே தொடர்ச்சியாக நடக்கும் நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.


இவண்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க