ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலைக்கு நீதி வேண்டும்! | பிரச்சாரப் பயணம் – கருத்தரங்கம்

ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலைக்கு
நீதி வேண்டும்!

மக்கள் அதிகாரக் கழகம்

பிரச்சாரப் பயணம் – கருத்தரங்கம்

ஜூலை – ஆகஸ்ட் 2026

  • டந்த திமுக ஆட்சியில் மார்ச் 8, 2026 அன்று மானாமதுரையைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஆகாஷ் டெலிசன் போலீசால் அடித்து படுகொலை செய்யப்பட்டார்.
  • ஆகாஷ் டெலிசனை படுகொலை செய்த 16 போலீசாரை கைது செய்ய வலியுறுத்தி ஐந்து நாட்களாக தேசிய நெடுஞ்சாலையை மறித்து முக்கியத்துவம் வாய்ந்த போராட்டத்தை நடத்தினர் மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் காலனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த மக்கள். அதன் பிறகு கொலை வழக்கும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
  • கொலை வழக்கு, வன்கொடுமை தடுப்புச் சட்டத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், குற்றவாளிகளின் பெயர்கள் சேர்க்கப்பட்டு கைது செய்யப்படாததைக் கண்டித்து, உடலை வாங்க மறுத்து 100 நாட்களாக போராட்டம் நடைபெற்றது.
  • தமிழ்நாட்டில் கொல்லப்பட்ட ஒருவரின் உடலை வாங்க மறுத்து 100 நாட்களுக்கும் மேலாக நடந்த போராட்டம் என்றால் அது, மானாமதுரை ஆகாஷ் டெலிசன் மரணத்திற்கு நீதி கேட்ட இப்போராட்டம் தான்.
  • பெரும்பாலான ஊடகங்கள் ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலை குறித்து கள்ள மவுனம் சாதித்து வந்த நிலையில், உடலை வாங்க மறுத்த நூறாவது நாளில் மக்கள் அதிகாரக் கழகம் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து 32 மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களிடம் மனு கொடுக்கும் இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. அச்செய்தி தமிழ்நாடு முழுவதும் சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கான மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டது.
  • மக்கள் போராட்டத்தை கண்டு அஞ்சிய தற்போதைய த.வெ.க அரசு நீதிமன்றத்தின் மூலம் ஆகாஷின் உடலை அடக்கம் செய்வதற்கான உத்தரவைப் பெற்றது. பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி ஆகாசின் உடலை அடாவடித்தனமாக எரித்தது, தமிழ்நாடு போலீசு.

ஆகாஷ் டெலிசன் படுகொலை
கொட்டடி படுகொலை மட்டும்தானா?

ஆகாஷ் டெலிசன் படுகொலை என்பது போலீஸ் கொட்டடி கொலை என்பதுடன், அது அப்பட்டமான ஆதிக்கச் சாதிவெறியோடு நடத்தப்பட்ட படுகொலையாகும். தென் மாவட்டங்களில் அரங்கேறி வரும் சாதிவெறியாட்டங்கள் மற்றும் ஆதிக்கச் சாதி வன்முறைகளின் தொடர்ச்சியாகவே ஆகாசின் கொலையை நாம் பார்க்க வேண்டும். தலித் இளைஞர்கள் கல்வி கற்று உயர்வதற்கும் பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கும் எதிராக உள்ளூர் ஆதிக்கச் சக்திகளால் தங்களது பழைய ஆதிக்க நிலையை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. இந்த ஆதிக்கத்தின் மறுவடிவமாகவே இத்தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

சமூகத்தில் ஏற்பட்டுள்ள பண்பாட்டு எழுச்சிக்கு எதிராக ஆதிக்கச் சாதிவெறியர்களால் ஆணவப் படுகொலைகள் நடத்தப்படுவதைப் போல, தன்மானம், சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சமத்துவத்திற்கான சமூக எழுச்சிக்கு எதிராக இந்தச் சாதி வெறியாட்டங்களும் போலீசு நிலையப் படுகொலைகளும் நடத்தப்படுகின்றன.

குறிப்பாக சிவகங்கை மாவட்டம் உட்பட்ட தென் மாவட்டங்களில் ஆதிக்க சாதி பின்னணி கொண்டவர்கள் தான் பெரும்பாலான காவல் நிலையங்களில் போலீசாக பணியில் அமர்த்த படுகிறார்கள். இதனால் ஆதிக்க சாதி வெறி சங்கங்களுடனும் ஆர்எஸ்எஸ் பிஜேபி கும்பலுடனும் நெருக்கமான உறவைப் பேணுகிறார்கள். கவினை ஆணவப் படுகொலை செய்த சுர்ஜித்தின் அப்பா எஸ்ஐ சரவணன் சாதி வெறியுடன் படுகொலைக்குத் துணை நின்றுள்ளார். சுஜித்தின் அம்மா கிருஷ்ணகுமார் கோர்ட் பலமுறை உத்தரவு போட்டும் நெல்லை மாவட்ட காவல்துறை கைது செய்யாமல் இழுத்தடித்தது பிறகு இறுதியாக 10 மாதங்கள் கழித்து கைது செய்தது. ஆனால் அதே நேரத்தில் சுர்ஜித் அப்பா எஸ்ஐ சரவணனுக்கு ஜாமீன் வழங்கி விடுவித்துள்ளது. நாங்குநேரி பெரும்பத்து, தென்காசி ஆலங்குளம் போன்ற பகுதிகளிலும் திட்டமிட்டு நடத்தப்பட்ட சாதிவெறி தாக்குதலுக்கு பின்னணியிலும் ஆதிக்க சாதிவெறி சங்கங்களும் ஆர்எஸ்எஸ் பிஜேபி கும்பலும் உள்ளது. இது தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட சரியான நிவாரணங்கள் வழங்காமல் இன்றுவரை அரசு இழுத்தடித்து வருகிறது. ஆகாஷ் படுகொலை செய்யப்பட்ட சில தினங்களுக்கு முன்பு கூட மானாமதுரை அருகில் உள்ள இடைக்காட்டூரில் ஆதிக்க சாதி வெறி கும்பல் தாக்குதலில் ஈடுபட்ட போதும் அவர்களை கைது மட்டும் செய்து பாதுகாத்தது போலீசு. அவர்களின் ரவுடித்தனத்திற்காக அடித்து கொலை செய்யப்படவில்லை. ஆனால் ஆகாஷ் படுகொலை செய்யப்படுகிறார்.

குற்றவாளிகள் என்றால் கொலை செய்வது நியாயமா?

ஆகாஷ் டெலிஷன் மீது கஞ்சா வழக்கு உள்ளது என்பதை சொல்லி ஆகாசின் படுகொலையை சிலர் நியாயப்படுத்துகின்றனர். அண்மையில், நாகர்கோவில் சிறையில் போலீசால் அடித்துக்கொல்லப்பட்ட மாற்றுத்திறனாளி சபரிவர்மன் மீதும் குட்கா விற்றதாக போலீஸ் குற்றம் சாட்டியது. இவ்வாறு போலீஸ் குற்றம் சாட்டுவதெல்லாம் உண்மையா? போலீஸ் பொய் வழக்கே போடுவதில்லையா? கஞ்சா விற்றவர்களை எல்லாம் போலீசு கொலை செய்யலாம் என்றால் விற்பதற்கு துணை செய்த போலீசையும் பின்னணியில் இருக்கின்ற கும்பலையும் என்ன செய்வது? இதற்குப் பெயர்தான் சட்டத்தின் ஆட்சியா?

ஆகையால், கொட்டடிக் கொலைகளை எந்த வகையிலும் நியாயப்படுத்தக் கூடாது. அவ்வாறு நியாயப்படுத்தினால் அரசின் அடக்குமுறைக்கு எதிராகவும் தங்களது உரிமைக்காகவும் போராடுபவர்களையும் பொய் வழக்கு போட்டு கொலை செய்வதற்கே வழி வகுக்கும்.

ஆகாஷ் டெலிசனின் நீதிக்கான போராட்டமும்
நமது உரிமைக்கான போராட்டமும் வேறுவேறு அல்ல.

சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற போராட்டமும் விவசாயம் அழிக்கப்படுவதற்கு எதிரான விவசாயிகளின் போராட்டமும் வேலைகேட்கும் மாணவர்களின் போராட்டமும் பாலியல் குற்றங்களுக்கு எதிரான போராட்டமும் வேறு வேறல்ல.

ஆகவே, உழைக்கும் மக்களின் உரிமைக்கான போராட்டமும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமும் ஒன்றிணைக்கப்பட வேண்டும். ஆகாஷின் நீதிக்கான போராட்டமும் அதைத்தான் நமக்கு சொல்கிறது.

  • ஆகாஷின் படுகொலையில் தொடர்புடைய 16 போலீஸ் குற்றவாளிகளை கைது செய்!
  • ஆதிக்க சாதிவெறி சங்கங்களை தடை செய்!
  • சாதி வெறியை தூண்டுவதற்கு அடிப்படையாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. கும்பலைத் தடை செய்!

படிக்க: புதிய ஜனநாயகம்
பார்க்க: வினவு, பெருவிழா

மக்கள் அதிகாரக் கழகம்,
மதுரை – சிவகங்கை மாவட்டங்கள்.
9791653200,9442269220

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க