உ.பி.: பொதுக் குழாயில் நீர் அருந்தியதற்காக தலித் சிறுவன் மீது கொலைவெறித் தாக்குதல்

சிறுவன் குழாயில் தண்ணீர் குடித்ததையும், அருகிலிருந்த வாளியைத் தொட்டதையும் கண்டு சாதிவெறித் தலைக்கேறிய சஞ்சய் ராஜ்புத், அவனது சகோதரன் தீபக் மற்றும் கூட்டாளிகளான சாகர் குமார், பாட்டியா குமார் ஆகியோருடன் இணைந்து, சிறுவனின் ஆடைகளைக் களைந்து கொடூரமாகத் தாக்கியுள்ளான்.

0

பா.ஜ.க ஆட்சி செய்கின்ற உத்தரப்பிரதேசத்தில் கான்பூர் மாவட்டத்தில் ஜக்ரா – சாம்பர்பூர் எனும் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் குழாயில் தண்ணீர் குடித்ததற்காக, ஆதிக்கச் சாதிவெறியர்களால் தலித் சிறுவனும் அவரது தந்தையும் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே 2-ஆம் தேதி அன்று 16 வயது சிறுவன் விவசாயத் தொழிலாளியான தனது அப்பாவுடன் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அவருக்குத் தாகம் ஏற்படவே, அருகில் உள்ள சஞ்சய் ராஜ்புத் என்பவனது வீட்டின் முன்னால் இருந்த பொதுக் கைக்குழாயில் தண்ணீர் குடிக்கச் சென்றுள்ளார்.

சிறுவன் குழாயில் தண்ணீர் குடித்ததையும், அருகிலிருந்த வாளியைத் தொட்டதையும் கண்டு சாதிவெறித் தலைக்கேறிய சஞ்சய் ராஜ்புத், அவனது சகோதரன் தீபக் மற்றும் கூட்டாளிகளான சாகர் குமார், பாட்டியா குமார் ஆகியோருடன் இணைந்து, சிறுவனின் ஆடைகளைக் களைந்து கொடூரமாகத் தாக்கியுள்ளான். தனது செருப்பில் எச்சிலைத் துப்பி, அதை நக்குமாறு சிறுவனைக் கட்டாயப்படுத்துவது, சிறுவனின் செருப்பிற்குள் தண்ணீரை ஊற்றி அதனைக் குடிக்க வைத்தது போன்ற கற்பனை செய்து பார்க்க முடியாத மிகக் கொடூரமான வன்கொடுமைகளில் ஆதிக்கச் சாதிவெறியன் சஞ்சய் ஈடுபட்டுள்ளான்.

தன்னுடைய மகன் தாக்கப்படுவதைத் தடுக்க வந்த சிறுவனின் அப்பாவையும் அந்த ஆதிக்கச் சாதிவெறி கும்பல் அடித்து கால்களால் உதைத்து கொடூரமான முறையில் தாக்கியுள்ளது. கிட்டத்தட்ட அரை மணி நேரம் வரை இருவரையும் கொலைவெறியோடு தாக்கிய அக்கும்பல், ஊர் மக்கள் ஒன்று கூடிய பிறகே தாக்குதலை நிறுத்தியுள்ளது.

பின்னர் சிறுவன் குழாயைத் தொட்டதினால் ‘தீட்டாகிவிட்டது’ என்று கூறி, குழாயைச் சுற்றியுள்ள பகுதிகளில் கங்கை நீரைத் தெளித்து அப்பட்டமான சாதிய தீண்டாமையில் ஈடுபட்டுள்ளது.

இத்தாக்குதலில் சிறுவனின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதுடன், உடலிலும் பல காயங்கள் ஏற்பட்டுள்ளன. சிறுவனின் தந்தைக்கு விலா எலும்பு முறிந்து உடலில் பல காயங்கள் ஏற்பட்டுள்ளன. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

மூன்று நாட்கள் கழித்து வீடு திரும்பிய இருவரும், அச்சத்தில் போலீசுக்கு புகார் அளிக்காமல் இருந்துள்ளனர். பிறகு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஆதிக்கச் சாதிவெறியர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில், மே 16 அன்று போலீசு நான்கு ஆதிக்கச் சாதி வெறியர்கள் மீது பட்டியல்-பழங்குடியினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசு அலட்சியமாகப் பதிலளித்துள்ளது. இதன் பின்னரே இக்கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

​குறிப்பாக, தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி, தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் பா.ஜ.க. ஆட்சி செய்கின்ற உத்தரப்பிரதேசம் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 2023-ஆம் ஆண்டில் 15,130 வழக்குகளும், 2024-ஆம் ஆண்டில் 14,642 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

பாசிச கும்பலால் இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாக மாற்றப்பட்டுள்ள உத்தரப்பிரதேசத்தில் இத்தகைய சாதிய வன்கொடுமைகள் தலைவிரித்தாடுகின்றன. அதேசமயம், ஆதிக்கச் சாதிவெறியர்களால் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்ற தலித் மக்கள் போலீசில் புகார் அளிப்பதற்கே அச்சப்படுகின்ற சூழல் இங்கு இயல்புநிலையாக்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலம், தலித் மக்களை இரண்டாம் தர குடிமக்களாக்கி ஒடுக்கி வருகிறது பாசிச பா.ஜ.க. கும்பல்.

எனவே, மக்களிடையே சாதிய ஏற்றத்தாழ்வு நஞ்சை விதைக்கின்ற பார்ப்பனியம் வேரறுக்கப்பட வேண்டும். அதனைக் கொண்டு சாதிய வன்கொடுமைகளைத் தூண்டுகின்ற ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பலைத் தடை செய்ய வேண்டும். இதன் மூலமே தலித் மக்களுக்கு பாதுகாப்பையும் உரிமைகளையும் அளிக்கின்ற ஜனநாயகமான சமூகத்தை நோக்கி முன்னேற முடியும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க