ஏழு கட்டங்களாக நடைபெறும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு கட்டங்கள் நிறைவடைந்துள்ளன. நடந்துமுடிந்த இரண்டு கட்டத் தேர்தலில் பதிவான வாக்குகள் குறித்த இறுதி புள்ளிவிவரங்களை ஏப்ரல் 30-ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதற்கட்ட தேர்தலில் 66.14 சதவிகிதமும், இரண்டாம் கட்ட தேர்தலில் 66.71 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. முன்னதாக, வாக்குப்பதிவு நடந்து முடிந்த அன்று இரவு 7 மணிக்கு, முதற்கட்ட தேர்தலில் 60 சதவிகிதமும் இரண்டாம் கட்டத்தில் 60.96 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட இந்த இரண்டு தரவுகளுக்கும் இடையில் கிட்டத்தட்ட ஆறு சதவிகிதம் வரை வித்தியாசம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல், முதற்கட்ட வாக்குப்பதிவு (ஏப்ரல் 19) நடந்து 11 நாட்கள் கழித்தும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு (ஏப்ரல் 26) நடந்து நான்கு நாட்கள் கழித்தும் தேர்தல் ஆணையம் இப்புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதிலும், பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை அறிவிக்காமல் வெறுமனே வாக்கு சதவிகிதத்தை மட்டும் அறிவித்துள்ளது.
படிக்க: இது ஒரு மேட்ச் பிக்சிங் தேர்தல்!
இதுகுறித்து தனது “எக்ஸ்” பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ‘‘இறுதி வாக்குப்பதிவு புள்ளிவிவரங்களை வெளியிடுவதில் தேர்தல் ஆணையம் இவ்வளவு காலதாமதம் செய்வது இதுவே முதன்முறை. கடந்த காலங்களில், வாக்களித்த உடனேயே அல்லது 24 மணி நேரத்திற்குள் இறுதி வாக்காளர் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுவிடும்” எனக் கூறியுள்ளார்.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேர்தல் ஆணையம் முன்பு வெளியிட்ட சதவிகிதத்திலிருந்து 5.75 சதவிகித வாக்குகள் உயர்ந்துள்ளது கவலையளிப்பதாகவும், பா.ஜ.க-விற்கு ஆதரவு இல்லாத இடங்களில் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினர். சி.பி.ஐ(எம்) கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இதுகுறித்து விளக்கமளிக்கக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால், தற்போதுவரை வாக்கு சதவிகிதம் தாமதமாக அறிவிக்கப்பட்டதற்கான காரணத்தையும், வாக்கு எண்ணிக்கையை அறிவிக்காதது குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கான பதிலையும் தெரிவிக்காமல் தேர்தல் ஆணையம் கள்ள மௌனம் சாதித்து வருகிறது.
இதேபோல், தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ஆம் தேதி தேர்தல் நிறைவடைந்த அன்று மாலை 7 மணி நிலவரப்படி, 72.09 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்தார். ஆனால், அதன்பிறகு தேர்தல் ஆணையம் நள்ளிரவில் வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாட்டில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்த பத்திரிகையாளர்கள், ‘‘பெரும்பாலும் தேர்தல் முடிந்த பிறகு அறிவிக்கும் வாக்கு சதவிகிதத்திற்கும், அதிகாரப்பூர்வ வாக்கு சதவிகிதத்திற்கும் இடையில் 1 முதல் 1.5 சதவிகிதம் அளவிற்குதான் வித்தியாசம் இருக்கும். ஆனால் இம்முறை சில இடங்களில் சுமார் 11 சதவிகிதம் வரை வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. அதிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணியினர் வெற்றிப்பெற வாய்ப்புள்ள தொகுதிகளில் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. ஆனால், பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட இடங்களில் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என அம்பலப்படுத்தியுள்ளனர்.
ஏற்கெனவே, இரண்டு கட்ட தேர்தலின்போது பல இடங்களில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் பா.ஜ.க-விற்கே வாக்கு பதிவாகிறது என எதிர்க்கட்சியினர் போராட்டங்களில் ஈடுப்பட்டனர். தற்போது தொடர்ச்சியாக வாக்குப்பதிவு விவரங்களில் முன்னுக்குபின் முரணான தகவல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது. இவையெல்லாம், தேர்தல் ஆணையம் பா.ஜ.க-வுடன் கள்ளக்கூட்டு வைத்துக்கொண்டு தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டு வருகிறது என்பதை அப்பட்டமாகக் காட்டுகிறது.
பா.ஜ.க-விற்கு முற்றும் நெருக்கடி
ஒருபுறம் தேர்தல் ஆணையத்தின் மோசடி நடவடிக்கைகள் விவாதத்தை கிளப்பியிருக்கும் அதேசூழலில், கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களை காட்டிலும் இத்தேர்தலில் வாக்கு விகிதம் குறைந்திருப்பது பா.ஜ.க-விற்கு நெருக்கடியாக மாறியுள்ளதும் விவாதப்பொருளாகியுள்ளது.
தற்போதய தேர்தலை போலவே ஏழு கட்டங்களாக நடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும்போது, முதற்கட்ட தேர்தலில் பதிவான வாக்கு விகிதம் கிட்டதட்ட நான்கு சதவிகிதமும், இரண்டாம் கட்ட தேர்தலில் பதிவான வாக்கு விகிதம் மூன்று சதவிகிதமும் குறைந்துள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்த 21 மாநிலங்களில் சுமார் 19 மாநிலங்களில் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.
குறிப்பாக, இந்தி பேசும் மாநிலங்களான (Hindi Heartland States) உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார் ஆகிய மாநிலங்களில் 2019 தேர்தலை விட வாக்கு சதவிகிதம் அதிகளவு குறைந்துள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளன. பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் வாக்குப்பதிவு குறைவது ஒரு போக்காக மாறியுள்ளது. ஏற்கெனவே தேர்தல் களத்தில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துவரும் பா.ஜ.க-விற்கு தன்னுடைய செல்வாக்கு மண்டலமாக திகழ்ந்த மாநிலங்களில் வாக்குப்பதிவு குறைந்து வருவது தலைவலியாக மாறியிருக்கிறது.
வாக்குப்பதிவு நடந்த மாநிலங்களை இந்திபேசும் மாநிலங்கள், கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள், இந்தியாவின் பிற மாநிலங்கள் (தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் யூனியன் பிரதேசங்கள்) என மூன்று குழுக்களாக பிரித்து பகுப்பாய்வு செய்து ‘‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்” இணையதளம் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், முதற்கட்ட வாக்குப்பதிவில் இந்தி பேசும் மாநிலங்களில்தான் அதிகளவு வாக்குப்பதிவு குறைந்துள்ளது எனவும் அதைத்தொடர்ந்து கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு குறைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், முதற்கட்டமாக தேர்தல் நடந்த 102 தொகுதிகளில், 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது என்.டி.ஏ. கூட்டணி 50 தொகுதிகளையும் ‘‘இந்தியா கூட்டணி’‘ கட்சிகள் 49 தொகுதிகளையும் வென்றிருந்தது. தற்போது என்.டி.ஏ. கூட்டணியிடம் உள்ள 50 தொகுதிகளில் வாக்குப்பதிவு 5.1 சதவிகிதம் குறைந்துள்ளது. அதேசமயம் ‘‘இந்தியா கூட்டணி” கட்சிகள் வென்றிருந்த 49 தொகுதிகளில் 2.4 சதவிகிதம்தான் வாக்குப்பதிவு குறைந்துள்ளது என அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தரவுகள், பா.ஜ.க. வெற்றிப்பெற்ற இடங்களில்தான் வாக்குப்பதிவு அதிகளவு குறைகிறது என்பதைத் துலக்கமாகக் காட்டுகின்றன. இக்கருத்து மேலும் வலுசேர்க்கும் விதமாக பா.ஜ.க-வின் “இரட்டை இன்ஜின் அரசு” செயல்படும் இடங்களில் வாக்குப்பதிவு அதிகளவில் குறைந்துள்ளதாக ‘‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்” கட்டுரை குறிப்பிடுகிறது.
சான்றாக, ராஜஸ்தானில் நான்கு மாதங்களுக்கு முன்பு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 74.62 சதவிகிதம் வாக்குகள் பதிவாகிருந்த நிலையில், தற்போது முதற்கட்டமாக நடந்த தேர்தலில் 57.65 சதவிகித வாக்குகள்தான் பதிவாகியுள்ளது. கிட்டத்தட்ட 17 சதவிகித வாக்குகள் குறைந்துள்ளன. ராஜஸ்தான் தேர்தலோடு இணைத்து நடத்தப்பட்ட மத்தியப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் 76.22 சதிவிகித வாக்குகள் பதிவாகிருந்த நிலையில், தற்போது முதற்கட்டத்தில் 67.75 சதவிகித வாக்குகள்தான் பதிவாகியுள்ளது. 9 சதவிகித வாக்குகள் குறைந்துள்ளன.
இதேபோல், உத்தரப்பிரதேசத்தில், 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, பா.ஜ.க. ஐந்து லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற காசியாபாத் தொகுதியில், வாக்குப்பதிவு 55.89 சதவிகிதத்திலிருந்து 49.88 சதவிகிதமாக குறைந்துள்ளது. அதேபோல், 2019-இல் மூன்று லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வெற்றிபெற்ற கௌதம புத்தா நகரில், 60.49 சதவிகிதத்திலிருந்து 53.63 சதவிகிதமாக குறைந்துள்ளது.
இதுகுறித்து ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் வெளியிட்ட ஒரு கட்டுரையில், பா.ஜ.க. மீது மக்கள் வெறுப்படைந்துள்ளதால் வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது என பா.ஜ.க-வை சேர்ந்தவர்களே விளக்குவதாக தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க-வின் மாவட்ட பிரச்சார மேலாளர்களில் ஒருவரான அனிருத் சிங், ‘‘ராமர் கோவில் திறப்பு ஏற்படுத்திய தாக்கம் உச்சத்தில் இருந்த பிப்ரவரி-மார்ச் மாதங்களில் தேர்தல் நடத்தப்பட்டிருந்தால், ஏராளமான தேர்தல் பலன்களைப் பெற்றிருக்க முடியும். ஆனால், கோவில் திறப்பு விழாவிற்குப் பிறகு மோடிக்கான மக்கள் ஆதரவைப் பெறுவதில் பா.ஜ.க. தோல்வியடைந்துவிட்டது. மத உணர்வானது வேலையின்மை மற்றும் பணவீக்கம் போன்ற பிரச்சினைகளால் பெருமளவில் மாறிவிட்டது” என்றுக் கூறியுள்ளதை அக்கட்டுரை குறிப்பிடுகிறது.
படிக்க: எதிர்க்கட்சிகளுக்கு ஜனநாயகமின்றி நடந்து கொண்டிருக்கும் தேர்தல்
மேலும், பா.ஜ.க-வின் தீவிர ஆதரவாளர்கள் சிலரே, ‘‘இம்முறை நோட்டாதான் (None of the above) சிறந்த தேர்வு” என வாட்ஸ்அப் குழுக்களில் பதிவிட்டுள்ளார்கள். இது குறித்து பேசிய பா.ஜ.க. செயற்பாட்டாளர் ஒருவர், ‘‘இந்த முறை எந்த உற்சாகமும் இல்லை. விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், வருமானம் உயராமல் இருப்பது மக்கள் மத்தியில் கோபத்தை உருவாக்கியுள்ளது. உள்ளூர் உள்கட்டமைப்பு பிரச்சினைகள் கூட பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ளது. மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்காத பயனற்ற அரசியலை புரிந்துக்கொள்ள பத்தாண்டு காலம் மிகவும் அதிகம். ஆனால், இம்முறை நாங்கள் மோடிக்கு வாக்களிக்கவில்லை என்றாலும் எங்கள் விசுவாசத்தை மாற்றிக் கொள்ளவில்லை” என்றார்.
இவ்வாறு பா.ஜ.க. ஆதரவாளர்களே அக்கட்சிக்கு வாக்களிக்க விரும்பாததும், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வாக்குப்பதிவு குறைவதும் பா.ஜ.க-விற்கு பெரிய நெருக்கடியாக உருவெடுத்துள்ளது.
எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி இல்லையா?
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வாக்கு சதவிகிதம் குறைவதற்கான காரணமாக பல வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. மோடி தோற்கடிக்க முடியாதவர் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளதால் மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை; மோடியின் மதவெறுப்பு அரசியலால் மக்கள் சலிப்படைந்துள்ளனர்; மோடியின் பத்தாண்டுகால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள்விரோத திட்டங்கள், வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்றவை மக்களை ஒருவித சோர்வு (Fatigue) மனநிலைக்கு தள்ளிவிட்டது என பல வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இதில் பாதி உண்மை உள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கட்டுரையில் மக்கள் சிலர் இவ்வாறான கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர். சான்றாக, சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராஜ்நந்துகாவுன் என்ற மாவட்டத்தில் இருந்து பேசிய விகாஷ் குமார், ‘‘பா.ஜ.க. தன்னுடைய ஆட்சியின் சாதனைகள் மூலம் வாக்குகளை கேட்பதற்கு மாறாக வகுப்புவாதத்தின் மூலம் பிரச்சாரத்தை மேற்கொள்வதால் நாங்கள் ஆர்வத்தை இழந்துவிட்டோம்” என்று கூறியுள்ளார். அதேபோல், உத்தரப்பிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் கடை வைத்துள்ள இஸ்லாமியரான கமல் அப்பாஸ், ‘‘தேர்தலில் மோடி கட்சிதான் வெற்றிப்பெறும் என்பதால் வாக்களிக்க தனது சொந்த ஊரான பிரயாக்ராஜுக்கு சென்று நேரத்தையும் பணத்தையும் வீணடிக்க மாட்டேன். பெரும்பான்மை ஆட்சியில் சிறுபான்மையினரின் வாக்குகள் எங்கும் நிற்காது. நேரத்தை வீணடிப்பதில் அர்த்தமில்லை” என்றுக் கூறியுள்ளார்.
ஆனால், வாக்குசதவிகிதம் குறைவதற்கு இது காரணம் இல்லை. பா.ஜ.க. வேண்டாம் என்று முடிவெடுத்துள்ள, பா.ஜ.க. ஆதரவாளர்கள் உட்பட பெரும்பான்மை மக்கள் பிரிவினர் பா.ஜ.க-விற்கு எதிராக எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்காமல் ஏன் தேர்தலை புறக்கணிக்கிறார்கள் என்பதில்தான் வாக்குப்பதிவு குறைவதற்கான முழுமையான காரணம் அடங்கியுள்ளது.
வாக்குப்பதிவு விகிதம் குறைந்துள்ளதை தொகுதி வாரியாக பரிசீலிக்கும்போது, இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் வாக்குப்பதிவு குறைந்துள்ளதை காண முடிகிறது. உத்தரப்பிரதேசம் கைரானாவில் 2019-இல் 67.45 சதவிகிதமாக இருந்த வாக்குப்பதிவு தற்போது 62.46 சதவிகிதமாக குறைந்துள்ளது. முசாபர்நகர் தொகுதியில் 68.42 சதவிகிதத்திலிருந்து 62.46 சதவிகிதமாகவும், மொராதாபாத் தொகுதியில் 65.46 சதவிகிதத்திலிருந்து 62.18 சதவிகிதமாகவும், ராம்பூர் தொகுதியில் 63.29 சதவிகிதத்திலிருந்து 55.85 சதவிகிதமாகவும் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.
இஸ்லாமியர்கள் பா.ஜ.க-வின் வாக்குவங்கி அல்ல. பெரும்பாலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வாக்குவங்கியாகவே கடந்த காலங்களில் இருந்துள்ளனர். ஆனால் அவர்கள் ஏன் இம்முறை எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை.
இதேபோல், 2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் தொகுதி வாரியாக ஒப்பிட்டு பார்க்கும்போது, ராஜஸ்தானின் கங்காநகர் மற்றும் சுன்சுனு, மத்தியப்பிரதேசத்தின் சிதி ஆகிய மூன்று தொகுதிகளில் சாராசரியை விட குறைவாக வாக்குப்பதிவாகியுள்ளது. இந்த மூன்று தொகுதிகளில், கங்காநகர், விவசாயிகளின் போராட்டத்தால் அதிகம் தாக்கம்புரிந்த தொகுதி. சுன்சுனு அக்னிபாத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் அதிகம் இருக்கும் தொகுதி. சிதி மத்தியப்பிரதேசத்தின் மிகவும் ஏழ்மையான பகுதி, 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக பழங்குடியின மற்றும் தலித் மக்கள் வாழும் சாதோல் நகரத்தை கொண்ட தொகுதி.
இத்தொகுதிகளில் உள்ள மக்களுக்கு பா.ஜ.க-விற்கு எதிரான மனநிலையும் போராட்ட உணர்வும் உள்ளது. ஆனால், இங்கும் மக்களின் வாக்குகள் எதிர்க்கட்சிகளுக்கு அறுவடையாகாமல் வாக்கு விகிதம் குறைந்துள்ளது. இங்குதான் விவாதிக்கப்பட வேண்டிய விசயமே உள்ளது.
பா.ஜ.க. வேண்டாம் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டாலும் பா.ஜ.க-விற்கு எதிரான சரியான மாற்று இல்லை என்பதே மக்கள் வாக்களிக்காமல் இருப்பதற்கான உண்மையான காரணமாக இருக்கிறது. மக்கள் வாக்களிக்காமல் இருப்பதால், பா.ஜ.க-விற்கு ஏற்படும் நெருக்கடியை பக்கம் பக்கமாக விளக்கும் பலர், பா.ஜ.க. எதிர்ப்பு மனநிலையில் இருக்கும் மக்கள் ஏன் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முன்வரவில்லை என்பதையும் அதனால், எதிர்க்கட்சிகளுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பதையும் விளக்காமல் சந்தர்ப்பவாதமாக மூடி மறைக்கின்றனர்.
மக்கள் கோருவது மாற்றுக் கொள்கை!
உண்மையில், மக்கள் சோர்வுற்று இருப்பதால் வாக்களிக்கவில்லை என்று கூறுவதே அயோக்கியத்தனமானது. மக்கள் போராட்டக் களத்தில் போர்குணத்தோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சோர்வுற்று இருப்பதென்னவோ எந்த மாற்றும் தென்படாத இந்த தேர்தலின் மீதுதான். அச்சோர்விற்கு பா.ஜ.க. மட்டுமின்றி எதிர்க்கட்சிகளுக்கும் பங்குள்ளது.
மோடிக்கும் பா.ஜ.க-விற்கும் எதிரான மக்களின் மனநிலை என்பது, மக்கள் விரோத திட்டங்களுக்கும், பாசசி கும்பல் நிறுவத்துடிக்கும் இந்துராஷ்டிர சர்வாதிகாரத்திற்கும் எதிரானது.
இவற்றிற்கு எதிராக தனியாக போராடிக் கொண்டிருக்கும் மக்களுடன் எதிர்க்கட்சிகள் கைக்கோர்த்து நிற்பதில்லை. கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராக மக்கள் போராடும்போது அவர்களை ஒடுக்கவும் செய்கின்றன. பா.ஜ.க-வின் பாசிச கொடுங்கோன்மைக்கும் மக்கள்விரோத சட்டங்களுக்கும் எதிரான போராட்டங்களில் மக்களுடன் தோளோடு தோள் நிற்காத, மக்கள் எதிர்க்கும் பாசிச சட்டங்களை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளிக்காத எதிர்க்கட்சிகளை மக்கள் எப்படி ஏற்றுக்கொண்டு மாற்றாக பார்ப்பார்கள்?
படிக்க: தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை இழப்பு!
சி.ஏ.ஏ. உள்ளிட்ட இஸ்லாமிய விரோத சட்டத்திட்டங்களை ரத்துச் செய்வோம், இஸ்லாமியர்களை ஒடுக்கும் ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார குண்டர் படைகளை தடை செய்வோம் என்ற உத்தரவாதத்தை அளிக்காத காங்கிரஸ் உள்ளிட்ட ‘‘இந்தியா” கூட்டணியினரை இஸ்லாமிய மக்கள் எப்படி மாற்றாக பார்ப்பார்கள்?
எனவே, மேற்சொன்ன எதையும் செய்யாமல், மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் மாற்றுக் கொள்கையையும் திட்டத்தையும் முன்வைக்காமல், மக்களின் பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளை மட்டும் அறுவடை செய்துகொண்டு தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துவிடலாம் என்று எதிர்க்கட்சிகள் பகல் கனவு கண்டால், அது கடைசிவரை பகல் கனவாக மட்டுமே இருக்கும் என்பதையே வாக்கு சதவிகித குறைவு உணர்த்துகிறது.
தலையங்கம்
புதிய ஜனநாயகம்
மே 2024
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
சரியான கருத்து தெளிவான பதிவு மற்றும் சிந்தனை அரசியல் போக்கை மக்கள் விரும்புகின்றார்கள் என்ற ஆதாரத்தை பதிவித்த வினவு தளத்திற்கு நன்றி
சமூகமாற்று அரசியல் கண்ணோட்டத்தை மக்கள் படிப்படியாக தன்னுடைய வாழ்நாள் நெருக்கடி அனுபவங்களில் இருந்து நடைமுறை உண்மைகளை புரிந்து கொண்டு உள்ளார்கள் இதனால் மாற்று அரசியல் பாதையை தேடுகின்றனர் என்பதை விளக்கிய கட்டுரைக்கு நன்றி