30.07.2026
தேனி மாவட்டம் வருசநாடு, கடமலைக் குண்டு ஒன்றிய பகுதியில்
கடையடைப்பு மற்றும் வனத்துறை அலுவலக முற்றுகைப் போராட்டம்!
பத்திரிகைச் செய்தி
தேனி மாவட்டம் வருசநாடு மற்றும் கடமலைக் குண்டு ஒன்றிய பகுதியில் 26.07.2026 அன்று மாபெரும் கடையடைப்பு மற்றும் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. அனைத்துக் கட்சிகள், அமைப்புகள் மற்றும் ஜனநாயகச் சக்திகளோடு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
கடந்த 2021-ஆம் ஆண்டில், ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து கடமலைக் குண்டு வரை உள்ள மலைப் பகுதியை ஒன்றிய அரசு புலிகள் காப்பகமாக அறிவித்தது. இதனிடையே, வருசநாடு முதல் கடமலைக் குண்டு வரை உள்ள மலைப் பகுதியில் சுமார் மூன்று தலைமுறைகளாக 90 கிராமங்களில் வாழ்ந்து வரும் 4,011 குடும்பங்களை அவ்விடத்தை விட்டு வெளியேற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேவைப்பட்டால் துணை ராணுவப் படையைப் பயன்படுத்தி அவர்களை வெளியேற்றலாம் என்றும், காலங்காலமாக வாழ்ந்து வரும் அம்மக்களை அகதிகளாக மாற்றும் வகையிலும் அந்த உத்தரவு அமைந்துள்ளது.
வருசநாடு முதல் கடமலைக்குன்டு வரை ஆயிரக்கணக்கான மக்கள் வாழும் பகுதியில் 4,011 குடும்பங்களை வெளியேற்றுவதை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
2021-இல் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பிறகு, வனத்துறையின் நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றன.
மலைக் கிராமங்களுக்குச் செல்லும் பாதைகளில் சோதனைச் சாவடிகள் (Checkposts) அமைத்து மக்களின் வருகையைப் பதிவு செய்கின்றனர்.
புதிய குடியிருப்புகள் உருவாகாமல் தடுப்பது, குடிநீர் இணைப்புகளைத் துண்டிப்பது, புதிய மின் இணைப்புகள் வழங்குவதைத் தடுப்பது, நியாய விலைக் கடைகளைக் குறைப்பது மற்றும் பள்ளிகளை மூடுவது என மெல்ல மெல்ல மக்கள் வாழ முடியாத சூழலை உருவாக்கி வருகின்றனர்.
மக்களின் கோரிக்கைகளும் அச்சமும்
75 ஆண்டுகளுக்கு மேலாக வனப் பகுதியில் வாழும் மக்களுக்கு நிலப் பட்டா வழங்கலாம் எனச் சட்டம் கூறுகிறது. ஆனால், மாநில அரசு தொடர் கோரிக்கைகளுக்குப் பிறகும் பட்டா வழங்காமல் காலந்தாழ்த்தி வருகிறது. பட்டா வழங்கப்பட்டிருந்தால், உச்ச நீதிமன்ற உத்தரவின் மூலம் மக்களைத் தற்போது வெளியேற்றியிருக்க முடியாது என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மேலும், அப்பகுதியில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள ரிசார்ட்டுகள் மற்றும் ஹோட்டல்களை அகற்றி, வனப் பகுதியை மீட்டெடுக்கத் தொடரப்பட்ட பொதுநல வழக்கின் அடிப்படையிலேயே, 90-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் மக்களை அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வனத்துறையும் மத்திய அரசும் இம்மக்களை வெளியேற்றத் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. வரும் ஆகஸ்ட் 28-க்குள் அனைவரும் காலி செய்ய வேண்டும் என 4,011 வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கும் பணியைத் தொடங்கியுள்ளனர்.
இந்த நடவடிக்கையைத் தடுக்கும் பொருட்டு, தமிழ்நாடு முதல்வரை சி.பி.எம். தோழர் பெ.சண்முகம் தலைமையில் அம்மக்கள் நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர். அதன் பிறகு தான் வீடுகளை காலி செய்யச் சொல்லி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மாநில அரசு இதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்காதது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆகஸ்ட் 7 ஆம் தேதி தேனி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து தோழர் பெ. சண்முகம் தலைமையில் மனு கொடுக்கும் போராட்டத்தையும் அறிவித்துள்ளனர்.
எனவே,
- தமிழ்நாடு அரசு இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு (Review Petition) தாக்கல் செய்து, வெளியேற்ற நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும்.
- 75 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் வாழும் மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்கி, அவர்களைச் சட்டப்பூர்வமாகப் பாதுகாக்க வேண்டும்.
- வனத்துறை அதிகாரிகளைக் கொண்டு மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிட வேண்டும்.
![]()
இவண்,
தோழர் சிவகாமு,
மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
மதுரை மேற்கு மாவட்டம்.
7826847268
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





