சிலிண்டர் தட்டுப்பாடு: அமெரிக்க அடிமை மோடி அரசின் உழைக்கும் மக்கள் மீதான தாக்குதல்

சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலை குறையும்போது அம்பானிகளின் கஜானாவை நிரப்பிய மோடி அரசு, விலை உயரும்போது மட்டும் அந்த பாரத்தை மக்களின் முதுகில் ஏற்றுகிறது. இந்த அமெரிக்க அடிமை - கார்ப்பரேட் சேவக மோடி அரசு, ஆட்சியில் நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் இந்தியாவிற்குப் பேரழிவையே ஏற்படுத்தும்.

லகில் எண்ணெய் மற்றும் கனிமவளங்கள் நிறைந்த நாடுகளை வெறிநாய் போல மோப்பம் பிடித்து அவற்றை கபளீகரம் செய்யத்துடிக்கும் அமெரிக்காவின் மேலாதிக்க வெறியால் இன்று ஒட்டுமொத்த உலகமும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

“ஆபரேஷன் எபிக் பியூரி” (Operation Epic Fury) என்ற பெயரில் கடந்த பிப்ரவரி 28 அன்று, ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் தொடங்கிய போர் 13 நாட்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

இப்போரால் பாரசீக வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் இணைக்கும் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ளது. இதனால், உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலி நிலைகுலையத் தொடங்கியுள்ளது. பிப்ரவரி இறுதியில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 70 டாலராக இருந்த நிலையில், மார்ச் 9-ஆம் தேதிக்குள் அது 119.50 டாலரைத் தொட்டது.

உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) விநியோகத்தில் சுமார் 20 – 25 சதவிகிதம் இந்த ஹார்முஸ் நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. குறிப்பாக, இந்தியா தனது ஒட்டுமொத்த திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG) தேவையில் 60 சதவிகிதம் வரை இறக்குமதியையே நம்பியுள்ளது. அதில், 90  சதவிகித இறக்குமதி ஹார்முஸ் நீரிணை வழியாகவே வருகிறது. இதனால், இந்தியாவில்  எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இதனைச் சமாளிப்பதற்கு வக்கற்ற பாசிச மோடி அரசு இந்நெருக்கடியின் சுமையை மக்களின் மீது  சுமத்தி வருகிறது.

மோடி அரசு மார்ச் 7, 2026 அன்று இந்தியாவில் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டர் விலையை 60 ரூபாயாகவும் 19 கிலோ எடையுள்ள வணிக ரீதியிலான சிலிண்டர் விலையை 144 ரூபாயாகவும் உயர்த்தியுள்ளது. மேலும், முன்னர் சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கு 21 நாட்களாக இருந்த இடைவெளியை, தற்போது 25 நாட்களாக அதிகரித்துள்ளது. உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான வணிக சிலிண்டர் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. “தட்டுப்பாடு இல்லை” என தற்போதுவரை பொய்ப் பிரச்சாரம் செய்துவரும் மோடி அரசு, எவ்வித முன்னறிவிப்புமின்றி மேற்கொண்ட இந்த நடவடிக்கைகள் உழைக்கும் மக்கள் மீது தொடுக்கப்பட்ட பொருளாதாரப் பயங்கரவாதமாகும்.

70 நாட்களுக்கு சிலிண்டர் விநியோகத்தில் இடையூறு இருக்காது என மோடி அரசு தெரிவித்திருந்த நிலையில் திடீரென வணிகத்திற்கான சிலிண்டர் நிறுத்தப்பட்டிருப்பது உணவக உரிமையாளர்களுக்குப் பேரிடியாக அமைந்துள்ளது. சிலிண்டர் தட்டுப்பாட்டால் சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களில் பல உணவகங்கள் மற்றும் விடுதிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், மீண்டும் கொரோனா ஊரடங்கைப் போன்றதொரு நிலையை எதிர்கொள்ளப் போகிறோமோ என்ற அச்சம் தொழிலாளர்கள், மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டரை முன்பதிவு செய்து பல நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் காலி சிலிண்டர்களுடன் கேஸ் ஏஜென்சியை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலையில், கிராமப்புறங்களில் சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான இடைவெளியை 45 நாட்களுக்கு உயர்த்தி, ‘டிஜிட்டல் இந்தியா’வில் கிராமப்புற மக்களை அடுப்பூதும் நிலைக்கு தள்ளியுள்ளது மோடி அரசு.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு பெரும் நெருக்கடியாக உருவெடுத்துவரும் நிலையில், பா.ஜ.க. கும்பல் தட்டுப்பாடே இல்லை என்று பொய்யைப் பரப்பி வருகிறது. இதன் மூலம், எந்தவித முன்னறிவிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் பணமதிப்பழிப்பு, கொரோனா ஊரடங்கை அறிவித்து உழைக்கும் மக்களை கொன்றழித்தது போலவே தற்போதும் செயல்பட்டு வருகிறது மோடி அரசு.

அதேபோல், ஈரான் மீதான போரினால் ஏற்பட்ட விலை உயர்வை ஒரு சாக்காகப் பயன்படுத்திக்கொண்டு மோடி அரசு தனது பொருளாதாரக் கொள்கையின் தோல்விகளை மூடிமறைக்க முயல்கிறது. இன்று ஒட்டுமொத்த இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளதற்கு பாசிச மோடி அரசின் அமெரிக்க அடிமை சேவகமும், அம்பானி – அதானிகளின் கார்ப்பரேட் நல சேவையுமே முக்கிய காரணமாகும்.

இதனால்தான், ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேலின் அடாவடித்தனமான போர் இந்திய உழைக்கும் மக்களைப் பாதித்தாலும் மோடி அரசு அதற்குத் துணைபோகிறது. இந்தியாவிற்கு கடற்படை அணிவகுப்பில் (MILAN 2026) விருந்தினராகக் கலந்துகொண்டு நாடு திரும்பிய ஈரானின் “ஐரிஸ் டெனா” (IRIS Dena) கப்பலின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கான மாலுமிகளைப் படுகொலை செய்ததைக் கண்டிக்கக் கூட திராணியற்று நின்றது.

மோடி அரசின் அமெரிக்க அடிமைத்தனம்

இந்தியாவின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஈரான் ஒரு முக்கிய பங்காற்றி வந்தது. ஈரானிடமிருந்து இந்தியா குறைந்த விலையிலும், ரூபாய் பரிவர்த்தனையிலும் எண்ணெய்யை வாங்கி வந்தது. இது இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பை (Forex Reserves) பாதுகாக்க உதவியது. ஆனால், 2019-ஆம் ஆண்டில் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ஈரானின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தபோது, அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிந்து ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை மோடி அரசு முற்றிலுமாக நிறுத்தியது. சீனா போன்ற நாடுகள் அமெரிக்காவின் மிரட்டல்களைப் பொருட்படுத்தாமல் ஈரானிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கிவரும் நிலையில், மோடி அரசு இந்தியாவின் இறையாண்மையையும் எரிசக்தி பாதுகாப்பையும் அமெரிக்காவின் நலன்களுக்காக அடகு வைத்தது.

அதேபோல், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்காக அமெரிக்கா இந்தியாவிற்கு 25 சதவிகித தண்டத்தொகை விதித்த பிறகு சத்தமில்லாமல் எண்ணெய் இறக்குமதியைக் குறைத்துக் கொண்டது. இந்நிலையில், சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்துவரும் நிலையில், இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கிக்கொள்ள அமெரிக்க அதிபர் பாசிஸ்ட் டிரம்ப் ‘அனுமதி’ அளித்துள்ளார்.

அதாவது, இந்தியா யாரிடம், எப்போது, எவ்வளவு எண்ணெய் வாங்க வேண்டும் என்பதை  இந்தியாவின் பெட்ரோலியத்துறை அமைச்சகம் முடிவு செய்யாது; மாறாக அமெரிக்க அதிபர் டிரம்ப்தான் முடிவு செய்வார். டிரம்ப் கட்டளைக்கு இணங்கவில்லையென்றால் அபராதம் விதிக்கப்படும். இதுதான் அமெரிக்க அடிமை மோடி ஆட்சியில் இந்தியா அடைந்திருக்கும் இழிநிலை. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும் எரிசக்தித் தேவையும் இன்று அமெரிக்காவின் பிடியில் சிக்கியுள்ளது.

அம்பானி நலனே ‘தேச நலன்’

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது, அதன் பயனை மக்களுக்கு வழங்காமல் அம்பானி லாபம் கொழுப்பதற்குத் துணைபோன மோடி அரசு, தற்போது விலை உயரும்போது மட்டும் அந்தப் பாரத்தை உழைக்கும் மக்கள் தலையில் சுமத்துகிறது.

2022-ஆம் ஆண்டு ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கிய பிறகு ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா மாறியது. ஆனால், மலிவு விலையில் இந்தியா எண்ணெய்யை இறக்குமதி செய்தாலும் அதற்கான பலன் உழைக்கும் மக்களுக்குக் கிடைக்கவில்லை.

மாறாக, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் (Reliance Industries) நிறுவனம்தான் இதில் கொள்ளை லாபம் ஈட்டி வருகிறது. குறைந்த விலையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து, குஜராத் ஜாம்நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரித்து, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா நாடுகளுக்கு அம்பானி நிறுவனம் ஏற்றுமதி செய்து வருகிறது.

அதேபோல், சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலை குறைந்தாலும், மோடி அரசு பெட்ரோலிய பொருட்களுக்கான கலால் வரியை (Excise Duty) தொடர்ந்து உயர்த்தி மக்களிடமிருந்து கொள்ளையடித்தது. 2014-இல் 99,000 கோடி ரூபாயாக இருந்த பெட்ரோலிய வரி வருவாய், 2021-இல் 3.73 லட்சம் கோடி ரூபாயாக, அதாவது 277 சதவிகிதம் அதிகரித்துள்ளது. உழைக்கும் மக்கள் மீது வரிச்சுமை ஏற்றப்படும் நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை வாரி வழங்கியது.

மேலும், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) போன்ற திட்டங்கள் மூலம் ஏழைகளுக்கு இலவச சிலிண்டர் வழங்குகிறோம் என்ற பெயரில் சிலிண்டர் விலையை ஒரேயடியாக உயர்த்தியது. இன்று சிலிண்டர் விலை 900 ரூபாயைத் தாண்டியுள்ளது. ஆனால், இத்திட்டங்களின் கீழ் சொற்பத் தொகையாக வழங்கப்பட்டுவந்த மானியம் பெரும்பாலும் நிறுத்தப்பட்டுவிட்டது. மானியம் வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு 12-லிருந்து 9-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கூட, எரிவாயு மானியத்திற்கான நிதி 15,121 கோடி ரூபாயிலிருந்து 11,085 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அடிமை விலங்கை உடைப்போம்!
மக்கள் விரோத ஆட்சியை வீழ்த்துவோம்!

தற்போதைய எரிபொருள் விலை உயர்வும் தட்டுப்பாடும் போக்குவரத்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளது. அதனால் ஏற்படும் சுமையானது உழைக்கும் மக்களின் தலையிலேயே ஏற்றப்படும். எனவே, இது பாசிச மோடி அரசு உழைக்கும் மக்கள் மீது தொடுத்துள்ள நேரடிப் பொருளாதாரப் போராகும்.

ஒருபுறம் “டிஜிட்டல் இந்தியா”, “விஸ்வகுரு” எனப் போலிப் பிம்பங்களைக் காட்டி ஏய்த்துக் கொண்டே, மறுபுறம் அமெரிக்காவின் காலடியில் இந்தியாவின் இறையாண்மையை அடகு வைத்து வருகிறது இந்திய மோடி அரசு. டிரம்பின் மிரட்டலுக்கு அடிபணிந்து அமெரிக்காவுடன் பல்வேறு அடிமை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகிறது. இதன் மூலம் இந்திய விவசாயத்தை அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிடுவதோடு, ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடியோடு அழிக்கப் பார்க்கிறது.

சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலை குறையும்போது அம்பானிகளின் கஜானாவை நிரப்பிய மோடி அரசு, விலை உயரும்போது மட்டும் அந்த பாரத்தை மக்களின் முதுகில் ஏற்றுகிறது. இந்த அமெரிக்க அடிமை – கார்ப்பரேட் சேவக மோடி அரசு, ஆட்சியில் நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் இந்தியாவிற்குப் பேரழிவையே ஏற்படுத்தும்.

எனவே, “இந்தியாவின் எரிசக்தித் தேவையைத் தீர்மானிக்க வேண்டியது இந்திய மக்களே தவிர, அமெரிக்க அதிபர் டிரம்ப் அல்ல! மக்களின் வரிப்பணத்தில் கொழுக்கும் கார்ப்பரேட்களின் நலன்களுக்காக, ஏழை விவசாயிகளையும் தொழிலாளர்களையும் பலிகொடுப்பதை அனுமதிக்க மாட்டோம்!” உள்ளிட்ட முழக்கங்களை முன்வைத்து பாசிச எதிர்ப்பு சக்திகள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.

போலி தேசபக்தி பேசி மக்களை ஏமாற்றும் இந்த பாசிசக் கும்பலின் முகத்திரையைக் கிழித்து எறியும் வகையில் உழைக்கும் மக்களை ஒன்றுதிரட்டிப் போராடுவதன் மூலமே இந்த விலைவாசி உயர்விற்கும், அடிமைத்தனத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.


அகதா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads