பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் (Aviation Turbine Fuel) ஆகிய எரிபொருள்களின் ஏற்றுமதி மீதான கொள்ளை இலாபத் தடுப்பு வரியை (Windfall Tax) பாசிச மோடி அரசு குறைத்திருக்கிறது. பெட்ரோல் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு ரூ.3-லிருந்து ரூ.1.50, டீசல் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு ரூ.16.50-லிருந்து ரூ.13.50, விமான எரிபொருளுக்கான ஏற்றுமதி வரி லிட்டருக்கு ரூ.16-லிருந்து 9.50 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரிக் குறைப்பு ஜூன் 1 அன்று அமலுக்கு வந்துள்ளது.
போர்ச்சூழல் போன்ற பல்வேறு உலகளாவிய அரசியல் நிகழ்வுகள் காரணமாக சர்வதேசச் சந்தையில் ஏற்படும் எரிபொருட்களின் விலையேற்றத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அதிக விலைக்கு எரிபொருட்களை ஏற்றுமதி செய்து கார்ப்பரேட்டுகள் கொள்ளை இலாபமடைவதை தடுக்கும் நோக்கத்திலிருந்தே கொள்ளை இலாபத் தடுப்பு வரி விதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், எரிபொருட்களின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தி உள்நாட்டில் எரிபொருள் இருப்பை தக்க வைப்பதற்காகவும் இவ்வரி விதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி 28 முதல் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது போர்த் தாக்குதலைத் தொடுத்து வருகின்றன. இதன் காரணமாக ஹார்மூஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் கடந்த மாதங்களில் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகிய எரிபொருட்கள் மீது கொள்ளை இலாபத் தடுப்பு வரி விதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது அந்த வரியை மோடி அரசு படிப்படியாகக் குறைத்து வருகிறது.
மார்ச் 26-ஆம் தேதி, டீசல் மீது லிட்டருக்கு ரூ.21.50, விமான எரிபொருள் மீது லிட்டருக்கு ரூ.29.50 ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டிருந்தது. ஏப்ரல் 11-ஆம் தேதி, அவை முறையே ரூ.55.50 மற்றும் ரூ.42 ஆக அதிகரிக்கப்பட்டது. ஆனால், ஏப்ரல் 30-ஆம் தேதி டீசல் மீதான வரி லிட்டருக்கு ரூ.23, விமான எரிபொருள் மீதான வரி லிட்டருக்கு ரூ.33 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மே 16-ஆம் தேதி, அவை முறையே ரூ.16.50 மற்றும் ரூ.16 ஆக மேலும் குறைக்கப்பட்டுள்ளது. ஜூன் ஒன்றாம் தேதி மறுபடியும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த ஏற்றுமதி வரிக் குறைப்பினால் ஆதாயமடைய இருப்பது அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Reliance Industries Limited) என்ற நிறுவனமே ஆகும். ஏனென்றால் அந்நிறுவனம் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ரஷ்யா உள்ளிட்ட உலகின் பல நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து, அதனை தன்னுடைய உலகின் மிகப்பெரிய குஜராத் ஜாம்நகர் ஆலையில் சுத்திகரித்து, எரிபொருட்களாக அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, தென் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியாவின் முதன்மை நிறுவனமாகும்.
ஆகவே, அம்பானி செல்வம் கொழிப்பதற்காகவே எரிபொருட்களுக்கான ஏற்றுமதி வரி மோடி அரசால் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலின் போர் தொடங்கிய போதே சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதித்திருக்கின்றன. போரினால் எழும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு, விலையேற்றம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டே அந்நாடுகள் இந்நடவடிக்கையை மேற்கொண்டன. குறிப்பாக, சீனா மிக அதிக அளவில் கச்சா எண்ணெய் கையிருப்பைக் கொண்டிருந்த போதிலும் எரிபொருட்கள் ஏற்றுமதிக்குத் தடை விதித்தது.
ஆனால், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலின் போர் தொடங்கிய போது இந்தியாவிலிருந்து எரிபொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு மோடி அரசு தடை விதிக்கவில்லை. மிகக் குறுகிய காலத்திற்குத் தேவையான கச்சா எண்ணெய்யை மட்டுமே சேமித்து வைத்துக் கொண்டுள்ள நிலையில் தன்னுடைய கச்சா எண்ணெய் கையிருப்பு திறனையும் அதிகரித்துக் கொள்ளவில்லை. மாறாக, அம்பானியின் நலனுக்காக எரிபொருட்களின் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கவே செய்தது.
மேலும், அமெரிக்காவிற்கு அடிபணிந்து ரஷ்யாவிடமிருந்து வாங்கும் கச்சா எண்ணெய்யில் அளவைக் குறைத்துக் கொண்டதாலும், அமெரிக்கா, வெனிசூலா நாடுகளிடமிருந்து அதிக விலைக்கு கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதாலும், ஹார்மூஸ் நீரிணை மூடப்பட்டதாலும் ஏற்பட்டுள்ள விலை ஏற்றத்தை மக்கள் தலையில் மோடி அரசு சுமத்தி வருகிறது.
மார்ச், ஏப்ரல் மாதங்களில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினால் மக்கள் மத்தியிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பும். அது ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளைப் பாதிக்கும் என்று மே 14-ஆம் தேதி வரை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் மோடி அரசு வைத்திருந்திருந்தது. அதன் பிறகான, 17 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.7 வரை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல, சமீப நாட்களில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும், கார்ப்பரேட் எண்ணெய் நிறுவனங்களின் கொள்ளை இலாபத்திற்காக நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை மோடி அரசு குறைக்க மறுத்து வருகிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 104 டாலரிலிருந்து 90 டாலராகக் குறைந்துள்ளதைச் சுட்டிக்காட்டி, நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைக்குமாறு அகில இந்திய வாகன மற்றும் சரக்கு போக்குவரத்து சங்கம் (All India Motor & Goods Transport Association) மோடி அரசை கடந்த மே 30-ஆம் தேதி வலியுறுத்தியிருக்கிறது.
இவ்வாறு, பாசிச மோடி அரசின் ஆட்சியானது அம்பானி-அதானி கார்ப்பரேட் கும்பல்கள் செல்வம் கொழிக்க உழைக்கும் மக்களின் மீது பொருளாதாரப் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடுக்கும் ஒரு பாசிச ஆட்சி என்பது மேற்கூறிய நடவடிக்கைகளின் மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
![]()
பிரவீன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











