மீண்டும் பாசிச பா.ஜ.க. ஆட்சி: என்ன செய்யப் போகிறோம்?
ஜூன் – ஜூலை 2024 | பரப்புரை இயக்கம்
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
மக்களின் விருப்பமோ, வேண்டாம் பா.ஜ.க. ஆட்சி. இதற்காக சிந்திய இரத்தங்கள்… பணமதிப்பழிப்பு நடவடிக்கை தொடங்கி, கொரோனா ஊடரங்கின் நடைப்பிணங்களாக, ஆக்சிஜன் இன்மையால் மரணித்த உயிர்கள்… தொழில்நசிவினால் வாழ்விழந்த வியாபாரிகள், காடுகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட பழங்குடிகள், கொன்றொழிக்கப்பட்ட இசுலாமிய சகோதரர்கள், தலித்துகள்… காவி குண்டர்களாலும் கார்ப்பரேட் கொள்ளையர்களுக்காகவும் நடத்தப்பட்ட படுகொலைகள்… எத்தனை எத்தனை.
இசுலாமியர்களுக்கு வீடு இல்லை, அது புல்டோசர் ராஜ்ஜியம். உழைப்பவனுக்கு சுடுகாடும் இல்லை, அது மோடியின் கொரோனா ராஜ்ஜியம். தன்மானமுள்ளவர்களுக்கு இங்கு இடமே இல்லை, இதுதான் இந்துராஷ்டிரம்.
உழைக்கும் வர்க்கத்தின் சமாதியில் எழுகிறது இந்துராஷ்டிரம். உரிமைக்குரல்களோ, அதன் அஸ்திவாரங்களையே ஆட்டங்காணச் செய்துவிட்டது. எதிர்க்கட்சிகள் எல்லாம் நாடாளுமன்றக் கூடாரத்தில், மக்களோ போராட்டக் களத்தில்…
படிக்க : ஜல்லிக்கட்டுக்கு என்ன செய்தார் மோடி || தோழர் மருது
ஜல்லிக்கட்டின் தடை, ஸ்டெர்லைட், சி.ஏ.ஏ.,-என்.ஆர்.சி., மூன்று வேளாண் சட்டங்கள், அக்னிபாத், மணிப்பூர் இனப்படுகொலைகள்… மோடியின் சதித்திட்டங்களை எதிர்த்து நின்று உயிர்த்தியாகம் புரிந்த மக்களின் வீரம்தான் எத்தகையது… மோடிக்குப் பீதியூட்டி, விரட்டியடித்தது மக்கள் போராட்டங்களே அன்றி, நாடாளுமன்றத்தில் நடந்த சண்டமாருதங்கள் அல்ல.
மக்களுடன் இணையாத எதிர்க்கட்சிகள்… மோடியின் பாதியாக அவர்களது கொள்கைகள். இதன் வெளிப்பாடுதான் தேர்தல் முடிவுகள்.
இருப்பினும் வந்துவிட்டது, மீண்டும் பா.ஜ.க. மோடியின் ஆட்சி. என்ன செய்யப் போகிறோம்? இது, கோடான கோடி மக்களின் மனதில் கனன்று கொண்டிருக்கும் கேள்வி.
தேர்தல் முடிவுகள் உருவாக்கிய உணர்வலைகள் வியப்புக்குரியவை. தோல்வியடைந்தவர்களோ மகிழ்ச்சியில், வெற்றியடைந்தவர்களோ அதிர்ச்சியில்.
பாசிச மோடி, நாட்டின் வீதிகள் தோறும் உலாவந்து, வாக்குகளைச் சேகரிக்க ஏழு கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தல், எதிர்க்கட்சிகளை எதிரிகளாக்கிய அவரது அவதூறுகள், அப்பட்டமான பொய்கள், இசுலாமிய மக்களுக்கு எதிராகக் கக்கிய மதவெறி நெருப்புகள்… இவை அனைத்தையும் அங்கீகரித்து அவற்றை ‘இயல்பாக்கியது’ தேர்தல் ஆணையம். உச்சநீதிமன்றமோ தேர்தல் ஆணையத்தின் வழியில் பாசிசக் கும்பலின் ஆதிக்கத்தை ஆமோதித்தது. ஆம், நடந்து முடிந்தது மோடி-அமித்ஷா கும்பலின் தேர்தல்.
எனினும், தாங்கள் நடத்திய தேர்தலில் தமக்கே பெரும்பான்மை கிடைக்கவில்லையே? இது, பாசிசக் கும்பலின் வெற்றியுணர்வை வீழ்த்திய அதிர்ச்சி உணர்வு.
“சார் சோ பார்” நானூறு இடங்களில் வெற்றியாம். பாசிசக் கும்பலுக்கு இந்த முழக்கம் நாலு நொடிகளில் மறந்துபோய்விட்டது. எனினும், இவர்களுக்கு ஏற்பட்டுள்ள அதிர்ச்சிகளுக்கு இது ஒரு தொடக்கம்தான்.
தோற்றவர்களுக்கும் மகிழ்ச்சி! இது, சிலருக்கு வியப்பாக இருக்கலாம். மகிழ்ச்சிக்கான காரணம், ஒன்றியத்தில் “கூட்டணி ஆட்சி” அமைந்து, அது மோடியின் சர்வாதிகார ஆட்சிக்கு முடிவுகட்டிவிட்டதாம். “வலுவான எதிர்க்கட்சி”யாக காங்கிரசு வளர்ந்திருப்பது, இது ஜனநாயகத்திற்கு வலு சேர்ப்பதாம்.
“வலுவான எதிர்க்கட்சி”, “கூட்டணி ஆட்சி” இவற்றின் யோக்கியதையை அறியாதவர்களா மக்கள்?
அதானி குறித்துப் பேசினால், மைக் ஆஃப் செய்யப்படும்; பாசிசக் கும்பலின் சட்ட மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தால், எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அதன்பின்னர் மசோதா சட்டமாக்கப்படும். நாடாளுமன்றத்தின் மிச்சமீதமிருந்த மாண்புகள் எல்லாம் பழைய கட்டடத்திலேயே குழிதோண்டி புதைக்கப்பட்டன. புதிய கட்டடமோ, இந்துத்துவத்தின் அரங்கமாக அமைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கண்முன்னே நடந்த இவைதான், கடந்த பத்தாண்டுகால அனுபவங்கள்.
எதிர்க்கட்சிகளே, பதில் சொல்லுங்கள். உங்களுக்கு வலு இல்லாமல் போனது எதில், எண்ணிக்கையிலா, பாசிசத்தை எதிர்க்கும் நெஞ்சுரத்திலா?
குஜராத் கலவரங்களில் இசுலாமியர்கள் கொல்லப்பட்ட கொடுமையை நினைவில் கொண்டிருப்பவர்கள், “கூட்டணி ஆட்சி”யின் யோக்கியதைப் பற்றி பேச மாட்டார்கள். அன்று, 2002-இல் இதே தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான். நாடு போற்றும் ‘நல்லவர்’ வாஜ்பாய் தான் பிரதமர். கூட்டணியில் இருந்ததோ இதே நிதிஷ் குமாரும் சந்திரபாபுவும்தான். இவ்விருவரும், இசுலாமியர்கள் மீது நடந்த இனப்படுகொலையைத் தடுக்க, செய்தது என்ன? அல்லது படுகொலைக்கு கொடுத்த தண்டனைதான் என்ன? சந்திரபாபு நாயுடுவும் நிதிஷும் வெறும் பிழைப்புவாதிகள் மட்டுமல்ல, இந்துராஷ்டிரத் தேரை இழுத்துச் செல்லும் குதிரைகள்.
அன்று குஜராத், இன்று மணிப்பூர்; அப்போதும் இப்போதும் ஒன்றியத்திலும் மாநிலத்திலும் பா.ஜ.க. ஆட்சிதான்; அன்றைக்கு இருந்ததும் இதே கட்சிகளின் கூட்டணி ஆட்சிதான். ஒரு வேறுபாடு மிச்சமிருக்கிறது. அன்று குஜராத் கலவரங்களின் நாயகன், இன்று நாட்டின் பிரதமர், மூன்றாவது முறையாக!
“கூட்டணி ஆட்சி” பாசிசத்தை வளர்த்த கதை இது.
வரலாறு மறைந்துவிடவில்லை, வரலாற்றை மறைப்பது ஏன்? இதுதான், எதிர்க்கட்சிகளை நோக்கி நாம் எழுப்ப வேண்டிய கேள்வி.
பா.ஜ.க.விற்கு ஏற்பட்டிருப்பது தோல்வியல்ல, சறுக்கல். ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.விற்குள் இருக்கும் முரண்பாடு ஜனநாயகத்தை நோக்கிச் செல்வதற்கானதல்ல, இந்துராஷ்டிரத்தை நோக்கிச் செல்வதற்கானது. இதனைப் பார்த்து மகிழ்ச்சிக் கொள்வதற்கு என்ன இருக்கிறது?
2014-இல் தொடங்கிய மோடி-அமித்ஷா கும்பலின் பாசிசப் பேயாட்டத்தை தற்போதுவரை எதிர்க்கட்சிகளால் தடுக்க முடியவில்லை. பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. வரிமுறை, நீட் தேர்வு முறை, புதியக் கல்விக் கொள்கை, தொழிலாளர் சட்டத் திருத்தங்கள், குற்றவியல் சட்டத்திருத்தங்கள்… பாபர் மசூதி நிலத்தின் மீதான இறுதித் தீர்ப்பு, காஷ்மீருக்கான சிறப்புரிமை பறிப்பு, சி.ஏ.ஏ. நடைமுறைக்கு வந்தது… எதிர்க்கட்சிகளால் எதையாவது தடுக்க முடிந்ததா? இல்லை.
மக்கள் தடுத்தார்கள், உரிமைகளை மீட்டார்கள். மக்கள் போராட்டங்கள்தான் பாசிசக் கும்பலைப் பணியவைத்தது; அதைத் தோல்விமுகம் நோக்கித் திருப்பியது. ஓய்ந்து விடவில்லை…
தொடர்கின்றன மக்களின் போராட்டங்கள்.
இந்த நாடாளுமன்றம் இந்துராஷ்டிரத்திற்கான அரங்கம். இங்கு சென்று களமாடுவதால், பா.ஜ.க.வை வீழ்த்திவிட முடியாது. கார்ப்பரேட் அரசியலை முன்வைப்பவர்களிடம் உழைக்கும் மக்களுக்கான தீர்வைக் கேட்க முடியாது.
படிக்க : 2024 தேர்தல் முடிவுகள்: மக்கள் போராட்டங்களால் பாசிசத்தை வேரறுப்போம்!
மக்களுக்கான மாற்று வேண்டும். அரசியல், பொருளாதாரம், பண்பாடு அனைத்திலும் அது உருவாக்கப்பட வேண்டும். அதை உருவாக்குவது எப்படி?
விளங்கிக்கொள்வோம், பாசிசத்திற்கு எதிரான போராட்டம் சித்தாந்தப் போராட்டம்.
ஆம், அம்பேத்கர், பெரியார், பூலே, மார்க்ஸ்… மக்கள் தலைவர்களின் சித்தாந்தங்கள் இன்றைய காலத்திற்கு மறுநிர்ணயம் செய்யப்படும் போது, இந்துத்துவ சித்தாந்தம் சிதைந்தழிவதை உணரமுடியும்.
விடுதலைப் போரின் வீரமரபை வரித்துக் கொள்ளாமல், விடுதலை கிடையாது. ஆம், திப்பு, கட்டபொம்மன், பகத்சிங், வேலுநாச்சியார், ஜான்சிராணி… விடுதலைப் போராட்ட உணர்வு, போராட்டப் பண்பாடு – இவற்றை வரித்துக் கொள்ளும் போது, இந்துத்துவப் பண்பாடு மறைந்தொழியும்.
எட்டு மணி நேர வேலை, இலவசக் கல்வி, அனைவருக்கும் வேலை, குறு-சிறு தொழில்கள்… இழந்தவற்றை நினைத்துப் பாருங்கள், பெறவேண்டியவை புரியவரும்.
இன்றோ, நாடாளுமன்ற ஜனநாயகத்தை செல்லரித்து, இந்துராஷ்டிரம் அரங்கேறி வருகிறது. இனியும், செல்லரித்துப்போனதை மீட்கும் கனவைக் களைவோம்! புதியதைப் படைக்கும் புத்தார்வம் பெறுவோம்!
இறுதியாக, பாசிஸ்டுகள் என்றைக்கும் தோல்வியை ஒப்புக்கொள்ளப் போவதில்லை; ஏனெனில், அவர்கள் பாசிஸ்டுகள். மக்கள் எப்போதும் பாசிசத்தை ஏற்கப்போவதில்லை; ஏனெனில், அவர்கள் மக்கள்.
மக்களை நேசிப்பவர்கள், மார்க்சையும் பெரியாரையும் படிப்பவர்கள், அம்பேத்கரையும் பதக்சிங்கையும் பின்பற்றுபவர்களாகிய நாம் என்ன செய்யப் போகிறோம்? இதுதான், இன்றைய வரலாற்றுத் தருணத்தின் கேள்வி.
- பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை வடிவமைப்பதற்கான
மக்கள் எழுச்சிக்குத் தயாராவோம்! - வேண்டாம் பி.ஜே.பி, வேண்டும் ஜனநாயகம் என முழங்குவோம்!
- ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக!
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு-புதுவை.
தொடர்புக்கு:- 97916 53200; 94448 36642; 73974 04242; 99623 66321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube