நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காக்காவேரி ஊராட்சி மக்கள் “எங்கள் ஊரில், சாதி என்றால் என்னவென்றே தெரியாத இரண்டு வயது குழந்தைகளைக் கூட சாதியைக் காரணம் காட்டி, அரசு அங்கன்வாடிகளில் பிரித்து வைக்கின்றனர்” என்று பி.பி.சி தமிழிடம் கூறியுள்ளனர்.
அதனடிப்படையில் காக்காவேரி ஊராட்சிக்கு உட்பட்ட புதுக்காலனி ஊரில் பி.பி.சி தமிழ் “பிரச்சனைகளைப் பேசுவோம்” என்ற தலைப்பில் சமீபத்தில் கள ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதில், புதுக்காலனி பகுதியில் சாதி அடிப்படையில் பிஞ்சுக் குழந்தைகளை அரசு அங்கன்வாடிகளில் பிரித்து வைக்கின்ற கொடூரம் நடந்தேறியுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் காக்காவேரி ஊராட்சியில் காக்காவேரி, வெங்காயபாளையம், பச்சப்பாளி, பூசாரிப்பாளையம் என பல சிற்றூர்கள் உள்ளன. அவற்றில் காக்காவேரியின் தென் பகுதியில் 300 குடும்பங்கள் உள்ளன. புதுக்காலனி, புதுக்காலனி வளைவு ஆகிய இரண்டு பகுதிகளில் 400 பட்டியல் பிரிவைச் சேர்ந்த குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
புதுக்காலனி உள்ளே நுழையும் இடத்தில் ஒரு சமுதாயக் கூடம் உள்ளது. அதன் அருகில் சுமார் பத்து அடி இடைவெளியில் பட்டியல் சமூக மக்களுக்கு என்று தனியொரு அங்கன்வாடி மையமும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கென தனி அங்கன்வாடி மையமும் அமைந்துள்ளன. இந்த இரண்டு அங்கன்வாடி மையங்களுக்கும் தனித்தனி சமையலறை, கழிப்பறை உள்ளது. இரண்டு அங்கன்வாடி மையங்களுக்கும் தனித்தனியாக அமைப்பாளர்கள், சமையலர்களும் உள்ளனர். அரசு நடத்தும் அங்கன்வாடியில் இவ்வளவு அப்பட்டமாக தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது.
அங்கன்வாடி மையத்தின் அருகே வசிக்கும் பாக்கியம் கூறுகையில் “ஒரு அங்கன்வாடி மையத்தில் பட்டியல் சமூகக் குழந்தைகளும் இன்னொரு அங்கன்வாடி மையத்தில் வடக்கு பக்க தெருக்களைச் சேர்ந்து பிற சமூகக் குழந்தைகளும் சாப்பிட்டு வருகின்றனர். பட்டியல் சமூக குழந்தைகளுக்கு அதே சாதியைச் சேர்ந்து சமையலரும், வேறு சமூகக் குழந்தைகள் படிக்கும் சத்துணவு மையத்திற்கு 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேலம் பாளையத்திலிருந்து பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சமைக்க வருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
படிக்க: கோவை: சின்னதுரையை நினைவூட்டும் மாணவி சத்யா மீதான சாதிவெறி தாக்குதல்! | இ-போஸ்டர்
புதுக்காலனியை சேர்ந்த வங்கி ஊழியரான பூபதி பி.பி.சி தமிழிடம் பேசுகையில், “நானும் இந்த அங்கன்வாடி மையத்தில் தான் படித்தேன். நான் படித்த காலத்திலேயே இந்த பாகுபாடு மாணவர்களுக்கு வெளிப்படையாகவே தெரியும். இப்போதும் பழைய நிலையே தொடர்கிறது. புதுக்காலனி பகுதியிலுள்ள பட்டியல் சமூக மக்கள் கல்வி, பொருளாதாரத்தில் முன்னேறிய நிலையில் தான் உள்ளனர். வேறு எந்த விவகாரத்திலும், எங்கள் ஊரில் சமூகப் பாகுபாடு என்பது இல்லை. சுற்றுப்பகுதியிலுள்ள பிற சமூக மக்களுமே நன்றாகப் பழகி வருகிறோம்.
“ஆனாலும், ஒரே இடத்தில் இரண்டு அங்கன்வாடிகள் வேறுவேறு சமூகங்களுக்கு அமைந்துள்ளது வேதனையாக உள்ளது. இதைப்பற்றி இங்குள்ள மக்களும், அரசு அலுவலர்களும் கண்டுகொள்ளவில்லை” என்று கூறியவர் “இரண்டு அங்கன்வாடிகளுக்கும் குறைந்தபட்சம் சமையலாவது ஒரே இடத்தில் செய்ய வேண்டும்” என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து நாமக்கல் மாவட்ட அங்கன்வாடி மையங்களின் திட்ட அலுவலர் ரூபி கூறுகையில், “மக்கள் தொகை அடிப்படையில், 800 பேருக்கு மேலே, 1,600 பேர் வரை வாழும் ஒவ்வொரு இடத்துக்கும் தனியே அங்கன்வாடி மையங்களை அரசு அமைத்துள்ளது. இந்த அடிப்படையில் ஒரே இடத்தில் இரண்டு மையங்கள் இருக்கலாம். நான் இங்கே வந்து பத்து மாதங்கள் தான் ஆகிறது; இன்னும் புதுக்காலனி அங்கன்வாடிக்குப் போகவில்லை. இதைப் பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்” என்று அலட்சியமாகப் பதிலளித்துள்ளார்.
புதுக்காலனியில் நிலவுகின்ற சாதி-தீண்டாமையை முற்றாக மறுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி “சாதி அடிப்படையிலான எந்தப் பிரிவும் இல்லை ராசிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட காக்காவேரி பஞ்சாயத்தில் 7 குழந்தைகள் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் மக்கள் தொகை அடிப்படையில் காக்காவேரி புதுகாலனி கிழக்கு மையம் 1979-ஆம் ஆண்டு முதலும், காக்காவேரி புதுகாலனி மேற்கு மையம் 1982-ஆம் ஆண்டு முதலும் செயல்பட்டு வருகின்றன.
மேலும் மக்கள் தொகை அடிப்படையில் இரண்டு மையங்களாகக் குழந்தைகளின் வளர்ச்சி கண்காணிப்பு மற்றும் முன் பருவ கல்வி, கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் நலன், வீடுகள் பார்வை போன்ற பணிகளுக்காக 1982 முதலே பிரிக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன. இதில் சாதி அடிப்படையில் எந்த பிரிவும் இல்லை அரசு புறம்போக்கு நிலம் உள்ள பகுதியிலேயே அரசு கட்டடம் கட்ட இயலுமாதலால் இரண்டு மையங்களும் அருகருகே செயல்பட்டு வருகின்றன“ என்று எந்தவித பொறுப்புணர்ச்சியுமின்றி அதிகார வர்க்கத்தைப் பாதுகாக்கும் விதமாகவும், குழந்தைகள் மீது நடத்தப்பட்டு வருகின்ற சாதி தீண்டாமைக் கொடூரத்தை நியாயப்படுத்தியும் பேசியுள்ளார்.
படிக்க: கோவை: மாணவி மீதான தீண்டாமை! பள்ளி நிர்வாகத்தைப் பாதுகாக்கத் துடிக்கும் அரசு!
ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சருமான மா.மதிவேந்தன், “இப்படி ஒரு விவகாரம் இருப்பது நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. சில துறைகளில் இதுபோன்ற பழைய நடைமுறைகள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன”, என்று அலட்சியமாகப் பதிலளித்துள்ளார்.
மேலும் பி.பி.சி தமிழ் நடத்திய கள ஆய்வுக்கு பிறகுதான் இது குறித்து அம்மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி விரைவில் சரி செய்வதாக அமைச்சர் கூறுகிறார். ஆனால் ஐந்து ஆண்டுகால ஆட்சியில் எதையும் செய்யாத அமைச்சர் தற்போது மட்டும் என்ன செய்து விடுவார் என்ற கேள்விதான் இயல்பாக எழுகிறது.
இவ்வளவு ஆண்டுகாலமாக இப்பகுதி அங்கன்வாடிகளில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளதானது தி.மு.க அரசின் ‘சமூக நீதி ஆட்சி’ குறித்து கேள்விகளை எழுப்புகிறது.
பிஞ்சுகளின் மனதில் சாதி என்னும் நஞ்சை விதைக்கின்ற நபர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். உடனடியாக அனைத்து சமூக குழந்தைகளும் ஒரே அங்கன்வாடி மையத்தில் சாப்பிடுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். இச்சம்பவத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் செயல்படுகின்ற அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் இதனைப் போன்ற சாதியத் தீண்டாமைக் கொடூரங்கள் அரங்கேறுகின்றனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இதனை அனைத்து ஜனநாயக சக்திகளும் வலியுறுத்துவதுடன் சாதிப் பாகுபாட்டிற்கு எதிரான போராட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும்.
![]()
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





