30.07.2026

திருநெல்வேலி மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில்
தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு!

வந்தே மாதரம் பாடல் திணிப்பு!

பத்திரிகைச் செய்தி

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-ஆவது பட்டமளிப்பு விழா ஜூலை 28, 2026 அன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டதற்கு மக்கள் அதிகாரக் கழகம் தனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

பட்டமளிப்பு விழாவிற்கு முன்னரே இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பில், பல்கலைக்கழக துணைவேந்தர் என். சந்திரசேகர், பட்டமளிப்பு விழாவின் நிகழ்ச்சி நிரல் முழுக்க முழுக்க ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த நேரடி வழிகாட்டுதலின்படியே தயாரிக்கப்பட்டது என்றும், ஆளுநர் மாளிகை உத்தரவின்படி, விழாவின் தொடக்கத்தில் முதலாவதாக “வந்தே மாதரம்” பாடலும், இரண்டாவதாகத் தேசிய கீதமும் (ஜன கண மன) பாடப்பட்ட பின்னரே, மூன்றாவதாக “தமிழ்த்தாய் வாழ்த்து” பாடப்படும் என்று அவர் திட்டவட்டமாக அறிவித்தார்.

வந்தே மாதரம் பாடல் உருவாக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் (MHA) புதிய விதிகள் 2026-ல் ஒன்றிய உள்துறை அமைச்சகம் கொண்டு வந்துள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநர் பங்கேற்கும் அதிகாரப்பூர்வ விழாக்களில் தேசிய நெறிமுறை (National Protocol) மட்டுமே பின்பற்றப்பட வேண்டும் என்றும், இந்த விதியின்படி தேசத்தின் ‘இறையாண்மை’யைக் குறிக்கும் வந்தே மாதரம் (தேசியப் பாடல்) மற்றும் ஜன கண மன (தேசிய கீதம்) ஆகிய இரண்டும் பாடி முடிக்கப்பட்ட பிறகே, பிராந்திய வாழ்த்துப் பாடல்களைப் பாட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இந்த புதிய விதியின்படி, ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் பங்கேற்கும் அனைத்து முக்கிய பொது நிகழ்ச்சிகளிலும், தேசிய கீதத்திற்கு முன்பாக வந்தே மாதரம் பாடலின் 6 பத்திகளையும் (சுமார் 3 நிமிடம் 10 வினாடிகள்) பாடுவது கட்டாயமாக்கப்பட்டது.

இந்த புதிய வழிகாட்டுதல் நெறிமுறையைத் தான் மீற முடியாது என்றும், இதனைப் பல்கலைக்கழக விழாவில் கட்டாயமாகப் பின்பற்றாவிட்டால் தன் மீது ஆளுநர் மாளிகை தரப்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் துணைவேந்தர் சந்திரசேகர் வெளிப்படையாகத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான சர்ச்சை, முன்னாள் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிக்காலம் தொடங்கி தற்போது 2026-இல் புதிய ஆளுநர் இராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிக்காலம் வரை தொடர் அரசியல் விவாதப் பொருளாக நீடித்து வருகிறது.

2021-ஆம் ஆண்டு டிசம்பரில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையின்படி (G.O. Ms. No. 1361), தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் விழாக்கள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட வேண்டும் மற்றும் தேசிய கீதத்துடன் நிறைவு பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.

இந்த நெறிமுறையின்படி, தொடக்கப் பாடலாகத் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதிப் பாடலாகத் தேசிய கீதமும் மட்டுமே பாடப்பட வேண்டும். நடுவில் வேறு எந்த வாழ்த்துப் பாடல்களும் இடம்பெறக் கூடாது என்பதாகும்.

கல்வி மற்றும் கலாச்சாரம் ஆகியவை பொதுப் பட்டியலில் வருகின்றன. மாநில அரசின் நிதி மற்றும் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக்கழகங்களில், மாநில அரசு பிறப்பிக்கும் அரசாணையே (தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்) செல்லுபடியாகும் என்று தமிழ்நாடு அரசு வாதிடுகிறது. மறுபுறம், ஆளுநரே பல்கலைக்கழக வேந்தர் என்பதால், ஒன்றிய அரசின் நெறிமுறைகளைப் பின்பற்ற முழு சட்ட உரிமை உண்டு என ஆளுநர் மாளிகை தரப்பு வாதிடுகிறது.

இதனடிப்படையில் உயர்கல்வித் துறையில் ஆளுநருக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநில அரசின் அதிகாரங்களைக் குறைப்பது, கல்வித்துறையில் காவிமயத்தை புகுத்துவது உள்ளிட்ட பாசிசத் திட்டங்களை இப்பாசிசக் கும்பல்கள் குறுக்கு வழியில் அமல்படுத்துகிறது. புதிய விதிகளைப் பயன்படுத்தி ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு பதில், வந்தேமாதரம் என்கிற சமஸ்கிருதப் பாடலை முதலில் பாடுவது என்பதை மாநில அரசின் உரிமைகளை மீறி திணித்து வருகிறது.

இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிக் கொள்கை

ஒன்றிய அரசின் கொள்கைப்படி, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தங்களின் பிராந்திய அடையாளங்களை விட ஒரே நாடு, ஒரே மொழி என்கிற தேசிய அடையாளங்களுக்கு (தேசிய கீதம், தேசியப் பாடல்) முதல் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 51A (a)-ன் கீழ், தேசியக் கொடி மற்றும் தேசிய கீதத்திற்கு (National Anthem) மதிப்பளிப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை கடமை ஆகும்.

ஆனால் மாநிலப் பாடல்களுக்கு அரசியலமைப்பு அந்தஸ்து இல்லை. அரசியலமைப்பில் ‘மாநில வாழ்த்துப் பாடல்’ என்ற எந்தவொரு சட்டப்பூர்வ அங்கீகாரமும் பிரிவும் தனியாகக் குறிப்பிடப்படவில்லை. அது முற்றிலும் மாநில அரசுகளின் நிர்வாக முடிவாகும்.

கடந்த 2021 டிசம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் (முன்னாள் ஆளுநர் ரவி பங்கேற்ற விழாவில் ஒருவர் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காதது தொடர்பான வழக்கில்) நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஒரு தீர்ப்பை வழங்கினார். அத்தீர்ப்பில், “தமிழ்த்தாய் வாழ்த்து என்பது ஒரு பிரார்த்தனைப் பாடலே தவிர, அது தேசிய கீதம் அல்ல. எனவே, அதற்கு சட்டப்பூர்வமான கட்டாயம் எதுவும் இல்லை” எனக் கூறப்பட்டது.

இருப்பினும், நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பு வந்த அடுத்த சில நாட்களிலேயே, அன்றைய தி.மு.க. அரசு தமிழ்த்தாய் வாழ்த்தை மாநிலப் பாடலாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து, அதற்கு அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என அரசாணை பிறப்பித்தது.

இந்தியக் ‘கூட்டாட்சி’ அமைப்பில் (Federalism), ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் தனித்துவமான பண்பாடு மற்றும் மொழி சார்ந்த அடையாளம் இருக்கிறது. தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் அடையாளத்தைப் போற்றும் வகையில், மாநில அரசின் கீழ் நடக்கும் விழாக்களில் தாய்மொழி வாழ்த்துக்கு முதல் முன்னுரிமை தரப்படுவது மாநிலத்தின் தன்னாட்சி உரிமையாக இருக்கிறது.

ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் தேசிய கீத நெறிமுறைகளின்படி தேசிய கீதத்தை எந்தவொரு கூட்டத்தின் தொடக்கத்திலோ அல்லது இறுதியிலோ பாடலாம். ஆனால், ஒரு விழாவில் தேசிய கீதம் மற்றும் மாநிலப் பாடல் ஆகிய இரண்டும் பாடப்படும் போது, எதற்கு முன்னுரிமை தர வேண்டும் என்பது குறித்து இந்திய சட்ட புத்தகத்தில் நேரடிச் சட்டங்கள் எதுவும் இல்லை. இது நெறிமுறைகள் மற்றும் மரபுகளின் அடிப்படையிலேயே கையாளப்படுகிறது.

விழாவின் தொடக்கத்தில் மாநில வாழ்த்துப் பாடலையும், நிறைவில் ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தும் வகையில் தேசிய கீதத்தையும் பாடுவதுதான் சரியான நெறிமுறை என்று தமிழ்நாடு அரசு வாதிடுகிறது.

தமிழ்நாட்டின் இறையாண்மை, பண்பாட்டு தனித்துவம் மற்றும் மாநில அரசின் நேரடி அரசாணையின் படியே தமிழ்த்தாய் வாழ்த்து எப்போதும் முதலாவதாகப் பாடப்படுகிறது.

வரலாற்றுத் தொடக்கம் (1896) முதல் பொது மேடை

பங்கிம் சந்திர சாட்டர்ஜியால் 1870-களில் எழுதப்பட்ட இப்பாடலை, 1896-இல் நடைபெற்ற கொல்கத்தா இந்திய தேசிய காங்கிரஸ் (INC) மாநாட்டில் இரவீந்திரநாத் தாகூர் முதன்முதலாகப் பாடினார்.

இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் இராஜேந்திர பிரசாத் தலைமையில், 1950 ஜனவரி 24 அன்று “ஜன கண மன” தேசிய கீதமாகவும், “வந்தே மாதரம்” தேசியப் பாடலாகவும் அறிவிக்கப்பட்டன. அப்போது, தேசிய கீதத்திற்கு இணையான அந்தஸ்தும் மரியாதையும் தேசியப் பாடலுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அரசியலமைப்புச் சட்டப்படி ‘வந்தே மாதரம்’ பாடலுக்குக் காலக்கட்டுப்பாடோ அல்லது அரசு விழாக்களில் பாடுவதற்கான கடுமையான நெறிமுறைகளோ 2026 வரை தனியாக இல்லை. ஆனால், தற்போது ஒன்றிய அரசு புதிய உத்தரவை பிறப்பித்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

வந்தேமாதரம் எதிர்ப்பும், வரலாற்று பின்னணியும்

“ஆனந்தமடம்” என்பது பங்கிம் சந்திர சட்டர்ஜி என்பவரால் 1881-ல் “பங்கதர்ஷன்” என்ற இதழில் தொடராக வெளிவந்து,1882-இல் நாவலாக வெளியிடப்பட்டு பின்னர் 1883-இல் நாடகமாக அரங்கேற்றப்பட்டது. இதில் இடம்பெற்ற ஒரு பாடலே வந்தேமாதரம்.

நாவலில் வரும் சன்னியாசிப் போராளிகள் (சந்தானங்கள்), “முஸ்லிம் ஆட்சியை வேரறுப்போம்” அல்லது “யவனர்களை (அந்நியர்களை) அழிப்போம்” போன்ற தீவிரமான முழக்கங்களை எழுப்புவதாகப் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதியுள்ளார். இது பொதுவான முஸ்லிம் மக்களுக்கு எதிரானதாக பல விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நாவலின் இறுதியில், சன்னியாசிகள் முஸ்லிம் நவாபை வீழ்த்திய பிறகு, பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியை ஏற்றுக்கொள்வது போலக் கதை முடிகிறது. “முஸ்லிம் ஆட்சியை விட ஆங்கிலேயர் ஆட்சி பரவாயில்லை, அதன் மூலமே இந்து மத மறுமலர்ச்சி சாத்தியம்” என்ற தொனியில் ஒரு துறவி பேசுவதாகக் கதை அமைக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பங்கிம் சந்திர சட்டர்ஜி ஒரு அரசு அதிகாரியாக (Sub-divisional Magistrate) பணியாற்றினார். நாவலின் முதல் பதிப்பில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஆயுதப் போராட்டமாக இருந்ததை, பிரிட்டிஷ் அரசின் தணிக்கைக்கும், தண்டனைக்கும் பயந்து, பிற்காலப் பதிப்புகளில் முஸ்லிம் நவாபிற்கு எதிரான போராட்டமாக அவர் மாற்றியமைத்தார் என்று சில வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

இதுதான் இந்துத்துவ சங்கிகளின் தேசபக்தி. இவர்கள் வெள்ளையனின் காலை நக்கியே வாழ்ந்தனர் என்பதும் அதன் வழியாகவும், இஸ்லாமிய வெறுப்பை திணித்ததன் வழியாகவும் தங்களது இந்துத்துவ கோட்பாடுகளை பாதுகாத்துக் கொண்டனர் என்பதே வரலாறு. இதற்கு சாவர்க்கர் முதல் வாஜ்பாய் வரை பல உதாரணங்கள் உண்டு.

தேசியப் பாடல் சர்ச்சை

இப்பாடலின் பிற்காலப் பத்திகளில், பாரத நாட்டைத் துர்கா தேவி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய இந்து மதப் பெண் தெய்வங்களுடன் ஒப்பிட்டு வரிகள் எழுதப்பட்டுள்ளன (எ.கா: த்வம் ஹி துர்கா தசபிரஹரணதாரிணி…).

நாவலின் இந்த இஸ்லாமிய விரோதப் பின்னணி, ‘இந்து தேசியவாத’ தொனியில் எழுதப்பட்டது மற்றும் பாடலில் உள்ள உருவ வழிபாட்டுத் தொனி (நாட்டைத் துர்க்கை அம்மனாக உருவகிப்பது) காரணமாக, இஸ்லாமிய சமூகத்தினர் இப்பாடலைப் பாட ஆட்சேபனை தெரிவித்தனர். முகமது அலி ஜின்னா உள்ளிட்ட தலைவர்கள் இப்பாடலை முழுமையாக ஏற்பதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனால் 1937-ல் ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ் மற்றும் காந்தி ஆகியோர் அடங்கிய காங்கிரஸ் கமிட்டி ஒரு முக்கிய முடிவை எடுத்தது. அதன்படி, எந்தவொரு மதக் குறியீடுகளும் இல்லாத, இயற்கையை மட்டுமே போற்றும் முதல் இரண்டு பத்திகள் மட்டுமே பொது மேடைகளில் தேசியப் பாடலாகப் பாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மீதமுள்ள பத்திகள் தவிர்க்கப்பட்டன.

1950 ஜனவரி 24 அன்று, அப்போதைய குடியரசுத் தலைவர் இராஜேந்திர பிரசாத் அதிகாரப்பூர்வமாக அறிவித்தபோதும், மதச்சார்பற்ற முதல் இரண்டு பத்திகள் மட்டுமே இந்தியாவின் தேசியப் பாடலாக அங்கீகரிக்கப்பட்டன. இதனால்தான், மத நல்லிணக்கத்தைக் காக்கும் பொருட்டு, “ஜன கண மன” நாட்டின் தேசிய கீதமாகவும், வந்தே மாதரம் தேசியப் பாடலாகவும் பிரிக்கப்பட்டன.

ஆனால் தற்போது 2026 ஜனவரியில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் கொண்டு வந்துள்ள புதிய நெறிமுறையின்படி, வந்தே மாதரம் பாடலின் அனைத்து 6 பத்திகளையும் (மதக் குறியீடுகள் உள்ள வரிகள் உட்பட) முழுமையாகப் பாட வேண்டும் என்று வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த விதியே, தமிழ்நாட்டில் தற்போதைய மொழி சார்ந்த சர்ச்சையோடு சேர்த்து, மதச்சார்பின்மை குறித்த விவாதங்களையும் மீண்டும் கிளப்பியுள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரிலான பல்கலைக்கழகத்திலேயே அதற்கு 3-வது இடம் தரப்பட்டதை பலர் கண்டித்துள்ளனர்.

மதுரை, நெல்லை, அழகப்பா, அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (MUTA), இந்த நடவடிக்கையை “மாநில தன்னாட்சி மீதான தாக்குதல் மற்றும் தமிழ் மொழியை அவமதிக்கும் செயல்” எனக் கூறி தங்களின் கடும் எதிர்ப்பைப் பதிவிட்டனர்.

தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் முதன்மையைத் தக்கவைப்பதற்கும், அதற்குரிய தகுந்த இடத்தை உறுதி செய்வதற்கும் தனது அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் காரணமாக இந்த விழாவைப் புறக்கணிப்பதாக அமைச்சர் விஸ்வநாதன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவரது கண்டனத்தில் ஆளுநரின் அடவடித்தனங்கள் குறித்தோ, மோடி அரசின் பாசிசத் தன்மை, மாநில உரிமைகளில் தலையிடுவது, கல்வித்துறையை காவிமயமாக்குவது குறித்த கண்டனங்களோ பதிவிடப்படவில்லை. ஏனெனில் அவ்வாறான கண்ணோட்டமே விஜய் தலைமையிலான த.வெ.க. அரசுக்கு கிடையாது என்பது மட்டுமல்ல, பாசிசத்திற்கு தமிழ்நாட்டில் பாதையை செப்பனிட்டு கொடுப்பதற்கான பணியை அது செய்து கொண்டிருக்கிறது. ஜனநாயக சக்திகள் எதிர்ப்பு தெரிவிக்கும்போது, மக்களின் எதிர்ப்பை கண்டு அஞ்சி வேறுவழியின்றி தானும் எதிர்ப்பது போல நாடகமாடுகிறது.

நெல்லை பகுதி தி.மு.க. எம்.எல்.ஏக்கள் இவ்விழாவை முழுமையாகப் புறக்கணித்தனர். கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தி.மு‌. இராசேந்திரன் தனது கண்டனத்தை தெரிவித்ததோடு தனக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழையும் திருப்பி அனுப்பி தனது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளார்.

துணைவேந்தரை மிரட்டி(!), மாநில அரசு, பேராசிரியர்கள், மாணவர்கள், ஜனநாயக சக்திகள், வழக்கறிஞர்கள், தமிழ்நாட்டு மக்கள் ஆகியோர்களின் எதிர்ப்பையும் மீறி வந்தேமாதரம் திணிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இது நடைபெறும் என்பதற்கு அச்சாரமாக வந்தே மாதரம் பாடலைப் பாதுகாப்பதற்கான ‘தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா 2026’ நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, அடுத்ததாக மக்களவையின் பரிசீலனைக்கு அனுப்பப்பட உள்ளது. அங்கு நிறைவேறிய பிறகு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று இது முழுமையான சட்டமாக மாறும்.

இந்தியாவின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலுக்கு, தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடலுக்கு இணையான சட்டப்பூர்வ பாதுகாப்பையும், அந்தஸ்தையும் வழங்குவதே இதன் நோக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

வந்தே மாதரம் பாடலை யாரேனும் வேண்டுமென்றே அவமதித்தாலோ, அல்லது அதைப் பாடும் கூட்டத்திற்குத் தடை அல்லது இடையூறு விளைவித்தாலோ 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படும் என்று சட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்த சூழலில், இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிகாரத்தில் இருக்கும் மோடி தலைமையிலான பாசிசக் கும்பல் இருக்கின்ற சட்டங்களைத் திருத்தி, சட்டப்பூர்வமாகவே இந்துத்துவத்தை புகுத்தி, இந்துராஷ்டிரத்தை அமைக்கவும், பாசிசத்தை நிறுவவும் தொடர்ச்சியாக முயன்று வருகிறது. அதனடிப்படையில் வந்தேமாதரம் பாடலையும் கையிலெடுத்துள்ளது. அது எந்த வரிசையில் பாடப்படுகிறது என்பதல்ல, இந்த பாசிச செயல்திட்டம் முறியடிக்கப்பட வேண்டும் என்பதே முதன்மையானது.

தமிழ்நாட்டு உழைக்கும் மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் வேந்தர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆளுநர் மூலம் தமது பாசிசத் திட்டங்களையும், அதன் வழியாக மாநில உரிமைகளை நசுக்கி, அதன் குரல் வளையை நெறித்து தமக்கு அடிமையாக்க முயற்சிக்கிறது. இதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. மௌனமாகக் கடந்து செல்லவும் கூடாது.

உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து பாசிசக் கும்பலை வீழ்த்தி, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு அமைக்கக் களமிறங்க வேண்டும்.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க