உத்தரப்பிரதேசத்தின் மொராதாபாத்தில் பசுவைக் கொன்றதாகப் பொய்யான குற்றம் சுமத்தப்பட்டு முஸ்லீம் இளைஞர் ஒருவர் பஜ்ரங்தள்-ஐ சேர்ந்த குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மொராதாபாத்தில் உள்ள அசலத்புராவில் 37 வயதான ஷாஹிதீன் குரேஷி என்பவர் மனைவி ரிஸ்வானா ஆரம், ஆஷி, இப்ஜான் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இவர் தனது ஆர்வத்தின் பேரில் உடற்தகுதி போட்டிகளில் பங்கேற்று வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி அவர் பசுவைக் கொன்றதாகப் பொய்யான குற்றத்தைச் சுமத்தி, தடிகளைக் கொண்டு அடித்தும் கால்களால் உதைத்தும் கைகளால் குத்தியும் பஜ்ரங்தள் இந்து மதவெறி கும்பல் தாக்கியதில் குரேஷி சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசு காவி கும்பலிடமிருந்து இளைஞரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அன்று இரவு குரேஷி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் இத்தகைய பதற்றம் அடங்குவதற்குள் மறுநாள் (டிசம்பர் 31) ஷாஹிதீன் குரேஷி கொடூரமாகத் தாக்கப்பட்ட காணொளி காவி கும்பலால் சமூக வலலதளங்களில் பரப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஷாஹிதீனின் சகோதரர் ஷாஜாத், போலீசில் புகார் அளித்த பின்பு தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வரை யாரையும் கைது செய்யவில்லை என்பதன் மூலம் போலீசும் காவி கும்பலின் கரசேவைக்கு ஆதரவாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக யோகி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி செய்யக் கூடிய உத்தரப்பிரதேசத்தில் உள்ள சிறுபான்மை மக்கள் மதமாற்றம், பசுவதை என்கிற பெயர்களில் காவி கும்பலால் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். அதற்கு ஆதரவாக போலீஸ் காவி கும்பல்கள் மீது பெயரளவிலான நடவடிக்கையும் எடுக்காமல் பாதுகாத்து வருகிறது.
பாசிச கும்பலின் ஆட்சியில் நாடு முழுவதும் உள்ள சிறுபான்மை மக்கள், தலித் மக்கள் என பெரும்பான்மை உழைக்கும் மக்கள் மீதான தாக்குதல்கள் அன்றாட நிகழ்வுகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. இதற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். அதன் மூலமே இப்பாசிசக் கும்பலை வீழ்த்தி நமக்கான உரிமைகளை மீட்டெடுக்க முடியும்.
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram