பா.ஜ.க ஆட்சி செய்கின்ற உத்தரப்பிரதேசத்தின் லலித்பூர் மாவட்டத்தில் மது அருந்திக் கொண்டிருந்த போது கால்களை மசாஜ் செய்ய மறுத்ததற்காக தலித் இளைஞர் ஆதிக்க சாதிவெறியர்களால் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது.
ஜூன் 13 ஆம் தேதி அன்று தலித் இளைஞரான ராஜ்குமார் என்ற சன்னு சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள சம்யக் ராஜ்நாயக் என்பவரின் வீட்டில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். அங்கு கஜேந்திர நர்வாரியா (37), கெளரவ் ரைக்வார் (25) ஆகிய இரண்டு சக ஊழியர்கள் இருந்துள்ளனர்.
அப்போது மது போதையிலிருந்த மூன்று பேர் ராஜ்குமாரை தங்களது கால்களை மசாஜ் செய்ய வற்புறுத்தியுள்ளனர். அதனை ராஜ்குமார் மறுக்கவே சாதிவெறி தலைக்கேறி மூன்று பேரும் பெல்ட் மற்றும் இரும்புக் கம்பியால் ராஜ்குமாரைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இக்கொடூரத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே ராஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இக்கொலையை மறைத்து விபத்தாகச் சித்தரிப்பதற்காக அவரின் உடலை அருகில் உள்ள சாலையில் வீசியுள்ளனர். ஜூன் 14 ஆம் தேதி அன்று காலை குருநானக் தர்மசாலாவுக்கு அருகில் உள்ள வர்ணி ஜெயின் கல்லூரிக்குப் பின்புறம் உள்ள சாலையில் ஒரு நபர் சுயநினைவின்றி கிடப்பதாக கோட்வாலி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
ராஜ்குமார் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸ் மூன்று பேரின் மீதும் கொலை வழக்கு மற்றும் எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்துள்ளது. விசாரணையில் மூன்று பேரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர்.
படிக்க: அரசு பள்ளிகளில் இந்து மதச் சடங்குகள்: கல்வியைக் காவிமயமாக்கும் சத்தீஸ்கர் பா.ஜ.க. அரசு!
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலால் இந்து ராஷ்டிரத்தின் சோதனைச்சாலையாக மாற்றப்பட்டுள்ள உத்தரப் பிரதேசத்தில் திருமண ஊர்வலங்களின் போது தலித் இளைஞர்கள் குதிரை மீது அமர்ந்து சென்றால் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, பொதுக் குழாயில் தண்ணீர் எடுப்பதைத் தடுப்பது, ஆதிக்க சாதிவெறியர்கள் சொல்கின்ற வேலையைச் செய்ய மறுத்தால் அடித்தே படுகொலை செய்வது என்று தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன.
குறிப்பாக, தலித் இளைஞர்கள் ஆதிக்க சாதிவெறியர்களால் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் இயல்பு நிலையாக்கப்பட்டு வருகிறது. அதாவது தலித் மக்கள் வாழத் தகுதியற்ற இடமாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
எனவே, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலை வீழ்த்துவதன் மூலமே தலித் மக்கள் மீதான தாக்குதலைத் தடுத்து, அனைத்து மக்களுக்குமான சமத்துவ சமூகம் அமைப்பதை நோக்கி முன்னேற முடியும்.
![]()
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











