மக்களுக்காக போராடுபவர்கள் ரவுடிகளா?
போலீசே! பொய் வழக்கு போடாதே!
அடக்குமுறையை நிறுத்து!
பரப்புரை இயக்கம்
அன்பார்ந்த வழக்குரைஞர்களே! மக்களே!
ஈராயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டை உயிர்த்துடிப்போடு வைத்திருப்பது எது? முற்போக்கு – சமூக நீதிக்கான மண்ணாக தமிழ்நாட்டை நிலை நிறுத்துவதற்கான மாபெரும் போராட்டத்தின் உயிர்மூச்சே அநீதிக்கெதிரான நம்முடைய போராட்ட உணர்வு தான். இன்றைக்கு நாம் பெற்றிருக்கின்ற உரிமைகள் அனைத்தும் போராட்டங்களால் விளைந்தவையே.
மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும் அரசியல் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து போராடிவருகின்ற போராளிகளைக் கிரிமினல்களாக சித்தரித்து பொய்வழக்குகளைப் போட்டு ரவுடிப்பட்டியலில் சேர்த்து அவர்களின் வாழ்வுரிமையையே பறிக்கின்ற இழிவான வேலைகளைத்தான் தமிழ்நாடு போலீசு செய்து வருகின்றது.
ஆதிக்க சாதி வெறியர்களும் மதவெறியர்களும் பொறுக்கிகளும் நில ஆக்கிரமிப்பு கும்பல்களும் சமூக விரோதிகளும் போலீசின் ஆதரவுடன் சுதந்திரமாக திரிந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மக்களுடைய அரசியல் – அடிப்படை உரிமைகளுக்காகப் போராடியவர்களோ போலீசின் பொய் வழக்குகளால் வாய்தா வாங்கவும் பிணை எடுக்கவும் நீதிமன்றங்களுக்கும் அமைதிக்கட்டுப்பாட்டு ஆவணம் எழுதிக்கொடுக்க ஆர்.டி.ஓ அலுவலங்களுக்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
நீட் தேர்வுக்கு எதிராகப் போராடுபவர்களையும் காவிரி உரிமைக்காகப் போராடியவர்களையும் சி.ஏ.ஏவுக்கு எதிராகப் போராடியவர்களையும் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று போராடியவர்களையும் சிப்காட்டுக்கு நிலம் கொடுக்க மறுத்தவர்களையும் பொய்வழக்குகள் போட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைப்பதும் ரவுடிப்பட்டியலில் சேர்த்து போராளிகளின் வாழ்வுரிமையைப் பறித்து அவர்களை கிரிமினல்களாக சித்தரிப்பதுதான் போலீசின் நோக்கம். ஏனென்றால் யாரும் உரிமைகளுக்காகப் போராடக் கூடாது, போலீசை எதிர்த்து யாரும் கேள்விகளைக் கேட்டுவிடக்கூடாது.
ஆதிக்க சாதியினரால் வன்கொடுமைக்கு உள்ளாகும் தலித் மக்களின் புகாரை எடுக்கவும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவுமே கடும் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் மக்களுக்காகப் போராடுவோர் மீது எளிதில் பொய்யாக பிசிஆர் வழக்கு போடப்படுகிறது.
பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் போலீசின் அணுகுமுறையை நாடறியும். ஆனால் மக்களுக்கு பட்டா வேண்டும் என்று போராடினால் கூட யாராவது ஒரு பெண்ணிடம் பொய்யாகப் புகார் பெற்று பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
ஆதிக்கச் வெறியர்கள் , தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தினாலும் கூட பாதிக்கப்பட்ட தலித் மக்களையே குற்றவாளியாக்குவதும் தலித் மக்களில் யார் மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடுகின்றார்களோ அவர்களையே பொய்யாக அவ்வழக்கிலேயே கைது செய்து துன்புறுத்துவதும் சாதாரண நிகழ்வுகளாகிவிட்டன.
மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடக்கூடியவர்கள் வழக்குரைஞர்களாகப் பதிவு செய்து விடக்கூடாது, அரசு வேலைகளுக்குச் சென்று விடக்கூடாது என்று தேடித்தேடி இளைஞர்கள் மீது குறிப்பாக தலித் இளைஞர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
கீழ் நிலை அதிகாரிகள் கூறுவதை எந்திர கதியாக அப்படியே எடுத்துக்கொள்ளக்கூடாது, குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளார்களா என்பதைப் பொறுத்தே ரவுடிப்பட்டியலில் வைக்கலாம் என்று உயர் நீதிமன்றம் பல முறை சுட்டிக்காட்டிய பின்னரும் கூட மக்களுக்காகப் போராடும் அரசியல் கட்சியினரை ரவுடிப்பட்டியலில் இணைப்பது என்பது அவர்களை இழிவு படுத்துவது மட்டுமல்ல; இது போன்று மக்களுக்காக யாரும் போராட முன்வரக்கூடாது என்பதுமே போலீசின் – மாவட்ட நிர்வாகங்களின் நோக்கமாக உள்ளது.
இந்த அநியாயத்திற்கு எதிராக நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். அனைத்திற்கும் மேலானது அரசியல் உரிமை. அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள போராடும் உரிமைகளைப் பறிக்கும் தமிழ்நாடு போலீசின் அராஜக நடவடிக்கைகளை நாம் எப்பாடுப் பட்டாவது தடுத்து நிறுத்த வேண்டும்.
ஒரு டி.எஸ்.பியோ – ஒரு இன்ஸ்பெக்டரோ – சப் இன்ஸ்பெக்டரோ – ஆர்.டி.ஓ நினைத்தால் யாரையும் ரவுடிப்பட்டியலில் இணைக்க முடியும் என்றால் இதற்குப் பெயர் ஜனநாயக நாடா? அரசமைப்பு வழங்கி இருக்கும் உரிமைகளை , மானுடம் தழைக்க இத்தனை ஆண்டு காலம் போராடிய மக்களின் உரிமைகளைப் பறிக்க இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்ற கேள்விகளை எழுப்புவோம்! தமிழ்நாட்டை போலீசு இராஜ்ஜியமாக மாற்ற அனுமதியோம்!
தன்னலமின்றி மக்களுக்காகப் போராடும் போராளிகள் மீது பொய்வழக்குகள் போட்டு கிரிமினல்களாக சித்தரிக்கும் போலீசின் அராஜகத்திற்கு முடிவு கட்டுவோம்!
தமிழ்நாடு அரசே!
மக்களுக்காகப் போராடும் அரசியல் கட்சியினர் மீது பொய் வழக்குகளைப் போடாதே!
மக்கள் போராளிகளை இரவுடிப் பட்டியலில் இணைத்து துன்புறுத்தாதே!
பொய் வழக்குகளைப்போட்டும் பொய்யாக ரவுடிப்பட்டியலிலும் இணைத்த போலீசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு!
- திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் திரு. கொளத்தூர் மணி அவர்கள் மீது வழக்குகள் இருப்பதால் , அவருக்கு பாஸ்போர்ட் புதுப்பிக்க மறுக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரே பாஸ்போர்ட் பெற முடிந்தது.
- சென்னையில் சிசிடிவி கேமராக்கள் வைத்ததில் உள்ள நிதிமுறைகேடுகளை அம்பலப்படுத்தியதால் வெல்பேர் கட்சியின் மாநிலத் துணைத்தலைவர் திரு. முகமது கவுஸ் அவர்கள் மீது கடந்த 5 ஆண்டுகளாக பொய் வழக்குகள் பதிவு செய்து ரவுடிப்பட்டியலிலும் இணைத்துள்ளனர்.
- செய்யாறு சிப்காட்டுக்கு எதிராகப் போராடிய அருள் ஆறுமுகம் உள்ளிட்டோர் மீது போலீசு குண்டர் தடுப்புச்சட்டம் பதிவு செய்தது. அதனை உயர் நீதிமன்றம் இரத்து செய்தது.
- ஜல்லிக்கட்டுப் போராட்டம், டங்ஸ்டன் எதிர்ப்புப்போராட்டம்,கிரானைட் குவாரிகளுக்கு எதிரானப் போராட்டம் போன்றவற்றில் முன்னிலை வகித்த தோழர் கம்பூர் செல்வராஜ் அவர்களை ரவுடிப்பட்டியலில் இணைத்தது மதுரை மாவட்டப்போலீசு. தற்போது கல்லாங்காடு சிப்காட்டுக்கு எதிராகப் போராடி வருவதால் அவர் மீது பொய்யாக பி.சி.ஆர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம், ஆதிக்க சாதி வன்கொடுமைகளுக்கு எதிரானப் போராட்டம், மணல் குவாரிகளுக்கு எதிரானப் போராட்டம் போன்றவற்றில் முன்னணியாக செயல்பட்ட மக்கள் அதிகாரக்கழக கடலூர் மாவட்டச் செயலாளர் திரு.முருகானந்தம் அவர்கள் மீது போலீசு தொடர்ந்து பொய் வழக்குகளைப்போட்டு அவரை ரவுடிப்பட்டியலிலும் இணைத்து அவரின் வாழ்வுரிமையை முடக்குகிறது.
- தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணியில் உள்ள மீன் கழிவு ஆலைகளுக்கு எதிராகப் போராடும் மக்கள் மீது பொய்யாக பி.சி.ஆர் வழக்குகளைப் போட்டுள்ளது.
- விமானநிலைய விரிவாக்கத்திற்கு எதிராகப் போராடிய பரந்தூர் மக்கள் மீது அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தனர் என்பது உள்ளிட்ட பல பொய் வழக்குகளை போலீசு போட்டுள்ளது.
கழக வழக்கறிஞர் அணி,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram