நீலகிரியில் தேயிலை விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து விவசாயத்தை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு கிலோ தேயிலை 14 – 16 ரூபாய் என்ற அளவில் தான் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு 10 – 15 கிலோ தேயிலைதான் பறிக்க முடியும். ஆனால், ஒரு நாள் கூலியான 350 ரூபாயை வழங்க முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். இலைகளை பறிக்காமல் விட்டால், அடுத்து வளரும் இலைகள் முறையாக வளராது என்பதால் பறித்தாக வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளனர்.
பச்சை தேயிலைக்கு அடிப்படை ஆதார விலையாக குறைந்தது கிலோ ஒன்றுக்கு 40 ரூபாய் என்ற விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும் என்பது தான் இந்த விவசாயிகளின் கோரிக்கை. பத்தாண்டுகளுக்கும் மேலாக தங்கள் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்காததால், கிட்டத்தட்ட ஒரு இலட்சம் விவசாயிகள் வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகக் கூறியுள்ளனர்.
”ஜனநாயக நாட்டில் தேர்தலைப் புறக்கணிப்பது நியாயமா? என்று கேள்வி கேட்கப்படுகிறது. அப்படியென்றால், ஜனநாயக நாட்டில் விவசாயிகளை சாகடிப்பது மட்டும் நியாயமா?” என்று விவசாயிகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். தேர்தலை புறக்கணித்தாலாவது தங்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பிரசுரங்களை விநியோகித்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். மேலும், வீடுவீடாக சென்று பிரச்சாரம் செய்து வருவதாகவும் கூறுகின்றனர்.
தேயிலை விவசாயம் நசிவடைந்து விவசாயிகள் ஓட்டாண்டியாகி வரும் சூழலில், தேயிலை தொழிற்சாலைகள் மட்டும் அப்பகுதியில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube