
05.06.2026
கிருஷ்ணகிரி: மின் இணைப்பு கொடுக்காததால்
இருளில் வாழும் அஞ்செட்டி கிராம மக்கள்
பத்திரிகைச் செய்தி
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி தாலுக்கா, கோட்டயூர் பஞ்சாயத்தில் உள்ள நூற்றாண்டு சாமிமலை மற்றும் சிவபுரம் ஆகிய கிராமப் பகுதிகளில் பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டில் கட்டப்பட்ட ஆறு வீடுகளுக்கு இன்னும் மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இந்த வீடுகள், 2023-24 ஆம் ஆண்டில் தலா 5.73 லட்சம் செலவில் கட்டப்பட்டன. தொடர்ந்து இருளில் வாழும் நிலைமைக்கு அக்குடும்பங்கள் தள்ளப்பட்டுள்ளன.
மேலும், அக்கிராமத்தில் வசிப்பவர்களுக்கு முறையான கழிப்பறை வசதியும் இல்லை. அப்பகுதியில் வசிக்கும் ஜெயம்மா (60) என்பவர், “மின் இணைப்பு கிடைக்காததால், நாங்கள் அருகிலுள்ள மின்கம்பத்திலிருந்து மின் இணைப்பைப் பயன்படுத்துகிறோம். மின்சார வாரிய ஊழியர்கள் எங்கள் கிராமத்திற்கு வரும்பொழுது, எங்களைத் திட்டிவிட்டு இணைப்பைத் துண்டித்து விடுகிறார்கள்” என்று கூறுகிறார்.
“காட்டு விலங்குகள் அடிக்கடி எங்கள் வீடுகளுக்கு அருகில் நடமாடுகின்றன. எனவே, எங்களுக்கு மின் இணைப்பு கண்டிப்பாகத் தேவைப்படுகிறது. எங்களுக்கு முறையான கழிப்பறை வசதிகளும் இல்லை. அப்படியே கழிவறைகள் கட்டப்பட்டிருந்தாலும், வடிகால் இணைப்பு இல்லை” என்றும் கூறுகிறார் அவர்.
அப்பகுதியில் வசிக்கும் எம்.மாதவம்மா (65) என்பவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன் தன் கணவரை இழந்துவிட்டதாகவும், தனது மகள் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி என்றும் கூறினார். மின் இணைப்புப் பிரச்சினை ஒருபுறம் இருக்க, கழிப்பறை வசதி இல்லாததால் திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிப்பது பாதுகாப்பின்மையாகவும், அபாயம் நிறைந்ததாகவும் இருப்பதாகக் கூறுகிறார்.
இதுகுறித்து, கோட்டயூர் பஞ்சாயத்து செயலாளர் சிவக்குமார், மின் இணைப்புக்கான விண்ணப்பங்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இணைப்புகள் இன்னும் வழங்கப்படவில்லை என்றும் கூறினார்.
ஆனால், தேன்கனிக்கோட்டை மின்வாரிய அதிகாரிகளோ, “குறிப்பிட்ட கிராமங்களிலிருந்து எங்களுக்கு எந்த விண்ணப்பமும் வரவில்லை. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக இருப்பவர்கள், மின் இணைப்புக்காக ரூ.5,575 யை 10 தவணைகளில் செலுத்தும் வாய்ப்பு உள்ளது” என்று கூறினர்.
மேற்கண்ட செய்திகளிலிருந்து நாம் உணர்வது என்ன? ஓராண்டாக, அம்மக்கள் மின் இணைப்பு கிடைக்காமல் இருளில் தவித்து வருகின்றனர். மேலும், முறையான கழிப்பறை வசதி இல்லாமல் பாதுகாப்பில்லாத சூழலில் வாழ்கின்றனர். ஆனால், இது குறித்த பதட்டம் அரசுக்கோ, அதிகாரிகளுக்கோ துளியும் இல்லை என்பதுதான்.
அரசைச் சார்ந்து நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய மக்களின் தேவைகள் சமவெளியில் உள்ள மக்களுக்கே லஞ்சம் இல்லாமல் எளிதில் சாத்தியம் இல்லை எனும்போது, பழங்குடி மக்களுக்கு அவ்வளவு எளிதில் கிடைத்துவிடக் கூடிய காரியமா?
அரசு அதிகார வர்க்கத்தைப் பொறுத்தவரை, மக்களின் பாதுகாப்பு, மக்கள் நலன் என்பதெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. ஏதாவது காரணங்கள் கூறி, எவ்வளவு காலத்துக்கு வேண்டுமானாலும் இழுத்தடித்து விட்டு, மக்களையே குற்றவாளியாக்கும் நடைமுறைதான் அதிகார வர்க்கத்தின் நடைமுறையாகும். மக்கள் நலனுக்காக விரைந்து செயல்படுவது என்பதெல்லாம், லஞ்ச லாவண்யங்கள் புழுத்துப் போயுள்ள நம் நாட்டின் அதிகார வர்க்கத்தைப் பொறுத்தவரை நாம் கற்பனை செய்தும் பார்க்க முடியாததாகும். இதிலிருந்துதான் மேற்கண்ட பிரச்சினையையும் பார்க்க வேண்டியுள்ளது. போராடினால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்பதே உண்மை.
எனவே, உடனடித் தீர்வுக்காகப் போராட வேண்டும். மேலும், மக்கள் நலனை முதன்மையாகக் கருதி செயலாற்றும் மாற்று அரசுக் கட்டமைப்பின் தேவையை மேற்கண்ட நிகழ்வினைப் போன்ற எளிய மக்கள் அன்றாடம் அனுபவிக்கும் ஆயிரக்கணக்கான நிகழ்வுகள் நமக்கு உணர்த்திக் கொண்டேதான் உள்ளன.
மாவட்ட நிர்வாகமே!
- நூற்றாண்டு சாமிமலை மற்றும் சிவபுரம் கிராம மக்களின் மின் இணைப்பு மற்றும் கழிப்பறை வசதி ஆகிய தேவைகளை உடனே நிறைவேற்றிக் கொடு!
- மின் இணைப்பு மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்தித் தராமல் இழுத்தடித்துவரும் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு!
![]()
இவண்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





