28.07.2026

வினாத்தாள் கசிவைத் தடுக்க மசோதா தாக்கல்:
நீட் தேர்வை ரத்து செய்வதே தீர்வு!

பத்திரிகைச் செய்தி

பொதுத் தேர்வுகள் (திருத்த) மசோதா, 2026-ஐ ஒன்றிய அரசு நேற்று (ஜூலை 27) மக்களவையில் தாக்கல் செய்தது. இத்திருத்தங்கள் அபராதங்களை அதிகரிக்கவும், விரைவு நீதிமன்றங்களை அமைக்கவும் வகைசெய்யும் என்று கூறப்படுகிறது.

அதேபோல், தேர்வில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள நந்தன் நிலேகனி தலைமையில் 6 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

வினாத்தாள் கசிவுகளைத் தடுக்கும் வகையில், தேசிய தேர்வு முகமையின் தேர்வு நடைமுறையிலும் கல்வியிலும் தொழில்நுட்பம் சார்ந்த அடுத்தகட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ள நந்தன் நிலேகனி என்பவர் தலைமையில் 6 பேர் கொண்ட உயர்மட்ட பணிக்குழு அமைக்கப்பட்டிருப்பதாகப் பிரதமர் மோடி இன்ஸ்டாகிராம் வீடியோவில் நேற்று அறிவித்தார்.

இதற்கு முன்னதாக 2024ஆம் ஆண்டில் நீட் முறைகேடுகள் நடந்த போது, ராதாகிருஷ்ணன் என்பவர் தலைமையில் உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால், அதன் பரிந்துரைகள் காற்றில் பறக்க விடப்பட்டன. அதேபோல், தற்போது அமைக்கப்பட்டுள்ள குழுவும் மாணவர்களின் கோபத்தைத் தணிப்பதற்கான கண்துடைப்பு நடவடிக்கை மட்டும்தான்.

நீட் வினாத்தாள் கசிவையொட்டி அதற்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இளைஞர்கள், மாணவர்கள் கடந்த 36 நாட்களாகத் தொடர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் தாக்கத்தால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் பொது மக்கள் என பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் பற்றிப் பரவியது. மக்கள் போராட்டங்களின் விளைவாக மோடி அமித்ஷா கும்பல் அடிபணிந்தது. ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

நீட் தேர்வில் நடக்கும் மோசடி முறைகேடுகளைத் தடுக்கப் போவதாக மோடி அரசு சொல்கிறது. ஆனால் நீட் தேர்வு என்பதே முறைகேடு தான். ஏழை எளிய நடுத்தர மக்களின் மருத்துவ கனவைச் சிதைத்து கோசிங் செண்டர் நடத்தும் கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளை அடிக்கவே நீட் தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் மாநில உரிமைகளைப் பறிக்கும் செயலாக உள்ளது. நீட் தேர்வு என்பது தகுதி திறமை என்பதெல்லாம் பொய், ஏமாற்று வேலை. நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதுடன், தேசிய தேர்வு முகமையும் களைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி நாடு முழுவதும் ஜனநாயக சக்திகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் அணிதிரட்டி போராட்டங்களைக் கட்டியமைப்போம் என மக்கள் அதிகாரக் கழகம் அறைகூவி அழைக்கிறதது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க