ஹரியானா: முஸ்லீம் பசு வியாபாரியை அடித்துக் கொன்ற காவிக் கும்பல்

பல்வாவில் காவி கும்பலின் வன்முறைகள் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளூர் மக்கள் மற்றும் கடைக்காரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ரியானா மாநிலத்தின் பல்வாவில் பசுவைக் கடத்தியதாகக் கூறி முஸ்லீம் பசு வியாபாரி காவி கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் பல்வால் மாவட்டத்திற்கு உட்பட்ட குட்பூர் கிராமத்தைச் சேர்ந்த 40 வயதான யூசுப் மாட்டு வியாபாரம் செய்து வருபவர். இவர் தன்னிடமும் 30 கால்நடைகளை வைத்திருந்ததாகச் செய்திகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

இந்நிலையில் ஜனவரி 25 ஆம் தேதி மாடுகளை வண்டியில் ஏற்றிச் சென்ற போது ’பசு பாதுகாவலர்கள்’ குழு ஒன்று அவுரங்காபாத் – மிட்ரோல் பேருந்து நிலையம் அருகே அவர்களை மறித்து விலங்குகளை இறைச்சிக்காகக் கடத்துவதாகக் குற்றம் சுமத்தி அவர்களைக் கடுமையாகத் தாக்கத் தொடங்கியது. பின்னர் யூசுப் வன்முறைக் கும்பலிடமிருந்து மீட்கப்பட்டு டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் போலீஸ் முதலில் கொலை வழக்குப் பதிவு செய்யாமல் காவி கும்பலுக்கு ஆதரவாகத் தாக்குதல் தொடர்பான வழக்காகப் பதிவு செய்தது. பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து அவரது குடும்பத்தினர் படுகொலை செய்தவர்களைக் கைது செய்யக் கோரி ஜனவரி 26 அன்று முண்ட்கட்டி போலீஸ் நிலையத்திற்கு யூசுப் உடலைக் கொண்டு சென்றுள்ளனர்.

மேலும் யூசுப்பிற்கு நான்கு குழந்தைகள் உள்ள நிலையில் அரசாங்கம் தங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் போலீஸ் பெயருக்கு பத்து பேர் மீது மட்டும் வழக்குகளைப் பதிவு செய்துவிட்டு தற்போது வரை யாரையும் கைது செய்யவில்லை.


படிக்க: உ.பி: ’பசு பாதுகாப்பு’ பெயரில் பலியிடப்படும் இஸ்லாமியர்கள்


ஆனால் அதற்கு மாறாக அவுரங்காபாத் கிராமத்தின் அருகே ஒரு குழு வாகனத்தை நிறுத்தியதாகவும், அதற்குள் மூன்று பசுக்களைக் கண்டதாகவும் ஜனவரி 24 அன்று போலீசுக்கு அழைப்பு வந்தது என்று உதவி சப் இன்ஸ்பெக்டர் ராஜிந்தர் சிங் அளித்த புகாரின் அடிப்படையில் காவி குண்டர்களால் படுகொலை செய்யப்பட்ட யூசுப் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள டிரைவர் மீதும் முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ள கேலிக்கூத்தும் அரங்கேறியுள்ளது.

ஆனால் யூசுப் யாருடனும் தகராறு செய்யவில்லை என்றும், தனது தொழிலை மட்டும் கவனித்து வந்ததாகவும் கிராமத்தின் சர்பஞ் (பஞ்சாயத்துத் தலைவர்) தெரிவித்துள்ளதன் மூலம் காவி கும்பலின் கரசேவைக்கு போலீஸ் துணைபோவது மீண்டும் அம்பலமாகி உள்ளது.

இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல்வாவில் காவி கும்பலின் வன்முறைகள் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளூர் மக்கள் மற்றும் கடைக்காரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக 2015 ஆம் ஆண்டு ஹரியானாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட பசுவதை தடைச் சட்டத்தால் தினந்தோறும் முஸ்லீம் மக்களுக்கு எதிரான வன்முறைகளும், காவி கும்பலால் படுகொலை செய்யப்படுகின்ற கொடூரங்களும் அரங்கேறி வருகின்ற நிலையில்தான் தற்போது இப்படுகொலையும் நிகழ்ந்துள்ளது.

பாசிச கும்பல் ஆட்சியில் உள்ள பசுவளைய மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, சத்தீஸ்கர், அசாம் போன்ற மாநிலங்களில் முஸ்லீம் மக்கள் மீதான திட்டமிட்ட வன்முறைத் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அதற்கு போலீசும் நீதிமன்றங்களும் துணைபோகின்றன என்பதையே தொடர் சம்பவங்கள் உணர்த்துகின்றன.

எனவே பாசிச குமலுக்கு எதிரான வலுவான மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அதன் மூலமே பாசிச கும்பலை வீழ்த்த முடியும்.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க