மாநில உரிமைப் பறிப்பு எதிர்ப்பு மாநாடு | தமிழக மக்கள் முன்னணி

நாள்: 09.08.2026 | இடம்: நகர்மன்றம், புதுக்கோட்டை | வினவு யூடியூப் பக்கத்தில் 10.08.2026 அன்று சிறப்பு நேரலை செய்யப்படுகிறது

மாநில உரிமைப் பறிப்பு எதிர்ப்பு மாநாடு

தமிழ்நாட்டு உரிமைப் பறிக்கப்படுதலுக்கு எதிராக அணிதிரள்வோம்..!

புதுக்கோட்டையில்..

ஆகத்து 9/2026 ஞாயிற்றுக்கிழமை
பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை..

அரங்கம்: நகர்மன்றம், புதுக்கோட்டை

தமிழக மக்கள் முன்னணி ஒருங்கிணைப்பில்,

தேர்தல் அரசியலில் பங்கேற்காத, மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரியக் கோட்பாடுகளை ஏற்கிற, தேசியஇன உரிமைகளை முதன்மையாக எண்ணி உயர்த்திப் பிடிக்கிற, இயக்கங்கள் அனைத்தும் பங்கேற்கின்றன..

(வினவு யூடியூப் பக்கத்தில் 10.08.2026 அன்று சிறப்பு நேரலை செய்யப்படுகிறது)

  • மாநிலங்கள் என்பவையே இருக்கக் கூடாது என்பதே ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அடிப்படையான கொள்கை. அதற்கு ஏற்பவே இந்தியப் பாசிச பார்ப்பனிய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.. மாநிலங்களின் அடையாளங்களையெல்லாம் அது இல்லாமல் செய்து வருகிறது.
  • மாநிலத்தின் அனைத்து வரி வருவாய்களையும் வழிப்பறிக் கொள்ளைக்காரனைப் போல அடியோடு பறித்துக் கொள்ளையடிக்கிறது. மேலும் மாநிலங்களிலிருந்து பெறும் மொத்த வருவாயையும் பதுக்கிவைத்துக். கொண்டு பிச்சை போடுவது போல அற்பத் தொகையைக் கிள்ளிக் கொடுக்கிறது. சுங்கச்சாவடிகள் மூலம் நாள்தோறும் கோடிக்கணக்கான ரூபாய்களை அள்ளிச் செல்கிறது.
  • மாநிலக்கட்சிகளைத் தன் அதிகாரத்தாலும் சூழ்ச்சியாலும் விழுங்கி அல்லது வீழ்த்தி வருகிறது.
  • மாநிலங்களின் வரலாற்றுச் சிறப்புகள் அனைத்தையும் அழித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் தொன்மையைப் பறை சாற்றும் கீழடி உள்ளிட்ட அறிவியல் வழியிலான அகழாய்வு அறிக்கைகளை ஏற்க மறுக்கிறது.
  • மாநிலங்கள் எவையும் தனக்கென ஓர் இனமாகத் தங்கள் இனத்தை அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடாது; தனி ஒரு கொடியைப் பெற்றுவிடக் கூடாது என்பதில் கருத்தாக இருக்கிறது.
  • கல்விமுறை தனியாக இருக்கக் கூடாது எனத் திட்டமிட்டுச் செயல்படுகிறது. இந்தியத்துணைக் கண்டம் முழுவதும் ஒரே முறையிலான நீட் தேர்வு முறையைத் தொடர்ந்து திணிக்கிறது புதிய கல்விக் கொள்கை மூலம் ஒரே வகையான பாடத்திட்டத்தைத் திணிக்கிறது.
  • மாநிலங்களில் இயங்கும் பல்கலைக்கழகங்கள் எங்களுக்கே கட்டுப்பட்டவை.. என்று துணைவேந்தர்களை அமர்த்தி, நிர்வாகங்களில் மூக்கை நுழைக்கிறது இந்திய அரசு. மாநிலங்களின் கல்வி இறையாண்மையை முற்றிலும் பறித்து, இந்திய அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டதாக ஆக்குகிறது.
  • மாநிலங்களில் உள்ள சிறு முதலீடுகள் செய்யும் தொழில் வளர்ச்சியைச் சிதைத்து நசுக்கிப் பன்னாட்டின் பெரும் தொழில்களைக் கொண்டு வருவதுடன் தனியார்வயம், தாராளவயம், உலகவயமாக்கத்தை வளர்க்கிறது இந்திய அரசு.

  • தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில்..
    • தமிழ் மொழியை அரசு மொழியாக, அலுவல் மொழியாக, நீதி மொழியாக, வழிபாட்டு மொழியாக முழுமையாகக் கொண்டு வர முடியாத வகையில் சட்ட வழியிலான தடைகளை உண்டாக்குகிறது.
    • தமிழ்நாட்டிற்குள் இயங்குகிற இந்திய அரசு அலுவலகங்கள் தமிழை மதிப்பதே இல்லை; தமிழில் அலுவல் முறைகளை ஏற்பதில்லை;
    • தமிழ்நாட்டில் இருக்கும் பல பெரிய கோயில்களின் அதிகாரங்களையும் அதில் பணியாற்றுகிற பூசகர்களின் நடைமுறைகளையும் இந்திய அரசும் இந்து இயக்கங்களுமே கட்டுப்படுத்துகின்றன..
  • தமிழர்கள் தங்களின் இனத்தைத் தமிழர் என்று பதிந்து கொள்ள முடிவதில்லை. தமிழ்நாட்டின் கல்வி உரிமை தமிழ்நாட்டு அரசிடம் இல்லை.
  • தமிழ்நாட்டின் கடல் பரப்பு அதிகாரத்தை இந்திய அரசு பறித்துக் கொண்டு, கடல் பரப்பின் அடிமைகளாகத் தமிழக மீனவர்களை வைத்திருக்கிறது இந்திய அரசு. ஆழ் கடலில் மீன் பிடித்ததாகச் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள் தமிழக மீனவர்கள்.
  • இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) இந்தியக் காவல் பணி (ஐபிஎஸ்) போன்ற நிர்வாகப் பணியாளர்கள் அனைவரும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாமல், இந்திய அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.
  • தமிழ்நாட்டு நெல், கரும்பு உள்ளிட்டவற்றிற்கு விலையைத் தமிழ்நாட்டின் அரசு உறுதி செய்ய முடிவதில்லை.
  • தமிழ்நாட்டின் நெய்வேலி நிலக்கரி, சேலம் இரும்பு, நரிமணம் கன்னெய் (பெட்ரோல்) தமிழ்நாட்டுக்கு இல்லை. அதற்கான இழப்பீடுகூடக் கிடையாது.
  • காவிரி கடைமடை மாவட்டங்களை எப்படியும் ஏமாற்றி, அடக்கி ஐட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றிட அந்த மாவட்டங்கள் அளவில் பன்னாட்டு நிறுவனத்திற்குத் துணை செய்து, காவிரி மண்டலத்தையே பாழடிக்கிறது இந்திய அரசு.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டு அரசைத் தில்லிக் கங்காணியான ஆளுநர் அரட்டுவதும், அடக்குவதுமாகத் தமிழ்நாட்டரசை அடிமை நிலையில் வைத்திருக்கிறது.
  • மாநிலங்களுக்கு இடைப்பட்ட நீர்ச்சிக்கல்களையும் பிற சிக்கல்களையும் தீர்ப்பதில் குரங்கு அப்பம் பிரித்த கதையாகவே இந்திய அரசு செயல்படுகிறது.
  • தமிழ்நாட்டின் சிறுதொழில் வளர்ச்சி வணிக வளர்ச்சியை நசுக்குவதோடு ஏற்றுமதி இறக்குமதிகளைத் தேவைக்கேற்ப அமைத்துக் கொள்ளும் உரிமை தமிழக அரசுக்கு இருந்திடாதபடி செய்கிறது.
  • மாநிலங்களின் தேர்தல்களை அந்தந்த மாநிலங்களே நடத்திக் கொள்ளுகிற அதிகாரம் தமிழ்நாட்டிடம் இல்லை. அதை இந்திய அரசு நடத்தித் தன் அதிகாரத்தைச் சூழ்ச்சியாக நிறுவிக் கொள்கிறது.
  • நீதித்துறை வழக்குகளில் மாநில உயர்நீதிமன்றமே உச்ச அதிகாரம் படைத்ததாக இருக்க வேண்டும். ஆங்கிலேயன் ஆண்டபோது இலண்டனில் பிரிவி கவுன்சில் இருந்தது போல், தில்லி உச்ச நீதிமன்றம் மாநிலங்களில் தலையிடக்கூடாது.
  • தமிழ்நாட்டு அரசின் ஒப்புதல் இல்லாமல் இந்திய அரசு எந்தத் தலையீடுகளையும், தொழிலகங்களையும் தமிழ்நாட்டில் நிறுவவோ தொடங்கவோ கூடாது.
  • அவ்வகையில் இந்திய அரசின் அதிகாரங்கள் எவையும் இல்லாத மாநிலங்களே உரிமை பெற்ற மாநிலங்களாக இருக்க முடியும்.. உலகில் பல நாடுகளிலுள்ள மாநிலங்கள் அப்படித்தான் உரிமை பெற்ற கட்டமைப்பைக் கொண்டுள்ளன.
  • இந்திய அரசு அதிகாரம் என்பது பிரித்தானிய அரசு அடிமைப்படுத்தியது போலவே மாநிலங்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது.
  • மாநிலங்கள் முழு உரிமைகள் பெறும் நிலையில் மாநிலங்களின் ஒப்புதலோடான புதிய ஒன்றிய அரசு உருவாக்கப் பெற வேண்டும். அதுவே உண்மையான ஒன்றிய அரசாக இருக்க முடியும்.
  • மேலும் ஆட்சிகளின் இறுதி இலக்காகச் சமத்துவமும். சமூகநீதியும் கோலோச்சும் ஒப்புரவுச் சமூகமாக – சோசலிசச் சமூகமாக அவை மலரவேண்டும்.
  • அத்தகைய புதிய ஒன்றிய அரசு அமைப்பை உருவாக்கும் நோக்கில் மாநிலங்கள் அனைத்தும் தங்கள் மீதான உரிமைப் பறிப்புகளைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும்.
  • அத்தகைய நிலையில் தமிழ்நாட்டின் உரிமைப் பறிப்புகளை எதிர்த்தே இந்த மாநாடு!
  • மாற்றத்தை நோக்கிய இம்மாநாட்டில் பங்கேற்க அனைவரையும் அறைகூவி அழைக்கிறது தமிழக மக்கள் முன்னணி!

தமிழக மக்கள் முன்னணி
8608068002 | 9677481149 | 9698016010

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க