2024 தேர்தல் முடிவுகள்: மக்கள் போராட்டங்களால் பாசிசத்தை வேரறுப்போம்!

மக்களின் கோரிக்கைகளை கைவிட்டுவிட்டு, கடந்த காலங்களைப்போல் மக்கள் போராட்டங்களையும் ஒடுக்குவார்களானால் அது எதிர்க்கட்சிகளுக்கும் ஆபத்தாகத்தான் சென்றடையும்.

ந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவி்ல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய நாடளுமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4 அன்று வெளியாகியது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களிலும் பா.ஜ.க. தனியாக 240 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. எதிர்க்கட்சிகளின் “இந்தியா கூட்டணி” 233 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்களில் வெற்றிப்பெறாத நிலையில் கூட்டணி கட்சிகளை சார்ந்து ஆட்சியமைக்க வேண்டிய நிலைக்கு  பா.ஜ.க. தள்ளப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே “400 இடங்களை வெல்வோம்” என்று தம்பட்டம் அடித்துவந்த பா.ஜ.க. கும்பலுக்கு இத்தேர்தல் முடிவானது பலத்த அடியைக் கொடுத்துள்ளது.

இந்துராஷ்டிரத்தின் சோதனைசாலையாக இருக்கும் உத்தரப்பிரதேசத்திலேயே பா.ஜ.க. கடும் தோல்வியடைந்துள்ளது. 80 தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது பா.ஜ.க. 29 இடங்களை இழந்துள்ளது. தோல்வியின் உச்சமாக ராமன் கோவில் கட்டப்பட்டுள்ள பைசாபாத் (அயோத்தி) தொகுதியிலேயே பா.ஜ.க. தோல்வியை தழுவியுள்ளது. அதேபோல், வளர்ச்சி நாயகன், விஸ்வகுரு வரிசையில் அண்மையில் கடவுள் அவதாரம் வேடம் பூண்ட மோடியே, வாக்குப்பதிவின் முதல் சில சுற்றுகளில் பின்னடைவிற்கு தள்ளப்பட்டு, இறுதியாக வெறும் ஒன்றரை லட்சம் வாக்கு வித்தியாத்தில் வெற்றிபெற வேண்டிய சூழல் உருவானது.

48 தொகுதிகளை கொண்ட மற்றொரு பெரிய மாநிலமான மகாராஷ்டிராவிலும் பா.ஜ.க. மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த காலங்களில் மகாரஷ்டிராவில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை இரண்டாக உடைத்த பா.ஜ.க., தேர்தல் ஆணையத்தின் மூலம் அக்கட்சிகளின் பெயரையும் சின்னத்தையும் பறித்தது. ஆனால், தற்போதைய தேர்தலில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் தலா 9 மற்றும் 8 இடங்களை பெற்றுள்ளது. கட்சியை உடைத்துவிட்டு பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்த ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவும் அஜித்பவாரின் தேசியவாத காங்கிரசும் தலா 7 மற்றும் 1 இடங்களையே பெற்றுள்ளன. மேலும் கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது, பா.ஜ.க. இம்மாநிலத்தில் 14 இடங்களை இழந்து 9 இடங்களை மட்டுமே பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் 12 தொகுதிகள் கூடுதலாக பெற்று 13 இடங்களை கைப்பற்றியுள்ளது பா.ஜ.க-விற்கு அதிர்ச்சியளித்துள்ளது.

இவை மட்டுமின்றி, கடந்த தேர்தல்களில் ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களில் அனைத்து தொகுதிகளையும் கைப்பாற்றிய (Clean Sweep)  பா.ஜ.க இம்முறை பல தொகுதிகளை எதிர்க்கட்சிகளிடம் இழந்துள்ளது. குஜராத்தில் எந்த தொகுதியில், “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்களிடம் இரண்டு எருமை மாடு இருந்தால் ஒன்றை பறிமுதல் செய்துகொள்ளும்” என்று மோடி வெறுப்பு பிரச்சாரம் செய்தரோ அந்த பனஸ்கந்தா தொகுதியில் மட்டும் ஒரு தசாப்தத்திற்கு பிறகு மீண்டும் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது.


படிக்க: பாசிஸ்டுகளின் தேர்தல் ‘ஜனநாயகம்’!


அதேபோல் தேர்தல் பிரச்சாரத்திற்கு கூட பா.ஜ.க-வினரை ஊருக்குள் நுழையவிடாமல் விவசாயிகள்  துறத்தியடித்த  ஹரியானாவில், பா.ஜ.க. 5 இடங்களை காங்கிரசிடம் பறிக்கொடுத்தது: பஞ்சாப்பில் ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க. வெற்றிபெறவில்லை. ராஜஸ்தானில் கடந்த இரண்டு நாடளுமன்றத் தேர்தல்களிலும் மொத்தமுள்ள 25 தொகுதிகளையும் கைப்பற்றிய பா.ஜ.க-வால் இம்முறை 14 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற முடிந்துள்ளது. அதேபோல், பீகாரில் கடந்தமுறை பா.ஜ.க. கூட்டணி 39 இடங்களை பெற்றிருந்த நிலையில் இம்முறை 24 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது.

வடக்கிழக்கு மாநிலங்களிலும் பா.ஜ.க. தொகுதிகளை இழந்துள்ளது. கடந்தமுறை வடக்கிழக்கு மாநிலங்களில் உள்ள 25 தொகுதிகளில் 19 தொகுதிகளை கைப்பற்றியிருந்த பா.ஜ.க கூட்டணி இம்முறை 4  தொகுதிகளை இழந்தது. பா.ஜ.க-வால் திட்டமிட்டு குக்கி இன மக்கள் மீது வன்முறைவெறியாட்டங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்ட மணிப்பூரில் இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. இது மெய்தி மக்களும் பா.ஜ.க-வை புறக்கணித்துள்ளதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தேர்தல் தொடங்குவதற்கு முன்னர் மாநில உரிமைக்கான போராட்டம் வீரியமாக நடந்த லடாக்கில் பா.ஜ.க. மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

பா.ஜ.க அதிக இடங்களை பெறும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட மேற்குவங்கத்தில், பா.ஜ.க. ஆறு இடங்களை இழந்துள்ள நிலையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 29 இடங்களை வென்றுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பிலிருந்தே மோடி கிடயாய்கிடந்த தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 40 தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்து தமிழ்நாடு மக்கள் பா.ஜ.க-விற்கு மீண்டும் கதவடைத்துள்ளதுள்ளனர்.

இவ்வாறு இத்தேர்தல் முடிவானது மோடி-அமித்ஷா கும்பலின் தலையில் இடியை இறக்கியுள்ளது. மோடியின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் நாடு முழுவதும் நடந்த மக்கள் போராட்டங்களால் தோல்வி முகத்திற்கு தள்ளப்பட்ட பாசிசக் கும்பல், 2024 நாடாளுமன்றத் தேர்தலையும் தோல்வி முகத்தில் அணுகியது. அதன் வெளிப்பாடாக இத்தேர்தலில் பசுவளைய மாநிலங்கள் உள்ளிட்டு நாடு முழுவதும் கடுமையான நெருக்கடிகளை சந்தித்தது. விவசாயிகள் போராட்டம், ராஜ் புத் சாதியினர் போராட்டம் என தேர்தல் தொடங்கிய பிறகும் மக்கள் போராட்டங்கள் ஓயவில்லை. நேர்மையக தேர்தலில் வெற்றிப்பெற முடியாதநிலையில் எதிர்க்கட்சிகளை சிறையிலடைத்து, வங்கி கணக்குகளை முடக்கி, தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, நீதிமன்றம் உள்ளிட்ட அரசு அமைப்புகளின் துணையுடன் ஓர் “மேட்ச் ஃபிக்சிங்” தேர்தலை நடத்தி முடித்தது, பாசிசக் கும்பல். ஆனால், ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பும் துணை நின்ற போதிலும் பா.ஜ.க-வால் தனிபெரும்பான்மையை கூட பெற முடியாதது, பாசிசக் கும்பலின் தோல்வி முகம் எந்த அளவிற்கு தீவிரமாக உள்ளது என்பதையே காட்டுகிறது.

தனிபெரும்பான்மையை பெற முடியாததன் காரணமாக, கடந்த பத்தாண்டுகால ஆட்சியில் எந்தவித சட்டவிதிகளையும் மதிக்காமல் பாசிச சர்வாதிகார ஆட்சியை நடத்திவந்த பா.ஜ.க. கும்பல், தற்போது கூட்டணி கட்சிகளை சார்ந்து நடக்க வேண்டிய பரிதாபகரமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. அதிலும் தேர்தல் சமயத்தில் பா.ஜ.க-வால் பல்வேறு அவமானங்களுக்கு உள்ளாக்கப்பட்ட ஆந்திர பிரதேசத்தின் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவையும் கட்சி தாவுவதில் இழிப்புகழ் பெற்று “பல்டி குமார்” என்று அழைக்கப்படும் பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதிஷ் குமாரையும் நம்பி கயிறு மேல் நடக்கும் நிலைக்கு பா.ஜ.க. தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு, கர்நாடகாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி உள்ளிட்டோர் பா.ஜ.க-விடம் பாதுகாப்புத்துறை, விவசாயத்துறை, சபாநாயகர் பதவி உள்ளிட்டவற்றை கோரி நெருக்கடி கொடுப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பது பா.ஜ.க-வின் இக்கட்டான நிலையையே காட்டுகிறது.

இன்னொருபுறம், சொந்த கட்சிக்குள் அடியறுப்பு வேலையிலும் ஆர்.எஸ்.எஸ்-ஐ அலட்சியப்படுத்தியும் வந்த மோடி-அமித்ஷா கும்பலின் அதிகாரத்திற்கு இத்தேர்தல் முடிவு எல்லைக்கோடு வகுத்துள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர். தேர்தல் முடிவுகள் குறித்து ஆர்.எஸ்.எஸ்-இன் இதழான “ஆர்கனைசர்”-இல் வெளியான “2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வின் ஆட்சி: சில படிப்பினைகளுடன் கூடிய ஒரு வரலாற்று வெற்றி” என்ற கட்டுரையில் மோடி-அமித்ஷா கும்பலுக்கு ஆர்.எஸ்.எஸ். பல விடயங்களை ‘இடித்துரைத்துள்ளது’. அதேபோல், “தி பிரிண்ட்” இணையதளத்தில் “இது ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர வேண்டிய பா.ஜ.க-வின் ‘கர் வாப்சி’ (தாய் மதம் திரும்புதல்) நேரம்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இதே உள்ளடக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்-யைச் சேர்ந்தவர்களும் ஆர்கனைசர் இதழின் முன்னாள் ஆசிரியர்களும் இணையத்தில் பல பதிவுகளை எழுதி வருகின்றனர். இவையெல்லாம் மோடி-அமித்ஷா கும்பலுக்கு இத்தேர்தல் முடிவு கூடுதல் நெருக்கடியை உருவாக்கியுள்ளதையே காட்டுகிறது.

இன்னொருபுறம் “சர்வாதிகாரத்திற்கு கடிவாளமிட்டுவிட்டோம்”, “இந்தியாவின் அரசியல் சாசனம் காப்பாற்றப்பட்டுள்ளது”, “மோடி இனி வாஜ்பாயாக மாறிவிடுவார்” என்ற பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், எந்த இடத்திலும் இத்தேர்தலில் ஏன் இந்தியா கூட்டணி தோற்றது? என்பதற்கான சரியான பரிசீலனை செய்யப்பட்டதாக தெரியவில்லை.

எவ்வாறு பா.ஜ.க கும்பல் தோல்வியைத் தழுவியதற்கு நாடுமுழுவதும் நடந்த மக்கள் போராட்டங்கள் காரணமாக அமைந்ததோ அதேபோல் இந்தியா கூட்டணி கட்சிகள் இத்துணை தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கும் மக்கள் போராட்டங்கள்தான் அடிப்படையானது. ஆனால், அப்போராட்டங்களை வளர்த்தெடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சிக்கவே இல்லை என்பதுதான் பரிசீலனை நடத்தப்பட வேண்டிய இடம்.

பாசிசக் கும்பல் தோல்வி முகத்தால், இத்தேர்தலில் மோடி அலை போன்று பாசிசக் கும்பலுக்கு சாதகமான எந்த அலையும் இல்லாத நிலையில், நாட்டின் பல இடங்களில் போராட்ட அலையும் பா.ஜ.க. எதிர்ப்பு அலையும் நிலவியது. அதனை நாடுதழுவிய அளவில் பா.ஜ.க. எதிர்ப்பு அலையாக வளர்த்தெடுப்பதற்கு சாதகமான சூழலும் எதிர்க்கட்சிகளுக்கு இருந்தது. ஆனால், மக்கள் போராட்டங்களில் தலையிட்டு அதனை வளர்த்தெடுத்து மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு எதிர்க்கட்சிகள் துணியவில்லை. மேலும் இந்தியா கூட்டணி கட்சிகள் பா.ஜ.க-வின் கொள்கைகளுக்கு எதிராக ஒத்த அரசியல்-பொருளாதார மாற்றுத்திட்டத்தை முன்வைக்காமல்தான் இந்த தேர்தலை சந்தித்தன. எதிர்க்கட்சிகள் தனித்தனியாகவும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட வகையிலும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டன. அவ்வறிக்கைகளும் முழுமையான மக்கள் கோரிக்கைகளை பிரதிபலிப்பதாக இல்லாமல் செயல்திட்டமற்ற கவர்ச்சிவாத அறிவிப்புகளாகவே இருந்தன.


படிக்க: 1.07கோடி ஓட்டுகள் மோசடி! பாசிச பாஜகவின் மோசடி தேர்தல் ஆணையம்!


அதேபோல், வடமாநிலங்களில் மக்கள் போராட்டங்களால் பாசிச கும்பலின் மதவெறி போதையிலிருந்து மக்கள் விடுப்பட்டு வரும் போக்கும் உருவாகியிருந்தது. ஆனால் அம்மக்களை பா.ஜ.க-வின் பார்ப்பனிய சித்தாந்ததிற்கு மாற்றாக ஒரு சித்தாந்ததை முன்வைத்து அணித்திரட்டுவது குறித்தெல்லாம் எதிர்க்கட்சிகள் துளியும் சிந்திக்கவில்லை. மாறாக, இவற்றையெல்லாம் செய்யவில்லை எனினும் பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகள் தங்களுக்கு அறுவடையாகிவிடும் என்று மனநிலையிலையில்தான் எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்தித்தன. இதனால், பெரும்பான்மையான மக்கள் எதிர்கட்சிகளை தங்களுக்கான மாற்றாக பார்க்கவில்லை என்பதே எதிர்க்கட்சிகளின் தோல்விக்கு முக்கியமான காரணம்.

ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி இந்தியா கூட்டணி கட்சிகள் இத்தனை தொகுதிகள் வெற்றிபெற்றிருப்பதற்கு முதன்மையான காரணம் முன்னரே குறிப்பிட்டதுபோல மக்கள் போராட்டங்கள்தான். மேலும், இத்தேர்தலில் பா.ஜ.க. தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்காக லட்சக்கணக்கான பாசிச எதிர்ப்பு சக்திகளும் ஜனநாயக சக்திகளும் வெவ்வேறு வடிவங்களில் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. துருவ் ராட்டி போன்ற பலர் இந்தியாவை பாசிச சர்வாதிகாரத்தில் இருந்து காக்க வேண்டும் என்ற ஓரே நோக்கத்திற்காக பா.ஜ.க-வை அம்பலப்படுத்தி தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்தனர்.

மக்கள் மோடிக்கும்பலை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதற்காகவும், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என்பதற்காகவும்தான் மக்கள் போரட்டங்களை முன்னெடுத்தனர்; தேர்தலில் இந்தியா கூட்டணிக்கும் வாக்களித்தனர். ஆனால், இந்தியா கூட்டணியின் கையாலாகத்தனத்தாலும் துரோகத்தாலும் பா.ஜ.க கும்பல் மீண்டும் ஆட்சிக்கு வரும் சூழல் உருவாகியுள்ளது. இனியும் மக்களின் கோரிக்கைகளை கைவிட்டுவிட்டு, கடந்த காலங்களைப்போல் மக்கள் போராட்டங்களையும் ஒடுக்குவார்களானால் அது எதிர்க்கட்சிகளுக்கும் ஆபத்தாகத்தான் சென்றடையும்.

மேலும், கணிசமான தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளதால் எதிர்க்கட்சிகள் மீதான அடக்குமுறையை பாசிச பா.ஜ.க. நிறுத்தப் போவதில்லை. தேர்தல் முடிவு அன்று மோடி ஆற்றிய உரையில், “ஜூன் 4-க்கு பிறகு ஊழல் தலைவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும்” என்று பேசியிருப்பது, வருங்காலங்களில் எதிர்க்கட்சிகள் மீதான பாசிச அடக்குமுறை தீவிரமடையும் என்பதையே காட்டுகிறது. எனவே, மக்களின் பா.ஜ.க. எதிர்ப்புணர்வை வாக்குகளாக அறுவடை செய்துகொண்டு 233 தொகுதிகளில் வென்றுள்ள இந்திய கூட்டணி கட்சிகள், மக்களுக்கு நேர்மையாக இருக்குமெனில் மக்கள் போராட்டங்களுடன் கைகோர்த்து அதனை வளர்த்தெடுக்க வேண்டும். அதுதான் பெரும்பானமை மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றும், எதிர்க்கட்சிகளையும் பாசிச ஒடுக்குமுறையில் இருந்து காக்கும்.

எனவே, எந்த மக்கள் போராட்டங்கள் பாசிசக் கும்பலை தேர்தல் களத்தில் பலவீனப்படுத்தியதோ அதே மக்கள் போராட்டங்களை வளர்த்தெடுத்து பாசிசத்தை வீழ்த்தும் திசையை நோக்கி முன்னேறுவோம்.


தலையங்கம்

(புதிய ஜனநாயகம் – ஜுன் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க