ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல்களில் மகாராஷ்டிராவில் பா.ஜ.க. வெற்றிபெறும் என்றும் ஜார்க்கண்டில் பா.ஜ.க வெற்றிபெறலாம் அல்லது இழுபறி ஏற்படும் என்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்தன. ஆனால், ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி மொத்தமுள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளில் 56 தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளது.
இம்மாநிலத்தில் வெற்றிபெற மோடி-அமித்ஷா-ஆர்.எஸ்.எஸ். கும்பல் பல்வேறு சதித்தனங்களை மேற்கொண்ட போதிலும், தொடர்ந்து வெற்றிபெறும் தொகுதிகளைக் கூட இழந்து 21 தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க. வெற்றிபெற்றிருப்பது பாசிசக் கும்பலின் சதித்தனங்கள் மக்களிடையே எடுபடவில்லை என்பதையே காட்டுகிறது. இது பாசிசக் கும்பலுக்கு விழுந்த அடியாகும்.
மாதந்தோறும் பெண்களின் வங்கிக்கணக்கில் ரூ.1000 செலுத்துவது போன்ற ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் கவர்ச்சிவாதத் திட்டங்கள், மோடி அரசு தன்னுடைய கைப்பாவையான அமலாக்கத்துறை மூலம் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை பொய்வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்ததால் ஏற்பட்ட அனுதாப அலை போன்றவைதான் ஜார்க்கண்ட் தேர்தலில் பா.ஜ.க. வீழ்த்தப்பட்டதற்கான காரணங்கள் என செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், கவர்ச்சிவாதம், அடையாள அரசியல் உள்ளிட்ட இந்நடவடிக்கைகள் ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் மட்டுமின்றி, இதற்கு முந்தைய எல்லா தேர்தல்களிலும் எதிர்க்கட்சிகள் பின்பற்றும் வழமையான நடவடிக்கைகளே ஆகும். அத்தேர்தல்களில் எல்லாம் பா.ஜ.க. வீழ்த்தப்படவில்லை. பா.ஜ.க. நிச்சயம் தோல்வியடையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட சத்தீஸ்கர், ஹரியானா மாநிலங்களில் கூட பா.ஜ.க. வெற்றி பெறவே செய்தது. ஆனால், ஜார்க்கண்டில் பா.ஜ.க. தோல்வியடைந்திருப்பதற்கு முக்கிய காரணம் இத்தேர்தல் பழங்குடி மக்களின் உரிமைகள் தொடர்பான தேர்தலாக பார்க்கப்பட்டது. இந்த பத்தாண்டு கால பாசிச மோடி ஆட்சியில் பழங்குடி மக்கள் மீது கனிமவளக் கொள்கைக்காக போர் தொடுத்துவரும் பாசிசக் கும்பலின் மீதான எதிர்ப்புணர்வு வெகுவாக அதிகரித்துள்ளது.
இந்துமுனைவாக்க அரசியலை வீழ்த்திய
பா.ஜ.க. எதிர்ப்புணர்வு
ஜார்க்கண்ட் தேர்தலில் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தை தீவிரமாக மோடி-அமித்ஷா கும்பல் கையிலெடுத்தது. நவம்பர் 4-ஆம் தேதி சாய்பாசாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “ஊடுருவல்காரர்கள் உங்கள் மகள்களைப் பறித்து, நிலங்களை அபகரித்து, உணவைத் தின்று கொண்டிருக்கிறார்கள்” என்று இஸ்லாமிய வெறுப்பின் உச்சத்திற்கே சென்றார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியை ஊடுருவல்காரர்களின் கூட்டணி என குறிப்பிட்ட மோடி, அக்கூட்டணி தங்கள் வாக்குவங்கிக்காக மாநிலத்தின் மக்கள்தொகையை மாற்றுவதாகவும் அவதூறு பரப்பினார்.
நவம்பர் 3-ஆம் தேதி ராஞ்சியில் பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒவ்வொரு ஊடுருவல்காரர்களையும் கண்டறிந்து நாடு கடத்துவதாகவும், அவர்கள் அபகரித்த நிலங்களை மீட்பதாகவும் வெறுப்பை கக்கினார். வெறுப்பு பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்காக அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மாவும் ஜார்க்கண்டில் களமிறக்கப்பட்டார்.
மேலும், பா.ஜ.க. கும்பலானது தன்னுடைய ஊடக பலம் மற்றும் சமூக வலைத்தளக் கட்டமைப்பின் மூலமும் இஸ்லாமிய வெறுப்புணர்வை மக்கள் மத்தியில் தொடர்ந்து பரப்பிக் கொண்டிருந்தது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சரான ஹேமந்த் சோரன் வங்கதேச இஸ்லாமியர்களை ஜார்க்கண்டிற்குள் ஊடுருவச் செய்வது போன்று சித்தரித்து காணொளிகளை பரப்பியது. இத்தகைய இழிவான, பொய்யான நச்சுப்பிரச்சார காணொளிகள் தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் வரை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.
இருப்பினும், பா.ஜ.க. கும்பல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தோல்வியடைந்துள்ளது. கடந்த 2019 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மட்டும் தனித்து போட்டியிட்டு 25 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தது. தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் பழங்குடி மக்களின் வாக்குகளைக் கவர அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் கட்சியுடனும், பழங்குடியல்லாத மக்களின் வாக்குகளைக் கவர ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருந்தும், அக்கூட்டணி 24 தொகுதிகளை மட்டுமே வென்றுள்ளது.
அதிலும், பழங்குடி மக்களுக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில் சம்பை சோரன் போட்டியிட்ட சரைகேலா தொகுதியில் மட்டுமே பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. சம்பை சோரன் மகன் பாபுலால் சோரன், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் நிறுவனத் தலைவரான ஷிபு சோரனின் மருமகளான சீதா சோரன் உள்ளிட்ட கருங்காலிகளும் இத்தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ். கும்பல் பழங்குடி மக்கள் மத்தியில் வேலை செய்துவருகின்ற போதிலும் பா.ஜ.க. இத்தோல்வியை அடைந்துள்ளது. அதேபோல், பா.ஜ.க. கூட்டணி அமைத்திருந்த ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் கட்சியின் வாக்குகளும் பா.ஜ.க. எதிர்ப்பு காரணமாக புதியதாக தொடங்கப்பட்ட ஜார்க்கண்ட் லோக்தந்திரிக் கிராந்திகாரி மோர்ச்சா கட்சிக்கு சென்று 11 தொகுதிகளில் வாக்குகளைப் பிரித்து பா.ஜ.க. கூட்டணியை தோல்வியுறச் செய்துள்ளது.
மேலும், ஜார்க்கண்டில் வங்கதேச இஸ்லாமிய மக்கள் ஊடுருவுகின்றனர்; அவர்களால் பழங்குடி மற்றும் இந்து மக்களுக்கு ஆபத்து என்ற பா.ஜ.க. கும்பலின் நச்சுப்பிரச்சாரமும் களத்தில் எடுபடவில்லை. எதார்த்தத்தில் ஜார்க்கண்ட் பழங்குடியின மக்கள் இஸ்லாமிய மக்களுடன் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதை அம்மக்களே பத்திரிகைகளிடம் தெரிவிக்கின்றனர். மேலும், ஜார்க்கண்ட் பூர்வீகவாசி மற்றும் பழங்குடியின மக்கள் இஸ்லாமியர்களை அந்நியர்களாகவும் நடத்தவில்லை. உண்மையில், ஜார்க்கண்டின் பெரும்பாலான இஸ்லாமியர்கள் அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்களே.
இதனால் அசாமில் செயல்படுத்தப்பட்டதைப் போன்று “தேசிய குடிமக்கள் பதிவேட்டை ஜார்க்கண்டில் அமல்படுத்துவோம்; ஆவணங்களை சோதித்து ஊடுருவியர்களின் குடியுரிமையைப் பறிப்போம்” என்ற பா.ஜ.க-வின் வாக்குறுதியை பழங்குடி மக்கள் மட்டுமின்றி, பா.ஜ.க-வின் அடித்தளமாக விளங்கிய இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களும் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையாகவே பார்த்தனர்.
மேலும், 2014-ஆம் ஆண்டு ஜார்க்கண்டில் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க. பழங்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சோட்டா நாக்பூர் மற்றும் சந்தால் பர்கானா ஆகிய குத்தகைச் சட்டங்களை, நிலங்களை எளிதாக கையகப்படுத்தும் வகையில் திருத்தியது. சட்டத்திருத்தங்களுக்கு எதிராகப் போராடிய மக்களை ஒடுக்கிய பா.ஜ.க. குந்ததி மாவட்டத்தில் மட்டும் பத்தாயிரம் பேர் மீது ஊபா கருப்பு சட்டத்தை பாய்ச்சியது. கிராம சபைகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்கள் மற்றும் வனநிலங்களை பழங்குடி மக்களின் அனுமதியின்றி கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கும் வகையில் நிலவங்கி கொள்கையை உருவாக்கியது. தங்களின் உரிமைகளுக்காக போராடிய மக்களை துணை இராணுவப் படைகள் மற்றும் போலீசு மூலம் கடுமையாக ஒடுக்கியது.
இந்த ஒடுக்குமுறைகள் பழங்குடி மக்களிடம் பா.ஜ.க. எதிர்ப்புணர்வை விதைத்தன. இந்த எதிர்ப்புணர்வுதான், இஸ்லாமிய வெறுப்பூட்டி பழங்குடி மற்றும் இந்து மக்களை தன் அடித்தளத்தின் கீழ் திரட்டிக்கொள்ள விழைந்த பா.ஜ.க. கும்பலின் இந்துமுனைவாக்க அரசியலை களத்தில் முறியடித்தது.
மக்களின் பா.ஜ.க. எதிர்ப்புணர்விற்கும்
போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி
ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி இத்தேர்தலில் மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காக கவர்ச்சிவாதத் திட்டங்களையே நம்பியிருந்தது. மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளில் 68 தொகுதிகளில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளதால், இந்த கவர்ச்சிவாதத் திட்டங்கள் பெரும்பாலும் பெண்களைக் குறிவைத்தே இருந்தது.
18-25 வயதுடைய 52 லட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் “மைய சம்மான் யோஜனா” திட்டத்தை கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து செயல்படுத்தியுள்ளது. பா.ஜ.க. அதன் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,100 வழங்கப்படும் என்று அறிவித்தவுடன், பெண்களுக்கு வழங்கப்படும் தொகையை ரூ.2500-ஆக உயர்த்தி ஹேமந்த் சோரன் அரசு அரசாணையை வெளியிட்டது. மேலும், முதியோர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் முதியோர் ஓய்வூதியத் திட்டத்தை 50 லட்சம் முதியோர்கள் பயனடையும் வகையில் விரிவுபடுத்தியது; 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவது ஆகிய கவர்ச்சிவாதத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி இருக்கிறது.
இவ்வாறு பல கவர்ச்சிவாதத் திட்டங்களை நடைமுறைப்படுத்திய போதிலும், பா.ஜ.க-வின் இந்துமுனைவாக்க அரசியலுக்கு எதிராக ஹேமந்த் சோரன் முன்னெடுத்த பிரச்சாரமே மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
குறிப்பாக, பழங்குடி மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டுமெனில், தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த வேண்டும்; பழங்குடி மக்களுக்கு விலக்கு அளித்து பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க. நச்சுப் பிரச்சாரம் செய்த நிலையில், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் பொது சிவில் சட்டத்தையும் அமல்படுத்த மாட்டோம் என்று ஹேமந்த் உறுதியளித்தார். மேலும், பழங்குடி மக்களின் நில உடைமை உரிமைகளை மாநிலத்தில் அமலில் உள்ள சோட்டா நாக்பூர் மற்றும் சந்தால் பர்கானா குத்தகைச் சட்டங்கள்தான் பாதுகாக்கும் என்று பாசிசக் கும்பலின் பிரச்சாரத்திற்கு நேரெதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.
அதேபோல், இந்து என்பதற்கு பதிலாக தங்களை “சர்னா” மதத்தினராக அங்கீகரிக்க வேண்டுமென பல ஆண்டுகளாக வலியுறுத்திவரும் ஜார்க்கண்ட் பழங்குடியின மக்களின் கோரிக்கைக்கு முகங்கொடுத்தார். சர்னா மதத்தினராக அங்கீகரிப்பதன் மூலம் அரசியலமைப்பு சட்டத்திலுள்ள தங்களின் உரிமைகளை பாதுகாத்துக்கொள்ள முடியும் என பழங்குடி மக்கள் கருதுகின்றனர். 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது தங்களை சர்னா மதத்தினராக கணக்கெடுக்க வேண்டும் என பெரியளவிலான போராட்டங்களைக் கட்டியமைத்துள்ளனர். 2020-இல் பழங்குடி மக்களை சர்னா மதத்தினராக அங்கீகரிக்கக்கோரி ஹேமந்த் சோரன் அரசு தீர்மானம் நிறைவேற்றிய போதிலும் ஒன்றிய மோடி அரசு அதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்தது. இந்நிலையில், தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பில் சர்னா பழங்குடி மதத்தை சேர்ப்பதாகவும் பழங்குடி மக்களுக்கு சர்னா மதக் குறியீட்டை வழங்குவதாகவும் இத்தேர்தலின்போது ஹேமந்த் சோரன் வாக்குறுதியளித்துள்ளார்.
மேற்குறிப்பிட்ட வகையில், பா.ஜ.க. அரசியலுக்கு எதிராக மக்களின் கோரிக்கைகளை கையிலெடுத்தது, பா.ஜ.க-வின் சதித்திட்டத்தை முறியடித்ததோடு ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு மக்கள் ஆதரவை பெற்றுத் தந்தது.
இன்னொருபுறம், சமூக, ஜனநாயக அமைப்புகளும் இத்தேர்தலில் பா.ஜ.க-வின் மக்கள்விரோதத் திட்டங்களையும் இந்துமுனைவாக்கப் பிரச்சாரத்தின் அபாயத்தையும் விளக்கி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்துள்ளனர். பல்வேறு ஜனநாயக, சமூக அமைப்புகளின் கூட்டமைப்பான லோக்தந்த்ரா பச்சான் அபியான் குழு இந்தப் பிரச்சாரங்களில் முக்கியப் பங்காற்றியுள்ளது. இத்தகைய சமூக ஜனநாயக அமைப்புகளின் பணிகள் பா.ஜ.க. தோல்வியுறுவதில் முக்கியப் பங்காற்றியுள்ளன.
குறிப்பாக, சமூக ஜனநாயக அமைப்புகளும் பழங்குடி மக்களும் கனிம வளக் கொள்ளை, கார்ப்பரேட் நாசகரத் திட்டங்கள், மக்களின் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகள், பாசிசச் சட்டத்திட்டங்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வந்துள்ளனர். பா.ஜ.க. மீண்டும் ஜார்க்கண்டில் ஆட்சிக்கு வந்தால் ஏற்படும் அபாயத்தையும் உணர்ந்திருந்தனர். பழங்குடியல்லாத மக்களும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை தங்களுக்கு எதிரானதாக கருதியதோடு, வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து பேசாததால் பா.ஜ.க. மீது அதிருப்தி அடைந்தனர்.
ஆகவே, ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வீழ்த்தப்பட்டதானது ஜார்க்கண்ட் மக்களின் பா.ஜ.க. எதிர்ப்புணர்வுக்கும் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றியே ஆகும். மாறாக, முதலாளித்துவ பத்திரிகைகள் கூறுவதுபோல ஹேமந்த் சோரனின் கவர்ச்சிவாத அரசியலுக்கு கிடைத்த வெற்றியல்ல.
வெற்றியை தக்கவைக்க
மக்கள் கோரிக்கைகளுக்கு
முகங்கொடுக்க வேண்டும்!
ஜார்க்கண்டில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தற்போது வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான முயற்சியில் பாசிசக் கும்பல் ஈடுபடும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே ஆகும். ஏனென்றால் கனிமவளங்கள் நிறைந்த ஜார்க்கண்டில் அதானி-அகர்வால்-வேதாந்தா கும்பலின் கனிம வளக் கொள்ளையை கட்டற்ற முறையில் நடத்துவதற்கு ஆட்சி அதிகாரம் பா.ஜ.க. கையில் இருக்க வேண்டியது அவசியமானதாகும். ஆகவே, மாநிலத் தேர்தல்களில் தோல்வியடையும் போது ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுவதைப் போலவே ஜார்க்கண்டிலும் பா.ஜ.க. செயல்படும். அதற்கான அடிப்படைகளும் அம்மாநிலத்தில் உள்ளன.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் உள்ள தலைவர்கள் பாசிச எதிர்ப்பு சித்தாந்த ரீதியாக ஒன்றிணைக்கப்பட்டவர்கள் அல்ல. சம்பை சோரன் போன்ற முன்னணி தலைவர்களே பா.ஜ.க-வின் குதிரை பேரத்திற்கு விலைபோன நிலையில், தற்போது வெற்றிபெற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர்களையும் குதிரை பேரத்தின் மூலம் தன்பக்கம் இழுக்க பா.ஜ.க. முயலும். மேலும், இத்தேர்தலில் பா.ஜ.க. 33.2 சதவிகித வாக்குகளை பெற்றிருப்பதோடு ஜார்க்கண்ட் மக்களில் குறிப்பிட்ட பிரிவினர் மத்தியில் பா.ஜ.க. ஆதரவு மனநிலை உள்ளது. எனவே, வருங்காலங்களில் ஆர்.எஸ்.எஸ். மதவெறி அமைப்புகள் மூலமும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசுக்கு எதிரான சதி நடவடிக்கைகளின் மூலமும் இந்த அடித்தளத்தை பெருக்கிக்கொள்ளவே பா.ஜ.க. முயற்சிக்கும்.
மேலும், 2019-ஆம் ஆண்டில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் கார்ப்பரேட்டுகளின் கனிம வளக் கொள்ளைக்கு சேவை செய்யும் வகையிலேயே ஆட்சி செய்து வருகிறது. குறிப்பாக, பா.ஜ.க-வால் கொண்டுவரப்பட்ட நில வங்கிக் கொள்கையை ரத்து செய்வதற்கும், நிலங்களை கையகப்படுத்தும் வகையில் குத்தகை சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை நீக்குவதற்கும் மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், ஹேமந்த் சோரன் அரசு அதனை செய்யாமல் மக்களுக்கு துரோகமிழைத்து வருகிறது.
மக்கள் எதிர்ப்பையும் மீறி கார்ப்பரேட் நிறுவனங்களின் தண்ணீர் கொள்ளைக்காக 86 கிராமங்களை அழித்து கர்காய் ஆற்றில் இச்சா அணை கட்டுவதற்கு முயன்று கொண்டிருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டுவரும் சமூக செயற்பாட்டாளர்களை கொடிய கருப்புச் சட்டமான ஊபாவின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கிறது. சான்றாக, கிரிதி என்ற பகுதியில் உள்ள தொழிற்சாலை மாசுபாட்டினால் பழங்குடி மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை செய்திகளாக வெளியிட்டதற்காக 2022 ஜூலையில் ரூபேஷ் சிங் என்ற பத்திரிகையாளர் மீது ஊபா பாய்ச்சியது. அக்டோபர் 17-ஆம் தேதி நிலக்கரி சுரங்கம் அமைவதற்கு எதிராக போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது.
இதனால் மக்கள் மத்தியில் ஆளும் ஹேமந்த் சோரன் அரசின் மீதான எதிர்ப்பும் ஒருபக்கம் அதிகரித்து வருகிறது. ஜார்க்கண்டில் புதியதாக தொடங்கப்பட்ட ஜார்க்கண்ட் லோக்தந்திரிக் கிராந்திகாரி மோர்ச்சா கட்சிக்கு மக்கள் வாக்களித்திருப்பதும் அதன் தலைவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று வருவதும், ஜார்க்கண்ட் மக்களில் கணிசமானோர் ஹேமந்த் சோரன் கட்சியை மாற்றாக பார்க்கவில்லை என்பதை நிரூபிக்கிறது. இவ்வாறு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியானது பல கார்ப்பரேட் ஆதரவு திட்டங்களை செயல்படுத்தியும் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டும் வருவது பா.ஜ.க. கும்பலுக்கே சாதகமானதாக மாறும்.
எனவே, தேர்தலில் வாக்குறுதியளிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது, மக்கள் மத்தியில் உள்ள பா.ஜ.க. எதிர்ப்புணர்வை பாசிச எதிர்ப்பாக வளர்த்தெடுப்பதுதான் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஆட்சியை தக்கவைத்து கொள்வதற்கும் பா.ஜ.க-வை வீழ்த்துவதற்குமான ஒரே வழி.
ஆகவே, ஜார்க்கண்டில் பா.ஜ.க. காலூன்றுவதை தடுக்க நினைக்கும் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலான போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் நாசகரத் திட்டங்களையும் கனிம வளக் கொள்ளையையும் தடுத்து நிறுத்த வேண்டும். அத்தகைய மக்கள் போராட்டங்கள்தான் பாசிசக் கும்பல் ஜார்க்கண்டில் வேரூன்றுவதைத் தடுப்பதற்கும் அதன் அடித்தளத்தை அறுத்தெறிவதற்கும் வழிவகுக்கும்.
அமீர்
(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram