காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் விமானநிலையம் அமைப்பதற்காக 5,746 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் வேலையில் தி.மு.க அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் பறிக்கும் இத்திட்டத்திற்கு எதிராக பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் இரண்டாண்டுகளாகப் போராடி வருகின்றனர்.

ஆனால், தி.மு.க அரசு போராடும் மக்களின் கோரிக்கைக்குத் துளியும் செவிமடுக்கவில்லை. மாறாக, போராடும் மக்களை பொய் வழக்குகளில் கைதுசெய்து சிறையிலடைப்பது; போராட்டத்திற்கு ஆதரவளிக்க செல்பவர்களை கிராமத்திற்குள் நுழையவிடாமல் தடுப்பது என இப்போராட்டத்தைக் கடுமையாக ஒடுக்கி வருகிறது.

ஆனால், உறுதியாகப் போராடிவரும் மக்கள் தி.மு.க அரசைத் தங்களது கோரிக்கைகளை ஏற்க வைப்பதற்காக நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணித்தனர். ஆனால், மக்களின் கோரிக்கைகளை கிஞ்சித்தும் மதிக்காத தி.மு.க அரசு, ஜூன் 10-ஆம் தேதி பொடவூர், சிறுவள்ளூர், நெல்வாய், எட்டையார்பாக்கம், வளத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள நிலங்களை கையகப்படுத்துவதற்கான ஆணையை வெளியிட்டுள்ளது.

“சொந்த மண்ணில், நிலத்தை இழந்து அகதியாக வாழ்வதைவிட, மொழி தெரியாத அந்நிய ஆந்திர மாநிலத்தில் அடிமையாக வாழலாம்”

– பரந்தூர் மக்கள்

இதனால், ஆத்திரமடைந்த பரந்தூர் மக்கள், போராட்டத்தின் 700-வது நாளான ஜூன் 24 அன்று தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவிற்குத் தஞ்சம் புகப் போவதாகவும், இதற்காகப் போராட்டக்குழு நிர்வாகிகள் ஆந்திராவின் சித்தூர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுக்க உள்ளதாகவும் அறிவித்தனர்.

மேலும், “நாங்கள் போராட்டத்தைத் தொடங்கி இரண்டாண்டுகள் ஆகப்போகிறது. ஆனால், தற்போதுவரை எங்கள் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை. நிலத்தை கையகப்படுத்துவதிலேயே குறியாய் இருக்கும் அரசிடம் போராடி என்ன பயன்? வேறு வழியே இல்லாமல் தமிழ்நாட்டைவிட்டு வெளியேற முடிவெடுத்திருக்கிறோம். சொந்த மண்ணில், நிலத்தை இழந்து அகதியாக வாழ்வதைவிட, மொழி தெரியாத அந்நிய ஆந்திர மாநிலத்தில் அடிமையாக வாழ்வதென்று அனைவருமாகப் பேசி முடிவு செய்திருக்கிறோம்” என்று தங்களுக்கு நேர்ந்துள்ள அவலத்தைத் தெரிவித்தனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதையடுத்து, சித்தூர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனுக்கொடுக்கும் போராட்டத்தைத் தற்காலிகமாகத் தள்ளிவைப்பதாகவும், ஆனால் அம்முடிவில் எந்தவித மாற்றமுமில்லை என்றும் பரந்தூர் கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

பரந்தூர் மக்களின் இம்முடிவானது, ‘திராவிட மாடல்’, ‘சமூக நீதி அரசு’ என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கும் தி.மு.க. அரசின் உண்மை முகத்தை திரைக்கிழித்துக் காட்டுகிறது. கார்ப்பரேட் சேவையில் சமரசம் செய்துகொள்ளாத தி.மு.க-வின் இந்த மக்கள் விரோத போக்கு குறித்து அதன் கூட்டணிக் கட்சிகளும் வாய் திறப்பதில்லை. மொத்தத்தில், அகதிகளாக்கப்படுவதென்னவோ உழைக்கும் மக்கள்தான்.

“தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதைப் பெருமையாகக் கருதுகிறோம்” என்ற பரந்தூர் மக்களின் வார்த்தைகள் கேள்வியெழுப்புவது தி.மு.க-வின் கார்ப்பரேட் சேவையை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியையும்தான். இனியும் அம்மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்காமலிருந்தால், அந்த அநீதியில் நமக்கும் பங்கு உண்டு!


அறிவு

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க