
29.07.2026
நாமக்கல்: ‘காப்புக்காடு’ என்ற பெயரில் பறிக்கப்படும்
நாரைக்கிணறு சுற்றுவட்டார மக்களின் நில உரிமை
பத்திரிகைச் செய்தி
நாமக்கல் மாவட்டம் நாரைக்கிணறு, மத்ரூட், கார்கூடல்பட்டி உள்ளிட்ட பஞ்சாயத்து கிராமங்களுக்கு உட்பட்ட சுமார் 3,600 ஏக்கர் நிலப்பரப்பு, 1954-ஆம் ஆண்டிலேயே காப்பு வனமாக (Reserved Forest) அறிவிக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டது.
அதேசமயம், அப்பகுதியில் உள்ள 2,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக (3 தலைமுறைகளாக) அங்கு வசித்து, பாக்கு, வாழை, நெல், கரும்பு போன்ற பயிர்களைச் சாகுபடி செய்து வருகின்றனர்.
சமீபகாலமாக முள்ளுக்குறிச்சி வனத்துறையினர், நிலம் காப்பு வனத்தின் கீழ் வருவதைச் சுட்டிக்காட்டி அப்பகுதியில் ஆழ்துளைக் கிணறு (Borewell) அமைக்கவும், சாலைகள் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் தடை விதித்தனர்.
கடும் வறட்சி காலத்தில் பயிர்களைக் காப்பாற்ற ஆழ்துளைக் கிணறு அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதால் பயிர்கள் கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. மேலும் பட்டா இல்லாததால் நிலத்தை இழந்து விடுவோமோ என்ற அச்சமும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, நாரைக்கிணறு பகுதி கனிமவளங்கள் நிறைந்த பகுதி ஆகும். இப்பகுதியில் மேக்னசைட் (Magnesite), டியூனைட் (Dunite) மற்றும் சோப்ஸ்டோன் (Soapstone) போன்ற தொழிற்சாலைகளுக்குத் தேவையான உயர் மதிப்புள்ள கனிமப் படிவுகள் கணிசமாக உள்ளன.
இவற்றை பெரும் தொழில் நிறுவனங்கள் அகழ்ந்தெடுப்பதற்கு வசதியாக, காப்புக்காடு என்ற முகாந்திரத்தில் அப்பகுதி விவசாய மக்களை விரட்ட அரசு முயன்று வருகிறதோ என்ற அச்சத்தையும் மக்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.
மக்கள் ஆழ்துளைக் கிணறு தோண்டத் தடை உத்தரவு போடும் அதே சமயம், “சன் மினரல்ஸ்” (M/s. Sun Minerals and Chemicals) போன்ற தனியார் நிறுவனங்கள், நாரைக்கிணறு கிராமத்தில் உள்ள அளவீடு செய்யப்படாத நிலப்பரப்பு மற்றும் வனப் புறம்போக்கு நிலங்களில் கனிமங்களை வெட்டி எடுக்கப் பல பத்தாண்டுகளாகக் குத்தகை உரிமங்களைப் பெற்றுச் செயல்பட்டு வந்துள்ளன என செய்திகள் தெரிவிக்கின்றன.
அரசின் இந்த செயல்பாடுகள் நமக்கு ஆழமான சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.
எனவே, மக்களின் கோரிக்கைகளான
- பல தலைமுறைகளாகச் சாகுபடி செய்து வரும் நிலங்களுக்கு அனுபவப் பட்டா மற்றும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.
- 1954-ஆம் ஆண்டின் காப்பு வன அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
- குடிநீர் மற்றும் விவசாயத் தேவைக்காக ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க வனத்துறை முட்டுக்கட்டை போடக் கூடாது.
ஆகிய கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்.
![]()
இவண்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





