நாடெங்கும் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டங்கள்: உணர்த்துவது என்ன?

போராடினால்தான் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வைக்க முடியும் என்பதை மக்கள் உணர்ந்து வருகின்றனர் என்பதையே தேர்தல் புறக்கணிப்பு போராட்டங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

2024 நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. இதுவரை நடந்த தேர்தல்களில், அனைவராலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இத்தேர்தல் பார்க்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. பாசிசக் கும்பலை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பது பெரும்பான்மையான மக்களின் எண்ணமாக உள்ளது. “பா.ஜ.க. மீண்டும் வெற்றிபெற்றால் இனி தேர்தலே நடக்காது; எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்டப்படும்; அரசியலமைப்பு சாசனம் மாற்றப்படும்” எனவே இத்தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும் என எதிர்க்கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் கூறுகின்றனர். அதற்காக பெரும்பான்மையான பாசிச எதிர்ப்பு சக்திகள் “இந்தியா” கூட்டணியை ஆதரித்து இத்தேர்தலில் பிரச்சாரமும் செய்தனர். இதுவரை தேர்தல் புறக்கணிப்பு மேற்கொண்டு வந்த அமைப்புகள் கூட, இம்முறை தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும் என்பதற்காக “இந்தியா கூட்டணியை” ஆதரிப்பதாக நிலைப்பாடு எடுத்தன.

ஆனால், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் இந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதுதான், மக்கள் அதிகளவு தேர்தல் புறக்கணிப்புப் போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு தொடங்கி கேரளா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா, உத்தராகண்ட், டெல்லி, ராஜஸ்தான் என தேர்தல் புறக்கணிப்புப் போராட்டங்கள் நடக்காத மாநிலங்களே இந்தியாவில் இல்லை என்று சொல்லுமளவிற்கு, மக்கள் தேர்தலைப் புறக்கணித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். முதற்கட்டத் தேர்தல் நடந்த தமிழ்நாட்டிலும் பல இடங்களில் மக்கள் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

போராட்டக்களமாகிய தமிழ்நாடு

இந்தியாவில் மற்ற மாநிலங்களில் நடந்ததை விட, தமிழ்நாட்டில்தான் அதிகளவில் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டங்கள் நடந்தன. போராட்டத்தில் ஈடுபட்ட மக்களில் பெரும்பான்மையினர், தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாமல் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில், விமான நிலையம் அமைப்பதற்காக 13 கிராமங்களில் இருக்கும் 4791.29 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்திற்காக முழுமையாக நிலம் கையகப்படுத்தப்படவிருக்கும் ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு கிராமங்களைச் சேர்ந்த மக்கள், விமான நிலையம் திட்டத்திற்கு எதிராக 600 நாள்களுக்கு மேலாக உறுதியான போராட்டத்தைக் கட்டியமைத்து வருகின்றனர். ஆனால், மக்களின் கோரிக்கைக்கு தி.மு.க. அரசு இதுவரை செவிமடுக்கவில்லை.

மாறாக, போராடும் மக்களை போலீசைக் கொண்டு மிரட்டுவது; பரந்தூர் கிராமத்திற்குள் செல்ல யாரையும் அனுமதிக்காமல் முழுமையாகத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது என ஆரம்பத்திலிருந்தே மக்களின் போராட்டத்தை ஒடுக்கி வருகிறது. தி.மு.க. அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏகனாபுரம், நெல்வாய் கிராம மக்கள் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணித்தனர்.

தேர்தல் புறக்கணிப்பைக் கைவிடக்கோரி, மக்களிடம் பேச்சுவார்த்தைக்குச் சென்ற தேர்தல் அதிகாரிகள் “போராட்டத்தையும் வாக்குப்பதிவையும் சேர்த்துப் பார்க்க வேண்டாம்”, “தேர்தலைப் புறக்கணிப்பதால் என்ன நடக்கப் போகிறது? இந்த புறக்கணிப்பு போராட்டத்தைக் கைவிடுங்கள்” என கேட்டபோது, கிராம மக்கள் “வாக்களிப்பதால் எங்கள் கிராமத்திற்கு நன்மை பயக்கப் போவதில்லை”, “தேர்தலைப் புறக்கணிப்பதாகக் கூறுவதால்தான் நீங்கள் கூட இப்போது தேடி வந்திருக்கிறீர்கள்” என தக்க பதிலடி கொடுத்து அனுப்பினர்.

தேர்தல் அன்று, அக்கிராமத்தில் உள்ள தலையாரியை வாக்களிக்க அழைத்துச் செல்ல வந்த அதிகாரிகளை, கிராம மக்கள் உள்ளேயே நுழைய விடாமல் திருப்பி அனுப்பினர். இதையே காரணமாக வைத்துக்கொண்டு, தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டவர்களில் 10 பேர் மீது அடாவடித்தனத்தனமாக பொய்வழக்கு பதிவு செய்துள்ளது தி.மு.க. அரசு.

இதேபோல், நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட என்.புதுப்பட்டி, வளையப்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள், அப்பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். ஓராண்டுக்கு மேலாக சிப்காட் எதிர்ப்பு இயக்கம் மூலம், இத்திட்டத்தைக் கைவிடக் கோரி 57 கட்டப் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். ஆனால், தி.மு.க. அரசு இதுவரை போராடும் மக்களைக் கண்டுகொள்ளவில்லை. இதனால், வளையப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தேர்தலைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


படிக்க: மீண்டும் பாசிச பா.ஜ.க. ஆட்சி: என்ன செய்யப் போகிறோம்? | வெளியீடு


இதேபோல், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் ஆதிக்கச் சாதிவெறியர்களால் மலம் கலக்கப்பட்டது. இக்கொடூரம் அரங்கேறி ஓராண்டுக்கு மேலாகியும் குற்றவாளிகளைக் கைதுசெய்யாமல், பாதிக்கப்பட்ட மக்களையே சித்திரவதை செய்துவரும் தி.மு.க. அரசை கண்டித்து இறையூர், வேங்கைவயல் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் அன்று வாயில் கருப்பு துணி கட்டியும், கருப்புத்துண்டு அணிந்தும் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு 59 பேர் மட்டும் வாக்களித்ததாகக் கூறப்படுகிறது.

தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட வேங்கைவயல் கிராம மக்கள் விகடன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “குற்றவாளிகள் யார் என்பது அரசுக்கும், சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கும் நன்றாகவே தெரியும். ஆனால், அவர்களைக் கைதுசெய்ய அரசு முன்வரவில்லை. அதற்கு பதிலாக, பாதிக்கப்பட்ட எங்களை விசாரணை என்ற பெயரில் அலைக்கழித்து வருகிறார்கள். எங்கள் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களை விசாரணைக்கு ஆஜராக சொல்லி தொடர் சம்மன் அனுப்புகின்றனர். இதனால் வேலை, படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் கடும் மன உளைச்சலில் இருக்கிறார்கள். “பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கம்” என்கிற கதையாக அன்றாடங்காய்ச்சிகளான எங்களின் வாழ்க்கையைச் சிதைக்கும் போலீசாரின் அடக்குமுறையை நாங்கள் எதிர்க்கிறோம். தேர்தலைப் புறக்கணிப்பதாகச் சொல்லி ஊரில் இரண்டு இடங்களில் போர்டு வைத்தவுடனே ஆர்.ஐ-யும், போலீசாரும் வந்து அவற்றை அகற்றச் சொன்னார்கள்.

“ஜனநாயக நாட்டில் அறவழியில் எங்கள் எதிர்ப்பைக் காட்டுகிறோம். அதைத் தடுக்க உங்களுக்கு உரிமையில்லை” என்று பதிலளித்தோம். “உடனே போர்டுகளை அகற்றாவிட்டால் ஊர் மக்கள் அனைவரின் மீதும் எஃப்.ஐ.ஆர். போட்டு உள்ளே தள்ளிவிடுவோம்” என்று மிரட்டினார்கள். “தாராளமாகத் தள்ளுங்கள். 30 குடும்பங்களையும் உள்ளே தள்ளுங்கள்” என்று நாங்கள் சொன்னதும் வேறு வழியில்லாமல் போர்டுகளை மட்டும் கழற்றிக்கொண்டு போய்விட்டார்கள்” என்றனர். தி.மு.க., அ.தி.மு.க. என எந்தவொரு ஓட்டுக் கட்சியையும் மக்கள் கிராமத்திற்குள் அனுமதிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவையில்லாமல் தமிழ்நாட்டில் சாலை வசதி, குடிநீர் வசதி, பள்ளிக்கூடம் போன்ற அடிப்படை வசதிகளை பல ஆண்டுகளாக செய்து தராத அரசுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் எதிராகவும், உயிர்க்கொல்லி ஆலைகளை மூடக்கோரியும் பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன. இவற்றில் பல போராட்டங்களில், போராடும் மக்கள் பேச்சுவார்த்தைக்கு வரும் அதிகாரிகளையும், அமைச்சர்களையும் “இவ்வளவு நாள் எங்கே போயிருந்தீங்க? இப்போ ஏன் வரீங்க? எங்க கோரிக்கையை நிறைவேற்ற உறுதிக் கொடுக்காம வாக்களிக்க வரமாட்டோம்” என்று கூறி திருப்பி அனுப்பியதை, பொதுத்தன்மையாகக் காண முடிந்தது.

தி.மு.க. அரசின் மக்கள் விரோதக் கொள்கைக்கு எதிராகவும் தங்களது அன்றாட வாழ்வாதார பிரச்சினைகள் மீதான பாராமுகத்திற்கு எதிராகவும் தமிழ்நாட்டில் நடந்த தேர்தல் புறக்கணிப்புப் போராட்டங்களானது, “பாசிசத்தை வீழ்த்த, இந்தியாவைக் காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்” என பா.ஜ.க-விற்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்திக் கொண்ட தி.மு.க. அரசின் இயல்பைத் திரைகிழித்துக் காட்டியது.

வடகிழக்கு மாநிலங்களில் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டங்கள்:

வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை, அசாம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, திரிபுரா, மணிப்பூர், நாகாலாந்து, மிசோரம் மற்றும் சிக்கிம் ஆகிய எட்டு மாநிலங்களில் மொத்தமாக 3 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இந்தியாவில், 1961-ஆம் ஆண்டு முதல் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு நடந்த மாநிலங்களில் வடகிழக்கு மாநிலங்கள்தான் அதிகம். ஆனால், இத்தேர்தலில் வழக்கத்திற்கு மாறாக வடகிழக்கு மாநிலங்களில் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டங்கள் நடந்தன. வடகிழக்கு மாநிலங்களின் தேர்தல் வரலாற்றில் இது புதியபோக்கு என பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர். மோடியின் பத்தாண்டு கால ஆட்சியில் பழங்குடி மக்கள் மீது தொடுக்கப்பட்டு வரும் ஒடுக்குமுறைகளே இதற்கு முதன்மைக் காரணமாகும்.

கடந்த ஆண்டு மே மாதம் குக்கி பழங்குடியின மக்கள் மீது ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பல் கட்டவிழ்த்துவிட்ட வன்முறை இன்றளவும் தொடரும் நிலையில், பெரும்பான்மையான குக்கி-சோ-ஹமர் பழங்குடியின அமைப்புகள் தேர்தலைப் புறக்கணித்தன. இது குறித்து பேசிய “குக்கி தேசிய சட்டமன்றம்” என்ற அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மங்போய் ஹாக்கிப், “சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களைத் தடுப்பதற்கும் எதிர்கொள்வதற்கும் திறன்கொண்ட இந்தியப் படைகள், பயங்கரவாதிகளிடமிருந்து அப்பாவி குடிமக்களைப் பாதுகாக்கத் தவறியது வருத்தமளிக்கிறது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்ற கூற்றின் மீதும் நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது” என்றார். மக்களின் தேர்தல் புறக்கணிப்பால் சுராசந்த்பூர், காங் போக்பி போன்ற பகுதிகளில் வாக்குப்பதிவு குறைந்தது.

“ஒன்றிய அரசும் மாநில அரசும் தோல்வியடைந்துவிட்டன”, “இந்தத் தேர்தல் எங்களுக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை” என்பதுதான் தேர்தலைப் புறக்கணித்த மக்களின் பெரும்பான்மை கருத்தாகும். 2019 மக்களவைத் தேர்தலில் 82 சதவிகிதத்துடன் அதிகபட்ச வாக்குகள் பதிவான மாநிலமாகத் திகழ்ந்த மணிப்பூரில், இம்முறை சுவரொட்டிகள், பேனர்கள், மெகா பேரணிகள் என தேர்தல் நடப்பதற்கான எந்த அறிகுறியையும் காண முடியவில்லை. மணிப்பூரில் குக்கி இனத்தைச் சார்ந்தவர்கள் இத்தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. “அமைதி ஏற்படும் வரை, வாக்களிக்க மாட்டோம்” (No peace No Vote) என்பதில் மக்கள் உறுதியாக இருந்தனர்.


படிக்க: பசுவளைய மாநிலங்களில் பாசிஸ்டுகளுக்கு முற்றும் நெருக்கடி!


இதேபோல், நாகாலாந்தில் முதற்கட்டத் தேர்தலின் போது எல்லைப்புற நாகாலாந்து பிரதேசம் (Frontier Nagaland Territory) என்ற கோரிக்கையை முன்வைத்து ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தேர்தலைப் புறக்கணித்தனர். கிழக்கு நாகா மக்கள் அமைப்பு (Eastern Naga People’s Organization) தேர்தல் அன்று முழு கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. எனவே, இந்த ஆறு மாவட்டங்களில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. சுமார் நான்கு இலட்சம் மக்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். இந்தத் தேர்தல் புறக்கணிப்பால் நாகாலாந்து தொகுதியில் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 82.91 சதவிகிதமாக இருந்த வாக்குப்பதிவு விகிதம், இம்முறை 57.72 சதவிகிதமாகக் குறைந்தது.

இதேபோல் திரிபுராவில், ஆறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சாலை, குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளைச் செய்து தராத அரசைக் கண்டித்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இம்மாநிலத்தில் சுமார் 1,700 பேர் வாக்களிக்காமல் இந்தத் தேர்தலைப் புறக்கணித்தனர். இந்தத் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட ஒருவர், “அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் தேர்தலுக்கு முன்னர் மட்டுமே எங்களைச் சந்திப்பார்கள். ஏமாற்றுத்தனமான வாக்குறுதிகளை அளிப்பார்கள். ஆனால், தேர்தலுக்குப் பிறகு எல்லாம் காணாமல் போய்விடும். கடந்த பல தசாப்தங்களாக நாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளோம். நாங்கள் அரசாங்கத்திற்கு வரி செலுத்துகிறோம். எனவே அரசாங்கத்திடம் இருந்து அடிப்படை வசதிகளை பெறுவது எங்களது அடிப்படை உரிமை. பிறகு ஏன் நாங்கள் மட்டும் பல ஆண்டுகளாக மின்சாரம், குடிநீர், சாலை வசதி இல்லாமல் வறுமையில் வாழ வேண்டும்? இது “சப்கா சாத், சப்கா விகாஸ்” (எல்லாருக்கும் எல்லாவற்றையும் கிடைக்கச் செய்தோம்) என்பதற்கே முரணாக உள்ளது. எனவே, எங்களின் சமூகப் பிரச்சினைகளில் அரசு கவனம் செலுத்தும் வரை நாங்கள் நிர்வாகத்துடன் ஒத்துழைக்க மாட்டோம்” என்றார்.

மக்களின் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டங்கள் உணர்த்துவது என்ன?

போராடினால்தான் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வைக்க முடியும் என்பதை மக்கள் உணர்ந்து வருகின்றனர் என்பதையே தேர்தல் புறக்கணிப்பு போராட்டங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அப்படியெனில், மக்கள் தேர்தல் மீது நம்பிக்கையை இழந்துவிட்டார்களா? என்றால், உண்மையில் மக்கள் தேர்தல் மீது நம்பிக்கை வைத்து வாக்களிப்பதில்லை என்பதே எதார்த்தமாக உள்ளது. அதாவது, “தேர்தல் ஜனநாயகம்” என்பது மக்களுக்கான உரிமைகளை பெறுவதற்கானது என்ற மாயை சில குட்டிமுதலாளித்துவப் பிரிவினரைத் தாண்டி பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்குக் கிடையாது. மாறாக, அந்தந்தக் காலகட்டத்தில் தங்களது உடனடி வர்க்க நலன்களையும் சில சலுகைகளையும் பெறும் நோக்கத்தில் தேர்தலில் பங்கேற்கின்றனர். மேலும், ஓட்டுக் கட்சிகளின் பிழைப்புவாத, கவர்ச்சிவாத அரசியலின் விளைவாக சாதி, மதம், பணம் போன்ற காரணிகளை மையப்படுத்தியும் மக்கள் தேர்தலை அணுகுகிறார்கள்.

இன்னும் கணிசமான மக்கள் தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று ஆளும் வர்க்கத்தால் கட்டமைக்கப்பட்ட மனநிலை காரணமாக, தேர்தல் பங்கேற்பு என்பதைக் காலங்காலமாக செய்ய வேண்டிய கடமையாக, ஒரு சடங்காகக் கருதுகிறார்கள். சான்றாக, 1953-ஆம் ஆண்டு அம்பேத்கரிடம் எடுக்கப்பட்ட ஒரு நேர்காணலை, பி.பி.சி. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. “இந்தியாவில் ஏன் ஜனநாயகம் செயல்படாது?” என்று தலைப்பிடப்பட்டிருந்த அக்காணொளியில் அம்பேத்கர் நாட்டில் நிலவும் போலி ஜனநாயகக் கட்டமைப்பையும், தேர்தல் முறையின் வரம்பையும் அம்பலப்படுத்துகிறார்.

“தேர்தலைப் பொறுத்தவரை, வாக்கெடுப்பு அரசாங்கத்தை மாற்றுவதற்கானது என்ற உணர்வு மக்களுக்குக் கிடையாது; நமது தேர்தல் முறையும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க மக்களை அனுமதிப்பதில்லை; குறிப்பிட்ட சின்னத்துக்கு ஓட்டுப் போடுவதற்குத்தான் கட்சிகள், மக்களைப் பழக்கப்படுத்தியுள்ளனர். தேர்தல்களைவிட தங்கள் அடிப்படைத் தேவைகள் குறித்துதான் மக்கள் அதிகம் கவலை கொள்கிறார்கள்” என்று கூறுகிறார். மேலும், “நமது நாடாளுமன்ற முறையுடன் முற்றிலும் ஒத்திசைந்து செல்லாத சமூகக் கட்டமைப்பை நாம் பெற்றிருக்கிறோம். எனவே, இந்தியாவில் ஜனநாயகம் செயல்படாது” என்றும் கூறுகிறார்.

எனவே இங்கு நடக்கும் தேர்தல் மக்களுக்கானது கிடையாது; மக்களும் இந்தத் தேர்தலை ஜனநாயகத்துடன் தொடர்புபடுத்தி பார்ப்பதில்லை. மாறாக, தேர்தல் தங்களுக்கு வேறொரு வகையில் பயனளிக்கிறது என்ற அடிப்படையில்தான் பெரும்பான்மையாக மக்கள் தேர்தலில் பங்கேற்கின்றனர். இந்த பார்வையில் இருந்துதான் மக்கள் தேர்தல் புறக்கணிப்பிலும் ஈடுபடுகிறார்கள். அரசை நிர்பந்தித்து தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக தேர்தல் புறக்கணிப்பை ஒரு போராட்ட வடிவமாக கையிலெடுக்கின்றனர். அதனால்தான் சில இடங்களில் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு மக்கள் வாக்களிக்கச் செல்கிறார்கள்.

ஆனால், இம்முறை நடந்த தேர்தல் புறக்கணிப்புப் போராட்டங்கள் பலவற்றில் மக்கள் இறுதிவரை வாக்களிக்க செல்லாமல் இருந்ததையும், ஓட்டுக் கட்சிகளை சேர்ந்தவர்களை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்ததையும் பார்க்க முடிந்தது. சான்றாக, ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத பா.ஜ.க. கும்பலை ஊருக்குள் நுழையவே விடாமல் விவசாயிகள் அடித்து விரட்டினர். இந்த நிகழ்வுகள் அனைத்தும், போராடினால்தான் தங்கள் கோரிக்கைளை நிறைவேற்ற முடியும் என்ற உணர்வை மக்கள் பெற்று வருகிறார்கள் என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் பலர் மக்கள் கோரிக்கைகளைக் கைவிட்டுவிட்டு, ஆளும் வர்க்கக் கட்சிகளிடம் சரணடைந்து வரும் சூழலில், பாசிசத்தை வீழ்த்துவதை நோக்கி முன்னேற, மக்களின் இந்தப் போராட்ட உணர்வை நாம் வளர்த்தெடுப்பதும், மக்கள் எழுச்சிகளைக் கட்டியமைப்பதுமே முதன்மைத் தேவைகளாக உள்ளன.


மதி

(புதிய ஜனநாயகம் – ஜுன் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க