த.வெ.க. அரசின் அலட்சியத்தால் பறிபோன 151 உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்கள்

“வழக்கு விசாரணையின் மிக முக்கியக் கட்டத்தில், தமிழ்நாடு அரசு தரப்பில் நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை” என்ற அதிர்ச்சியளிக்கக் கூடிய விசயத்தை தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்கம் அம்பலப்படுத்தியுள்ளது.

0

“தமிழ்நாட்டில் நிரப்பப்படாத 151 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு இடங்களைச் சுகாதாரச் சேவைகள் பொது இயக்குநரகத்திடம் ஒப்படைத்து, அகில இந்திய தரவரிசை அடிப்படையில் நிரப்ப வேண்டும்” என தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவு மாநில உரிமைகளைப் பற்றி அக்கறையற்ற த.வெ.க. விஜய் அரசின் போக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

2025 ஆம் ஆண்டு நீட் முதுகலைத் தேர்வு அடிப்படையில் மருத்துவ முனைவர் பட்டம் (MD), முதுகலை அறுவைச் சிகிச்சைப் பட்டம் (MS) ஆகிய உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கு தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 430 இடங்கள் உள்ளன. இவற்றில் தமிழ்நாட்டின் உள் இட ஒதுக்கீட்டு முறைப்படி 50 சதவீத இடங்கள் நிரப்பப்படுவது வழக்கம். அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிக் கொண்டே நீட் முதுகலைத் தேர்வில் தேர்ச்சி பெறும் மருத்துவர்களுக்கு இந்த ஒதுக்கீடு மூலம் முன்னுரிமை வழங்கப்படுகிறது. படிப்பை முடித்த பிறகு, குறிப்பிட்ட ஆண்டுகள் அந்த மருத்துவர்கள் அரசுப் பணியில் தொடர வேண்டும் என்பது இதற்கான நிபந்தனை.

அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்களை உருவாக்கி, அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்துவதே இதன் நோக்கம். அந்த வகையில் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 215 இடங்களில் முதல் சுற்றில் 64 இடங்கள் நிரப்பப்பட்டன; 151 இடங்கள் காலியாக இருந்தன. தேசிய மருத்துவக் கலந்தாய்வுக் குழு அந்த 151 இடங்களை அகில இந்தியப் பட்டியலுக்கு மாற்றக் கோரி தமிழ்நாடு அரசுக்குக் கடிதம் எழுதியது. இதையடுத்து, இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

இந்த வழக்கில்தான் தமிழ்நாட்டுக்கு எதிரான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்கம் இவ்வழக்கில் த.வெ.க. அரசு செயல்பட்ட விதத்தைக் குற்றம் சாட்டியுள்ளது. “வழக்கு விசாரணையின் மிக முக்கியக் கட்டத்தில், தமிழ்நாடு அரசு தரப்பில் நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை” என்ற அதிர்ச்சியளிக்கக் கூடிய விசயத்தை அச்சங்கத்தினர் அம்பலப்படுத்தியுள்ளனர்.

மேலும், அரசுப் பணி மருத்துவர்களுக்கான 50 சதவீத தனி இட ஒதுக்கீடு உரிமையைப் பாதுகாக்கத் தவறியதுடன், எதிர்காலத்தில் அரசு மருத்துவமனைகளுக்குக் கிடைக்கவிருந்த 151 உயர் சிறப்பு மருத்துவர்களின் சேவையை தமிழ்நாடு இழந்துள்ளதாக அச்சங்கம் கலவை தெரிவித்துள்ளது.

தற்போதைய தீர்ப்பானது, தமிழ்நாட்டின் பொது சுகாதாரக் கட்டமைப்புக்கும், சமூக நீதிக்கும் நீண்ட கால அடிப்படையில் பேரிடராக மாறும் எனவும் தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. இவை தவிர, அகில இந்திய ஒதுக்கீட்டுக்குச் செல்லும்போது இந்த இடங்கள் வெளிமாநில மாணவர்களுக்கே கிடைக்க வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, அரசு மருத்துவர்கள் உயர் சிறப்புப் படிப்புகளை முடித்துவிட்டு மீண்டும் கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் சேவை செய்வர். ஆனால், தற்போதைய தீர்ப்பின்படி அவர்களின் எண்ணிக்கை குறையும்போது கிராமப்புற ஏழை மக்களுக்கு உரிய மருத்துவம் கிடைப்பதிலும் தடை ஏற்படும் அபாயம் உள்ளது.


படிக்க: த.வெ.க. அரசின் இரண்டு மாத ஆட்சி: திரைகிழியும் கவர்ச்சி நாயகனின் கார்ப்பரேட் முகம்


தமிழ்நாட்டை ஆளும் த.வெ.க. அரசின் முதல்வர் விஜய் தான் மக்களுக்காகத்தான் இருப்பதாக வாய்ச்சவடால் பேசுகிறார். ஆனால் அவரின் அரசு நடைமுறைப்படுத்தும் பல்வேறு திட்டங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகத்தான் இருக்கிறது. ஏற்கெனவே, சுமார் 8,000 புதிய தனியார் கிளினிக்குகள் / மருத்துவமனைகளுக்கு ஆன்லைன் ஒப்புதல் வழங்கியது தொடர்பாக, த.வெ.க. அரசுக்கு மக்கள் மத்தியில் கடும் கண்டங்கள் எழுந்தது. தற்போது மருத்துவ இடங்கள் தொடர்பான வழக்கில் அலட்சியமாகச் செயல்பட்டதன் மூலம் தமிழ்நாட்டின் உரிமையைப் பறிகொடுத்துள்ளது.

மருத்துவப் பணியிடங்கள் தொடர்பான வழக்கு, தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்குத் தள்ளப்பட்டது, திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு, மேகேதாட்டு அணை தொடர்பான பிரச்சினையில் செயல்பட்ட விதம் என தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பாகவும் மக்கள் நலனிலும் அக்கறையற்று, தான்தோன்றித்தனமாகச் செயல்பட்டு வரும் த.வெ.க. அரசின் மேற்கண்ட நடவடிக்கைகள் கடும் கண்டனத்துக்குரியவை.

த.வெ.க. விஜய் அரசின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் உழைக்கும் மக்களின் நலனைப் புறக்கணிப்பதாகவும், தமிழ்நாட்டின் நலனை பாசிச பி.ஜே.பி. கும்பலிடம் அடகு வைக்கும் திசைவழியில் செல்வதாகவுமே உள்ளது. எனவே, மாநில உரிமைகளைப் பறிக்கும் பாசிச பி.ஜே.பி. கும்பலின் தமிழர் விரோத செயல்பாடுகளுக்கு எதிராகவும், த.வெ.க. அரசின் துரோகத்தனத்தை தோலுரித்தும் மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டிய தேவையைக் கள நிலைமைகள் உணர்த்துகின்றன.


அய்யனார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க