கோத்தகிரி அம்பாள் நகர் மக்களின்
சாலை வசதி கோரிய போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்!
ஆர்ப்பாட்டம்
நாள்: 09.08.2026, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 11.00 மணி
இடம்: கோத்தகிரி மார்க்கெட் ஜீப் நிலையம்
அன்பார்ந்த பொதுமக்களே!
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், கெங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட அவ்வூருக்கு அருகில் உள்ள மலை கிராமமான அம்பாள் நகரில் 50 குடும்பங்களுக்கும் மேல் ஆதிதிராவிட மற்றும் அருந்ததிய சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு அடிப்படை உரிமையான சாலை வசதி அமைத்துத் தருமாறு அரசிடம் கோரிக்கை வைத்து 40 வருடங்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.
இவர்களது குடியிருப்பிலிருந்து முதன்மை சாலைக்கு சாலை அமைப்பதற்குத் தடையாகச் சில தனியார் நில உரிமையாளர்களுக்குச் சொந்தமான நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் சாலை அமைக்கத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்தி சாலை அமைத்துத் தருமாறு இம்மக்கள் அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்துள்ளனர். மேலும், அரசு வழங்கிய குடும்ப அட்டை, ஆதார் அட்டை உட்பட அனைத்து ஆவணங்களையும் தபால் மூலம் ஆட்சியருக்கு அனுப்பும் போராட்டம் போன்ற பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும், இன்று வரை இவர்களது சாலை பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கவில்லை. இதனால் மக்கள் பல்வேறு துயரங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
மக்கள் எதிர்கொள்ளும் துயரங்கள்:
- வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை அவசர காலங்களில் தொட்டில் கட்டிச் சுமந்து செல்லும் அவல நிலை.
- பள்ளிக் குழந்தைகள் மழைக்காலங்களில் பள்ளிக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் நிலை.
- அவசர சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் போகும் ஆபத்தான நிலை.
- சாலை வசதி இல்லாததால் முதன்மை சாலையை அடைவதற்கு காட்டு வழியே நடைப்பயணமாக அதிக தூரம் சுற்றி வர வேண்டியுள்ளது போன்ற அவல நிலைகளை மக்கள் எதிர்கொள்கின்றனர்.

மக்களின் உரிமைகளைப் புறக்கணித்து வரும் அரசு:
மக்கள் மேற்கொண்ட தொடர் போராட்டங்களின் விளைவாக அம்பாள் நகர் உள்ளிட்ட சில ஊர்களுக்குச் சாலை அமைப்பதற்கு அரசு சார்பாக இரண்டு கோடி
ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அரசு இன்னமும் சாலை அமைக்காமல் போராடும் மக்களை வஞ்சித்து வருகிறது.
நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் உண்மையில், ஆதிதிராவிட மற்றும் அருந்ததிய மக்களுக்கு உரிமை கிடைக்கும் வகையில் இந்தப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவராமல், அரசு அதிகாரிகள் நில உரிமையாளர்களுக்குச் சாதகமாகவே நடந்து கொள்கின்றனர்.
சாலை அமைப்பதற்கான நிலத்தைக் கையகப்படுத்துவதற்குச் சட்டப்படியே இம்மக்களுக்கு உரிமைகள் உள்ளன. நில உரிமையாளர்களின் பட்டா நிலத்தினை ஆதி திராவிடர் நலத்துறை மூலம் கட்டாய நில எடுப்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்துவதன் வாயிலாக சாலை அமைத்துத் தர முடியும். இதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் இம்மக்களின் உரிமைகளைப் புறக்கணித்து வருகிறது அரசு.
மக்கள் அரசு அதிகாரிகளைத் தொடர்ந்து நேரில் சந்தித்துக் கேட்கும் பொழுதெல்லாம், அவர்களைப் பாருங்கள் இவர்களைப் பாருங்கள் என அலைக்கழித்து மக்களைத் தொடர்ச்சியாக இழுத்தடித்து வருகின்றனர்.
மக்களின் உரிமை கோரும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தாருங்கள்:
இந்நிலையை எதிர்கொண்டு மக்களின் உரிமைகளை நிலைநாட்ட, 40 வருடங்களுக்கும் மேலாக போராடி வரும் அம்பாள் நகர் மக்களுக்கு உடனடியாக சாலை அமைத்து தருமாறு தமிழ்நாடு அரசை, நீலகிரி மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்ற ஆகஸ்ட் 9-ஆம் தேதி காலை 11.00 மணி அளவில் கோத்தகிரி மார்க்கெட் ஜீப் நிலையம் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
ஆர்ப்பாட்டத்திற்கு கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதி மக்கள், பொதுமக்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் அனைவரும் வருகை தந்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழக அரசே! நீலகிரி மாவட்ட நிர்வாகமே!
- சாலை வசதி வேண்டி 40 வருடங்களுக்கும் மேலாகப் போராடும் அம்பாள் நகர் ஆதிதிராவிட மற்றும் அருந்ததிய மக்களை மேலும் வஞ்சிக்காதே!
- சாலை அமைக்க நிலம் தர மறுக்கும் நில உரிமையாளர்களிடம் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கட்டாய நில எடுப்பு சட்டத்தின் கீழ் நிலத்தைக் கையகப்படுத்தி உடனடியாக சாலை அமைத்துக் கொடு!
- கோத்தகிரி வட்டத்தில் சாலை அமைத்துத் தரக்கோரி போராடும் அனைத்துப் பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்று!
தங்களது அடிப்படை வசதிக்காகப் போராடும் மக்களின் உரிமைக்குத் துணை நிற்போம்!
மக்கள் அதிகாரக் கழகம்,
கோத்தகிரி கிளை,
கோவை மாவட்டம்.
9488902202
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





