
15.05.2026
பெட்ரோல், டீசல் விலை உயர்வு!
பாசிச மோடி அரசின் கையாலாகத்தனத்தை
மக்கள் தலையில் சுமத்தும் நடவடிக்கையே!
கண்டன அறிக்கை
ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேல் போரின் விளைவாக உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை மிகவும் கடுமையாக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவை கைப்பற்றியுள்ள டிரம்ப் – மஸ்க் பாசிச கும்பல், சரிந்து வரும் அமெரிக்க உலக மேலாதிக்கத்தைத் தக்கவைக்க வெனிசுலா நாட்டு இறையாண்மையை மீறி அதன் அதிபர் மதுரோவை நாடு புகுந்து கடத்தியது. தற்போது ஈரான் மீது தொடர்ந்து போரை நடத்தி வருகிறது.
ஈரான் தனது பாதுகாப்புக்காக ஹார்முஸ் நீரிணை வழியே செல்லக்கூடிய கப்பல்களுக்குத் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் பெட்ரோலிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடும் விலை உயர்வும் ஏற்பட்டுள்ளது.
ஈரான் மற்றும் ரஷ்யா மூலம் குறைந்த விலையில் இந்தியா தன்னுடைய கச்சா எண்ணெய் தேவையை ஈடு செய்து வந்தது. அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து, மேற்கண்ட இரண்டு நாடுகளிலும் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதையே நிறுத்தியது பாசிச மோடி அரசு.
இது மோடி அரசின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வியாகும். ஆனால், இது குறித்து வாய்திறக்க மறுக்கும் பிரதமர் நரேந்திர மோடியோ, பொது போக்குவரத்தை பயன்படுத்துங்கள், வீட்டிலிருந்தபடியே வேலை செய்யுங்கள் என்றெல்லாம் ஊரடங்கின் போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை தற்போது மேற்கொள்ளச் சொல்லி நாட்டு மக்களுக்கு ‘அன்பு கட்டளை’ இட்டுள்ளார்.
இந்நிலையில்தான், தற்போது பெட்ரோல், டீசல் விலை தலா 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை தற்போது உயர்த்தி இருப்பது ட்ரைலர்தான் என்று பல்வேறு ஊடகங்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றன.
கடந்த நான்கு ஆண்டுகளாக கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியில் இருந்த போதெல்லாம் விலையைக் குறைக்காத கச்சா எண்ணெய் நிறுவனங்கள் பல லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை கொள்ளை அடித்தன. தற்பொழுது கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டது என்று சொல்லி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது இந்த நாட்டு மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாகும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வானது அனைத்து பொருட்களின் விலையின் மீது தாக்கம் செலுத்துவதாகும். ஏற்கெனவே வணிக சிலிண்டர் விலை கடந்த மே மாதத்தில் ஒரே தடவையில் மட்டும் 993 ரூபாய் உயர்த்தப்பட்டது. இப்படி ஏற்கெனவே பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்த்தப்பட்ட நிலையில் அதன் காரணமாகப் பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. திறந்து வைக்கப்பட்டுள்ள உணவகங்களில் விலையோ தாறுமாறாக எகிறி உள்ளது. இதன் காரணமாக மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சூழலில் பாசிச மோடி அரசால் தற்பொழுது உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்கள் பிரிவினரையும் கடுமையாகப் பாதிக்கக் கூடியதாகும். டிரம்பை எதிர்க்கத் துப்பில்லாத பாசிச மோடி அரசு, டீசல் விலையை ஏற்றி நம்முடைய தலையில் கடும் சுமையை ஏற்றியுள்ளது. இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிப்பதுடன் விலை உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.
![]()
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





