07.08.2026

கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை தனியார்ப் பள்ளி மாணவி அனுபா தற்கொலை!
ஆபத்தை முன்னுணர்வோம்!

பத்திரிகைச் செய்தி

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஹோலி கிராஸ் பள்ளியில் படித்த 11 ஆம் வகுப்பு மாணவி அனுபா ஜூலை 28 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன் மாணவி அனுபா எழுதியதாக சமூக ஊடகங்களில் வெளியான கடிதத்தில் சில ஆசிரியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த அடிப்படையில் தொடர்புடையவர்கள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும், சிறப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்காத பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் சார்பில் கோரிக்கைகள் எழுந்துள்ளன. போலீசு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிகிறது.

தற்கொலைக்கு முன் மாணவி அனுபா எழுதிய கடிதம்

மாணவர் நலனைப் பாதுகாப்பது என்ற அடிப்படையில், ஒவ்வொரு பள்ளியிலும் எழுத்துப் பூர்வமான மாணவர் பாதுகாப்புக் கொள்கை இருக்க வேண்டும்; பள்ளி அளவில் மாணவர் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்க வேண்டும்; புகார்கள் வந்தால் உடனடியாக விசாரிக்கும் நடைமுறை இருக்க வேண்டும்; தகுதியான உளவியல் ஆலோசகர் நியமிக்க வேண்டும்; மன அழுத்தம், பதட்டம், தற்கொலை எண்ணங்கள் போன்றவற்றை முன்கூட்டியே கண்டறிய ஆலோசனை வழங்க வேண்டும்; மாணவர்களை உடல் அல்லது மனரீதியாகத் துன்புறுத்துவதற்குத் தடை, பெற்றோர் – ஆசிரியர் சந்திப்புகள் நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் அரசால் வகுக்கப்பட்டுள்ளன.

மேலும், கல்வி உரிமைச் சட்டம் (2009), குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் (2012) POCSO, தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார்ப் பள்ளிகள் (ஒழுங்குமுறை) சட்டம் மற்றும் விதிகள், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) வழிகாட்டுதல்கள், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கைகள் உள்ளிட்டவையும் இருக்கின்றன. ஆனால், இவ்வளவு சட்டங்கள், விதிமுறைகள் இருந்தும் தனியார்ப் பள்ளிகளைப் பொறுத்தவரை, அவை முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பதே உண்மை. அரசின் துணையோடு தாங்கள் வைத்ததுதான் சட்டம் என்பதே தனியார்ப் பள்ளிகளின் நிலைமை.

ஒருபக்கம் நடைமுறையில் இருக்கின்ற சட்ட விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும், உடனடித் தீர்வுகள் வேண்டும் என்பதற்காகக் குரல் எழுப்ப வேண்டிய அவசியம் உள்ளது.

அதேசமயம் கல்வியில் தனியார்மயத்தை அரசு அமல்படுத்திய பிறகுதான் இதுபோன்ற தற்கொலைகள் அதிகமாகியுள்ளன. பாடச்சுமை அதிகமாகியிருப்பது, மதிப்பெண்கள் மட்டுமே மாணவர்களை மதிப்பிடுவதற்கான அடையாளமாகியிருப்பது, பள்ளி நிர்வாகம் கொடுக்கும் அழுத்தங்கள், ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்படும் அழுத்தங்கள், அது மாணவர்கள் மீதான வன்முறையாக வெளிப்படுவது, சமூகத்திலிருந்து விலகி நிற்பதற்கான மனநிலை கட்டமைக்கப்படுவது என பல்வேறு அம்சங்கள் இதில் காரணியாக இருக்கின்றன. ஆக, இன்றைய கல்விச் சூழல் என்பதே மாணவர்களுக்கு அழுத்தத்தைத் திணிப்பதாகவும், எதிர்மறை எண்ணங்களை ஊட்டுவதாகவும் உள்ளது. ஆனால், ஆட்சிகள் யார் வந்தாலும் இதுகுறித்து பரிசீலிக்கத் தயாரில்லை என்பதே உண்மை.

எனவே, கல்வியில் தனியார்மயத்தை ஒழித்து, பொதுக் கல்வி முறை நிலைநாட்டுவதற்காக நாம் போராட வேண்டியுள்ளது. அத்தகைய நகர்வுகளில் இருந்துதான் மாணவர் தற்கொலைகளைத் தடுப்பதை உறுதி செய்ய முடியும்.

நடவடிக்கை எடுக்கக்கோரி ஜனநாயக சக்திகள் நடத்திய ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகமே! பள்ளிக் கல்வித் துறையே! போலீசு துறையே!

  • மாணவி அனுபா தற்கொலை தொடர்பாக சிறப்பு விசாரணையை நடத்து!
  • பள்ளி நிர்வாகம், ஆசிரியர்களை விசாரணை செய்!
  • தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளை ஆய்வு செய்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்!

உழைக்கும் மக்களே!

  • கல்வி என்பது அரசின் சேவை, மாணவர்களின் உரிமை என்பதை நிலை நிறுத்துவோம்!
  • கல்வி தனியார்மயத்திற்கு எதிராகப் போராடுவோம்!


இவண்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க