பசுவளைய மாநிலங்களில் பாசிஸ்டுகளுக்கு முற்றும் நெருக்கடி!

பாசிசக் கும்பலுக்கு இத்துணை நெருக்கடிகள் இருந்தாலும் தாங்கள் உருவாக்கி வைத்திருக்கும் கட்டமைப்பு பலம், பணபலம், அதிகார பலத்தின் மூலம் பல்வேறு மோசடி முறைகேடுகளில் ஈடுபட்டு எப்படியாவது தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறது

நாடு முழுவதும் மோடி அரசுக்கு எதிராக அடுத்தடுத்து நடைபெற்ற மக்கள் போராட்டங்களால் அரசியல் அரங்கில் ஏற்கெனவே தோல்வி முகத்திற்கு தள்ளப்பட்டுள்ள பாசிச மோடி கும்பல், பசுவளைய மாநிலங்களில் தீவிரமடையும் மக்கள் போராட்டங்களால் தற்பொழுது நடைபெற்று வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. ‘இந்துத்துவத்தின் இதயம்’, ‘காவி பாசிஸ்டுகளின் கோட்டை’ என்றெல்லாம் சங்கிகள் பீற்றிக்கொள்ளும் இப்பசுவளைய மாநிலங்கள்தான் 2014, 2019 என அடுத்தடுத்து மோடி கும்பலின் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு அடித்தளமாக இருந்தன. தற்போதைய தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. பாசிஸ்டுகளின் வெற்றிக்கு அடித்தளமாக இருந்த இம்மாநிலங்களின் ஜாட், மராத்தா, ராஜ்புத் ஆகிய ஆதிக்கச் சாதி மக்களிடையே, பா.ஜ.க. எதிர்ப்புப் போராட்டமும், மனநிலையும் உருவாகியிருப்பது பாசிசக் கும்பலை கதிகலங்கச் செய்துள்ளது.

நாடு முழுவதுமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 272 தொகுதிகளில் வெற்றிபெற்றால் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையில், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, ஜார்கண்ட், உத்தராகண்ட், பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட எட்டு பசு வளைய மாநிலங்களில் மட்டும் மொத்தமாக 214 தொகுதிகள் உள்ளன. கடந்த காலங்களில், இம்மாநிலங்களில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம்தான் தனது வெற்றியை பா.ஜ.க. உறுதி செய்துவந்தது. தற்போது இம்மாநிலங்களில் பா.ஜ.க-விற்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியால், தேர்தலின் தொடக்கத்தில், “400 இடங்களைப் பெறுவோம்” என முழங்கிய மோடி-ஷா கும்பல் தற்பொழுது அது குறித்து வாய்திறக்க முடியாத பரிதாபகர நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

கரை ஒதுங்கிய ‘மோடி அலை’

கடந்த 2014 மற்றும் 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில் முறையே ‘வளர்ச்சி நாயகன்’, புல்வாமா மற்றும் பாலகோட் தாக்குதல்களை நடத்திய “56” இன்ச் மார்பு கொண்ட மோடி என ஊதிப்பெருக்கப்பட்ட மோடி பிம்பத்தைக் கொண்டுதான் தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெற்றது பாசிசக் கும்பல். தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலில், மோடியின் மீதான அத்தகைய மாய அலைகள் எல்லாம் கரை ஒதுங்கிவிட்டன. மக்களும் பாசிசக் கும்பலின் பொய்ப்பிரச்சாரங்களை நம்பத் தயாராயில்லை.

இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் பத்திரிகையாளர்கள் “எந்த அலையும் இல்லாததே கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களுக்கும் இந்த தேர்தலுக்கும் இருக்கும் ஒரு குறிப்பிடத்தக்க வித்தியாசம். இத்தேர்தலில் மோடி அலை, என்.டி.ஏ. அலை, இந்தியா கூட்டணி அலை, ராமன் அலை என எந்த அலையையும் காண முடியவில்லை” என்கின்றனர். இந்நிலையானது பாசிசக் கும்பலுக்கு ஏற்பட்டுள்ள முக்கியமான நெருக்கடியாகும்.

தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான ராமன் கோவிலைத் திறப்பதன் மூலம் நாடு முழுவதும் இந்துமதவெறியைத் தூண்டிவிட முடியும் என்று கணக்குப் போட்டது மோடி-ஷா கும்பல். அதற்காகவே கட்டிமுடிக்கப்படாத ராமன் கோவிலை அவசர அவசரமாக கடந்த ஜனவரி மாதம் திறப்பதாக அறிவித்தது. கட்டிமுடிக்கப்படாத கோவிலைத் திறப்பதும், பார்ப்பனரல்லாத மோடி குழந்தை ராமன் சிலையை நிறுவுவதும் ஆகமத்திற்கும், சனாதனத்திற்கும் எதிரானது என சங்கராச்சாரியார்கள் எதிர்த்தனர். அவர்களது எதிர்ப்பையெல்லாம் கண்டுகொள்ளாத மோடி-ஷா கும்பல், அறிவித்ததுபோலவே ஜனவரி 22-ஆம் தேதி ராமன் கோயில் திறப்பை பிரம்மாண்டமாக நடத்தியது. ஆனால், மோடி-ஷா கும்பல் உருவாக்க எத்தனித்த ராமன் அலை ஒரு மாதத்திற்கு கூட மக்கள் மத்தியில் தாக்கம் செலுத்தவில்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் மட்டுமின்றி பசு வளைய மாநிலங்களிலும் ராமன் கோவிலை சீண்டுவதற்கு ஆள் இல்லை.


படிக்க: ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க வளர அடித்தளமிடும் கவர்ச்சிவாத-மிதவாத இந்துத்துவ அரசியல்!


ஒருபுறம் மீண்டும் மோடி அலையை உருவாக்க முடியாமல் பாசிசக் கும்பல் தோற்றுப்போனது, மறுபுறம் இந்தத் தேர்தலில் புல்வாமா தாக்குதலைப் போல தேசவெறியை கிளம்புவதற்கு நாடுதழுவிய பேசுபொருளை பாசிசக் கும்பலால் உருவாக்க முடியவில்லை. காஷ்மீரில் விமானப்படை வாகனத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடந்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகள், சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளை படுகொலை செய்ய அம்மாநில பா.ஜ.க. அரசு நடத்திய போலி மோதல் கொலை ஆகியவற்றை அமித்ஷாவே முன்னின்று ஊதிப்பெருக்கியதெல்லாம் அதற்கான முயற்சிகளே. ஆனால், இவையெல்லாம் அம்மாநில எல்லைகளைக் கடந்து வெளியில் தாக்கம் செலுத்தவில்லை.

மேலும், பா.ஜ.க. ஆட்சியின் ‘சாதனை’யாக மார்தட்டிக்கொள்ளும் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்க விவகாரமும் இத்தேர்தலில் எடுபடவில்லை. தேர்தல் பிரச்சாரத்தின் போது, “நாங்கள் ஒன்றும் காஷ்மீரில் நிலம் வாங்கவில்லையே” என்றுக் கூறி பா.ஜ.க.வின் முகத்தில் அறைந்திருக்கின்றனர், மீரட் பகுதி மக்கள். உக்ரைனில் போரை நிறுத்தியதாக மோடி கும்பலால் பரப்பப்பட்ட பொய் காணொளிக்கு, எந்த போரை நிறுத்தினார் மோடி?, முதலில் மணிப்பூர் போரை நிறுத்த சொல்லுங்கள் என்று பதிலடி கொடுத்திருக்கின்றனர் மக்கள். இவ்வாறு பாசிசக் கும்பலால் அடுத்தடுத்து தொடுக்கப்பட்ட அத்தனை அஸ்திரங்களையும் மக்கள் தவிடுபொடியாக்கினர்.

எனவே, தனது ‘வளர்ச்சி நாயகன்’, ‘தேசிய நாயகன்’ அரிதாரங்களையெல்லாம் கலைத்துவிட்டு அப்பட்டமான இந்துமதவெறியைக் கையிலெடுத்தார் மோடி. மேடை தோறும், இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் பொய்யான வெறுப்புப் பிரச்சாரத்தைக் கக்கினார். நாடாளுமன்றத் தேர்தலின் இறுதி கட்டத்திலோ, “தான் உயிரியலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை, தான் கடவுளின் அவதாரம்” என்று அண்டப் புளுகை அவிழ்த்துவிட்டார் மோடி. மோடி கும்பலின் அஸ்திரங்கள் செல்லாக்காசாகிப் போனதோடு, பா.ஜ.க. ஆதரவாளர்கள் மத்தியிலேயே எதிர்ப்பையும் சம்பாதித்தது.

நாடு தழுவிய அளவில் ஒற்றை விவாதப்பொருளை உருவாக்க முடியாமல் பாசிசக் கும்பல் தோற்றுப்போனது ஏதோ தன்னியல்பாக நடந்தது அல்ல. தனது ஆட்சிக்காலத்தில் நாட்டு மக்கள் மீது நடத்திய பொருளாதாரத் தாக்குதலால் பசுவளைய மாநிலங்களிலும் மோடி மீதான அதிருப்தி உருவாகியிருக்கிறது. விலைவாசி உயர்வு, வேலையின்மை, அரசு வேலைகளுக்கான வினாத்தாள் கசிவு, அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான இளைஞர்களின் போராட்டம், விவசாய நெருக்கடி, மணிப்பூர் கலவரம், லடாக் பிராந்தியத்திற்கான மாநில அந்தஸ்து போராட்டம் போன்றவையே ஒற்றைப் பேசுபொருளை உருவாக்கவதற்காக பாசிசக் கும்பல் மேற்கொண்ட முயற்சிகளை தோற்கடித்துள்ளன.

இவையன்றி, பா.ஜ.க.வில் மோடி-அமித் ஷா கும்பலின் அசுர வளர்ச்சிக்காக அந்தந்த மாநிலங்களின் பா.ஜ.க-வின் முகமாக அறியப்பட்ட வசுந்தர ராஜே, சிவராஜ் சிங் உள்ளிட்ட உள்ளூர் தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டதால், அந்தந்த மாநிலம் மற்றும் தொகுதிகளுக்கே உரிய பிரத்யேகமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க முடியாமல் திணறி வருகிறது பா.ஜ.க.

இக்காரணத்தால் உள்ளூர் பிரச்சினைகளுக்குக் கூட மோடி மட்டுமே முகங்கொடுக்க வேண்டியிருக்கிறது.  “ஒரு டி20 போட்டியில் அனைத்து ஓவர்களுக்கும் பந்து வீசும்படி ஜஸ்பிரித் பும்ரா கேட்கப்படுவது போல மோடியின் நிலை உள்ளது” என்று மட்டைப்பந்து விளையாட்டுடன் ஒப்பிட்டு நக்கலடிக்கின்றனர் பத்திரிகையாளர்கள்.

வாக்குப்பதிவு சரிவு, கலையும் பாசிஸ்டுகளின் கனவு

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலின் தொடக்கம் முதலே வாக்குப்பதிவு குறையத் தொடங்கியது. அடுத்தடுத்தக் கட்டத் தேர்தல்களில் வாக்கு விகிதத்தை அதிகரிப்பதற்கு அரசியல் கட்சிகளால் எடுக்கப்பட்ட முயற்சிகளும் வீணாகின. நாட்டின் பிற மாநிலங்களைக் காட்டிலும், பல்வேறு இந்துராஷ்டிர சட்டத்திட்டங்களாலும் மக்கள் விரோத ஆட்சியினாலும் பாதிக்கப்பட்டுள்ள பா.ஜ.க. ஆளும் பசுவளைய மாநிலங்களில்தான் அதிகளவில் வாக்குப்பதிவு குறைந்திருக்கிறது.

உ.பி-இல் நடைபெற்ற ஆறாம் கட்டத் தேர்தலில் வெறும் 54 சதவிகித வாக்குகளே பதிவாகின. இக்கட்டத்தில், மிகவும் குறைவான வாக்குகள் பதிவான மாநிலங்களின் பட்டியலில் காஷ்மீருக்கு அடுத்து உத்தரப்பிரதேசம்தான் இருக்கிறது. மேலும், கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும்போது உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் இம்முறை 5 முதல் 8 சதவிகிதம் வரையிலான வாக்குப்பதிவு விகிதம் குறைந்துள்ளது.

இம்மாநிலங்களில், வாக்குப்பதிவு குறைவதில் இளைஞர்களின் வாக்கு முக்கிய பங்கு வகிக்கிறது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2014 மற்றும் 2019 தேர்தல்களில் மோடியை ஆட்சிக்கு கொண்டு வந்ததற்கு இளைஞர்கள் மற்றும் முதன்முறை வாக்காளர்களின் வாக்குகள்தான் முக்கிய பங்கு வகித்தன. ஆனால், இத்தேர்தலில் முதன்முறை வாக்காளர்கள் பலர் வாக்களிக்காமல் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். பலரும் இதனை இளைஞர்களிடம் உள்ள விட்டேத்தி கலாச்சாரம் என்று தட்டையாகக் கருதுகின்றனர். ஆனால், அது முழுமையான உண்மை அல்ல.

இந்த இளைஞர்கள், கடந்த பத்தாண்டுகளில் பாசிச மோடி அரசு அமல்படுத்திய கல்வியை காவி- கார்ப்பரேட்மயமாக்கும் திட்டங்களாலும், மோடியின் கொரோனா பெருந்தொற்று கால பாசிச நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து நாசகரத் திட்டத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள். மேலும், அக்னிபாத் போன்ற திட்டங்களுக்கு எதிராக மூர்க்கமான போராட்டத்தை முன்னெடுத்த இளைஞர்களும், வேலையின்மையால் கடுமையாக பாதிக்கப்பட்ட இளைஞர்களும் இத்தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். தேர்தலில் வாக்களிப்பதால் தங்களது வாழ்க்கை மாறிவிட போவதில்லை என்ற மனநிலை இவ்விளைஞர்கள் மத்தியில் உருவாகி வருவது பாசிசக் கும்பலுக்கு பீதியூட்டுவதாக அமைந்துள்ளது.

மேலும், காவிகளின் கோட்டையாகக் கருதப்படும் இப்பசுவளைய மாநிலங்களில் வாக்குப்பதிவு குறைவதற்கு,  பா.ஜ.க உருவாக்கிய “மோடி தோற்கடிக்க முடியாத தலைவர்” என்ற பிம்பமும் ஒர் காரணமாக அமைந்தது.

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற பிம்பத்தை உருவாக்கியது பா.ஜ.க. தேர்தல் தேதி அறிவித்த நாளன்று, அடுத்த ஆட்சி அமைந்ததும் முதல் 100 நாட்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அரசு அதிகாரிகளைக் கூட்டி மோடி நடத்திய விவாதம், ஜுன் மாதத்திற்குப் பிறகு நடக்கவிருக்கும் சர்வதேச உச்சி மாநாடுகளில் கலந்துகொள்ள மோடிக்கு விடுக்கப்பட்ட அழைப்பு இவையெல்லாம் மோடி மிகப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைப்பார் என்ற பொய் பிம்பத்தை உருவாக்கியது. இதன் காரணமாக தங்களது வாக்கு தேர்தல் முடிவை மாற்றிவிடப் போவதில்லை என்ற மனநிலை ஏற்பட்டு இஸ்லாமியர்கள் உட்பட பலரும் வாக்களிக்காமல் இருந்துள்ளனர்.

கேலிக்கூத்தாக பாசிசக் கும்பலின் இந்த பொய்ப்பிரச்சாரம் பா.ஜ.க. கட்சியினரிடமே தாக்கம் செலுத்தி பின்விளைவுகளை உருவாக்கியது. பா.ஜ.க. வெற்றி பெறுவது உறுதி என்று நம்பிய கட்சித் தொண்டர்கள், தேர்தல் பிரச்சாரத்திற்கு பெரிதாக அக்கறைக் காட்டவில்லை. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஹரியானாவின் பா.ஜ.க-வின் பிரச்சாரக் குழு உறுப்பினர்களில் ஒருவரான சஞ்சய் சர்மா, “கட்சித் தொண்டர்கள் மற்றும் வாக்காளர்களின் அக்கறையின்மையால் வாக்குப்பதிவு சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது” என்றார்.

இன்னொருபுறம், தேர்தலில் வாக்குவிகிதம் குறைந்ததற்கு பா.ஜ.க. மீதான வெறுப்பு ஒரு காரணமென்றாலும், அதைவிட பா.ஜ.க-வின் அரசியல்-பொருளாதாரத் திட்டங்களுக்கு எதிரான மக்கள் நலனைக் கொண்ட மாற்று அரசியல்-பொருளாதாரத் திட்டங்களை முன்வைத்து, போராடும் மக்களுக்குத் தலைமை தாங்குவதற்கு எதிர்க்கட்சிகள் தயாராக இல்லாததுதான் முதன்மை  காரணமாகும்.

இந்துராஷ்டிரத்தின் வே(சோ)தனைச்சாலை

பசுவளைய மாநிலங்களில் ஒன்றாகவும், இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாகவும் உள்ள உத்தரப்பிரதேசத்தில் வாக்குப்பதிவு குறைந்ததற்கு, மோடி-யோகி கும்பல் நடைமுறைப்படுத்திய இந்துராஷ்டிரத் திட்டங்களே, அதிலும் குறிப்பாக ராமன் கோயில் திறப்பே முக்கிய காரணமாகும். உண்மையில், ராமன் கோயில் திறப்பானது மோடிக்கு பலனளிக்கவில்லை என்பதைவிட, எதிர்விளைவுகளை உருவாக்கியிருக்கிறது.

அயோத்தியில் ராமன் கோவில் திறப்பதானது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பலின் இந்துத்துவத் திட்டங்களில் ஒன்று என்றாலும், ராமாயண இடங்களுக்கான சுற்றுலாத் தளமாக மாற்றுவது என்ற கார்ப்பரேட் நலனை உள்ளடக்கியதாகும். இந்த ராமன் கோவில் திறப்பு என்பது பக்திக்கானது அல்ல, பாசிசக் கும்பல் கொள்ளையடிப்பதற்கான ஏற்பாடு என்று குறுகிய காலத்திலேயே அம்பலமானது.

அயோத்தியை உலகிலேயே மிகப்பெரிய சுற்றுலா தளமாக மாற்றுவது என்ற திட்டத்தில் அயோத்தியைச் சுற்றி பல வணிகரீதியான திட்டங்களும், மறுகட்டமைப்புத் திட்டங்களும் பாசிசக் கும்பலால் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக அயோத்தியில் உள்ள வரலாற்றுச் சின்னங்களான பழங்காலக் கோவில்களும், விளைநிலங்களும், சிறுகடைகளும் அழிக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதிகளில் பல ஆண்டுகளாக வாழ்ந்துவந்த மக்களது வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு அகதிகளாகத் துரத்தியடிக்கப்படுகின்றனர்.

அயோத்தியின் கிராமப்புற மக்களிடையே, பா.ஜ.க. அரசால் தங்களது நிலம் எப்போது வேண்டுமானாலும் பறிக்கப்படலாம் என்ற அச்சவுணர்வு மேலோங்கியுள்ளது. கடந்த காலங்களில் பா.ஜ.க-விற்கு வாக்குவங்கியாக இருந்த இம்மக்கள்தான் தற்பொழுது பா.ஜ.க-விற்கு எதிராக திரும்பியுள்ளனர்.


படிக்க: 2024 தேர்தல் முடிவுகள்: மக்கள் போராட்டங்களால் பாசிசத்தை வேரறுப்போம்!


அயோத்தியாவில் மட்டுமின்றி உத்தரப்பிரதேசம் முழுவதுமுள்ள விவசாய மக்களிடம் பா.ஜ.க. அரசின் மீது அதிருப்தி உருவாகியுள்ளது. யூரியாவின் கடுமையான விலையேற்றம், கரும்புக்கான அரசு நிர்ணயித்த விலை கடந்த ஏழு ஆண்டுகளில் ஒரு குவிண்டாலுக்கு ரூ.45 மட்டுமே அதிகரித்திருப்பது ஆகியவை விவசாய மக்களிடம் ஆளும் பா.ஜ.க-விற்கு எதிரான மனநிலையை உருவாக்கியிருக்கிறது. இதன் விளைவாக மேற்கு உத்தரப்பிரதேசத்தில் லோதி ராஜ்புத்கள், குர்மிகள், குஷ்வாஹாக்கள் மற்றும் சைனிகள் போன்ற இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த விவசாயிகள் பா.ஜ.க-வில் இருந்து விலகிச் சென்றுள்ளனர்.

மோடி அரசு அமல்படுத்திய காவி-கார்ப்பரேட்மயத் திட்டங்களால் இந்துராஷ்டிர சோதனைச்சாலையாக இருந்த உ.பி. தற்பொழுது பா.ஜ.க-விற்கு வேதனையாக மாறியிருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தைப் போலவே பீகாரில் பா.ஜ.க. கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ளது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 40 இடங்களில் பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி 39 இடங்களைக் கைப்பற்றியது. ஆனால், தற்பொழுது பீகாரில், பா.ஜ.க. வெற்றி பெறுவது சவாலானது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

இதற்குக் காரணம் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக வெடித்த இளைஞர்களின் போராட்டமும், வேலையின்மையால் ஏற்பட்ட பா.ஜ.க. எதிர்ப்பு மனநிலையும், நிதிஷ்குமாருடன் பா.ஜ.க. அமைத்த கூட்டணியுமாகும். இந்தியா கூட்டணியில் இருந்த ஒருங்கிணைந்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமாரை திட்டமிட்டு அக்கூட்டணியிலிருந்து கழற்றியது பா.ஜ.க. இது பா.ஜ.க-விற்கு பீகாரில் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டதாக மாறியிருக்கிறது எனலாம். பீகாரில் நிதிஷ்குமார் மீது மக்களுக்கிருந்த அதிருப்தியை பா.ஜ.க. அறுவடை செய்து கொண்டது. இதன் காரணமாக நிதிஷ்குமார் கட்சியை பா.ஜ.க. கூட்டணிக்கு கொண்டுவராமல் இருந்திருக்கலாம் என்ற எண்ணம் அம்மாநில பா.ஜ.க-வினரிடமே நிலவுகிறது.

இதன் காரணமாக, பீகாரில் கூடுதல் எத்தனங்களை செய்ய வேண்டிய நிலை பா.ஜ.க-விற்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஏழு கட்டத் தேர்தல்களில் பீகாரில் மோடி 15 பேரணிகளையும் ஒரு ரோடுஷோவையும் நடத்தியுள்ளார். ஒரே வாரத்தில் இரண்டு நாட்கள் பீகாரில் தங்கி பிரச்சாரம் செய்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் பா.ஜ.க-வினர் பீகாரில் கட்சியும் பிரதமரும் எவ்வளவு தீவிரம் காட்டுகிறார்கள் என்பதையும் அதேசமயத்தில் நிலைமை சிறப்பாக இல்லை என்பதையும் இது காட்டுகிறது என்று தெரிவிக்கின்றனர்.

பீகாரில் மட்டுமின்றி எந்தெந்த மாநிலங்களிலெல்லாம் கடந்த தேர்தல்களில் பா.ஜ.க. அனைத்து இடங்கள் அல்லது பெரும்பான்மை இடங்களை வென்றதோ அங்குதான் இம்முறை பா.ஜ.க. அதிக நெருக்கடியை சந்தித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பல கிராமங்களுக்குள் பா.ஜ.க-வால் நுழைய முடியாத சூழல் உருவாகியுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை முற்றுகையிட்டு போராடி வென்ற விவசாயிகள், தற்போது குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் போராடும் விவசாயிகள் மீது பல்வேறு பாசிச ஒடுக்குமுறைகளை செலுத்தி டெல்லிக்குள் நுழையவிடாமல் ஒடுக்கி வருகிறது மோடி அரசு. இதனையடுத்து விவசாயிகளை டெல்லிக்குள் நுழைய விடாத பா.ஜ.க-விற்கு இங்கு வர தடை விதிக்கப்படுகிறது என்று பல கிராமங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன.

ஹரியானாவில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இத்தகைய அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. ஹரியானாவில் மொத்தமுள்ள 10 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஆறாம் கட்டத் தேர்தலான மே 25 அன்று வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் பா.ஜ.க. கும்பலால் தேர்தல் பிரச்சாரத்திற்காக கிராமங்களுக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது. போலீசை வைத்து சமாதானம் பேசியும் உறுதியாக நின்ற கிராம மக்கள் பா.ஜ.க-வினரை ஊருக்குள் நுழையவிடாமல் விரட்டியடித்தனர்.

இதேபோல் பஞ்சாப்பின் கிராமங்களிலும் பா.ஜ.க. கும்பலால் நுழைய முடியவில்லை. இதற்கிடையே, தேர்தல் பிரச்சாரத்திற்கு மோடி பஞ்சாப் மாநிலத்திற்கு செல்வார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மோடிக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்தனர். விவசாயிகளை கண்டு அஞ்சிய மோடி, அவர்களை சிறை, வீட்டுச்சிறையில் அடைப்பது என கொடூரமாக ஒடுக்கிவிட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஆர்.எஸ்.எஸ். – மோடி-ஷா மோதல்

இத்தேர்தலில் மோடி-ஷா பாசிசக் கும்பலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதில் ஆர்.எஸ்.எஸ்-க்கும் மோடி-ஷா கும்பலுக்கிடையிலான அதிகார மோதலும் ஒரு காரணமாக இருக்கிறது. பா.ஜ.க-வில் தங்களுக்கு நிகராக கட்சியில் யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்று சொந்த கட்சிக்குள்ளேயே அடியறுப்பு வேலை பார்த்துவரும் மோடி-அமித்ஷா கும்பல் ஆர்.எஸ்.எஸ்-யையும் விட்டு வைக்கவில்லை. மோகன் பகவத் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் கூட யாரும் தங்களுக்கு நிகராக இருக்கக் கூடாது, அனைத்து அதிகாரமும் தங்களது கைகளிலேயே குவிக்கப்பட வேண்டும் என்று காய் நகர்த்தி வருகிறது. இதற்காக ஆர்.எஸ்.எஸ். தலைமையுடன் நெருக்கமாக உள்ளவர்களைத் திட்டமிட்டு ஓரங்கட்டி வருகிறது.

உ.பி. முதல்வரான ரௌடி சாமியார் யோகி ஆதித்யநாத்தைத் தனித்து செயல்பட முடியாதபடி தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறது இக்கும்பல். குறிப்பாக, உத்தரப்பிரதேசத்திற்கு எந்த அதிகாரியை நியமிக்க வேண்டும் என்பது கூட நேரடியாக மோடியால் கட்டுப்படுத்தப்படுகிறது. இத்தேர்தலில், தனக்கு விருப்பமான வேட்பாளரைப் பெறுவதற்கே யோகி போராட வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக, மோடியின் விசுவாசிகள் அம்மாநிலத்தில் இணை ஆட்சி நடத்துவதாக ஆதித்யநாத்தின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. உ.பி-இல் பா.ஜ.க-விற்கு எதிராக நடந்த ராஜ்புத் மக்கள் போராட்டத்தில், சிலர் “பா.ஜ.க.வில் ராஜ்புத்திரர்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லை, ராஜ்புத்திரரான யோகி ஓரங்கட்டப்படுகிறார்” என கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

உ.பி. மட்டுமல்லாமல் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் அம்மாநிலத்தின் செல்வாக்குமிக்க பா.ஜ.க. தலைவர்களை டம்மியாக்கி வைத்திருக்கிறது இக்கும்பல். ராஜஸ்தானில் வசுந்தர ராஜே, ம.பி-யில் சிவராஜ் சிங் சௌகான் ஆகியோரை ஓரங்கட்டிவிட்டது. வசுந்தர ராஜேவை முதல்வராக்காததால், தற்போதைய தேர்தலில் தனது மகன் போட்டியிடும் தொகுதியில் மட்டும்தான் பிரச்சாரத்தை மேற்கொண்டார் வசுந்தர ராஜே. பிற தொகுதிகளுக்கான பிரச்சாரத்திற்கு செல்லவில்லை.

மேலும், அமலாக்கத்துறை, ஐ.டி. ரெய்டுகளுக்கு பயந்து பிற கட்சியிலிருந்து பா.ஜ.க-வில் சேர்ந்தவர்களுக்கு தேர்தலில் சீட் வழங்கியிருக்கும் மோடி-ஷா கும்பல், ஆர்.எஸ்.எஸ்-க்கு நெருக்கமான பா.ஜ.க-வினருக்கு சீட் கொடுக்காத கடுப்பில் பல பகுதிகளில் பா.ஜ.க-வினர் பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டவில்லை என செய்திகள் வெளியாகியிருக்கிறது.

இவ்வாறு பிற கட்சிகளிலிருந்து பா.ஜ.க-விற்கு ஆள் சேர்ப்பதன் மூலம் மோடி-ஷா கும்பல் கட்சியை சித்தாந்த பலமின்றி தொளதொளப்பாக மாற்றி வருகிறது என்று ஆர்.எஸ்.எஸ். கருதுகிறது. இக்கருத்தை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நேரடியாகவே வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், அதனை மோடி-ஷா கும்பல் மதிக்காதது ஆர்.எஸ்.எஸ்-யை கடுப்பேற்றியுள்ளது. ஆர்.எஸ்.எஸ்-க்கும் – மோடி-ஷா கும்பலுக்கிடையே நீருப்பூத்த நெருப்பாக இருக்கும் இந்த அதிகார மோதலால் பசுவளைய மாநிலங்களில், இத்தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெறும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பா.ஜ.க. எதிர்ப்பு எதிர்க்கட்சிகள் ஆதரவு

பாசிசக் கும்பலுக்கு இத்துணை நெருக்கடிகள் இருந்தாலும் தாங்கள் உருவாக்கி வைத்திருக்கும் கட்டமைப்பு பலம், பணபலம், அதிகார பலத்தின் மூலம் பல்வேறு மோசடி முறைகேடுகளில் ஈடுபட்டு எப்படியாவது தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறது மோடி-அமித்ஷா கும்பல். முழுக்க முழுக்க அதிகாரப் பலத்தை மட்டுமே நம்பி தேர்தலை எதிர்கொள்கிறது. மக்கள் மத்தியில் பா.ஜ.க-வின் இப்போக்கை அம்பலப்படுத்தி போராட்டத்தை முன்னெடுப்பதற்கு பதிலாக மனு கொடுத்துக் கொண்டிருக்கின்றன எதிர்க்கட்சிகள்.

ஆனால், பெரும்பான்மையான ஜனநாயக சக்திகளும் இந்தியா கூட்டணி ஆதரவாளர்களும் மோடி தலைமையிலான பாசிசக் கும்பல் தேர்தல் களத்தில் நெருக்கடிகளை சந்தித்து வருவதையே இந்தியா கூட்டணிக்கான ஆதரவு என்று தலைகீழாக பரிசீலிக்கின்றனர் அல்லது அவ்வாறு காட்ட முயற்சிக்கின்றனர். இதே நிலைமைதான் ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தலின் போதும் இருந்தது. பாசிசக் கும்பல் தோல்வி முகத்தில் உள்ளது என்பதனாலேயே காங்கிரஸ் வெற்றி பெற்றுவிடும் என்று பலரும் கருதினர். ஆனால், தெலுங்கானா, மிசோரம் தவிர்த்து பசுவளைய மாநிலங்களில் பா.ஜ.க. தான் வெற்றி பெற்றது.

ஏனெனில், பசு வளைய மாநிலங்களில், மோடி-ஷா பாசிசக் கும்பலுக்கு எதிராகப் போராடும் மக்களுக்குத் தலைமை தாங்குவதற்கு எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை.

இந்தியா கூட்டணி, மக்கள் போராட்டங்களில் தலையிட்டு நம்பிக்கை அளிக்காதவரை அவை பா.ஜ.க. எதிர்ப்பு என்ற வரம்பிலேயே நிற்குமே ஒழிய இந்தியா கூட்டணி ஆதரவாக மாறாது.


துலிபா

(புதிய ஜனநாயகம் – ஜுன் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க