கூடலூர் காட்டுயானை அச்சுறுத்தல்: 14 நாட்களாகத் தொடரும் உண்ணாநிலை போராட்டம்!

14 நாட்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் மக்களிடம், இதுவரை அரசு அதிகாரிகள் எந்தவித பேச்சுவார்த்தைக்கும் செல்லாமல் அலட்சியப்படுத்தி வருவதை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

நீலகிரி: கூடலூர் பகுதியில் காட்டுயானை அச்சுறுத்தலால்
14 நாட்களாகத் தொடரும் உண்ணாநிலை போராட்டம்!

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவில், தொடர்ந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தியும், மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் இருக்கும் காட்டு யானைகளை வனத்திற்குள் விரட்ட வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி அஞ்சுகுன்னு பகுதி மக்கள் 11.07.2024 முதல், கடந்த 14 நாட்களாக உண்ணாநிலைப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

அஞ்சுகுன்னு பகுதி மக்கள் அவரவர் வீட்டிலும், பந்தல் அமைத்தும் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.

இதேபோல், கூடலூர் தாலுகாவை சுற்றியுள்ள குட்டிமுச்சி, மண்வயல் போன்ற பகுதிகளில் இதே பிரச்சனையை முன்னிறுத்தி பல போராட்டங்கள் நடந்துள்ளன.

விவசாயத்தை மட்டும் நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள், பல ஆண்டுகளாக காட்டுயானைகளின் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றனர். வனவிலங்கு தாக்குதலிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய வனத்துறையினர் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர்.

கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் காட்டு யானை தாக்குதலால் 200-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் யானைகள் அடிக்கடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வருவது அதிகரித்துள்ளது என்கின்றனர் அங்குள்ள மக்கள். இப்பிரச்சனையால் மக்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பவே பயப்பட்டு வருகின்றனர்.

அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வீடுகட்ட, மின்சார இணைப்பு பெற, சாலைகள் உருவாக்க பராமரிப்பு செய்ய, சுதந்திரமான போக்குவரத்து, கைவச நிலங்கள் விற்கவும் வாங்கவும் என எதற்கும் அனுமதி கிடைக்காமல் அடிப்படையாக கிடைக்க வேண்டிய உரிமைகளும் பறிக்கப்படுகின்றன.


படிக்க: நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கும் நீலகிரி தேயிலை விவசாயிகள்


கடனைப் பெற்று விவசாயிகள் அவர்களது சொந்த நிலத்திலோ அல்லது குத்தகை நிலத்திலோ விவசாயம் செய்த பயிர்கள் காட்டுயானைகளால் அழிக்கப்படுவது விவசாயிகளுக்கு மிகுந்த வேதனையளிக்கக் கூடியதாக உள்ளது.

இந்நிலையில், காட்டுயானைகள் விவசாய நிலங்களுக்கு வராதவாறு அகழிகள், தடுப்பு வேலிகள் அமைக்காதது, காட்டுயானைகளுக்கு தேவையான குடிநீர், உணவு ஆகியவற்றை வனத்தினுள் உறுதிசெய்யாதது, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பார்த்தீனியம், சைனாகொன்னை, உண்ணிச்செடிகள் ஆகியவை வனத்திற்குள் அதிக அளவில் வளர்ந்துள்ளதை அழிக்காதது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் விவசாய நிலங்களை காட்டுயானைகள் அழிப்பதை வேடிக்கை பார்த்து வருகின்றனர் வனத்துறை அதிகாரிகள்.

காட்டு யானைகளின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதாக மக்கள் போராடி கொண்டிருக்கும் வேளையில், காட்டு யானைகள் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் நுழைவது குறைந்துள்ளதாக அதிகாரிகள் பொய்யைக் கூறி வருகின்றனர். அதையும் மீறி காட்டுயானைகளின் நடமாட்டம் அதிகரிப்பதாக யாராவது புகார் அளித்தால், தவறான தகவல்களை பரப்பியதற்காக தண்டிக்கப்படுவீர்கள் என மிரட்டி வருகின்றனர் வனத்துறை அதிகாரிகள்.

அப்பகுதியில் காட்டு யானைகளை நிர்வகிக்கப் போதிய பயிற்சி பெற்ற வனத்துறை அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. மனிதர்கள் வசிக்கும் பகுதியில் ஒவ்வொரு காட்டு யானைக்கும் 20 முதல் 50 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டதாக பதிவுகள் இருந்தும், அந்த அளவில் களத்தில் காணப்படவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

எனது மண்… எனது உரிமை… எனது வாழ்வாதாரம்… என தங்கள் வீடுகளுக்காகவும், குடும்பங்களுக்காகவும், எதிர்காலத்திற்காகவும் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஆதரவாக மக்கள் அதிகாரம் துணை நிற்கும்.

14 நாட்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் மக்களிடம், இதுவரை அரசு அதிகாரிகள் எந்தவித பேச்சுவார்த்தைக்கும் செல்லாமல் அலட்சியப்படுத்தி வருவதை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது. உடனடியாக அப்பகுதி மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

 

இப்போராட்டத்தின் வாயிலாக முன்வைக்கப்படும் மக்களின் கோரிக்கைகள்:

  • வனம் மற்றும் விவசாய நிலங்களை வரையறை செய்து விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.
  • கூடலூரில் காலங்காலமாக நடந்து வரும் மனித உரிமை மீறல்களுக்கு முடிவு கட்ட வேண்டும்.
  • விவசாய பயிர்கள் மற்றும் மனித உயிர்களை அழிக்கும் வன விலங்குகளை அவசரமாக கட்டுப்படுத்த வேண்டும்.
  • வனவிலங்குகளின் ஆக்கிரமிப்பை நிரந்தரமாக தடுப்பதற்கான தொலைநோக்குத் திட்டங்களை உருவாக்க வேண்டும்.
  • புதிய யானை வழித்தடங்கள் வரைவு அறிக்கையை கைவிட வேண்டும்.


தகவல்
மக்கள் அதிகாரம்,
கோவை மண்டலம்,
94889 02202.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க