இன்று காலை எழுந்தவுடன் நாடு முழுவதும் உள்ள மக்கள் தலையில் இடியை இறக்கும் விதமாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பாசிச மோடி அரசு உயர்த்தியுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலையைச் சுமார் 3.10 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 3.08 ரூபாயும் உயர்த்தி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே பிரதமர் மோடி, “பொதுமக்கள் தங்கம் வாங்குவதைக் குறைக்க வேண்டும், வெளிநாட்டுப் பயணங்களைக் குறைக்க வேண்டும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும்” போன்ற ’அறிவுரைகளை’ வழங்கி வந்தார். சாத்தான் வேதம் ஓதுவது போல அவர் பேசிய சில நாட்களிலேயே, தற்போது இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது.
| நகரம் | பெட்ரோல் விலை
(புதியது) |
உயர்வு | டீசல் விலை
(புதியது) |
உயர்வு |
| சென்னை | ₹103.67 | ₹2.83 | ₹95.25 | ₹2.86 |
| டெல்லி | ₹97.77 | ₹3.00 | ₹90.67 | ₹3.00 |
| மும்பை | ₹106.68 | ₹3.14 | ₹93.14 | ₹3.11 |
| கொல்கத்தா | ₹108.74 | ₹3.29 | ₹95.13 | ₹3.11 |
ஏற்கெனவே, சிலிண்டர் தட்டுப்பாட்டால் நாடுமுழுவதும் மக்கள் சொல்லொணா துன்பங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். உணவகங்கள், விடுதிகள் போன்ற தொழில்கள் முடங்கிவருகின்றன. புலம்பெயர் தொழிலாளர்கள் சிலிண்டர் தட்டுப்பாட்டால், சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். நீண்ட நேரம் வரிசையில் சிலிண்டர் வாங்க காத்திருக்கும் மக்கள் உயிரிழக்கும் அவலமும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
இந்த எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல மே 1 அன்று வணிக சிலிண்டர் விலையை அதிரடியாக ரூ. 993 அளவுக்குக் கடுமையாக உயர்த்தியது. இப்போது எரிபொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால், வெளிமாநிலங்கள் மற்றும் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு வரும் காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், சிலிண்டர் விலை உயர்வுடன், காய்கறிகளின் விலையும் அதிகரிப்பதால் உணவகங்களில் உணவின் விலை சாமானியர்களின் கைக்கு எட்டாத உயரத்திற்குச் செல்லும். இதுமட்டுமன்றி, பேருந்து கட்டணம் உயர்வு மற்றும் ஓலா, உபெர் போன்ற வாடகை வாகனங்களின் கட்டணங்கள் உயர்வு என நடுத்தர வர்க்கத்தின் கழுத்தை நெரிக்கும் ஒரு பொருளாதார நெருக்கடியை மோடி அரசு மக்கள் மீது திணித்துள்ளது.
தற்போதைய விலை உயர்வுக்கு ஈரான் மீதான போரையும், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பையும் மோடி அரசு கைகாட்டுகிறது.
மேலும், கடந்த நான்கு ஆண்டுகளாக சில்லறை விற்பனை விலை உயர்த்தப்படாத நிலையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் (IOCL, BPCL, HPCL) நாளொன்றுக்கு சுமார் ₹1,000 கோடி இழப்பைச் சந்தித்து வருவதாகவும் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வாதிடுகிறார்.
படிக்க: சிலிண்டர் தட்டுப்பாடு: அமெரிக்க அடிமை மோடி அரசின் உழைக்கும் மக்கள் மீதான தாக்குதல்
ஆனால், மோடி அரசு கூறும் இந்த காரணங்கள் அனைத்தும் உண்மையா? கடந்த நான்கு ஆண்டுகளாகப் பெட்ரோல்-டீசல் விலையில் பெரிய அளவில் மாற்றமில்லை என்று மோடி அரசு பெருமை பேசினாலும், அதன் உண்மையான பலன் உழைக்கும் மக்களுக்குக் கிடைக்கவே இல்லை என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.
குறிப்பாக, 2022-ஆம் ஆண்டு ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கிய பிறகு, ரஷ்யாவிடம் இருந்து மிக மலிவான விலையில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் முதன்மை நாடாக இந்தியா மாறியது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 75 முதல் 80 டாலர் வரை வீழ்ச்சியடைந்த காலங்களிலும், மலிவு விலை ரஷ்ய எண்ணெய்யால் எண்ணெய் நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் கிடைத்தபோதும், இந்தியாவில் சில்லறை விற்பனை விலை பைசா அளவிற்குக் கூட குறைக்கப்படவில்லை. சர்வதேசச் சந்தையில் விலை குறையும் போது அதன் பலனை மக்களுக்குக் கடத்தாத இந்த அரசு, விலை உயரும் போது மட்டும் அந்தச் சுமையை உடனடியாக மக்கள் தலைமீது சுமத்துவது எந்த விதத்தில் நியாயம்?
அதேசமயம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries) போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் எரிபொருள் ஏற்றுமதி மூலம் கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றன. ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் ரிலையன்ஸ் நிறுவனம், அதைத் தனது குஜராத் ஜாம்நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கிறது. பின்னர், அந்த எரிபொருளை ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளுக்குப் பல மடங்கு கூடுதல் விலைக்கு ஏற்றுமதி செய்து, பல்லாயிரக்கணக்கான கோடிகளை லாபமாகத் தனது பைகளில் நிரப்பிக் கொள்கிறது.
மறுபுறம், மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரியை (Excise Duty) தொடர்ந்து உயர்த்தி மக்கள் மீது கடும் வரிச்சுமையைத் திணித்து வருகிறது. 2014-ஆம் ஆண்டில் ₹99,000 கோடியாக இருந்த பெட்ரோலியப் பொருட்களின் மூலமாக மத்திய அரசின் வரி வருவாய், 2021-ஆம் ஆண்டில் ₹3.73 லட்சம் கோடியாக, அதாவது 277 விழுக்காடு அசுர வளர்ச்சி கண்டுள்ளது.
பகல் கொள்ளையாக உழைக்கும் மக்கள் மீது ஒருபுறம் இப்படி வரிச்சுமை ஏற்றப்படும் அதே வேளையில், மற்றொருபுறம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான பெருநிறுவன வரியை (Corporate Tax) 30 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாகக் குறைத்து, அவர்களுக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய் வரிச் சலுகைகளை மோடி அரசு வாரி வழங்கியுள்ளது. சுருக்கமாகச் சொன்னால், ஏழைகளின் வயிற்றில் அடித்து கார்ப்பரேட்டுகளின் கஜானாவை நிரப்பும் வேலையையே மோடி அரசு செய்து வருகிறது.
இதேபோல், இந்தியாவின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஒரு காலத்தில் ஈரான் மிக முக்கிய பங்காற்றி வந்தது. ஈரானிடமிருந்து இந்தியா குறைந்த விலையிலும், இந்திய ரூபாய் பரிவர்த்தனை (Rupee-Rial mechanism) மூலமாகவும் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வந்தது. இது நமது நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை (Forex Reserves) நிலைநிறுத்தப் பெருமளவில் உதவியது. ஆனால், 2019-ஆம் ஆண்டில் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தபோது, டிரம்ப் மிரட்டலுக்குப் பணிந்து ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை மோடி அரசு முற்றிலுமாக நிறுத்தியது. இதன் மூலம் இந்தியாவின் இறையாண்மையையும் எரிசக்தி பாதுகாப்பையும் அமெரிக்காவின் நலன்களுக்காக அடகு வைத்தது.
இந்த அடிமைத்தனம் தற்போது ரஷ்ய எண்ணெய் விவகாரத்திலும் வேறு வடிவத்தில் அரங்கேற்றி வருகிறது. உக்ரைன் போருக்குப் பின் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்கியதற்காக, டிரம்ப் நிர்வாகம் இந்தியப் பொருட்கள் மீது 25 விழுக்காடு தண்டத்தொகையை (Penalty Tariff) விதித்த உடனே, அதற்குப் பயந்து இந்தியா சத்தமில்லாமல் தன் இறக்குமதியைக் குறைத்துக் கொண்டது. இந்நிலையில், சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்துவரும் நிலையில், இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கிக்கொள்ள அமெரிக்க அதிபர் பாசிஸ்ட் டிரம்ப் ‘அனுமதி’ அளித்துள்ளார்.
அதாவது, இந்தியா யாரிடம், எப்போது, எவ்வளவு எண்ணெய் வாங்க வேண்டும் என்பதை இந்தியாவின் பெட்ரோலியத் துறை அமைச்சகம் தீர்மானிக்கவில்லை; மாறாக, அமெரிக்க அதிபர் டிரம்ப்தான் முடிவு செய்கிறார்! டிரம்ப் கட்டளைக்கு இணங்கவில்லையென்றால் இந்தியாவிற்கு அபராதம் விதிக்கப்படும். இதுதான் அமெரிக்க அடிமை மோடி ஆட்சியில் இந்தியா அடைந்திருக்கும் இழிநிலை. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும் எரிசக்தித் தேவையும் இன்று அமெரிக்காவின் பிடியில் சிக்கியுள்ளது.
இதன் விளைவாகவே, இன்று நம் நாடு மிகத் தீவிரமான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. அம்பானி, அதானி போன்ற உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாமரம் வீசுவதும், அமெரிக்காவின் மேலாதிக்க நலன்களுக்கு மண்டியிடுவதும்தான் பாசிச மோடி அரசின் கொள்கைகளாக உள்ளது.
தற்போதைய உலகளாவிய சூழலில் கூட, அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளின் லாபம் சரிவடைவதைத் தடுத்து, அவர்களின் கஜானாவைப் பாதுகாக்கவே இந்தத் திடீர் விலையேற்றத்தைக் கொண்டு வந்து உழைக்கும் மக்களை மோடி அரசு நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. எனவே, கார்ப்பரேட்டுகளுக்கும் அமெரிக்காவிற்கும் சேவை செய்யும் இந்த பாசிச மோடி அரசை வீழ்த்தாமல், மக்கள் இந்த ஒட்டுமொத்த நெருக்கடியிலிருந்து மீள முடியாது.
![]()
அகதா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











