பாசிஸ்டுகளின் தேர்தல் ‘ஜனநாயகம்’!

சூரத், இந்தூர் போன்று தனக்கு செல்வாக்கு உள்ள இடங்களில் அதிகார பலத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளே இல்லாமல் வெற்றிப்பெறுவோம் என அறிவிக்கிறது பாசிசக் கும்பல்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடங்குவதற்கு முன்னரே, எதிர்க்கட்சியினர் மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ. ரெய்டுகளை ஏவுவது; எதிர்க்கட்சி முதல்வர்களை சிறையிலடைப்பது; காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கை முடக்குவது என அப்பட்டமான சர்வாதிகார ஒடுக்குமுறையை ஏவத் தொடங்கியது பாசிச மோடி அரசு. எதிர்க்கட்சிகள் மீதான இந்த ஒடுக்குமுறையை அமெரிக்கா, ஜெர்மனி போன்ற உலக நாடுகளும் கண்டித்திருந்தன.

இந்நிலையில், வங்கதேசம், பாகிஸ்தான், ரஷ்யா ஆகிய நாடுகளில் அந்நாட்டு ஆளும் கட்சிகளால் எதேச்சதிகாரமாகத் தேர்தல் நடத்தப்பட்டதைப் போலவே, இந்தியாவிலும் தன்னுடைய அதிகார பலத்தை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளையும் சதித்திட்டங்களையும் அரங்கேற்றி பாசிச வழிமுறையில் தேர்தலை நடத்தி வருகிறது மோடி-அமித்ஷா கும்பல்.

சான்றாக, ஏப்ரல் 14-ஆம் தேதி பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியீட்டின்போது, மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தப் பிறகு முதல் 100 நாட்களில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய திட்டங்களுக்கான பணிகளைத் தொடங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக மோடி கூறியிருந்தார். மோடியின் உத்தரவின்படி, வீட்டுக் கடனுக்கான வட்டிக்கு மானியம் வழங்குதல், புதிய நகர்ப்புற மையங்களை உருவாக்குதல் போன்ற திட்டங்களை அரசு அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும், இதில் சில திட்டங்கள் புதிய அரசாங்கம் பதவியேற்றவுடன் வெளியிடும் பட்ஜெட்டின் ஒரு பகுதியாக  இருக்கும் என்றும் செய்திகள் வெளியானது.

தேர்தல் நடத்தை விதிகளை மோடி கழிவறை காகிதமாக கூட மதிக்கவில்லை என்பதையும் தனது கைப்பாவையாக இருக்கும் அரசு நிறுவனங்களை பயன்படுத்தி தேர்தல் வெற்றியைப் பெற்றுவிடலாம் என்ற மோடியின் நோக்கத்தையும்தான் இந்த செய்தி தெளிவாக உணர்த்துகிறது. இந்த ஜனநாயகமற்றத் தேர்தலை, “மேட்ச் ஃபிக்சிங்” (Match Fixing), “நோ லெவல் பிளேயிங் ஃபீல்ட்” (No Level Playing Field)  என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

எதிர்க்கட்சிகள் இல்லாதத் தேர்தல்

2014 நாடாளுமன்றத் தேர்தலில் “காங்கிரஸ் இல்லாத இந்தியா” என்ற ஆரவாரத்துடன் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க. கும்பல், தற்போதைய 2024 நாடாளுமன்றத் தேர்தலில் “எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியா”வை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனடிப்படையில், கடந்த பத்தாண்டுகால ஆட்சியில் ஊழலில் உலக சாதனைப் படைத்துள்ள மோடி-அமித்ஷா கும்பல், எதிர்க்கட்சிகள் மீது “ஊழல்” குற்றஞ்சாட்டி அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. மூலம் எதிர்க்கட்சிகளை வேட்டையாடி வருகிறது.

கடந்த ஜனவரி மாத இறுதியில் ஜார்கண்ட் மாநில முதல்வரும் “ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா” கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரனை நில மோசடி வழக்கிலும், மார்ச் மாதத்தில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை மதுபான கொள்கை ஊழல் வழக்கிலும் அமலாக்கத்துறை கைது செய்து சிறையிலடைத்தது. இந்திய வரலாற்றில் அரவிந்த் கெஜ்ரிவால்தான் பதவியிலிருக்கும்போதே கைது செய்யப்பட்ட முதல் முதலமைச்சர் ஆவார்.


படிக்க: தோல்வி முகத்தில் மோடி-அமித்ஷா கும்பல்: மக்கள் போராட்டமே ஆயுதம்!


கெஜ்ரிவாலுக்கு முன்பாக, இதே மதுபான ஊழல் வழக்கில் தெலுங்கானா பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் கவிதாவும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். திகார் சிறையிலிருந்த கவிதாவிடம் விசாரணை நடத்துவதற்கு சி.பி.ஐ-யும் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றது. இதனை கவிதா எதிர்த்த நிலையில், ஏப்ரல் 11 அன்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருந்த கவிதாவை சி.பி.ஐ. கைது செய்தது.  “வெளியில் பா.ஜ.க. தலைவர்கள் பேசியதையே சி.பி.ஐ. மீண்டும் மீண்டும் என்னிடம் கேட்கிறது, இது பா.ஜ.க. காவலே ஒழிய சி.பி.ஐ. காவல் அல்ல” என்று சி.பி.ஐ. விசாரணையின் லட்சணத்தைப் பத்திரிகையாளர்களிடம் அம்பலப்படுத்தியிருக்கிறார், கவிதா.

இதே வழக்கில், ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் அமைச்சர் மணீஷ் சிசோடியாவும், அக்கட்சியின் மாநிலங்களவை அமைச்சர் சஞ்சய் சிங்கும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். தற்போது சஞ்சய் சிங் மட்டும் பிணையில் வெளியே வந்திருக்கிறார். அரவிந்த் கைதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தையும் முடக்கியுள்ளது மோடி கும்பல்.

இவர்கள் மட்டுமின்றி 2ஜி அலைக்கற்றை வழக்கில் தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, பா.ஜ.க-வால் பதவி பறிக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா உள்ளிட்டோரை கைது செய்யவும் மோடி-அமித்ஷா கும்பல் தீவிரம் காட்டி வருகிறது.

தேர்தல் முடியும்வரை கெஜ்ரிவாலை வெளியே விடக்கூடாது என்பதில் தீவிரமாக உள்ள மோடி அரசு, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள கெஜ்ரிவாலுக்கு சிறையில் இன்சுலின் மருந்து கூட வழங்காமல் வதைத்து வருகிறது. இதன்மூலம், மக்களுக்காகப் போராடுகிற சமூக செயல்பாட்டாளர்களை சிறையிலடைத்து, அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் வழங்காமல் ஒடுக்குகிற உத்தியை தற்போது எதிர்க்கட்சிகளுக்கும் விரிவுபடுத்தியிருக்கிறது மோடி அரசு.

தேர்தல் ஆணையம்மோடியின் செல்லப் பிராணி

தமிழகத்தில் தேர்தல் முடிந்த பிறகும், தேர்தல் நடத்தை விதிமுறைகளைத் தளர்த்திக் கொள்ள முடியாது என்று ‘படம்’ காட்டிய தேர்தல் ஆணையம், மோடியின் செல்லப் பிராணி என்பது நிரூபணமாகியிருக்கிறது.

2024 நாடாளுமன்றத் தேர்தலானது, நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக 44 நாட்களுக்கு நடைபெறும் என்று கடந்த மார்ச் 16 அன்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. மோடியின் தொடர்ச்சியான தமிழ்நாடு பயணமும், அதனையடுத்து ஏப்ரல் 19  நடந்த முதற்கட்ட தேர்தலுமே,  மோடியின் பிரச்சாரப் பயணத்திற்கேற்ப தேர்தல் அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை அம்பலப்படுத்திக் காட்டின.

தேர்தல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்குவதிலும், பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகளுக்கு அவர்கள் கோரிய சின்னத்தை உடனே ஒதுக்குவது,  வி.சி.க., நாம் தமிழர் போன்ற கட்சிகளுக்கு அவர்கள் கோரிய சின்னங்களை ஒதுக்காமல் தேர்தல் தேதி நெருங்கும்வரை அலைக்கழிப்பது என தேர்தல் ஆணையம் பா.ஜ.க-விற்கு அடியாள் வேலை பார்த்தது.

அதேபோல், மதம், இனம், சாதி, தனிநபர் விவகாரம் குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் பேசக்கூடாது, புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளை வெளியிடக்கூடாது போன்றவை தேர்தல் நடத்தை விதிமுறைகளாக உள்ளன. இந்த விதிமுறைகள் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு பாடம் எடுக்கும் தேர்தல் ஆணையம், மோடி கும்பல் விதிமுறைகளை மீறுகின்ற போது தனது நவ-துவாரங்களையும் மூடிக்கொண்டிருக்கிறது.

கடந்த பத்தாண்டுகால ஆட்சியில் மோடியின்  ‘வளர்ச்சி நாயகன்’ அரிதாரம் கலைந்த நிலையில், இத்தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக இந்துமுனைவாக்க பிரச்சாரத்தைத் தீவிரமாக கையிலெடுத்திருக்கிறது, மோடி-அமித்ஷா கும்பல்.

முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாட்டிற்கு வந்தபோது எதிர்க்கட்சிகள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் என்று பேசியது; ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் வெளியிட்டிருந்த இறைச்சி உண்ணும் பழைய காணொளிகளை குறிப்பிட்டு, எதிர்க்கட்சிகள் இந்துக்கள் உணர்வுகளை காயப்படுத்துகிறார்கள், முகலாயர்களின் சிந்தனையை பிரதிபலிக்கிறார்கள் என்று பேசியது; சுதந்திரப் போராட்டத்தின் போது முஸ்லிம் லீக்-இல் இருந்த அதே கருத்தைத்தான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பிரதிபலிக்கிறது என குறிப்பிட்டது; ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்களின் செல்வங்களை எல்லாம் ஊடுருவியர்களுக்கும், அதிக குழந்தை பெற்றெடுத்தவர்களுக்கும் கொடுத்து விடுவார்கள்” என்று கூறியது என அப்பட்டமான இஸ்லாமிய வெறுப்பைக் கக்கினார் மோடி.

இந்துக்களின் மத உணர்வைத் தூண்டும் வகையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலி உட்பட அனைத்து நகைகளும் கணக்கீடு செய்யப்பட்டு பகிர்ந்தளிக்கப்படும் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் உள்ளது எனப் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மோடியின்  இந்தப் பொய்-வெறுப்பு பேச்சுக்கு எதிராக நாடுமுழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. டைம் (Time), தி கார்டியன் (The Guardian), ஃபினான்சியல் டைம்ஸ் (Financial Times), புளூம்பெர்க் (Bloomberg) உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் மோடியின் வெறுப்பு பேச்சை அம்பலப்படுத்தி கட்டுரைகள் வெளியிட்டிருந்தன.

வெறுப்பு பேச்சிற்காக மோடி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இரண்டு சிவில் உரிமை குழுக்கள் 17,000 பேர் கையெழுத்திட்ட கடிதத்தை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பின. காங்கிரஸ், சி.பி.ஐ(எம்) மற்றும் சி.பி.ஐ(எம்.எல்) லிபரேஷன் உள்ளிட்ட கட்சிகள் உட்பட பலரும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர். ஆனால், தேர்தல் ஆணையமோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கள்ளமௌனம் சாதித்தது.

இறுதியில், வேறுவழியின்றி ஏப்ரல் 25-ஆம் தேதி தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு நோட்டீஸ் அனுப்பியது தேர்தல் ஆணையம். அதில், “மோடி” என்ற பெயர் கூட குறிப்பிடாமல் பா.ஜ.க-வின் “நட்சத்திர பிரச்சாரகர்” என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.

இவையன்றி, தேர்தல் நடந்துகொண்டிருக்கும் போதே தூர்தர்ஷனில் “தி கேரளா ஸ்டோரி” என்ற இஸ்லாமிய வெறுப்பு திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது; தூர்தர்ஷன் சின்னத்தின் நிறம் சிவப்பிலிருந்து காவியாக மாற்றப்பட்டது; தேர்தல் நடக்கும்போதே மோடி அடுத்தடுத்து நலத்திட்டங்களை அறிவித்துக்கொண்டிருப்பது என எதற்கும் மோடி மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மாறாக, தேர்தல் நடத்தை விதிகளை மீறுகிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் மீது பாய்கிறது தேர்தல் ஆணையம். மோடியின் வெறுப்பு பேச்சுக்காக நோட்டீஸ் அனுப்பிய அதே நாளில் வேண்டுமென்றே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் நோட்டீஸ் அனுப்பி பதிலளிக்க சொன்னது. மேலும், இந்தியா கூட்டணியைச் சேர்ந்த சிவசேனா தனது கட்சி சின்னத்தை பிரபலப்படுத்துவதற்காக வெளியிட்ட பாடலில் “ஜெய் பவானி”, “இந்து” போன்ற வார்த்தைகள் இடம்பெற்றதற்காக கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவிற்கு நோட்டீஸ் அனுப்பியது. தற்போது ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் பிரச்சார பாடல் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டிருக்கிறது. சி.பி.ஐ., அமலாக்கத்துறை போல, தேர்தல் ஆணையமும் மோடியின் அடியாளாக மாறியிருக்கிறது என்பதையே இந்நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

பாசிசத்திற்கு துணைநிற்கும் அதிகார அமைப்புகள்

தேர்தல் ஆணையம் மட்டுமின்றி நீதிமன்றம், போலீசு போன்ற பிற அதிகார அமைப்புகளும் மோடி அரசின் வாலாகவே செயல்பட்டு வருகின்றன. மோடியின் வெறுப்பு பிரச்சாரம் குறித்து ஏப்ரல் 23 அன்று உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் அதனை விசாரிக்காமல்  உச்சநீதிமன்றம் தள்ளிப்போட்டது.

மேலும், உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபட்டில் தேர்தல் விதிகளை மீறி இந்து மற்றும் சீக்கிய தெய்வங்களின் பெயர்களையும், வழிபாட்டு தலங்களின் பெயர்களையும் பயன்படுத்தி மோடி பேசியதற்காக அவருக்கு அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டுமென்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு ஏப்ரல் 26 அன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி சச்சின் தத்தா விடுப்பில் சென்றது சந்தேகத்தை கிளப்பியது. ஏப்ரல் 29 அன்று அவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், எதிர்பார்த்தபடியே, குற்றச்சாட்டு முற்றிலும் தவறாக கருதப்பட்டுள்ளதாகக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.


படிக்க: குறையும் வாக்குப்பதிவு: பா.ஜ.க – விற்கு மட்டும்தான் நெருக்கடியா?


அதேபோல், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் அனைத்து வாக்குகளையும், வாக்கு ஒப்புகைச் சீட்டுகளுடன் முழுமையாக ஒப்பிட்டு சரிபாா்க்க உத்தரவிடக்கோரி” கடந்த மாதத்தில் ஏ.டி.ஆர். அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தது. வழக்கு விசாரணையின் தொடக்கத்திலிருந்தே மனுதாரர்களின் வாதங்களை கொஞ்சமும் பரிசீலிக்காமல், தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர்களை போல வாதாடி வந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது சந்தேகப்படுவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாரிக்கும் “பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்” நிறுவனத்தில் இயக்குநர்களாக பா.ஜ.க-வைச் சார்ந்த நான்கு நபர்கள் நியமிக்கப்பட்டது; வாக்குப்பதிவு இயந்திரங்களையும் விவிபேட்-களையும் கையாள தனியார் கம்பெனிகளை அனுமதித்தது என வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாயக சக்திகளின் அவநம்பிக்கைக்கு அனைத்து முகாந்திரங்களும் உள்ள நிலையில், உச்சநீதிமன்றம் இவ்வழக்கை தள்ளுபடி செய்து எதிர்க்கட்சிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மேலும், மோடியின் ராஜஸ்தானில் வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டது தொடர்பாக சி.பி.ஐ(எம்) கட்சித் தலைவர் பிருந்தா காரத்தின் புகாரை பதிவுசெய்ய டெல்லி போலீஸ் மறுத்துள்ளது. மேலும் பல மாநிலங்களில் எதிர்க்கட்சி வேட்பாளர்களை பிரச்சாரத்திற்கு செல்லவிடாமல் போலீஸ் தடுப்பதும் அம்பலமாகி வருகிறது. தற்போது அமித்ஷா குறித்து பொய் காணொளி பரப்பியதாக காங்கிரஸ் நிர்வாகி அருண் ரெட்டியை டெல்லி போலீஸ் கைது செய்துள்ளது. இவையெல்லாம்,போலீசு, நீதிமன்றம், அதிகார அமைப்புகள் என அனைத்தும் மோடிக் கும்பல் தேர்தலில் வெற்றிப்பெறுவதற்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது என்பதையே வெட்டவெளிச்சமாகக் காட்டுகிறது.

பாசிஸ்டுகளின்தேர்தல்எனும் கேலிக்கூத்து

தேர்தல் ஆணையம், நீதித்துறை, போலீசு துணையோடு பாசிசக் கும்பல் நடத்தும் தேர்தல் எவ்வாறு நடக்கும் என்பதற்கு வடகிழக்கு மாநிலங்களே சான்று. கடந்த 19 அன்று மணிப்பூரில் நடைபெற்ற முதற்கட்டத் தேர்தலில், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் அரம்பை தெங்கால் என்ற மெய்தி இனவெறி கும்பல் பல வாக்குச்சாவடிகளை சூறையாடியதோடு, துப்பாக்கிச்சூடு நடத்திய காணொளி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வன்முறையும், முறைகேடுகளும் நடைபெற்ற 47 வாக்குச்சாவடிகளில் வெறும் 11 வாக்குச்சாவடிகளில் மட்டுமே மறுவாக்குப்பதிவு நடத்தியது தேர்தல் ஆணையம்.  மணிப்பூர் மக்களும், பல்வேறு அமைப்புகளும் தேர்தலைப் புறக்கணித்திருந்த நிலையில், மறுவாக்குப்பதிவில் 80 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், பா.ஜ.க. ஆளும் திரிபுராவில், முதற்கட்டத் தேர்தல் முடிந்த மறுநாளே, தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், 80 சதவிகித வாக்குச்சாவடிகளுக்குள் எதிர்க்கட்சிகளை சேர்ந்த முகவர்களை பா.ஜ.க-வினர் அனுமதிக்கவில்லை என்றும் காங்கிரஸ், சி.பி.ஐ(எம்) கட்சிகள் குற்றஞ்சாட்டின. இந்நிலையில் வாக்குப்பதிவு நடந்த மூன்று நாட்களுக்கு பிறகு வெளியான தகவலில் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட மூன்று சட்டசபை தொகுதிகளில் நூறு சதவிகிதத்திற்கு மேலாக வாக்குப் பதிவாகியிருந்தது அம்பலமானது. இதையடுத்து, 597 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்த வேண்டுமென்று காங்கிரஸ் சார்பாக அம்மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. பிற கட்சிகளும் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.

இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள அசாம் மாநிலத்தில், பா.ஜ.க-விற்கு வாக்களிக்கவில்லை எனில் வீடுகள் புல்டோசரால் இடிக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் இஸ்லாமிய மக்களை மிரட்டியிருக்கின்றனர். ஏப்ரல் 26 அன்று அம்மாநிலத்தில் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. அதேநாளில், இஸ்லாமிய புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிப்பதைத் தடுக்கும் விதமாக அசாம் தலைநகர் குஹாத்தியிலிருந்து அம்மாநிலத்தின் பராக் பள்ளத்தாக்கிற்கு செல்கிற 6 ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால், இஸ்லாமியர்கள் பலரால் வாக்களிக்க முடியாமல் போனது.

இதன் உச்சக்கட்டமாக, ஏப்ரல் 23 அன்று குஜராத் மாநிலம் சூரத்தில் பா.ஜ.க. வேட்பாளர் ‘போட்டியின்றி வெற்றி’ பெற்றதாக அறிவிக்கப்பட்டது நாடு முழுவதும் விவாதத்தை கிளப்பியது. காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனுவில் கையெழுத்திட்ட மூவரும் அது தங்களது கையெழுத்து இல்லை என்று தேர்தல் ஆணையத்திடம் மனு தாக்கல் செய்துவிட்டு தலைமறைவாகினர். காங்கிரசின் மாற்று வேட்பாளர் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அத்தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த எட்டு வேட்பாளர்களும் அடுத்தடுத்து தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனர்.

அதேபோல், மத்தியப்பிரதேசம் இந்தூரில் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காந்தி கடைசி நேரத்தில் தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றுக்கொண்டு பா.ஜ.க-வில் இணைந்தார். இங்கும் “சூரத் மாடலை” அமல்படுத்த பா.ஜ.க. முயன்றுள்ளதாக “தி வயர்” இணையதளம் நடத்திய விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மேலும், குஜராத்தின் காந்திநகரில் அமித்ஷாவிற்கு எதிராக போட்டியிடும் 16 வேட்பாளர்கள் மிரட்டப்படுவதும் அம்பலமாகியுள்ளது. இதன்மூலம், சூரத், இந்தூர் போன்று தனக்கு செல்வாக்கு உள்ள இடங்களில் அதிகார பலத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளே இல்லாமல் வெற்றிப்பெறுவோம் என அறிவிக்கிறது பாசிசக் கும்பல்.

எதார்த்தத்திற்கு முகங்கொடுக்க மறுக்கும் எதிர்க்கட்சிகள்

ஒருபுறம், கடந்த பத்தாண்டு காலத்தில் தேர்தல் ஆணையம், நீதிமன்றம், போலீசு, அதிகார வர்க்கம், சி.பி.ஐ. அமலாக்கத்துறை என ஒட்டுமொத்த அரசு அதிகார அமைப்புகளையும் பாசிசமயாக்கி, அவற்றைத் தனது அடியாட்களாக வைத்துக் கொண்டு, வன்முறைகளை அரங்கேற்றி பாசிச வழிமுறையில் தேர்தலை நடத்தி வருகிறது பாசிச மோடி கும்பல்.

மற்றொருபுறம் நம்பிக்கையளிக்கும் விதமாக, பா.ஜ.க-விற்கு அடித்தளமாக உள்ள மக்கள் பிரிவினரே பா.ஜ.க-வை எதிர்க்கும் சூழல் உருவாகியிருக்கிறது என்பதையே விவசாயிகள், மராத்தியர்கள், ராஜ்புத்திரர்களின் போராட்டம் காட்டுகிறது.

ஆனால், இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக்கொள்வதற்கு கூட எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. மோடி அரசுக்கு எதிராக நடைபெறும் மக்கள் போராட்டங்களை ஆதரிப்பது, வடமாநிலங்களில் நடைபெறும் எதேச்சதிகாரத் தேர்தலை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தி, அதை ரத்து செய்யக் கோரி மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பது,  என்ற கண்ணோட்டம் இல்லாமல் மோடியின் ஏவல் அமைப்பான தேர்தல் ஆணையத்திடமும், நீதிமன்றத்திலுமே முறையிடுவது, புகாரளிப்பது என எதிர்க்கட்சிகள் செய்துவருகின்றன.

இதன் மூலம் பாசிசமயமாகியுள்ள இந்த அரசுக் கட்டமைப்பை ஜனநாயகமானது என்றும், பாசிஸ்டுகளை சட்டப்போராட்டங்களின் மூலம் தோற்கடிக்க முடியுமென்றும் மக்களை நம்ப வைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், பாசிச மோடி கும்பலோ எதிர்க்கட்சிகளின் ஒரே களமாக இருக்கும் தேர்தலையும் பறிப்பதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. இனிமேலும் எதிர்க்கட்சிகள் மக்கள் போராட்டங்களை கட்டியமைக்காமல் தாமதிப்பார்களேயானல், பாசிஸ்டுகளால் தேர்தல் களத்தில் இருந்து துடைத்தெறியப்படுவார்கள் என்பதே எதார்த்தம்.


பானு

(புதிய ஜனநாயகம் – மே 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க