
13.06.2026
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைகட்ட நிலத்தை இழந்த விவசாயிகள்
– 75 ஆண்டுகளாக பட்டா கிடைக்காத அவலம்
பத்திரிகைச் செய்தி
கிருஷ்ணகிரி மாவட்டம், சின்னமுத்தூர் ஊராட்சியில் தென்பெண்ணை ஆறு பாயும் பகுதியில் நெல், மானாவாரி பயிர்கள் என விவசாயம் செய்து வாழ்ந்து வந்த மக்கள், 1952ஆம் ஆண்டில் அங்கு கே.ஆர்.பி அணை கட்ட (Krishnagiri Reservoir Project) அரசு திட்டமிட்டவுடன் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்களுக்கு சோக்காடி, உஸ்தலஅள்ளி, நெல்லூர் என வனத்தை ஒட்டிய பிற பகுதிகளில் நிலம் கொடுக்கப்பட்டது. அதில் சில குடும்பத்தினருக்கு ஆலப்பட்டி வன சரகத்திற்கு உட்பட்ட சோக்காடி மலை மீது நிலம் வழங்கப்பட்டது. ஆனால், பட்டா வழங்கவில்லை.
அப்போது இருந்த அரசு அதிகாரிகள் “தற்போது அங்கு வசித்துக் கொள்ளுங்கள், பட்டா பின்னர் வழங்குவோம்” என உறுதி அளித்ததால் அதனை நம்பி மலையை ஒட்டிய வனப்பகுதிகளில் குடியேறிய விவசாயிகள், அதிகார வர்க்கத்தின் தொடர்ச்சியான அலட்சியத்தால், தற்போது வரை பட்டா இல்லாமல், அரசின் எந்தச் சலுகையும் பெற முடியாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக நடையாக நடந்து பட்டா கேட்டும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. பின்னர் வந்த அதிகாரிகளோ “நிலம் கொடுத்தவர்களுக்கு மட்டும்தான் பட்டா கொடுப்போம், வாரிசுகளுக்குக் கொடுக்க மாட்டோம்” என்று நிபந்தனை விதித்து விவசாயிகளின் வயிற்றில் அடித்தனர். அதனைத் தொடர்ந்து விவசாயிகள் நீதிமன்றம் சென்றனர்.
விவசாயிகளின் நீண்டகால போராட்டத்தின் காரணமாக, கடந்த ஆட்சியில் திமுக அரசு உத்தரவின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை மூலமாக, இப்பகுதியில் மின்னணு அளவீடு (Digital Survey) பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் 102 நபர்களுக்கு பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.
தற்போது இதில் 92 நபர்களுக்கு மட்டும் பட்டா வழங்குவதற்கான அனைத்துப் பணிகளும் தயார் நிலையில் உள்ளன. இருப்பினும், மீதமுள்ள 10 நபர்களுக்கான பட்டா வழங்கும் விசயத்தில், தொடர்புடைய வனப்பகுதியின் வன அலுவலர் அனுமதி தராமல் காலதாமதம் செய்து வருவதால், ஒட்டுமொத்தமாக 102 பேருக்கும் வழங்கப்பட வேண்டிய பட்டா விநியோகமும் தற்போதைய சூழலில் முடங்கியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் “அணைக்காக எங்கள் நிலத்தைக் கொடுத்துவிட்டு 75 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். தற்போது அரசு பட்டா தர முன்வந்தாலும், வனத்துறை அதிகாரிகளின் நடவடிக்கைகளால் காலதாமதம் ஆகிறது. பட்டா இல்லாததால் எங்கள் பிள்ளைகளின் உயர்கல்விக்குக் கல்விக் கடன் பெற முடிவதில்லை. வங்கிகளில் இதர கடன்களோ அல்லது அரசின் சலுகைகளோ பெற வழியில்லை. வேளாண்மைத்துறை சார்பில் வழங்கப்படும் இலவச நெல் மற்றும் மானியப்பொருட்களைப் பெற பட்டா, சிட்டா, அடங்கல் போன்ற ஆவணங்கள் கட்டாயமாதலால், அணைக்காக நிலம் கொடுத்த எங்களின் வாழ்க்கையே இன்று கேள்விக்குறியாக மாறியுள்ளது” என வேதனையோடு தெரிவிக்கின்றனர்.
இங்கு மட்டுமல்ல, கே.ஆர்.பி அணை கட்ட நிலம் கொடுத்து, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்ட பலருக்கும் அதிகாரிகள் பட்டா வழங்காமல் இழுத்தடிக்கும் பிரச்சினை உள்ளது. பட்டா கோரி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
அதிகார வர்க்கத்தின் அலட்சியத்துக்கு எதிராக, நீண்டகாலமாகப் போராடி, விவசாயிகள் பெற்றுள்ள உரிமையினைத் தடுக்கும் வனத்துறையின் நடவடிக்கையை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. எவ்வித நிபந்தனையும் இன்றி, உடனடியாக 102 பேருக்கும் பட்டா வழங்க வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது.
தமிழ்நாடு அரசே! மாவட்ட நிர்வாகமே!
- சோக்காடி பகுதியில் குடியமர்த்தப்பட்ட 102 பேருக்கும் தாமதிக்காமல். உடனடியாக பட்டா வழங்க உத்தரவிடு!
- அரசு உத்தரவிட்டும் பட்டா வழங்கத் தடையாக இருக்கும் வனத்துறை அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடு!
- கே.ஆர்.பி அணைக்காக நிலம் கொடுத்து, பல்வேறு பகுதிகளில் வசிக்கும், பட்டா கிடைக்காமல் அல்லல்படும் அனைத்து மக்களுக்கும் உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடு!
உழைக்கும் மக்களே!
நமது உரிமைகளுக்காகப் போராடுவோம்! ஒன்றிணைவோம்!
![]()
இவண்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





