டந்து முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க 240 இடங்களைக் கைப்பற்றியது. “பா.ஜ.க. வேண்டாம்” என்ற பெரும்பான்மை மக்களின் கருத்திற்கு எதிராக மீண்டும் பாசிச கும்பல் ஆட்சி அமைத்துள்ளது. அதிகார பலம், பண பலத்தைப் பயன்படுத்தி மோடி-அமித்ஷா கும்பல் ஒரு “மேட்ச் பிக்சிங்” தேர்தலை நடத்தி வெற்றிபெற்றுள்ளது என்பதற்குத் தேர்தல் நடந்த விதமும் முடிவுகள் அறிவிக்கப்பட்ட விதமுமே சான்று. தற்போது மோடி கும்பலை வெற்றிபெறச் செய்ய தேர்தல் ஆணையம் அரங்கேற்றிய மோசடிகள் ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகிறது.

அந்தவகையில் தி குயின்ட் (The Quint) இணையதளம் ஆய்வு நடத்தி வெளியிட்ட கட்டுரையின் மூலம் தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கையில் நிகழ்த்திய தில்லுமுல்லு அம்பலமாகியுள்ளது.

அக்கட்டுரையில், நாடு முழுவதும் உள்ள 362 தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) மூலம் பதிவான 5,54,598 வாக்குகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் குப்பையில் போடப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் ஆணையம் 176 தொகுதிகளில் 35,093 வாக்குகளைக் கூடுதலாகப் பதிவு செய்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட இரண்டு இணைத்தரவுகளை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதில் முதல் தரவு தேர்தலின்போது இ.வி.எம்-இல் பதிவான முழுமையான வாக்குகளின் எண்ணிக்கை; இரண்டாவது தரவு தேர்தல்முடிவு அறிவிக்கப்பட்ட நாளில் ஒவ்வொரு தொகுதியிலும் எண்ணப்பட்ட இ.வி.எம் வாக்குகளின் எண்ணிக்கை. இவை இரண்டிற்கும் இடையே தரவுகள் மாறுபட்டுள்ளது என்பதை ஆதாரப்பூர்வமாக தி குயின்ட் நிறுவியுள்ளது.

இதனடிப்படையில், 542 மக்களவைத் தொகுதிகளில் 538 தொகுதிகளில் இ.வி.எம்-களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையும், முடிவு நாளில் எண்ணப்பட்ட இ.வி.எம் வாக்குகளின் எண்ணிக்கையும் பொருந்தவில்லை.


படிக்க: 2024 தேர்தல் முடிவுகள்: மக்கள் போராட்டங்களால் பாசிசத்தை வேரறுப்போம்!


சான்றாக, ஏப்ரல் 19-ஆம் தேதி, முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாட்டின் திருவள்ளூர் மக்களவை தொகுதியில் நடைபெற்றது. அதன்பிறகு மே 25 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்குப்பதிவு தரவுகளின்படி அங்கு 14,30,738 வாக்குகள் இ.வி.எம்-இல் பதிவாகியுள்ளன. ஆனால், வாக்குகள் எண்ணப்பட்ட நாளில் (ஜூன் 4) 14,13,947 வாக்குகள் மட்டுமே கணக்குக்காட்டப்பட்டுள்ளது. அதாவது 16,791 வாக்குகள் காணாமல் போயுள்ளது.

அதேபோல், அசாமின் கரீம்கஞ்ச் தொகுதியில், ஏப்ரல் 26-ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 11,36,538 வாக்குகள் தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி பதிவாகியுள்ளன. முடிவு நாளில் (ஜூன் 4) 11,40,349 வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. இங்கு 3,811 வாக்குகள் அதிகரித்துள்ளது.

இவ்வாறு இ.வி.எம்-இல் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டிற்கான காரணம் குறித்துத் தேர்தல் ஆணையத்திடமிருந்து முறையான எந்தப் பதிலும் இதுவரை கிடைக்கவில்லை என கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. இதுகுறித்து உத்தர பிரதேசத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி எக்ஸ் தளத்தில் (டிவிட்டர்) சில காரணங்களை முன்வைத்துள்ளார். ஆனால், அவர் கூறிய காரணங்கள் அடிப்படையிலேயே தர்க்கமற்றது.

“பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே வேறுபாடு ஏற்படலாம். ஏனெனில் சில வாக்குச் சாவடிகள், தேர்தல் ஆணையம் வழங்கிய தற்போதைய நெறிமுறையின்படி கணக்கிடப்படவில்லை’’ என்று கூறியுள்ளார். மேலும், எண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை, பதிவான இ.வி.எம்-இல் வாக்குகளின் எண்ணிக்கை மாறுபடுவதற்கு இரண்டு காரணங்களை அவர் முன்வைக்கிறார்.

ஒன்று, வாக்குச்சாவடியில் உண்மையான வாக்கெடுப்பைத் தொடங்குவதற்கு முன், தேர்தல் அதிகாரிகள் அங்குள்ள அரசியல் கட்சி முகவர்களின் முன்னிலையில் எந்திரம் சரியாக வேலை செய்கிறதா என்பதற்காக வாக்குகளை பதிவு செய்து பரிசோதனை செய்வார்கள். இவ்வாறு பதிவுசெய்யப்பட்ட வாக்குகளை உண்மையான வாக்கெடுப்பைத் தொடங்கும் முன், விவிபேட்டிலிருந்து (VVPAT) தேர்தல் அதிகாரி அகற்றத் தவறி இருக்கலாம்.

இரண்டாவது, தலைமை அதிகாரி தவறுதலாக எண்ணிக்கைகளை மாற்றிப் பதிவு செய்துவிட்டால், அவரால் தயாரிக்கப்பட்ட படிவம் 17சி-யில் உள்ள பதிவோடு கண்ட்ரோல் யூனிட்டில் பதிவான மொத்த வாக்குகள் பொருந்தாது என்று விளக்கம் அளித்துள்ளார். இவ்வாறு பொருந்தாமல் போகும் இ.வி.எம்-களில் பதிவான வாக்குகளை கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்களாம்.

இவ்வாறு அவர் கூறுவன எல்லாம் முற்றிலும் மழுப்பலானவை. தேர்தல் ஆணையத்தால் முறையாகப் பயிற்சி அளிக்கப்படும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் எப்படித் தவறுதலாக வாக்கு எண்ணிக்கையைக் கணக்கிட முடியும். ஒருவேளை தேர்தல் அதிகாரிகள் தவறுதலாகவே இதைச் செய்ததாக வைத்துக்கொண்டாலும், தேர்தல் நடந்த 543 மக்களவைத் தொகுதிகளில் 538 தொகுதியில் இருக்கும் தேர்தல் அதிகாரிகளும் இத்தவற்றைச் செய்திருப்பார்கள் என்று சொல்வது கேட்கவே கேலிக்கூத்தாக உள்ளது.

மாறாக, தேர்தல் ஆணையத்தின் இத்தகைய குளறுபடிகள் பல இடங்களில் பா.ஜ.க-வின் வெற்றிக்குத் துணைபுரிந்திருக்கிறது என்பது கட்டுரையில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. பல தொகுதிகளின் பா.ஜ.க. சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றுள்ளது. சான்றாக, அசாம் மாநிலம் கரீம்கஞ்சில் பதிவான வாக்குகளை விட எண்ணப்பட்ட வாக்குகள் 3,811 அதிகமாக உள்ளது. இத்தொகுதியில் பாஜக வேட்பாளர் கிருபாநாத் மல்லா 18,360 வாக்குகள் வித்தியாசத்தில் தனது வெற்றியைப் பதிவு செய்தார்.

அதேபோல் ஒடிசாவின் ஜாஜ்பூரில் தொகுதியில் பாஜக வேட்பாளர் ரவீந்திர நாராயண பெஹெரா 1,587 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், இத்தொகுதியில் பதிவான வாக்குகளை விட எண்ணப்பட்ட வாக்குகள் 809 அதிகமாக உள்ளது.


படிக்க: மீண்டும் பாசிச பா.ஜ.க. ஆட்சி: என்ன செய்யப் போகிறோம்? | பரப்புரை இயக்கம் | துண்டறிக்கை


உ.பி.,யின் அலிகரில், பா.ஜ.க-வின் சதீஷ் குமார் கவுதம், 15,647 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், அங்கு 5,896 வாக்குகள் எண்ணப்படவில்லை.

அதேபோல், அசாமின் கோக்ரஜார் தொகுதியில் மொத்தம் 12,40,306 வாக்குகள் பதிவாகிய நிலையில் 12,29,546 வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளது. சுமார் 10,760 வாக்குகள் மறைக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் ஐக்கிய மக்கள் கட்சி வேட்பாளர் ஜோயண்டா பாசுமதி 51,580 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதேபோல், ஒடிசாவின் தேன்கனலில் 11,93,460 வாக்குகள் பதிவாகிய நிலையில் 11,84,033 வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளது. சுமார் 9,427 வாக்குகள் மறைக்கப்பட்டுள்ளது. இப்படி நாடு முழுக்க சுமார் 538 தொகுதிகளில் இந்தக் குளறுபடிகள் நடந்தேறியுள்ளது. தேர்தலின்போது தேர்தல் ஆணையத்தின் அனைத்து நடவடிக்கையும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக இருந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் ஆணையம் நிகழ்த்தியுள்ள குளறுபடிகள் பட்டவர்த்தனமாக அம்பலமாகியுள்ளது.

இந்தியாவில் தேர்தல் மற்றும் அரசியல் சீர்த்திருங்களுக்காக செயல்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் (ADR) இணை நிறுவனர் ஜகதீப் சோக்கர் இந்த முரண்பாடுகளுக்குத் தேர்தல் ஆணையம் தொகுதி வாரியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், இதுவரை தேர்தல் ஆணையம் இந்த முரண்பாடுகள் குறித்து பொதுவான விளக்கத்தை மட்டுமே அளித்துள்ளது. அதுவும் டிவிட்டரில்தான். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைகள், “பொதுவெளியில் 17சி படிவத்தை வெளியிட வேண்டும்” என்ற வழக்கிற்கு வலுசேர்க்கும் விதமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்குத் துணைபோகும் விதமாக ஏப்ரல் 26 அன்று, உச்ச நீதிமன்றம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (இ.வி.எம் மெஷின்) வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை (VVPAT) சீட்டுகளுடன் முழுமையாகச் சரிபார்க்கக் கோரிய எதிர்க்கட்சிகள் உட்படப் பலரின் மனுக்களைத் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் ஆணையம் மோடி-அமித்ஷா கும்பலை வெற்றிபெற வைப்பதற்காகவே வேலை செய்து வந்தது. மோடி, இந்தியா முழுக்க பிரச்சாரம் செய்வதற்கு ஏற்றாற்போல் தேர்தல் தேதிகளை ஒதுக்கியது; தேர்தல் நடத்தை விதிகளை மீறி மோடியும் பாசிசக் கும்பலும் மதவாத இனவாத வெறுப்புப் பேச்சுகளைப் பேசியதைக் கைக்கட்டி வேடிக்கை பார்த்தது; எதிர்க்கட்சிகள் மீது தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டது போன்றவை தேர்தல் ஆணையம் பா.ஜ.க-வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது என்பதையே உணர்த்தியது.

தற்போது தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க-வுக்கு ஆதரவாகத் தேர்தல் ஆணையம் அரங்கேற்றியிருக்கும் குளறுபடிகள் அரசு எந்திரத்தின் ஒவ்வொரு உறுப்பையும் பா.ஜ.க. தனது அடியாட்படைபோல் மாற்றிச் செயற்படவைத்திருப்பதை மீண்டும் அம்பலப்படுத்துகிறது. எனவே, மக்கள் போராட்டங்களால் தோல்வி முகத்தில் இருக்கும் மோடி கும்பல், அரசு எந்திரத்தை தனது கைப்பாவையாகப் பயன்படுத்தி மூன்றாவது முறையாக ஆட்சிமைக்க நடத்திய இந்த மோசடித் தேர்தலையும், பாசிசக் கும்பலின் ஆட்சியையும் மக்கள் ஒருபோதும் ஏற்கப்போவதில்லை. பாசிச கும்பலுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் தொடரும். அத்தகைய மக்கள் போரட்டங்களை பாசிசத்தை வீழ்த்தும் பாதையை நோக்கி வளர்த்தெடுக்க வேண்டும்.

செய்தி ஆதாரம்: தி குயின்ட்


தீ

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க