அணுக்கனிம சுரங்க நீட்டிப்பு: த.வெ.க. அரசின் இரட்டை வேடம்!

அன்று இத்திட்டத்தை எதிர்த்த த.வெ.க., இன்று ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் ஒன்றிய அரசுக்கு அடிப்பணிந்து நில ஒதுக்கீட்டை நீட்டித்திருப்பது அதன் வர்க்கப் பாசத்தையே காட்டுகிறது.

மிழ்நாட்டின் கன்னியாகுமரி கடலோரப் பகுதியில் அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்கான நில ஒதுக்கீட்டு ஆணையை, மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

“இந்த நீட்டிப்பு வழங்கப்படாமல் இருந்திருந்தால் இத்திட்டம் முற்றிலும் ரத்தாகி இருக்கும். ஆனால் தற்போதைய  த.வெ.க. அரசாங்கத்தின் இந்த உத்தரவால் அடுத்த ஓராண்டிற்குள் சுற்றுச்சூழல் மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டலம் (CRZ) அனுமதிகளைப் பெற்று சுரங்கம் அமைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது” என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

தேர்தலுக்கு முன்பு இத்திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிய த.வெ.க. அரசு, தற்போது நில ஒதுக்கீட்டை நீட்டித்திருப்பது மக்கள் விரோத நடவடிக்கையாகும்.

திட்டத்தின் பின்னணியும் தற்போதைய நிலையும்

கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி என்ற இடத்தில் அணுக்கனிம சுரங்கம் மற்றும் சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்திய அரசின் அணுசக்தித் துறையின் (Department of Atomic Energy – DAE) கீழ் இயங்கும் ஐ.ஆர்.இ.எல். (Indian Rare Earths Limited – தற்போது IREL India Ltd) என்ற பொதுத்துறை நிறுவனம் இந்தத் திட்டத்தை 1960-களில் இருந்தே செயல்படுத்தி வருகிறது. சின்னவிளை, பெரியவிளை ஆகிய கிராமங்களை உள்ளடக்கி இந்த ஆலை இயங்குகிறது.

மணவாளக்குறிச்சியில் பல ஆண்டுகளாக நடந்த சுரங்கப் பணிகளால் அங்குள்ள கனிம வளங்கள் குறைந்துவிட்டன. எனவே, இப்போது கன்னியாகுமரியின் மற்ற கடலோர கிராமங்களுக்கும் இதை விரிவாக்கம் செய்ய ஐ.ஆர்.இ.எல். நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டக் கடலோரப் பகுதியில் அணுக்கனிம சுரங்கம் மற்றும் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்காக நிலம் ஒதுக்கக் கோரி, கடந்த 2015-ஆம் ஆண்டு ஒன்றிய அணுசக்தித் துறை தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்தது.

2021 ஏப்ரல் மாதத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, 1,144.06 ஹெக்டேர் (சுமார் 2,827 ஏக்கர்) நிலப்பரப்பு அளவிலான கடலோரப் பகுதியை ஐ.ஆர்.இ.எல் நிறுவனம் ஐந்து ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுத்தது.

2022-ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்கான விருப்பக் கடிதத்தையும், அரசாணையையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து, 2024-இல் இந்திய அணுசக்தி துறையின் கீழ் இயங்கும் அணுக் கனிமங்கள் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (AMD- Atomic Minerals Directorate for Exploration and Research) இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.

எனினும், ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி (Environmental Clearance) ஆகியவை இதுவரை பெறப்படவில்லை.

மக்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக, கட்டாய பொதுக்கருத்துக் கேட்புக் கூட்டங்களைக்கூட நடத்தாமல், “தேசிய பாதுகாப்பு மற்றும் உத்திசார் பாதுகாப்பு” ஆகியவற்றைக் காரணம் காட்டி ஒன்றிய அரசு இத்திட்டத்தை முன்னெடுத்து வந்தது.

மக்களுக்கு துரோகமிழைத்த த.வெ.க

ஒன்றிய அரசு பெற்றிருந்த நிலக் குத்தகை காலம் கடந்த ஜூன் 10-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தேவையான சுற்றுச்சூழல் அனுமதிகள் பெறப்படாததால் இத்திட்டத்திற்கான நில அதிகாரம் காலாவதியாக இருந்த நிலையில், தமிழ்நாடு அரசு (இயற்கை வளத்துறை) அதே நாளில் இவ்வரசாணையை மேலும் ஓராண்டிற்கு, அதாவது 2027 ஜூன் 10 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த ஏப்ரல் 16, 2026 அன்றே இத்திட்டத்திற்கான நீட்டிப்பைக் கோரி ஒன்றிய புவியியல் மற்றும் சுரங்க இயக்கம் விண்ணப்பித்ததன் மூலம், தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக பூவுலகின் நண்பர்கள் குற்றஞ்சாட்டியுள்ளது.

தற்போது இந்த கால நீட்டிப்பு ஆணையைப் பயன்படுத்தி, ஐ.ஆர்.இ.எல் நிறுவனமானது, சுற்றுச்சூழல் மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதிகளைப் பெறுவதற்கான மறுபரிசீலனைக் கடிதத்தை அனுப்பியுள்ளது. இதன்மூலம் சுற்றுச்சூழலை சீர்குலைக்கும் நாசகாரத் திட்டம் தங்குதடையின்றி செயல்படுத்தப்படும் அபாய நிலை உருவாகியுள்ளது.

ஆனால், கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற த.வெ.க. செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 21-ஆவது தீர்மானத்தில், இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

“இயற்கை தாயின் செல்லப் பிள்ளையான கன்னியாகுமரி பகுதியில் அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்கத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு முயல்கிறது. எங்கள் மண்ணையும், மக்களையும் பாழ்படுத்தும் இது போன்ற அபாயம் விளைவிக்கும் நச்சுத் திட்டங்களை உடனடியாகக் கைவிட வேண்டும்.” என்று கூறியது.

அன்று இத்திட்டத்தை எதிர்த்த த.வெ.க., இன்று ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் ஒன்றிய அரசுக்கு அடிப்பணிந்து நில ஒதுக்கீட்டை நீட்டித்திருப்பது அதன் வர்க்கப் பாசத்தையே காட்டுகிறது.

பாதிக்கப்படும் கிராமங்களும் சூழலியல் பிரச்சனைகளும்

இத்திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்படும் நிலங்கள் கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தாலுகாவிற்கு உட்பட்ட மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளாகும்.

கீழ் மிதளம் ஏ, மிதளம் பி, இணையம், புத்தன்துறை, ஏழுதேசம் ஏ, பி மற்றும் சி, கொல்லங்கோடு ஏ மற்றும் பி ஆகிய 8 கிராமங்களின் நிலங்களும் ஒட்டுமொத்தமாகச் சூறையாடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக மிகப்பெரிய அளவில் கனிம வளங்களை வெட்டி எடுப்பதால், கடுமையான கடல் அரிப்பு ஏற்பட்டு நிலப்பரப்பு சுருங்கும் அபாயம் உள்ளது. இதனால் சூறாவளி, புயல் மற்றும் அதிவேகமான, சக்திவாய்ந்த அலைகள் ஆகியவற்றிலிருந்து நிலத்தையும், மக்களையும் பாதுகாக்கும் இயற்கையான அரண்களாகச் செயல்பட்டு வந்த மணல்மேடுகள் அழிந்துபோக நேரிடும். மேலும், நிலத்தடியில் உப்புநீர் ஊடுருவி குடிநீர்த் தட்டுப்பாட்டை உருவாக்குவதுடன், அப்பகுதியின் பிரதானமான தென்னை விவசாயத்தைக் கடுமையாகப் பாதிக்கும் சூழலும் ஏற்படும்.

மனிதர்கள் மட்டுமின்றி, அங்குள்ள கடல்வாழ் உயிரினங்களும் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படும். இதனால், அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகும்.

கடற்கரை மணலில் உள்ள மோனசைட் (யுரேனியம் மற்றும் தோரியம் கலந்த கனிமம்) சுத்திகரிக்கப்படும் போது, ஏற்படும் கதிரியக்க வீச்சால் அப்பகுதி மக்களிடையே புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து, கடலோர மீனவ மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாகக் கேள்விக்குறியாகும்.

அணுசக்தித் திட்டம் எதற்காக?‌

கடற்கரை மணலில் உள்ள மோனசைட் (Monazite) என்னும் கனிமத்தை அகழ்ந்தெடுத்துச் சுத்திகரிப்பதற்காகவே இந்த அணுகனிமச் சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மோனசைட் என்பது யுரேனியம் மற்றும் தோரியம் கலந்த ஒரு கனிமமாகும்.

குறிப்பாக, உலக அளவிலான யுரேனியம் இருப்பில், இந்தியாவில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே யுரேனியம் உள்ளது. ஆனால், உலகளாவிய தோரியம் கையிருப்பில் 25 முதல் 30 சதவிகிதம் வரை இந்தியாவிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா ஏற்கனவே மூன்று கட்ட அணுசக்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. தென்னிந்தியாவின் கடலோரப் பகுதிகளில் உள்ள மோனசைட் மணலில் காணப்படும் யுரேனியம் மற்றும் தோரியம் இருப்புகளைப் பயன்படுத்தி, நாட்டின் நீண்டகால ஆற்றல் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், 1950-களில் ஹோமி பாபாவால் இந்தியாவின் மூன்று கட்ட அணுசக்தித் திட்டம் உருவாக்கப்பட்டது.

மோனசைட்டில் அதிக அளவில் காணப்படும் இந்தத் தோரியத்தை நேரடியாக அணு எரிபொருளாகப் பயன்படுத்த முடியாது. எனவே, இதை அணு உலைகளில் வைத்து யுரேனியம்-233 (U-233) ஆக மாற்றிய பிறகே மின் ஆற்றலைத் தயாரிக்க முடியும்.

இந்த U-233 என்பது அணுமின் உற்பத்திக்கு மட்டுமன்றி, இராணுவத் தளவாடங்கள் மற்றும் அணு ஆயுதத் தயாரிப்பிற்கும் பயன்படுத்தக்கூடிய மிக ஆபத்தான, சக்திவாய்ந்த கதிரியக்கத் தனிமமாகும். இந்த அடிப்படையில்தான் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஒன்றிய அரசு தீவிர முனைப்புக் காட்டி வருகிறது.

இயற்கையைக் காவு வாங்கும் திட்டம்

மோனசைட் மணல் இயற்கையாக இருக்கும் வரை பூமிக்கு அடியில் பாதுகாப்பாகவே இருக்கும். ஆனால், அதைச் சுரங்கம் தோண்டி எடுத்து, இயந்திரங்கள் மூலம் சுத்திகரிக்கும் போது, அதிலுள்ள ரேடான் (Radon) போன்ற கதிரியக்க வாயுக்களும், கதிரியக்கத் தூசிகளும் அப்பகுதியின் காற்றில் கலக்கும். நீரில் ஊடுருவவும் வாய்ப்புள்ளது.

இதனால் புற்றுநோய் போன்ற உயிரைக் கொல்லும் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே அச்சுற்றுவட்டாரப் பகுதியானது புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதியாக இருப்பதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும், சுத்திகரிப்புக்குப் பின் மிஞ்சும் ஆபத்தான கதிரியக்கக் கழிவுகளை (Radioactive Tailings) அதே கடலோரப் பகுதியிலேயே கொட்டுவதற்கு அல்லது சேமித்து வைப்பதற்கு, அணு உலைக்கு இணையான பாதுகாப்புக் கட்டமைப்புகளைச் சுரங்கப் பகுதியிலேயே அமைக்க வேண்டியிருக்கும். இது கன்னியாகுமரியின் ஒட்டுமொத்த நிலப்பரப்பையும், நிலத்தடி நீரையும் பல தலைமுறைகளுக்குப் பாழாக்கிவிடும்.

மக்கள் போராட்டம் ஒன்றே தீர்வு!

இத்திட்டத்திற்கு எதிராகக் கடந்த அக்டோபர் 2024-இல் மாபெரும் கையெழுத்து இயக்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிய பிரம்மாண்டப் பேரணி மற்றும் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை ஒரு லட்சம் மக்கள் பங்கேற்ற பிரம்மாண்ட மனிதச் சங்கிலிப் போராட்டம் போன்ற பலகட்டப் போராட்டங்கள் “அணு கனிம மணல் கொள்ளை எதிர்ப்பு இயக்கம் மற்றும் ஐ.ஆர்.இ.எல். எதிர்ப்பு மக்கள் இயக்கம் ஆகிய அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டன.

மக்களின் தொடர் எதிர்ப்பால் தற்காலிகமாகப் பின்வாங்கிய ஒன்றிய அரசு, தற்போது மாநில அரசின் கால நீட்டிப்பால் மீண்டும் இத்திட்டத்தைத் துரிதப்படுத்த முயன்று வருகிறது. இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து மீண்டும் தங்களது களப்போராட்டங்களைத் தீவிரப்படுத்த உள்ளதாக இவ்வமைப்புகள் அறிவித்துள்ளன.

8000 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி, அதிதீவிர தனியார்மயமாக்கல், பள்ளி மாணவர் அடையாள அட்டையில் சாதிப்பெயர் அறிவித்து எதிர்ப்பின் காரணமாக பின்வாங்கியது, சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டங்களுக்கு அனுமதியளித்தல் போன்ற த.வெ.க.-வின் இரண்டு மாத நடவடிக்கைகளே அதன் கார்ப்பரேட் முகத்தை திரைகிழித்து காட்டுகின்றன.

பரந்தூர் விமான நிலையம், ஹைட்ரோகார்பன், நெய்வேலி என்.எல்.சி விவகாரம் போன்றவற்றால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதைக் கடுமையாக எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றியதும், ஆட்சிக்கு வந்தவுடன் அதை காற்றில் பறக்கவிட்டதும் இதே த.வெ.க. தான்!

பாசிசத்திற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்து வரும் த.வெ.க. அரசை அம்பலப்படுத்தி, நமது உரிமைகளை மீட்க நாமே களத்தில் இறங்க வேண்டிய தருணமிது!

தமிழ்நாடு அரசே!

  1. தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சுற்றுச்சூழலை பாதிக்கும் அனைத்துத் திட்டங்களையும் உடனடியாக ரத்து செய்!
  2. கன்னியாக்குமரி அணுக்கனிம சுரங்கத் திட்டத்தை முழுமையாகக் கைவிட உடனடி நடவடிக்கை எடு!
  3. கடியப்பட்டினம், கொட்டில்பாடு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் மிக அதிக அளவில் இருக்கும் புற்றுநோய் பாதிப்பிற்கு இலவச சிகிச்சை வழங்க நடவடிக்கை எடு!
  4. மணவாளக்குறிச்சிப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை கட்டுப்படுத்தி சீரமைத்திடு!

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்போம்‌.

பதிவு
மக்கள் அதிகாரக் கழகம்,
நெல்லை தூத்துக்குடி மாவட்டங்கள்.
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க