11.06.2026
உஜ்வாலா மானிய சிலிண்டர்கள் எண்ணிக்கையை குறைத்து
ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் பாசிச மோடி அரசு!
பத்திரிகைச் செய்தி
மேற்கு ஆசியாவில் நடக்கும் போரை காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலையை பலமுறை உயர்த்திவிட்ட ஒன்றிய அரசு, வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையை கடந்த மார்ச் மாதத்திலிருந்து 2 முறை, மொத்தம் ரூபாய் 89 என்கிற அளவுக்கு உயர்த்தி விட்டது.
சாமானிய மக்களே சிலிண்டர் வாங்க திணறும் நிலையில், வறுமை கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு மற்றொரு அதிர்ச்சியாக அவர்களுக்கான மானிய விலை சிலிண்டர்கள் எண்ணிக்கையை 4-ஆக ஒன்றிய அரசு குறைத்துள்ளது.
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு சிலிண்டர் ஒன்றுக்கு ரூபாய் 300 மானியமாக வழங்கப்படுகிறது. ஆனாலும் உஜ்வாலா திட்ட பயனாளிகள் ஒரு சிலிண்டருக்கு ரூபாய் 642 செலுத்த வேண்டி இருக்கிறது. இதுவே ஏழைப் பயனாளிகளுக்கு பெரும் சுமையாக இருக்கிறது.
உஜ்வாலா திட்டம் கடந்த 2016-இல் அறிமுகப்படுத்தப்பட்ட போது, விறகு அடுப்பிலிருந்து வெளியேறும் புகையிலிருந்து பெண்களை உஜ்வாலா திட்டம் விடுவிக்கும் என மோடி கூறினார். ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அது கடந்த ஆண்டு 9-ஆக குறைக்கப்பட்டது. தற்போது 4-ஆக சுருக்கப்பட்டுள்ளது. இது தாய்மார்களை மீண்டும் விறகு அடுப்புக்கே திரும்ப வேண்டிய கட்டாயத்தில் தள்ளி உள்ளது.
நாடு முழுவதும் 10.55 கோடிக்கும் அதிகமான மக்கள் இத்திட்டத்தை சார்ந்துள்ள நிலையில், மானிய சிலிண்டர்கள் எண்ணிக்கை குறைப்பு கோடிக்கணக்கான ஏழை மக்களை நேரடியாக பாதிக்கும் என அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த 4 சிலிண்டர்களுக்கு பிறகு, ஏழை மக்கள் சந்தை விலையான ரூபாய் 942-க்கு சிலிண்டர் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இது அவர்களை மிகப்பெரிய நெருக்கடிக்குள் தள்ளிவிடுகிறது.
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையை மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, கிட்டத்தட்ட ரூபாய் 100 வரை உயர்த்தியிருக்கிறது. இதனால் சென்னையில் வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலை தற்போது 957.50-ஆக உள்ளது. கடைகளுக்கு பயன்படுத்தப்படும் வர்த்தக சிலிண்டர் விலை எப்போதும் இல்லாத புதிய உச்சமாக ரூபாய் 3283 எட்டி உள்ளது.
உஜ்வாலா திட்ட பயனாளிகள் அனைவரும் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள். 2016-ஆம் ஆண்டு வரை அவர்களின் பெரும்பாலானோர் சமையல் கேஸ் பயன்பாட்டிற்கு பழக்கம் இல்லாதவர்கள். அவர்களில் 10.58 கோடி பேரை சமையல் கேஸ் பயன்பாட்டிற்கு பழக்கிவிட்ட பிறகு, இப்போது மானிய சிலிண்டர் எண்ணிக்கையை 4-ஆக குறைத்திருப்பது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து ஒன்றிய பெட்ரோலிய அமைச்சக கூடுதல் செயலாளர் பிரவீன் கண்ணுஜா கூறுகையில், உஜ்வாலா திட்ட பயனாளிகளின் ஆண்டு சராசரி சிலிண்டர் நுகர்வை அடிப்படையாக வைத்து மானிய சிலிண்டர்கள் எண்ணிக்கை 4-ஆக குறைக்கப்பட்டுள்ளது. எனவே உஜ்வாலா பயனாளிகளுக்கு 4 சிலிண்டர் அவர்கள் ஆண்டு தேவைக்கு போதுமானதாக இருக்கும் என்றார்.
அப்படியெனில் எந்த அடிப்படையில் ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் வழங்கப்படும் என மோடி அரசு 2016-இல் அறிவித்தது. நாட்டின் உழைக்கும் மக்கள் என்ன சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை மோடி அரசே தீர்மானிக்கிறது.
கடந்த காலங்களில் வெங்காய விலை உயர்வு பற்றி கேட்டபோது, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாங்கள் எல்லாம் வெங்காயம், பூண்டு சேர்த்துக் கொள்வதில்லை என பாசிசத் திமிருடன் கூறினார். இதையே பாசிச மோடி அரசு ஒவ்வொரு திட்டங்களிலும் உழைக்கும் மக்கள் மீது அமல்படுத்துகிறது.
போரை காரணம் காட்டி, உழைக்கும் மக்களுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது பாசிச மோடி அரசு. இந்த நெருக்கடி மேலும் விரிவடையவே செய்யும். உழைக்கும் மக்கள் மீதான நெருக்கடி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இலாபமாகவே மாறும்.
கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்களுக்காக சேவை செய்யும் இந்த பாசிச மோடி அரசை வீழ்த்தாமல், உழைக்கும் மக்கள் மீதான பாசிச நடவடிக்கையை தடுத்து நிறுத்த முடியாது.
உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைவோம். பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை கட்டியமைக்க அணி திரள்வோம்.
பதிவு
மக்கள் அதிகாரக் கழகம்,
நெல்லை தூத்துக்குடி மாவட்டங்கள்.
9385353605
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











