ஹரியானா தேர்தல் முடிவு: எடுத்துரைக்கும் பாடம் என்ன?

களத்தில் பா.ஜ.க-விற்கு கடுமையான நெருக்கடிகளும் எதிர்ப்புணர்வும் இருந்தபோதிலும் தேர்தலில் பா.ஜ.க. வெற்றியடைவது இது முதன்முறையல்ல. இதற்கு முன்பும் இதேபோன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.

னைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹரியானா தேர்தல் முடிவு வெளியாகி ஜனநாயக சக்திகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, காங்கிரசின் கூட்டணி கட்சிகளையே ஆத்திரமூட்டியுள்ளது. காங்கிரசின் தோல்வியை நேரடியாக விமர்சித்துள்ள (உத்தவ்) சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா “வெற்றியை தோல்வியாக்குவது எப்படி என்ற கலையை காங்கிரசிடமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று சாடியுள்ளது.

ஏனெனில், பா.ஜ.க. ஆதரவு ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களும் ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறுவது உறுதி என்றே தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகளை வெளியிட்டன. அதேபோல், ஹரியானாவில் கடந்தாண்டு கள ஆய்வு மேற்கொண்ட தேர்தல் பகுப்பாய்வாளர் யோகேந்திர யாதவ் உட்பட இந்தியாவிலுள்ள ஆகப்பெரும்பான்மையான தேர்தல் பகுப்பாய்வாளர்களும் (Election analyst) இதே கருத்தைக் கூறி வந்தனர். மேலும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஹரியானாவில் மொத்தமுள்ள பத்து தொகுதிகளிலும் வென்ற பா.ஜ.க., 2024 தேர்தலில் ஐந்து இடங்களை காங்கிரசிடம் பறிகொடுத்த சம்பவமும் மேற்கூறிய கணிப்புகளை உறுதிப்படுத்தின. சொல்லபோனால், ஹரியானா தேர்தலில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை பா.ஜ.க-விற்கே இல்லாததால் வாக்கு எண்ணிக்கையன்று வாக்குச்சாவடிகளில் கூட பா.ஜ.க-வினரை காண முடியவில்லை.

இவ்வாறு, ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ்தான் வெற்றிபெறும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், இக்கணிப்புகளுக்கும் களநிலவரத்திற்கும் நேர்மாறாக ஹரியானாவில் 48 இடங்களில் வெற்றிபெற்று பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையை பெற்றிருப்பது இந்தியா கூட்டணி ஆதரவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், களச்சூழல் பா.ஜ.க. கும்பலுக்கு எதிராக இருந்தாலும் அடுத்தடுத்து தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற்று காங்கிரஸ் தோல்வியடைவது எப்படி? என்பதற்கு விடைக்காண பலரும் முயற்சிக்கின்றனர்.

இதில் ஒரு பிரிவினர், காங்கிரஸ் சில உத்திகளை கையாள்வதில்தான் தவறிழைத்துவிட்டதாகவும் அது சரிசெய்துகொள்ளக் கூடியதுதான் என்றும் அதற்காக அடுத்த தேர்தலில் காங்கிரஸ் தோற்றுவிடும் என்று கருதிவிட வேண்டாம் என்றும் காங்கிரசை விமர்சிப்பவர்களுக்கு ‘இடித்துரைக்கின்றனர்’. சான்றாக, பல மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றிபெற வேலைசெய்த, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-விற்கு பிரஷாந்த் கிஷோரை பரிந்துரைத்த “தேர்தல் வியூக வகுப்பாளர்” (Election strategist) சுனில் கனுகோலுவை ஹரியானா தேர்தலுக்கு பொறுப்பாக்கியதில் மட்டும்தான் காங்கிரஸ் வழுக்கி விழுந்துவிட்டது, மற்றபடி அனைத்தும் சரியாகத்தான் இருந்தது என்பதுபோல விவாதத்தை கட்டியமைக்கின்றனர். பாசிச பா.ஜ.க-வை வீழ்த்தப்போவதாக சொல்லும் காங்கிரஸ், காசுக்காக எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் வேலைபார்க்கும் இதுபோன்ற புரோக்கர்களை நம்பித்தான் தேர்தலை அணுகுகிறது என்ற கேலிக்கூத்தை இவர்கள் கேள்வி எழுப்புவதில்லை. மாறாக, இத்தகைய வாதங்களானது தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்துவதில் உள்ள சவால்களை பரிசீலிக்காமல் திசைதிருப்புவதற்கும் அதற்கு ஓர் காரணமாக உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் மக்கள்விரோதத் தன்மையை மூடிமறைப்பதற்குமே வழிவகுக்கும்.

இன்னொருபுறத்தில், பத்திரிகையாளர்கள் பலர் இத்தேர்தல் முடிவையொட்டி காங்கிரசின் தவறுகள் குறித்தும், பா.ஜ.க-வின் அணுகுமுறைகள் குறித்தும் எதார்த்தமான மதிப்பீடுகளை முன்வைப்பதையும் காண முடிகிறது. சான்றாக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற்றது குறித்து “2024: இந்தியாவை ஆச்சரியப்படுத்திய தேர்தல்” என்ற நூலை எழுதி வெளியிடயிருக்கும் பத்திரிகையாளரான ராஜ்தீப் சர்தேசாய், ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் தோற்றதற்கான பத்து காரணங்களை பட்டியலிட்டு “இந்தியா டுடே” செய்தி இணையதளத்தில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அக்கட்டுரையின் பின்குறிப்பில், “அனைத்து கருத்துக்கணிப்பு நிபுணர்களையும் போலவே, ஹரியானாவில் காங்கிரஸ் எளிதாக வெற்றிபெறும் என்று கணித்தவர்களில் நானும் ஒருவன். தேர்தலின் போட்டித் தன்மையையும், தோல்வியிலிருந்து வெற்றிபெறும் பா.ஜ.க-வின் திறனையும் நானும் தவறாக மதிப்பிட்டுவிட்டேன். மீ குல்பா, மீ அதிகபட்ச குல்பா (லத்தீன் மொழியில் எனது தவறு எனப் பொருள்படும் ரோமன் கத்தோலிக்க வழி பாவ மன்னிப்பு சொற்றொடர்)” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், களத்தில் பா.ஜ.க-விற்கு கடுமையான நெருக்கடிகளும் எதிர்ப்புணர்வும் இருந்தபோதிலும் தேர்தலில் பா.ஜ.க. வெற்றியடைவது இது முதன்முறையல்ல. இதற்கு முன்பும் இதேபோன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.

குறிப்பாக, கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானது. பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள், சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ்தான் வெற்றிபெறும் என்றே தெரிவித்தன. ஆனால், அம்மாநிலத்தில் காங்கிரஸ் தோற்கடித்து பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. அதனைத்தொடர்ந்து நடந்துமுடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும், பா.ஜ.க. கடுமையான நெருக்கடிகளை சந்தித்தாலும் பெரும்பான்மை பெறமுடியாமல் போனாலும், ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.

பா.ஜ.க-வின் இத்தகைய வெற்றிக்கு, அரசு கட்டமைப்பு மற்றும் அதிகார, பணபலம் ஆகியவை காரணங்களாக இருந்தாலும், மக்களால் இந்த தேர்தல் கட்டமைப்பில் பா.ஜ.க-விற்கு மாற்றான சக்தியை காண முடியாமல் இருப்பதுதான் முக்கியமான காரணமாக இருக்கிறது. அப்படியெனில், பா.ஜ.க-விற்கு மாற்று தாங்கள்தான் என்று சொல்லி பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்யும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் என்ன செய்துக்கொண்டிருக்கின்றன என்பதுதான் பா.ஜ.க-வை தேர்தலில் வீழ்த்துவதில் பரிசீலனைக்குரிய இடமாகும்.

மோடி தலைக்காட்ட அஞ்சியத் தேர்தல்

மூன்று வேளான் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம் பாசிசக் கும்பலை முதன்முதலில் பின்வாங்க வைத்த போராட்டமாக அமைந்தது. இது பாசிசக் கும்பலை தோல்வி முகத்திற்கு தள்ளியதோடு, இந்தியா முழுவதும் பாசிசக் கும்பலுக்கு பல நெருக்கடிகளையும் தேர்தல் களத்தில் தோல்வியையும் பெற்று தந்தது. அதிலும் குறிப்பாக, இப்போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்ட விவசாயிகளின் சொந்த மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசத்தின் மேற்கு பகுதி போன்றவற்றில் பாசிச பா.ஜ.க. நேரடியாகவே பல இழப்புகளையும் சவால்களையும் சந்தித்தது.

‘நட்சத்திர பிரச்சாரகரான’ மோடி ஹரியானாவில் மொத்தமாகவே நான்கு பேரணிகள் மட்டுமே மேற்கொண்டார்.

இதனாலேயே 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான தொகுதிகளை பா.ஜ.க. எதிர்க்கட்சிகளிடம் பறிக்கொடுத்தது. மேலும், குறைந்தபட்ச ஆதார விலை கோரும் டெல்லி சலோ 2.0 போராட்டத்தில் பங்கேற்க கிளம்பிய விவசாயிகளை அம்மாநில பா.ஜ.க. அரசு போலீசை கொண்டு கடுமையாக ஒடுக்கியது விவசாயிகளை மேலும் ஆத்திரமூட்டியது. இதன் காரணமாகவே, “எங்களை எல்லைக்குள் அனுமதிக்காத பா.ஜ.க-வினரை நாங்கள் அனுமதியோம்” என்று ஹரியானா விவசாயிகள் பா.ஜ.க-வினரை ஓட ஓட விரட்டியடித்தனர். ஹரியானா சட்டமன்றத் தேர்தலின் போதும் இக்காட்சிகளை காண முடிந்தது. மேலும், விவசாயத்தில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை நிறுவத் துடிக்கும் பா.ஜ.க-வின் கார்ப்பரேட் சேவையால் இம்மாநிலத்தில் விவசாய நெருக்கடி (Agrarian crisis) கடுமையாக உள்ளது. டன் கணக்கான நெற்பயிற்கள் கொள்முதல் செய்யப்படாமல் வீதிகளிலும் வயல்வெளிகளிலும் காய்ந்து கொண்டிருப்பதாக விவசாயிகள் குமுறிக் கொண்டிருக்கின்றனர்.

அதேபோல், மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில், தங்களை ‘பசு ரட்சகர்கள்’ என்று சொல்லிக்கொண்டும் லவ் ஜிகாத், மதமாற்ற தடைச் சட்டம் போன்ற பெயர்களிலும் இஸ்லாமிய மக்கள் மீது தொடுக்கப்பட்ட நரவேட்டைகள் கொஞ்சநஞ்சமல்ல. இந்த இந்துத்துவ பயங்கரவாதத் தாக்குதலால் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி தலித் மக்களும் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். பா.ஜ.க. இடஒதுக்கீட்டை பறித்துவிடும் என்ற அச்சம் காரணமாகவும் தலித் மக்கள் மத்தியில் பா.ஜ.க. எதிர்ப்பு மேலோங்கியிருந்தது.

மறுகாலனியாக்க திட்டங்களை தீவிரமாக அமல்படுத்திவரும் பா.ஜ.க., அரசு வேலைகளை ஒழித்துக்கட்டிவருவதன் விளைவாக ஹரியானாவில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுவதால் லட்சகணக்கான இளைஞர்களும் அவர்களது குடும்பத்தினரும் கடும் ஆத்திரமடைந்துள்ளனர். வறுமை பிடியிலிருந்து மீள உயிரை பணயம் வைத்து போர் சூழல் நிலவும் இஸ்ரேலுக்கு ஹரியானா இளைஞர்கள் வேலைக்கு செல்கின்றனர். குறிப்பாக, இந்திய மக்கள்தொகையில் இரண்டே சதவிகிதமாக உள்ள ஹரியானா மக்கள் இந்திய ராணுவத்தில் 11 சதவிகித பங்களிப்பு செய்யும் நிலையில், ராணுவத்தை கார்ப்பரேட்மயமாக்குவதற்காக பா.ஜ.க. கொண்டுவந்த அக்னிபாத் திட்டம் ஹரியானா இளைஞர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. இத்திட்டத்திற்கு எதிராக ஹரியானாவில் நடந்த போராட்டங்களின் தாக்கம் இன்னமும் இளைஞர்கள் மத்தியில் நீடிக்கவே  செய்கிறது.

இதேபோல், தங்களை பாலியல் வன்கொடுமை செய்த பா.ஜ.க-வை சேர்ந்த பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வேண்டுமென்று போராடிய மல்யுத்த வீராங்கனைகளை பா.ஜ.க. அரசு கடுமையாக ஒடுக்கிய சம்பவம் ஏற்கெனவே ஹரியானா மக்கள் மத்தியில் எதிர்ப்பை கிளப்பியிருந்தது. இந்நிலையில், ஒலிம்பிக்கில் வினேஷ் போகத்திற்கு கிடைக்கவிருந்த பதக்கத்தை பாசிசக் கும்பல் பறித்த சம்பவம் எதிர்ப்பை தீவிரமாக்கியது. இதன்காரணமாகவே, ஒலிம்பிக் போட்டியின்போது மோடி பணிந்துவந்து வினேஷ் போகத்தை தொலைபேசியில் அழைத்து பேசிய சம்பவமும், வினேஷை வெள்ளி பதக்கம் வென்ற வீராங்கனையாகவே நடத்துவோம் என்று ஹரியானா பா.ஜ.க. அரசு அறிவிக்க வேண்டிய கட்டாயமும் உருவானது. மேலும், எந்த எதிர்விளைவுகள் குறித்தும் கவலைபடாமல் நாக்கில் நரம்பின்றி பேசுவதையே வழக்கமாகக் கொண்ட பாசிசக் கும்பல் இத்தேர்தலின்போது விவசாயிகள், மல்யுத்த வீராங்கனைகளை இழிவுப்படுத்தி பேசிய கங்கனா ரனாவத்தை நாவடக்க சொன்னதும் இந்த பீதியின் காரணமாகவே.

இந்த ஒட்டுமொத்த மக்கள் எதிர்ப்பையும் நெருக்கடிகளையும் சமாளிக்க முடியாமல் நடந்துமுடிந்த ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் விழிபிதுங்கிப்போனது பாசிசக் கும்பல். இதனால் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஹரியானாவை ஆட்சி செய்துவந்த பா.ஜ.க. முதல்வர் மனோகர் லால் கட்டாரை நீக்கிவிட்டு தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு நயாப் சிங் சைனியை முதல்வராக்க வேண்டிய நிலைக்கு பாசிசக் கும்பல் தள்ளப்பட்டது. மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சி மனோகர் லால் கட்டாரை தேர்தல் பரப்புரையிலோ குறைந்தபட்சம் சுவரொட்டிகளிலோ கூட பெரியளவில் அனுமதிக்கவில்லை.

ஒன்பது ஆண்டுகால முதல்வருக்கே இதுதான் நிலைமையா என்று கேட்டால், ‘விஷ்வகுரு’ மோடிக்கே இத்தேர்தலில் இதுதான் நிலைமை. பா.ஜ.க-வின் ‘நட்சத்திர பிரச்சாரகரான’ மோடி ஹரியானாவில் மொத்தமாகவே நான்கு பேரணிகள் மட்டுமே மேற்கொண்டார். அதிலும் கடைசிநேர பிரச்சாரத்தின்போது தேர்தல் நடக்கும் மாநிலங்களில் தவங்கிடக்கும் மோடி, இத்தேர்தலிலோ ஹரியானா பக்கமே வரவில்லை. மோடியின் முகத்தை காட்டினால் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்று அஞ்சிய பாசிசக் கும்பல், மோடியை ஒரு சடங்குக்காக மட்டுமே பிரச்சாரம் செய்ய அனுமதித்தது.

மேலும், ஹரியானா மாநிலத்தில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை பாசிசக் கும்பலுக்கே கிடையாது. ஏற்கெனவே, 2024 தேர்தல் கொடுத்த அதிர்ச்சியிலிருந்தும் அடியிலிருந்துமே மீளாத மோடியின் பிம்பத்தை ஹரியானா தேர்தல் தோல்வி மேலும் சேதமாக்கும் என பாசிசக் கும்பல் பீதியுற்றது. இந்த நம்பிக்கையின்மையின் வெளிப்பாடாகவே புதிதாக முதல்வரான நயாப் சிங் சைனியைத் தவிர, மோடி உட்பட வேறு எந்த பா.ஜ.க. தலைவரும் பெயருக்கு கூட பா.ஜ.க. மூன்றாவது முறையாக ஆட்சியில் அமரும் என்று பேசவில்லை.

தோல்விக்கு காங்கிரஸ் முன்வைக்கும் காரணம்

ஹரியானா தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரசின் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ஹரியானா தேர்தல் முடிவை ஏற்க முடியாது என்றும் இது தங்களிடமிருந்து பறிக்கப்பட்ட வெற்றி என்றும் கூறியுள்ளார். மேலும், “இம்முடிவுகள் முற்றிலும் எதிர்பாராதது, ஆச்சரியமளிப்பது; அவை அடிப்படை யதார்த்தத்திற்கு எதிரானவை” என்றும் “இது சூழ்ச்சிகளின் வெற்றி. வெளிப்படையான, ஜனநாயக செயல்முறைகளின் தோல்வி. மக்களின் உணர்வுக்கு எதிரான முடிவு” என்றும் தெரிவித்துள்ளார். இவர் ஹரியானா தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்துக்கொண்டிருக்கும்போதே தேர்தல் மோசடிகள் நடப்பதாகவும் தேர்தல் ஆணையம் இதில் தலையிட வேண்டும் என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஹரியானா தேர்தலின் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டி காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. குறிப்பாக, பல தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் பேட்டரி அளவு (Charge) 99 சதவிகிதம் வரை இருந்ததாகவும் இது சாத்தியமற்றது என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அதிலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 90-99 சதவிகிதம் சார்ஜ் செய்யப்பட்டதாகக் கண்டறியப்பட்ட இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ளதாகவும் 60-70 சதவிகிதம் வரை பேட்டரி சார்ஜ் செய்யப்பட்ட இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதாகவும் அக்கட்சி ஆதாரங்களை முன்வைத்துள்ளது.

176 நாடாளுமன்றத் தொகுதிகளில், பதியப்பட்ட வாக்குகளை விட 35 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக எண்ணப்பட்டுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வைத்து பா.ஜ.க. தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டு வருவது ஏற்கெனவே பலமுறை அம்பலமாகியுள்ள நிலையில் காங்கிரஸ் முன்வைக்கும் இந்த புது வகையிலான மோசடி கவனிக்கத்தக்கதாகும். மேலும், வாக்கு எண்ணிக்கையின்போது தேர்தல் ஆணையம் நீண்ட நேரம் ஹரியானா தேர்தல் முடிவுகளை இணையத்தில் புதுபிக்காமல் இருந்ததும் சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.

ஹரியானாவில் பாசிசக் கும்பலின் தில்லுமுல்லுகள் தேர்தல் தேதி அறிவிப்பதிலிருந்தே தொடங்கிவிட்டன. ஹரியானா மற்றும் ஜம்மு&காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை வெளியிடும் தேதியை தள்ளிவைக்குமாறு தனது அடிமையான தேர்தல் ஆணையத்திற்கு பா.ஜ.க. கடிதம் எழுதியபோது, அந்த உத்தரவை தேர்தல் ஆணையம் அப்படியே நடைமுறைப்படுத்தியது. அப்போதே ஹரியானாவில் தேர்தல் மோசடிகளில் ஈடுபட பா.ஜ.க. தயாராகிவிட்டது என்பது வெட்டவெளிச்சமாகின. ஆனால், அதனை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதற்கு பதிலாக, “பா.ஜ.க. தனது தேர்தல் தோல்வியை தள்ளிவைக்கிறது” என்று நக்கலடித்ததோடு காங்கிரஸ் நிறுத்திக்கொண்டது. அதன் விளைவையே தற்போது அறுவடை செய்துள்ளது.

இந்த தேர்தலில் மட்டுமின்றி, 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் இதனைக் காட்டிலும் பல மடங்கு மோசடிகளை பாசிசக் கும்பல் அரங்கேற்றியிருந்தது. தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களில், 176 நாடாளுமன்றத் தொகுதிகளில், பதியப்பட்ட வாக்குகளை விட 35 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக எண்ணப்பட்டுள்ளது என்பதை “தி குயிண்ட்” இணையதள கட்டுரை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது. இதனை இந்தியாவில் உள்ள பல சிவில் அமைப்புகள் கடுமையாக விமர்சித்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்த நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெற்று கண்டனங்களுடன் நிறுத்திக்கொண்டன.

மொத்தத்தில், தேர்தல் சமயத்தில் மட்டும், தேர்தல், தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு இயந்திர மோசடி-முறைகேடுகளை பேசுவது மற்ற நேரத்தில் கள்ளமௌனம் சாதிப்பது என்ற காங்கிரசின் இந்த அணுகுமுறையானது தேர்தல் மீது மக்களுக்கு எந்தவித கேள்வியும் அவநம்பிக்கையும் எழுந்துவிடக் கூடாது என்ற மக்கள்விரோதத் தன்மையிலிருந்தே எழுகிறது.

அதேசமயம், பாசிசக் கும்பல் ஒவ்வொரு தேர்தலிலும் பலவிதமான தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டாலும் பா.ஜ.க. வெற்றிபெறுவதற்கு மோசடி-முறைகேடுகள் மட்டுமே காரணமல்ல. அது பா.ஜ.க-வின் ஒற்றை வழிமுறையுமல்ல, பத்தில் ஒரு வழிமுறையாகத்தான் பா.ஜ.க. தேர்தல் மோசடிகளை பயன்படுத்துகிறது. மற்றபடி, பா.ஜ.க. வென்றதற்கு பல முக்கியமான காரணங்கள் உள்ளன. அதனை பரிசீலிக்காமல் தேர்தல் மோசடிகளை மட்டும் கைக்காட்டிவிட்டு காங்கிரஸ் நழுவுவது என்பது மக்கள் மத்தியில் பா.ஜ.க-வை ஜனநாயகமான கட்சியாக கொண்டு சென்று சேர்ப்பதற்கே வழிவகுக்கிறது.

பா... வழியில் பாசிச எதிர்ப்பு

ஹரியானா தேர்தலில் “கிசான் (விவசாயிகள்), ஜவான் (ராணுவ வீரர்கள்), பைல்வான் (மல்யுத்த வீராங்கனைகள்)” என்ற முழக்கங்களை முன்வைத்துதான் காங்கிரஸ் பிரச்சாரம் செய்தது. அதாவது, இந்த மூன்று பிரிவினரின் போராட்டத்திலும் பிரதானமாக பங்கெடுத்துக்கொண்டது ஜாட் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள். இந்த போராட்டங்கள் பாசிச பா.ஜ.க-வை நெருக்கடிகளுக்கு உட்படுத்தியதிலும் இந்தியா முழுவதும் பா.ஜ.க. எதிர்ப்புணர்வை வளர்த்தெடுப்பதிலும் முக்கிய பங்கு வகித்தது. இப்பிரிவினரை முன்வைத்து பிரச்சாரத்தை முன்னெடுப்பதன் மூலம் ஹரியானாவில் 27 சதவிகிதமாக உள்ள ஜாட் சாதியினரின் வாக்குகளை அறுவடை செய்துக் கொள்ளலாம் என்பதே காங்கிரசின் தேர்தல் உத்தியாக இருந்தது.

மத்தியப்பிரதேசத்தின் இந்துத்துவ அரசியலுக்கான முகமாக கமல்நாத்தை முன்னிறுத்தியது போல ஹரியானாவில் சாதி அரசியலுக்கு பூபிந்தர் சிங் ஹூடாவை முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்தது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வரும் இத்தேர்தலில் காங்கிரசின் அறிவிக்கப்படாத முதல்வர் வேட்பாளருமாக முன்னிறுத்தப்பட்டவருமான பூபிந்தர் ஹூடா மற்றும் அவரது மகன் தீபிந்தர் ஹூடா, ஜாட் சாதி ஆதிக்கத்தை நிறுவும் வகையிலேயே தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இது கட்சிக்குள்ளேயே பல நெருக்கடிகளை உருவாக்கியது. சான்றாக, மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 72 வேட்பாளர்களுக்கான சீட்டு ஹூடாவின் அதிகாரத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. இது குமாரி செல்ஜா போன்ற பிற காங்கிரஸ் தலைவர்களை அதிருப்திக்குள்ளாக்கியது. மேலும், காங்கிரசின் தலித் தலைவரான குமாரி செல்ஜாவை ஹூடா ஓரங்கட்டியதாலும் காங்கிரஸ் மேடையிலேயே குமாரி செல்ஜா அவமானப்படுத்தப்பட்டதாலும் பத்து நாட்களுக்கு மேலாக அவர் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடாமல் ஒதுங்கிக்கொண்டார். பின்னர் காங்கிரஸ் மேலிடம் தலையிட்ட பிறகே ஹூடாவுடன் இணைந்து பிரச்சாரத்தை மேற்கொண்டார். ஆனால், இவை தலித் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. பா.ஜ.க-விற்கு எதிரான தலித் மக்களின் வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு அறுவடையாகாமல், சந்திர சேகர ஆசாத்தும் மாயாவதியும் ஆதரவளித்திருந்த ஜே.ஜே.பி-ஐ.என்.எல்.டி.பி. கூட்டணிக்கு பிரிவதற்கு இவையும் காரணமாக அமைந்தது. மேலும், ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்காதது பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளை சிதறடித்து சில தொகுதிகளில் காங்கிரஸ் தோல்விக்கு காரணமாகிப் போனது.

இவை கட்சிக்குள் காங்கிரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது மட்டுமின்றி பொதுவெளியிலும் பா.ஜ.க-விற்கு சாதகமாக மாறியது. ஏனெனில், கடந்த 2014-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ஜாட் ஆதிக்கம் தலைவிரித்தாடுகிறது என்ற பிரச்சாரத்தை முன்வைத்தே பா.ஜ.க. ஆட்சியை பிடித்தது. இந்நிலையில், ஹரியானா காங்கிரசில் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்த பூபிந்தர் ஹூடாவின் சாதி ஆதிக்கம் பா.ஜ.க-வின் வெறுப்பு பிரச்சாரத்திற்கே சாதகமாக அமைந்தது.

இன்னொருபுறம், பா.ஜ.க. கட்சியானது ஜாட் மக்கள் மத்தியில் தனக்கிருக்கும் எதிர்ப்பின் காரணமாக ஜாட் அல்லாத ஓ.பி.சி. மக்களின் தொகுதிகளில் கவனம் செலுத்தி அதில் கணிசமான இடங்களில் வெற்றிபெற்றது. மேலும், பா.ஜ.க-வின் நெடுங்கால அடித்தளமாக இருந்துவரும் பார்ப்பனர்கள், பனியாக்கள், பஞ்சாபிகள் போன்ற ஆதிக்கச்சாதி, அதிகார வர்க்கத்தினர் வாழும் பகுதியான ஜி.டி. சாலை மற்றும் அதிர்வார் பகுதிகளில் கவனம் கொடுத்து அங்கு வெற்றியை தக்கவைத்துள்ளது. அதேசமயம் பா.ஜ.க-வை விட அதிக ஜாட் வேட்பாளர்களை காங்கிரஸ் நிறுத்திய நிலையில், காங்கிரசை விட அதிகமான ஜாட் தொகுதிகளை பா.ஜ.க. வென்றிருப்பது சாதிய பிளவுவாத அரசியலில் பாசிஸ்டுகள் முன் பிற கட்சிகள் தோற்றுதான் போகும் என்பதை நிரூபித்துள்ளது.

மத்தியப்பிரதேசத்தின் இந்துத்துவ அரசியலுக்கான முகமாக கமல்நாத்தை முன்னிறுத்தியது போல ஹரியானாவில் சாதி அரசியலுக்கு பூபிந்தர் சிங் ஹூடாவை முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்தது காங்கிரஸ்.

மொத்தத்தில், பா.ஜ.க-விற்கு போட்டியாக இந்துத்துவ அரசியலை முன்னெடுப்பது எதிர்க்கட்சிகளுக்கு பயனளிக்காது என்பது 2022 உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் நிரூபணமானது எனில், சாதிய பிளவுவாத அரசியலை முன்னெடுப்பதும் எதிர்க்கட்சிகளுக்கு பயனளிக்காது, அது இயல்பிலேயே பாசிசக் கும்பலுக்கே சாதகமாக சென்று முடியும் என்பதை ஹரியானா தேர்தல் முடிவு நிரூபித்துள்ளது.

நினைவிருக்கட்டும்! பா... ஓர் பாசிச கட்சி

இவை அனைத்தையும் காட்டிலும் இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சிகள் தேர்தல் களத்தில் எதிர்த்துக்கொண்டிருப்பது வெறும் தேர்தல் கட்சி மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ். என்னும் நூற்றாண்டுகால பாசிச இயக்கத்தை தனது பின்புலமாக கொண்டுள்ள பாசிசக் கட்சி என்பது கவனிக்கப்பட வேண்டியது. இக்கட்சியை குறை மதிப்பீடு செய்வதையும் ஜனநாயகமாக அணுகுவதையும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. ஆனால், பாசிச பா.ஜ.க-வோ 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து படிப்பினைகளை எடுத்துக்கொண்டு அதனை இத்தேர்தலில் நடைமுறைப்படுத்தியுள்ளது.

சான்றாக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. முரண்பாடு காரணமாக சில இடங்களில் ஆர்.எஸ்.எஸ். கும்பல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாதது பா.ஜ.க-விற்கு குறிப்பிடத்தக்க நெருக்கடியையும் அதன் வாக்கு சதவிகிதம் குறைவதிலும் முக்கிய பங்காற்றியது. இந்நிலையில், இத்தேர்தலை அணுகுவது குறித்து கடந்த செப்டம்பர் மாதத்தில் பாலக்காட்டில் நடந்தக் கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-விற்கு இடையிலான முரண்பாட்டில் பா.ஜ.க. தற்காலிகமாக பணிந்து வந்துள்ளதை ஹரியானா தேர்தல் களம் காட்டியது.

ஏனெனில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் மிகவும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதோ அங்கெல்லாம் ராஜஸ்தானிலிருந்து நூற்றுக்கணக்கான ஆர்.எஸ்.எஸ்-காரர்களை வரவழைத்து ஆர்.எஸ்.எஸ். தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. விவசாயிகள் வசிக்கும் கிராமப்புற பகுதிகள் பா.ஜ.க-விற்கு சவாலானதாக இருக்கிறது என்பதால் அப்பகுதிகளில் கவனம் கொடுத்து ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் பிரச்சாரம் செய்துள்ளனர். மொத்தமாக இத்தேர்தலில் 16 ஆயிரம் கூட்டங்களை நடத்தியதாக ஆர்.எஸ்.எஸ். சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். இல்லாமல் பா.ஜ.க-வால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்றும் இது மோடி அல்லாத பா.ஜ.க-வின் முதல் வெற்றி என்றும் இத்தேர்தல் வெற்றிக்கு பிறகு ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் மார்த்தட்டி பிரச்சாரம் செய்தனர்.

இன்னொருபுறத்தில், கடந்த கால போராட்டங்களால் சரிந்துவரும் மக்கள் அடித்தளத்தை தக்கவைப்பதற்கும் பா.ஜ.க. முயற்சிப்பதை இத்தேர்தல் காட்டியுள்ளது. இத்தேர்தலில் பா.ஜ.க-விற்கு கணிசமான அளவில் தலித்துகள் வாக்கு விழுந்துள்ளது இதனை நிரூபிக்கிறது.

கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றிவிடும் என்றும் அதனால் தலித் மக்களின் இட ஒதுக்கீடு பறிபோகும் என்றும் எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்தன. இதனால் பசுவளைய மாநிலங்களில் கணிசமான தலித் மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தனர். ஆனால், இத்தேர்தலில் அதே இட ஒதுக்கீட்டை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி, உள்-இடஒதுக்கீடு மூலம் தலித் மக்களை இரண்டாக பிளவுப்படுத்தி, கணிசமான தலித் மக்கள் வாக்குகளை அறுவடை பாசிசக் கும்பல் செய்துக் கொண்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு ஆகஸ்ட் மாதத்தில் ஹரியானா எஸ்.சி. கமிஷன், தலித் மக்களை இரண்டு வகைகளாகப் பிரிக்க பரிந்துரைத்தது. பால்மிகிகள், தனக்ஸ், மசாபி சீக்கியர்கள் மற்றும் காதிக்ஸ் உள்ளிட்ட 36 பிரிவினை உள்ளடக்கி தாழ்த்தப்பட்ட அட்டவணை சாதிகள் (டி.எஸ்.சி) என்றும் சாமர், ஜாதியா சாமர், ரெஹ்கர், ராய்கர், ராம்தாசி, ரவிதாசி மற்றும் ஜாதவ் ஆகியோரை உள்ளடக்கி பிற அட்டவணை சாதிகள் (ஓ.எஸ்.சி.) என்றும் தலித் மக்களை இரண்டாகப் பிரித்தது பாசிசக் கும்பல். உள் இட ஒதுக்கீடுக்கு அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பை தொடர்ந்து, அரசுப் பணிகளில் பட்டியல் சாதியினருக்குள்ள 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு இரண்டு பிரிவினருக்கும் தலா 50 சதவிகிதம் வழங்கப்படும் என்று பிரச்சாரம் செய்தது. தற்போது பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைத்துள்ள நிலையில் சைனி அரசு இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

நவம்பரில் மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த நரித்தனத்தை மகாராஷ்டிராவில் அமல்படுத்துவதற்கான முயற்சியிலும் பாசிசக் கும்பல் தீவிரமாக இறங்கியுள்ளது. மேலும், கடந்த ஜூன் மாதத்திலேயே ஹரியானாவில் ஓ.பி.சி. மக்களுக்கான “கிரீமி லேயர்” வருமான வரம்பை ஆறு லட்சத்திலிருந்து எட்டு லட்சமாக உயர்த்தியதன் மூலம் அம்மக்களின் வாக்குகளையும் குறிவைத்தது.

அதேபோல், இத்தேர்தலில் பா.ஜ.க-வின் வாக்கு எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் கவனிக்க வேண்டியது. ஹரியானாவில் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்த பா.ஜ.க. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 48 தொகுதிகளை கைப்பற்றியுள்ளதோடு 40 சதவிகித இடங்களையும் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது.

மற்றொருபுறம் கடந்த தேர்தல் தோல்விகளிலிருந்து எந்த படிப்பினையும் எடுக்காமல் மீண்டும் மீண்டும் காங்கிரஸ் மக்களுக்கு துரோகமிழைக்கிறது. பாசிசக் கும்பலுக்கு எதிரான மாற்று அரசியல் சித்தாந்தத்தை முன்வைக்காமல் பா.ஜ.க. எதிர்ப்பை காட்டி மட்டுமே தேர்தலில் வெற்றிபெற்றுவிடலாம் என்ற மக்கள் விரோதத் தன்மையை காங்கிரஸ் மாற்றிக்கொள்ள தயாராக இல்லை.

மக்களுக்கு தேவை மாற்று

ஹரியானாவில், தங்கள் மீதான கார்ப்பரேட் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராகவும் தங்களது உரிமைக்காகவும் போராடிய விவசாயிகளும் வீராங்கனைகளும் இளைஞர்களும் தங்கள் போராட்டங்களை ஜாட் சாதி என்ற வரையறைக்கு வெளியே வளர்த்தெடுக்கவே முயற்சிக்கின்றனர்.

குறிப்பாக, கடந்த காலங்களில் ஹரியானாவில் தலித்துகள் மீது தீண்டாமையையும் வன்முறைகளையும் கட்டவிழ்த்துவிட்டிருந்த ஜாட் சாதியை சேர்ந்த விவசாயிகளை மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் ஜனநாயகப்படுத்தியது. அதன்விளைவாக, விவசாயிகள் தங்களுடன் தலித் மக்களையும் போராட்டத்தில் இணைத்துக்கொண்டனர். இது மூன்று வேளான் சட்டங்களை அமல்படுத்துவதிலிருந்து பாசிசக் கும்பல் பின்வாங்கியதற்கு முக்கிய காரணமாக அமைந்தது என்றால் மிகையல்ல.

இதன் ஊடாக விவசாயிகள் பிற வர்க்கத்தினரின் பிரச்சினைகளிலும் தலையிட்டனர். கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் காவி கும்பல் இஸ்லாமியர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு அதனை கலவரமாக மாற்ற முயற்சித்தது. உடனடியாக காப் பஞ்சாயத்தை கூட்டி, “ஹரியானா இஸ்லாமியர்களை காப்பது காப் பஞ்சாயத்து விவசாயிகளின் கடமை. நம்மை மீறி நூஹ்-வில் ஒரு இஸ்லாமியர் மீதும் யாரும் கைகூட வைக்க முடியாது” என்று முழங்கிய விவசாயிகள் பாசிசக் கும்பலுக்கு குலைநடுக்கத்தை ஏற்படுத்தினர். அதேபோல், பாசிச மோடி அரசின் கொடுங்கோன்மையை இந்தியா முழுவதும் அம்பலப்படுத்தும் நோக்கத்துடன் இந்தாண்டு தொடக்கத்தில் இளைஞர்கள் நாடாளுமன்றத்தில் புகைக்குப்பி வீசியபோது, மொத்த எதிர்க்கட்சிகளும் “பாதுகாப்பு அச்சுறுத்தல்” எனக் கூச்சலிட்டு போராடிய இளைஞர்களுக்கு துரோகமிழைத்தது. ஆனால், விவசாயிகளோ உடனடியாக பஞ்சாயத்தைக் கூட்டி இளைஞர்களுக்கு பகிரங்கமாக ஆதரவளித்ததுடன் அவர்கள் மீது போடப்பட்ட ஊபா வழக்கை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.

மேலும், தங்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக போராடிய மல்யுத்த வீராங்கனைகள் மீது பாசிச மோடி அரசு ஒடுக்குமுறைகளை செலுத்திய போது  விவசாயிகளே அவர்களுக்கு பக்கபலமாக இருந்தனர். மேலும், இந்தியா முழுவதும் பாசிச மோடி அரசுக்கு எதிரான எதிர்ப்பை ஒருங்கிணைப்பதற்கும் விவசாயிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இத்தகைய பிரிவினரைக் கொண்டு ஹரியானா முழுவதும் பா.ஜ.க. எதிர்ப்புணர்வை வளர்த்தெடுப்பதற்கு பதிலாக, பிற வர்க்கத்தினரும் போராட்டக் களத்தில் இணைய வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்கு பதிலாக, விவசாயிகள், வீராங்கனைகள், அக்னிவீரர்கள் பெயரை சொல்லி மக்களை சாதி ரீதியாக பிளவுப்படுத்தி வாக்குகளை கவருவது என்ற கேடுக்கெட்ட பிழைப்புவாத அரசியலைத்தான் காங்கிரஸ் முன்னெடுத்தது. இங்குதான், எந்த இடத்திலும் மக்கள் போராட்டக்களத்திற்கு வந்துவிடக் கூடாது என்று பா.ஜ.க-வின் நோக்கத்துடன் காங்கிரஸ் கைக்கோர்க்கிறது.

அதேபோல், இத்தேர்தல் பிரச்சாரத்தின் போது ஹரியானாவில் “இது அன்புக்கான புல்டோசர்” என தேசியக் கொடிகளுடன் புல்டோசர் ஊர்வலம் நடத்தியது, காங்கிரஸ். மேலும், கடைசிநேர தேர்தல் பிரச்சாரத்தின்போது ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் “ஜடோ” (நடைபயணம்) ஒன்றை நடத்தியுள்ளது. ஆனால், இதனையெல்லாம் காங்கிரஸ் ஏன் முன்னரே செய்யாமல் தேர்தல் சமயத்தில் செய்கிறது என்பதுதான் நாம் முன்வைக்கும் கேள்வி. புல்டோசர் ராஜ்ஜியத்தாலும் இந்துமதவெறி வன்முறைகளாலும் விவசாயிகள், வீராங்கனைகள் மீதான பா.ஜ.க-வின் வன்முறையாட்டங்களாலும் ஹரியானா மக்கள் பாதிக்கப்பட்டபோது கண்டனங்களோடு நிறுத்திக்கொண்டு தேர்தல் சமயத்தில் இத்தகைய ஊர்வலங்களை நடத்துவதன் மூலம் பாதிக்கப்படும் மக்களின் நம்பிக்கையை பெற்றுவிடலாம் என்பதே காங்கிரசின் தேர்தல் கணக்கு. ஆனால், இதனையெல்லாம் மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பதையே ஹரியானா தேர்தல் முடிவு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

சொல்லப்போனால், ஹரியானா தேர்தல் வெற்றி கொடுத்த உத்வேகத்தில்தான் பாசிசக் கும்பல் மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தலை உற்சாகமாக அணுகுகிறது. இதேபோல்தான் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலின்போது தோல்வி பயத்தில் இருந்த பாசிசக் கும்பலுக்கு காங்கிரஸ் கட்சி வெற்றியைக் கொடுத்து 2024 தேர்தலை அணுக வைத்தது. ஆனால், பா.ஜ.க-வை எதிர்க்க சொந்த பலத்தில் இந்தியா முழுவதும் எந்த போராட்டத்தையும் கட்டியமைக்கவில்லை. மாறாக, 2024-ஆம் ஆண்டு தொடக்கத்தில் அடுத்தடுத்து எழுந்த மக்கள் போராட்டங்களே பாசிசக் கும்பலுக்கு கிலியூட்டி, தேர்தலிலும் பாசிசக் கும்பலை நடுநடுங்கச் செய்தது. ஆக, காங்கிரசின் இந்த மக்கள் விரோதத் தன்மையை நாம் சரியாக பரிசீலிக்க வேண்டியுள்ளது. இதனை பாசிச எதிர்ப்பு சக்திகளும் தேர்தலில் பா.ஜ.க. வீழ்த்தப்பட வேண்டும் என்று நினைக்கும் ஜனநாயக சக்திகளும் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. அந்தவகையில், அடுத்தடுத்துவரும் சட்டமன்றத் தேர்தல்களின் போது அந்தந்த மாநிலங்களில் பா.ஜ.க-விற்கு எதிரான மக்கள் போராட்டங்களை கட்டியமைப்பது என்பது இன்றியமையாதது.


துலிபா

(புதிய ஜனநாயகம் – நவம்பர் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க